இருமுனைக்குறைபாடு

Bipolar disorder

Below is a Tamil translation of our information resource on bipolar disorder. You can also view our other Tamil translations.

இந்தச் சிற்றேடு, இருமுனைக் குறைபாட்டைப்பற்றி (சில நேரங்களில் இருமுனை மனநிலைக் குறைபாடு என்றும் அழைக்கப்படுவது) மேலும் தெரிந்துகொள்ள விரும்பும் அனைவருக்குமானது. குறிப்பாக, இருமுனைக் குறைபாடு கொண்டவர்கள், அவர்களுடைய நண்பர்கள், உறவினர்களுக்கு இது எழுதப்பட்டுள்ளது.

இந்தச் சிற்றேடு இவற்றை விவரிக்கிறது:

  • இருமுனைக் குறைபாட்டின் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்.
  • நீங்கள் சந்திக்கக்கூடிய சில சிக்கல்கள்.
  • சமாளிப்பதற்குச் சில வழிகள்.
  • சான்று அடிப்படையிலான குணப்படுத்தல்கள்.

இருமுனைக் குறைபாடு என்றால் என்ன?

இது முன்பு ‘பித்து மனச்சோர்வு நோய்' என்று அழைக்கப்பட்டது. இதன் பொருள், உங்களுக்குத் தீவிர மனநிலை ஊசலாட்டங்கள் இருக்கும். இவை பொதுவாகப் பல வாரங்கள் அல்லது மாதங்களுக்கு நீடிக்கின்றன, நம்மில் பெரும்பாலானோர் அனுபவிக்கும் உணர்வு ஏற்ற இறக்கங்களைத் தாண்டி அமைகின்றன. இவை இவ்வாறு இருக்கலாம்:1

    • குறைவாக அல்லது ‘மனச்சோர்வு' நிலையில் – நீங்கள் மிகவும் தாழ்வாக, மனச் சோர்வாக உணர்கிறீர்கள், மனக்கசப்பைக்கூட உணர்கிறீர்கள்.
    • உயர்வாக அல்லது ‘பித்து' நிலையில் – நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக, நன்றாக உணர்கிறீர்கள், மிகைச் சுறுசுறுப்புடன் செயல்படுகிறீர்கள். இந்த நேரத்தில் உங்களுக்கு உங்களைப்பற்றியும் உங்கள் திறமைகளைப்பற்றியும் மிகப் பெரிய, மாயத்தோற்றமான எண்ணங்கள் வரக்கூடும்.
    • ஹைப்போமேனியாக் – உங்கள் மனநிலை உயர் நிலையில் உள்ளது, ஆனால், பித்து நிலை அளவுக்குத் தீவிரமாக இல்லை
    • கலவை – நீங்கள் பித்து மற்றும் மனச்சோர்வின் கலவை நிலையை உணர்கிறீர்கள். எடுத்துக்காட்டாக, நீங்கள் மிகவும் மனச்சோர்வாக உணரலாம், அதே நேரம், பித்து நிலையைப்போல் அமைதியின்றியும் மிகைச் சுறுசுறுப்புடனும் இருக்கலாம்.

    இந்த மனநிலைகள் கீழே இன்னும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

    இருமுனைக் குறைபாடு எவ்வளவு பொதுவானது?

    வயதுவந்த 50 பேரில் சுமார் 1 நபர் தன் வாழ்நாளின் ஏதோ ஒரு கட்டத்தில் இருமுனைக் குறைபாட்டை எதிர்கொள்வார். இது பொதுவாக 15 முதல் 25 வயதில் தொடங்குகிறது. 501 வயதுக்குமேல் இது தொடங்குவது அரிது

    இருமுனைக் குறைபாட்டில் என்னென்ன வகைகள் உள்ளன?

    இருமுனைக் குறைபாட்டில் பின்வரும் வகைகள் உள்ளன2:

    இருமுனை I

    • உங்களுக்குக் குறைந்தது ஒரு முறை உயர் அல்லது பித்து நிலை நிகழ்வு வந்துள்ளது, இது ஒரு வாரத்துக்குமேல் (பொதுவாக அதைவிட மிகக் கூடுதலாக) நீடித்துள்ளது.
    • உங்களுக்குப் பித்து நிலைகள்மட்டும் இருக்கலாம். ஆனால், இருமுனை I கொண்ட பெரும்பாலான மக்கள் ஆழமான மனச்சோர்வுக் காலங்களையும் எதிர்கொள்கிறார்கள்.
    • பித்து நிலை நிகழ்வைக் குணப்படுத்தாவிட்டால், அது பொதுவாக 3 முதல் 6 மாதங்களுக்குத் தொடர்கிறது.
    • மனச்சோர்வு நிகழ்வுகள் இன்னும் கூடுதலாக நீடிக்கின்றன. இவற்றைக் குணப்படுத்தாவிட்டால் இவை 6 முதல் 12 மாதங்களுக்குத் தொடர்கின்றன.

    இருமுனை II

    • உங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தீவிர மனச்சோர்வு நிகழ்வுகள் வந்துள்ளன. ஆனால், பித்து நிலை நிகழ்வுகள் மிதமான அளவில்தான் நடந்துள்ளன. இது ‘ஹைப்போமேனியா’ என்று அழைக்கப்படுகிறது.

    அதிவிரைவுச் சுழல்

    • 12 மாதக் காலகட்டத்துக்குள் உங்களுக்கு நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மனநிலை மாற்ற நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இது இருமுனைக் குறைபாடு கொண்ட 10 பேரில் சுமார் 1 நபரைப் பாதிக்கிறது. இது வகை I மற்றும் II ஆகிய இரண்டுடனும் நிகழக்கூடும்.

    சைக்ளோதைமியா

    • முழு இருமுனைக் குறைபாடு கொண்டவர்களுடன் ஒப்பிடும்போது, இவர்களுடைய மனநிலை ஊசலாட்டங்களின் தீவிரம் குறைவு. ஆனால், இவை கூடுதல் நேரம் நீடிக்கலாம். இது காலப்போக்கில் முழு இருமுனைக் குறைபாடாக வளரலாம்.

    இருமுனைக் குறைபாடு எதனால் உண்டாகிறது?

    ஒருவருக்கு இருமுனைக் குறைபாடு, தீவிர மனச்சோர்வு அல்லது ஸ்கிஜோஃப்ரெனியா வருமா என்பதைத் தீர்மானிப்பதில் சில மரபு சார்ந்த ‘ஆபத்துக் காரணிகள்' பங்கேற்கின்றன. இதில் சுற்றுச்சூழல் சார்ந்த ஆபத்துக் காரணிகளும் உள்ளன. இவை மரபு சார்ந்த ஆபத்துக் காரணிகளுடன் இணைந்து, இந்த நிலைகள் உங்களுக்கு வருகிற ஆபத்தைக் கூட்டலாம் அல்லது குறைக்கலாம்.

    எடுத்துக்காட்டாக, உங்களுக்கு இருமுனைக் குறைபாடு வரும் வாய்ப்பைக் கூடுதலாக்கும் மரபு சார்ந்த ஆபத்துக் காரணிகள் உங்களிடம் இருக்கலாம். எனினும், நீங்கள் ஒரு நிலையான மற்றும் நேர்விதமான சூழலில் வளர்ந்தால், அல்லது வாழ்ந்தால், உங்களுக்குத் தீவிர மன நலக் குறைபாடு வருகிற வாய்ப்பை அது குறைக்கலாம்.

    ஒருவருக்குத் தீவிர மன நலக் குறைபாடு வருவதற்கு வாய்ப்பளிக்கும் ஆபத்துக் காரணிகளாக அறியப்பட்டுள்ளவற்றுள் மிகவும் வலுவான ஆபத்துக் காரணி, அவருடைய தந்தை அல்லது தாய்க்கு இருமுனைக் குறைபாட்டைப் போன்ற ஒரு தீவிர மன நலக் குறைபாடு வந்திருத்தல். தீவிர மன நலக் குறைபாடு கொண்ட தந்தை அல்லது தாய்க்குப் பிறக்கும் குழந்தைகளுக்குத் தீவிர மன நலக் குறைபாடு வருகிற வாய்ப்பு 3ல் 1 பங்கு ஆகும்.

    இருமுனைக் குறைபாடு உண்டாகும் காரணங்களைப்பற்றிச் சிந்திக்கும்போது, இதில் பல விஷயங்கள் பங்குபெறுகின்றன என்பதையும், எந்தத் தனி ஆபத்துக் காரணியும் இருமுனைக் குறைபாட்டை உண்டாக்குவதில்லை என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.3

    இருமுனைக் குறைபாடு எப்படி உணரச்செய்யும்?

    மனச் சோர்வு

    நாம் எல்லாரும் அவ்வப்போது மனச் சோர்வு உணர்வுகளை எதிர்கொள்கிறோம்4. நம் வாழ்க்கையில் உள்ள சிக்கல்களை அடையாளம் காணவும் சமாளிக்கவும்கூட இது நமக்கு உதவக்கூடும். ஆனால், பெரிய மனச்சோர்வு அல்லது இருமுனை மனச்சோர்வின்போது, இந்த உணர்வுகள் இன்னும் மிகத் தீவிரமாக அமைகின்றன5 6. இவை இன்னும் கூடுதலான நாட்களுக்குத் தொடர்கின்றன, இயல்பான அன்றாட வேலைகளைச் சமாளிக்க இயலாதபடி ஆக்குகின்றன அல்லது அவற்றைக் கடினமாக்குகின்றன5. உங்களுக்கு மனச்சோர்வு வருகிறது என்றால், நீங்கள் இவற்றில் சிலவற்றை அல்லது அனைத்தையும் கவனிப்பீர்கள்:

    உணர்வு மாற்றங்கள்

    • விலக மறுக்கும் மகிழ்ச்சியின்மை உணர்வுகள்.
    • எந்தக் காரணமும் இல்லாமல் அழவேண்டும் என்பதுபோன்ற உணர்வு.
    • விஷயங்களில் ஆர்வமிழத்தல்.
    • விஷயங்களை மகிழ்ந்து அனுபவிக்க இயலாமலிருத்தல்.
    • அமைதியின்றி அல்லது பரபரப்பாக உணர்தல்.
    • தன்னம்பிக்கையை இழத்தல்.
    • பயனற்றவராக, போதாதவராக, நம்பிக்கை அற்றவராக உணர்தல்.
    • வழக்கத்தைவிடக் கூடுதலான எரிச்சலை உணர்தல்.
    • தற்கொலையைப்பற்றிச் சிந்தித்தல்.

    உங்களுடைய சிந்தனையில் சிரமங்கள்

    • நேர்விதமாக அல்லது நம்பிக்கையாகச் சிந்திக்க இயலாமலிருத்தல்.
    • எளிய தீர்மானங்களைக்கூட எடுக்க இயலாமல் சிரமப்படுதல்.
    • முறையாகக் கவனம் செலுத்த இயலாமல் இருத்தல்.

    உடல் சார்ந்த அறிகுறிகள்

    • நீங்கள் சாப்பிட விரும்புவதில்லை, எடையை இழக்கிறீர்கள்.
    • தூங்குவது சிரமமாக இருக்கிறது.
    • நீங்கள் மிகவும் அதிகாலையில் எழுந்துவிடுகிறீர்கள். அதன்பிறகு, உங்களால் மீண்டும் தூங்க இயலுவதில்லை.
    • நீங்கள் மிகவும் களைப்பாக உணர்கிறீர்கள்.
    • உங்களுக்கு மலச்சிக்கல் வருகிறது.
    • உங்களுக்குப் பாலுறவில் ஆர்வம் தீர்ந்துவிடுகிறது.

    நடவடிக்கை

    • வேலைகளைத் தொடங்குவது அல்லது முடிப்பது கடினமாக இருக்கிறது. இது அன்றாட வேலைகளுக்கும் பொருந்துகிறது.
    • நீங்கள் நிறைய அழுகிறீர்கள். அல்லது, அழவேண்டும் என்று உணர்கிறீர்கள், ஆனால், உங்களால் அழ இயலுவதில்லை.
    • நீங்கள் மற்ற மக்களைத் தவிர்க்கிறீர்கள்.

    பித்து நிலை

    நீங்கள் மிகவும் நன்றாக, ஆற்றல் மிக்கவராக, நேரெண்ணம் கொண்டவராக உணர்கிறீர்கள். இது உங்கள் சிந்தனை மற்றும் தீர்மானமெடுத்தலைப் பாதிக்கிறது. நீங்கள் உங்களைப்பற்றிய விநோதமான விஷயங்களை நம்பத் தொடங்கலாம், தவறான தீர்மானங்களை எடுக்கலாம், சங்கடமான, தீங்கு விளைவிக்கக்கூடிய வழிகளில் செயல்படுகிறீர்கள், சில நேரங்களில் ஆபத்தான வழிகளிலும் செயல்படுகிறீர்கள்.

    மனச்சோர்வைப்போல் இதனாலும் அன்றாடச் செயல்பாடுகளைக் கையாள்வது சிரமமாக ஆகலாம், அல்லது, அவற்றைக் கையாள இயலாமல் போகலாம். உங்கள் உறவுகள், உங்கள் வேலைகள் ஆகிய இரண்டையும் பித்து நிலை மோசமாகப் பாதிக்கலாம்.

    பித்து நிலை தீவிரமாக இல்லாதபோது, அது ‘ஹைப்போமேனியா’ என்று அழைக்கப்படுகிறது. அப்போதும் அது உங்களுடைய தீர்மானம் எடுத்தலையும் நீங்கள் மற்றவர்களுடன் எப்படிப் பழகுகிறீர்கள் என்பதையும் பாதிக்கக்கூடும்1.

    நீங்கள் பித்து நிலையில் உள்ளபோது, நீங்கள் இவற்றைக் கவனிக்கலாம்:

    உணர்ச்சி சார்ந்தவை

    • மிகவும் மகிழ்ச்சி மற்றும் பரபரப்பு.
    • மிகவும் எரிச்சல் (பல நேரங்களில், மற்றவர்கள் உங்களுடைய தீவிரமான நேர்வித எண்ணங்களைப் புரிந்துகொள்வதில்லை, அவர்கள் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதைச் செய்வதில்லை என்பதால்).
    • வழக்கத்தைவிட முக்கியமானவராகத் தன்னை உணர்தல்.

    சிந்தனை சார்ந்தவை

    • நிறையப் புதிய மற்றும் மகிழ்வூட்டும் யோசனைகள்.
    • விரைவாக ஒரு யோசனையிலிருந்து இன்னொரு யோசனைக்குத் தாவுதல், நீங்கள் எதைப்பற்றிச் சிந்திக்க அல்லது விளக்க முயன்றுகொண்டிருந்தீர்கள் என்பதை மறந்துவிடுதல்.
    • மற்றவர்களுக்குக் கேட்காத குரல்களைக் கேட்டல்.

    உடல் சார்ந்தவை

    • நிறைய ஆற்றல், வழக்கத்தைவிடக் கூடுதலான சுறுசுறுப்பு
    • தூங்க இயலுவதில்லை, அல்லது, தூங்கும் விருப்பமில்லை
    • பாலுறவில் கூடுதல் ஆர்வம் வரலாம்.

    நடவடிக்கை

    • மிகப் பெரிய, எதார்த்தமில்லாத திட்டங்களை உருவாக்குதல்.
    • மிகவும் சுறுசுறுப்பாக இருத்தல், மிக விரைவாக அங்கும் இங்கும் நகர்தல்.
    • உங்களுடைய இயல்பிலிருந்து மாறி நடந்துகொள்ளுதல்.
    • மிக விரைவாகப் பேசுதல். மற்றவர்கள் நீங்கள் எதைப்பற்றிப் பேசுகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ளச் சிரமப்படும் அளவுக்கு விரைவாகப் பேசுதல்.
    • மனம் போன போக்கில் விநோதமான தீர்மானங்களை எடுத்தல். சில நேரங்களில் இவை மோசமான விளைவுகளைக் கொண்டுவரலாம்.
    • உங்கள் பணத்தைப் பொறுப்பின்றிச் செலவழித்தல்.
    • மற்றவர்களிடம் மிகவும் உரிமை எடுத்துக்கொண்டு செயல்படுதல் அல்லது அவர்களைப் பொறுப்பின்றி விமர்சித்தல்.
    • பொதுவாகத் தடைகள் குறைந்து செயல்படுதல்.

    நீங்கள் முதன்முறையாக ஒரு பித்து நிலை நிகழ்வைச் சந்தித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், ஏதும் தவறாக நடப்பதாக நீங்கள் உணராமலிருக்கலாம். ஆனால், உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது சக பணியாளர்கள் பொதுவாக இதை உணர்ந்திருப்பார்கள். யாராவது இதை உங்களுக்குச் சுட்டிக்காட்ட முயன்றால் நீங்கள் எரிச்சலாகக்கூட உணரலாம். நீங்கள் அன்றாடச் சிக்கல்கள், மற்ற மக்களுடைய உணர்வுகளைவிட்டு விலகிச் செல்லத் தொடங்குவீர்கள்.

    உளவியல் அறிகுறிகள்

    பித்து அல்லது மனச்சோர்வு நிலை நிகழ்வு ஒன்று மிகத் தீவிரமடைந்தால், உங்களுக்கு மாயத்தோற்ற எண்ணங்கள் உண்டாகலாம்1.

    • பித்து நிலை நிகழ்வின்போது - இவை உங்களைப்பற்றிய மிகப் பெரிய நம்பிக்கைகளாக இருக்கும். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு முக்கியப் பணியில் ஈடுபட்டுள்ளீர்கள் அல்லது உங்களுக்குச் சிறப்பு ஆற்றல்களும் திறன்களும் உள்ளன என்று நம்புவது.
    • மனச் சோர்வு நிலை நிகழ்வின்போது – நீங்கள் மற்றவர்களைவிடக் குற்றவாளி என்றும், மற்றவர்களைவிட மோசமானவர் என்றும், நீங்கள் உண்மையில் இல்லை என்றும்கூட உணர்கிறீர்கள்.

    வழக்கத்துக்கு மாறான இந்த நம்பிக்கைகளுடன், உங்களுக்கு மாயத்தோற்றங்களும் வரலாம். அதாவது, நீங்கள் இல்லாத ஒன்றை அல்லது ஒருவரைக் கேட்பீர்கள், முகர்வீர்கள், உணர்வீர்கள், அல்லது பார்ப்பீர்கள்.

    நிகழ்வுகளுக்கு இடையில்

    இருமுனைக் குறைபாடு கொண்ட சிலர், தங்களுடைய மனநிலை ஊசலாட்டங்களுக்கிடையில் தாங்கள் முழுவதும் நன்றாகிவிடுவதாக உணர்கிறார்கள். ஆனால், பலர் அப்படி உணர்வதில்லை. வெளித் தோற்றத்துக்கு (மற்றவர்களுக்கு) நீங்கள் மேம்பட்டுவிட்டதுபோல் தெரிந்தாலும், நீங்கள் தொடர்ந்து மனச் சோர்வை உணரலாம், சிந்தனையில் சிக்கல்களைக் கொண்டிருக்கலாம்.

    உங்களுக்கு ஒரு முறை இருமுனைக் குறைபாடு வந்துள்ளது என்றால், நீங்கள் வண்டி ஓட்டுவதைச் சிறிது காலம் நிறுத்தவேண்டியிருக்கலாம். உங்களுக்கு இருமுனைக் குறைபாடு உள்ளது என்று நீங்கள் DVLAக்குச் சொல்லவேண்டும். இதுபற்றிய தகவல்கள் DVLA இணையத் தளத்தில் உள்ளன.

    இருமுனைக் குறைபாட்டுக்கான உதவியைப் பெறுதல்

    நான் யாரைப் பார்க்கவேண்டும்?

    நீங்கள் முதலில் உங்களுடைய GPஐச் சந்தியுங்கள். குறிப்பாக, மனச் சோர்வு நிலை நிகழ்வு கொண்டவர்கள் GPஐச் சந்திப்பது நல்லது. ஆனால், அவர்கள் இருமுனைக் குறைபாடு உள்ளதாகக் கண்டறிந்தால், அவர்கள் உங்களை ஒரு சிறப்பு வல்லுநரிடம், அதாவது, ஒரு மன நல மருத்துவரிடம் அனுப்பவேண்டியிருக்கும். NICE வழிகாட்டுதலின்படி, மனநிலை நிலைப்படுத்தி மருந்துகளைச் சிறப்பு வல்லுநர்தான் தொடங்கவேண்டும்7. அதன்பிறகு உங்களை ஒரு GP பார்த்துக்கொண்டாலும் இந்த மருந்துகளை அவர் தொடங்கக்கூடாது.

    நீங்கள் மன நல மருத்துவரைச் சந்திக்கும்போது, சமூக மன நலக் குழுவின் (CMHT) மற்ற உறுப்பினர்களையும் நீங்கள் சந்திப்பீர்கள். அவர்களால் உங்களுக்கு உணர்வு ஆதரவு, தகவல்கள், உளவியல் இடையீடுகளை வழங்கி உதவ இயலும், எதார்த்த விவகாரங்களைச் சரி செய்வதற்கு உதவ இயலும்.

    நீங்கள் எடுத்துக்கொள்கிற ஏதாவது ஒரு மருந்து நிலைபெற்றதாகவும் செயல்திறன் கொண்டிருப்பதாகவும் தோன்றும்போது, உங்களைக் கவனித்துக்கொள்கிற பெரும்பான்மைப் பொறுப்பை உங்கள் GP எடுத்துக்கொள்ளலாம். எனினும், பொதுவாக, நீங்கள் மன நல மருத்துவர் மற்றும் CMHT உடன் தொடர்பில் இருக்கவேண்டும் என்று அவர் விரும்புவார்.

    இருமுனைக் குறைபாட்டுக்கான மருந்துகள்

    மனநிலை ஊசலாட்டங்களைக் கட்டுப்படுத்தி, அவை பித்து நிலை அல்லது மனச் சோர்வு நிலையின் முழு நிகழ்வுகளாக மாறாமல் தடுப்பதற்குச் சில விஷயங்கள் உதவலாம். இவை கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், பல நேரங்களில் மருந்துகள் இவற்றுக்குத் தேவைப்படும்:

    • உங்கல் மனநிலையை நிலையாக வைக்க (ப்ரோஃபைலாக்சிஸ்)
    • பித்து அல்லது மனச் சோர்வு நிகழ்வைக் குணப்படுத்த.

    மனநிலையை நிலைப்படுத்தும் மருந்துகள்

    பல மனநிலை நிலைப்படுத்திகள் உள்ளன. இவற்றில் சில, வலிப்பைக் குணப்படுத்தவும், ஸ்கிஜோஃப்ரெனியா வந்தவர்களுக்கு உதவவும்கூடப் பயன்படுத்தப்படுகின்றன8. மனநிலை ஊசலாட்டங்களைச் செயல்திறனுடன் கட்டுப்படுத்துவதற்கு உங்கள் மன நல மருத்துவர் ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகளைப் பயன்படுத்தவேண்டியிருக்கலாம்9.

    லித்தியம்

    லித்தியம் பல பத்தாண்டுகளாக மனநிலை நிலைப்படுத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அது எப்படி வேலை செய்கிறது என்பது நமக்குத் தெளிவாகவில்லை. இப்போதும், இருமுனைக் குறைபாட்டின் தொலைநோக்குக் குணப்படுத்தலுக்கான முதல் தேர்வு அதுதான். பித்து மற்றும் மனச்சோர்வு ஆகிய இரு நிகழ்வுகளையும் குணப்படுத்த இதைப் பயன்படுத்தலாம்.

    லித்தியத்துடனான சிகிச்சையை ஒரு மன நல மருத்துவர்தான் தொடங்கவேண்டும். உடலில் சரியான அளவு லித்தியத்தைப் பெறுவதுதான் சிரமம். அது மிகவும் குறைவாக இருந்தால், வேலை செய்யாது. அது மிகவும் கூடுதலாக இருந்தால், உங்களைக் காயப்படுத்தக்கூடும். அதனால், நீங்கள் சரியான மருந்தளவைப் பெறுகிறீர்கள் என்பதை உறுதி செய்வதற்கென, முதல் சில வாரங்களுக்கு நீங்கள் தொடர்ச்சியாக இரத்தப் பரிசோதனைகளைச் செய்துகொள்ளவேண்டியிருக்கும்1 10. மருந்தளவு நிலைக்கு வந்ததும், உங்கள் GP உங்களுக்கு லித்தியத்தைப் பரிந்துரைக்கலாம், தொலைநோக்கை மனத்தில் கொண்டு வழக்கமான இரத்தப் பரிசோதனைகளுக்கு ஏற்பாடு செய்யலாம்.

    உங்கள் இரத்தத்தில் உள்ள லித்தியத்தின் அளவு, உங்கள் உடலில் எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பதற்கு மிகுந்த நுண்ணுணர்வைக் கொண்டுள்ளது. உங்கள் உடலில் தண்ணீர் அளவு குறைந்தால், உங்கள் இரத்தத்தில் உள்ள லித்தியத்தின் அளவு கூடும், நீங்கள் பக்க விளைவுகளை, அல்லது, நச்சு விளைவுகளைக்கூடப் பெறுகிற வாய்ப்பு மிகுதியாகும்1. அதனால், கண்டிப்பாக இவற்றைப் பின்பற்றுங்கள்:

    • நிறையத் தண்ணீர் குடியுங்கள்: குறிப்பாக, வெப்பமான வாநிலையின்போதும், நீங்கள் சுறுசுறுப்பாகச் செயல்படும்போதும்
    • தேநீர், காஃபிபற்றி விழிப்புடன் இருங்கள்: இவை உங்களுடைய சிறுநீரில் வெளியாகும் நீரின் அளவைக் கூட்டுகின்றன.

    லித்தியம் முறையாக வேலை செய்வதற்கு மூன்று மாதங்கள் அல்லது அதற்குமேல் ஆகலாம். இந்த நேரத்தில் உங்களுடைய மனநிலை ஊசலாட்டங்கள் தொடர்ந்தாலும், மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வது நல்லது.

    பக்க விளைவுகள்

    லித்தியம் சிகிச்சையைத் தொடங்கி முதல் சில வாரங்களில் இவை தொடங்கலாம். இவை எரிச்சலூட்டலாம், விரும்பப்படாதவையாக இருக்கலாம். ஆனால், பல நேரங்களில் இவை காலப்போக்கில் நின்றுவிடுகின்றன, அல்லது, மேம்படுகின்றன.

    இந்தப் பக்க விளைவுகளில் சில:

    • தாக உணர்வு.
    • வழக்கத்தைவிடக் கூடுதலாகவும் அடிக்கடியும் சிறுநீர் கழித்தல்.
    • எடை கூடுதல்.

    பொதுவாகக் காணப்படாத பக்க விளைவுகள்:

    • மங்கலான பார்வை.
    • சிறிதளவு தசை வலுவிழப்பு.
    • அவ்வப்போது வயிற்றுப்போக்கு.
    • கைகள் நுட்பமாக நடுங்குதல்.
    • சற்று உடல்நலம் சரியில்லாததுபோன்ற ஓர் உணர்வு.

    பொதுவாக, லித்தியம் மருந்தளவைக் குறைப்பதன்மூலம் இவற்றை மேம்படுத்தலாம்.

    பின்வரும் அறிகுறிகள் உங்கள் லித்தியம் அளவு மிகக் கூடுதலாக இருப்பதைக் காண்பிக்கின்றன. நீங்கள் இவற்றைக் கவனித்தால், உடனடியாக உங்கள் மருத்துவரைத் தொடர்புகொள்ளுங்கள்:

    • உங்களுக்கு மிகவும் தாகம் எடுக்கிறது.
    • உங்களுக்கு மோசமான வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி வருகிறது.
    • உங்கள் கைகளும் கால்களும் நன்கு வெளியில் தெரியும்படி நடுங்குகின்றன.
    • உங்கள் தசைகள் இழுத்துக்கொள்கின்றன.
    • உங்களுக்குக் குழப்பம் ஏற்படுகிறது.

    இரத்த மற்றும் சிறுநீர்ப் பரிசோதனைகள்

    முதலில், நீங்கள் சில வாரங்களுக்கு ஒருமுறை இரத்தப் பரிசோதனை செய்துகொள்ளவேண்டியிருக்கும். இதன்மூலம், உங்கள் இரத்தத்தில் சரியான அளவு லித்தியம் உள்ளது உறுதிசெய்யப்படும். நீங்கள் லித்தியத்தை எடுத்துக்கொள்கிறவரை இந்தத் தேர்வுகள் தேவைப்படும். ஆனால், முதல் சில வாரங்களுக்குப்பிறகு, இந்தத் தேர்வுகளுக்கிடையிலான இடைவெளி கூடும்.

    லித்தியத்தைத் தொடர்ந்து நெடுநாள் பயன்படுத்தினால், சிறுநீரகங்கள் அல்லது தைராய்ட் சுரப்பி பாதிக்கப்படலாம். இந்த உறுப்புகள் இன்னும் சரியாகத்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன என்பதை உறுதிசெய்வதற்கு, நீங்கள் சில மாதங்களுக்கு ஒருமுறை இரத்த மற்றும் சிறுநீர்ப் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். ஏதாவது பிரச்சனை இருந்தால், நீங்கள் லித்தியம் எடுத்துக்கொள்வதை நிறுத்திவிட்டு, உங்கள் மருத்துவரிடம் மாற்று மருந்தைப்பற்றி விவாதிக்கவேண்டியிருக்கலாம்.

    உங்களைக் கவனித்துக்கொள்ளுதல்5

    • நன்கு சமநிலைப்படுத்தப்பட்ட உணவை உண்ணுங்கள்.
    • இனிப்பு சேர்க்கப்படாத திரவங்களை அவ்வப்போது குடியுங்கள். உங்கள் உடலில் உள்ள உப்புகள் மற்றும் திரவங்கள் சமநிலையில் இருக்க இது உதவுகிறது. நிறையச் சர்க்கரை உள்ள கோலாக்கள் மற்றும் மென் குடிபானங்களைத் தவிர்த்துவிடுங்கள்.
    • சரியான நேரத்தில் சாப்பிடுங்கள். இது உங்கள் திரவச் சமநிலையைப் பராமரிக்கவும் உதவும்.
    • காஃபைன் அளவைக் கவனியுங்கள், தேநீர், காஃபி அல்லது கோலாவில். இதன்மூலம் நீங்கள் கூடுதலாகச் சிறுநீர் கழிப்பீர்கள். அது உங்கள் லித்தியம் அளவைப் பாதிக்கலாம்.

    மற்ற மனநிலை நிலைப்படுத்திகள்

    லித்தியம் அல்லாத மற்ற மருந்துகளும் இந்தச் சூழலில் உதவக்கூடும். இவை எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பது, இவை பித்த நிலை ஊசலாட்டத்துக்குத் தரப்படுகின்றனவா, அல்லது, மனச் சோர்வு நிலை ஊசலாட்டத்துக்குத் தரப்படுகின்றனவா, அல்லது இவை நடக்காமல் தடுப்பதற்குத் தரப்படுகின்றனவா, இவற்றை எடுத்துக்கொள்கிறவர் ஏற்கெனவே மனச்சோர்வுக்கு எதிரான ஒரு மருந்தை எடுத்துக்கொள்கிறாரா என்பதையெல்லாம் பொறுத்து அமையும்.

    • வலிப்புக்கு எதிரான மருந்துகள்/ஆன்டிகன்வல்சன்ட்கள்:
      • சோடியம் வால்ப்ரொவேட் என்கிற ஆன்டிகன்வல்சன்ட் லித்தியம் அளவுக்கு நன்றாக வேலை செய்யலாம். ஆனால், அதை உறுதிப்படுத்தப் போதுமான சான்று நம்மிடம் இன்னும் இல்லை. கர்ப்பமாக உள்ள ஒருவர் இதை எடுத்துக்கொண்டால், பிறக்கவேண்டிய குழந்தைக்குப் பாதிப்பு உண்டாகலாம், அதனால், கர்ப்பமாகக்கூடிய ஒருவருக்கு இதைப் பரிந்துரைக்கக்கூடாது.
      • கார்பமேஜெபைன் மற்றும் லமோடிரிஜைன் ஆகியவையும் சிலருக்குச் செயல்திறனுடன் உதவுகின்றன.
    • உளவியல் குறைபாட்டுக்கு எதிரான மருந்துகள்: ஹாலோபெரிடால், ஒலான்ஜபைன், க்வெடியாபைன் மற்றும் ரிஸ்பெரிடோன்.

    எப்போது மனநிலை நிலைப்படுத்தியைத் தொடங்கவேண்டும்

    ஒரு நிகழ்வு வந்தபிறகு, அதை வைத்து உங்களுக்கு இன்னொரு நிகழ்வு வருமா என்று கணிப்பது சிரமம். சிலர் இந்த நிலையில் ஒரு மனநிலை நிலைப்படுத்தியைத் தொடங்க விரும்புவதில்லை. ஆனால், பித்து நிலை நிகழ்வுகள் தீவிரமாகவும், மிகவும் தொந்தரவு கொடுப்பவையாகவும் இருக்கலாம்.

    ஒருவேளை, உங்களுக்கு இரண்டாம் நிகழ்வு வந்தால், மேலும் நிகழ்வுகள் வருவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. அதனால், இந்த நிலையில் ஒரு மனநிலை நிலைப்படுத்தி இன்னும் வலுவாகப் பரிந்துரைக்கப்படுகிறது.

    ஒருவர் எவ்வளவு காலம் மனநிலை நிலைப்படுத்தியை எடுத்துக்கொள்ளவேண்டும்?

    குறைந்தபட்சம்:

    • ஒரு முறை இருமுனைக் குறைபாடு வந்து இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு.
    • இந்தச் சூழ்நிலைகளில், ஐந்து ஆண்டுகள்:
      • அடிக்கடி பழைய நிலை திரும்பியிருந்தால்
      • மன நலக் குறைபாடுகள் காணப்பட்டால்
      • மது அல்லது போதைப் பொருளைத் தவறாகப் பயன்படுத்தும் பழக்கம் இருந்தால்
      • வீட்டில் அல்லது பணியில் அழுத்தம் தொடர்ந்தால்.

    நீங்கள் உங்கள் மருந்தை நிறுத்தத் தீர்மானித்தால், நீங்கள் இதைப்பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசவேண்டும். பொதுவாக, இருமுனைக் குறைபாட்டுக்கான மருந்து சாப்பிடுவதை நிறுத்தியபிறகு, 2 ஆண்டுகளுக்கு உங்களுடைய மன நல மருத்துவரைத் தொடர்ந்து பார்த்துவருவது நல்லது. இதன்மூலம், நீங்கள் பழைய நிலைக்குத் திரும்புவதற்கான அடையாளங்கள் எவையேனும் உள்ளனவா என்று அவர்கள் கண்டறியலாம்.

    உங்களுக்குத் தொல்லை தருகிற மனநிலை நிகழ்வுகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தால், நீங்கள் இன்னும் நீண்ட காலம் மருந்துகளைத் தொடரவேண்டியிருக்கலாம்.

    எனக்கான மிகச் சிறந்த மருந்து எது?

    நீங்கள் இதைப்பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசவேண்டும். ஆனால், இதற்குச் சில பொதுவான கொள்கைகள் உள்ளன.

    • பொதுவாக, லித்தியம்தான் முதல் தேர்வு; சோடியம் வால்ப்ரொவேட் இரண்டாவது தேர்வு. இதை லித்தியத்துடன் சேர்த்தும் பரிந்துரைக்கலாம். லித்தியமும் சோடியம் வால்ப்ரொவேட்டும் உதவாவிட்டால், ஒலான்ஜபைனை முயன்று பார்க்கலாம்.
    • குவெடியாபைனையும் பயன்படுத்தலாம். குறிப்பாக, ஒருவர் பித்து நிலை நிகழ்வுகளுக்கு இடையில் மனச் சோர்வுடன் தொடர்ந்து இருந்தால்8.
    • லமோடிரிஜைன் இருமுனை II குறைபாடு அல்லது இருமுனை மனச் சோர்வுக்குப் பரிந்துரைக்கப்படலாம். அதைப் பித்து நிலைக்குப் பரிந்துரைக்கக்கூடாது.
    • சில நேரங்களில், இந்த மருந்துகளின் கலவை ஒன்று தேவைப்படுகிறது.

    ஒரு குறிப்பிட்ட மருந்தில் நீங்கள் எந்த அளவு நன்றாக ஆகிறீர்கள் என்பதைப் பொறுத்துதான் இது அமைகிறது. ஒருவருக்குப் பொருந்தும் மருந்து இன்னொருவருக்குப் பொருந்தாமலிருக்கலாம்.

    மருந்து இல்லாவிட்டால் என்ன ஆகலாம்?

    உங்களுடைய பழைய நிலை திரும்பும் வாய்ப்பை லித்தியம் 30% முதல் 40%8 குறைக்கிறது. ஆனால், உங்களுக்குப் பித்து நிலை நிகழ்வுகள் கூடுதலாக வர வர, உங்களுக்கு அது மீண்டும் வருவதற்கான வாய்ப்பும் பெருகும்.

    முந்தைய பித்து நிலை நிகழ்வுகளின் எண்ணிக்கை அடுத்த ஆண்டு இன்னொரு நிகழ்வு வருவதற்கான வாய்ப்பு
      லித்தியத்தை எடுத்துக்கொள்ளாதபோது லித்தியத்தை எடுத்துக்கொள்ளும்போது
    1-2 10% (100 இல் 10) 6-7% (100 இல் 6-7)
    3-4 20% (100 இல் 20) 12% (100 இல் 12)
    5+ 40% (100 இல் 40) 26% (100 இல் 26)

    உங்களுக்கு வயதாக ஆக, மேலும் நிகழ்வுகள் வருகிற ஆபத்து கிட்டத்தட்ட அதேபோல் இருக்கும். நீங்கள் நெடுநாள் நன்றாக இருந்தாலும்கூட, இன்னொரு நிகழ்வு வருவதற்கான ஆபத்து இருக்கிறது.

    கர்ப்பம் மற்றும் இருமுனைக் குறைபாட்டைக் குணப்படுத்தல்

    நீங்கள் கர்ப்பமாகத் திட்டமிட்டிருந்தால், அதுபற்றி உங்கள் மன நல மருத்துவரிடம் பேசவேண்டும். கர்ப்பத்தின்போதும், குழந்தை பிறந்தபின் முதல் சில மாதங்களுக்கும் உங்கள் மனநிலையை எப்படிக் கையாள்வது என்பதற்கான ஏற்பாட்டை நீங்கள் இருவரும் இணைந்து தீர்மானிக்கலாம். நீங்கள் கர்ப்பமாக இருந்தால், அல்லது, கர்ப்பமாகத் திட்டமிட்டால், லித்தியம் மற்றும் சோடியம் வால்ப்ரொவேட்டைப் பரிந்துரைக்கக்கூடாது.

    லித்தியத்தை எடுத்துக்கொள்ளும்போது நீங்கள் கர்ப்பமானால், நீங்கள் லித்தியத்தை நிறுத்தவேண்டுமா என்பதுபற்றி உங்கள் மன நல மருத்துவரிடம் பேசுவது நல்லது. மற்ற மனநிலை நிலைப்படுத்திகளுடன் ஒப்பிடும்போது, கர்ப்பமாக உள்ளவர்களுக்கு லித்தியம் பாதுகாப்பானதுதான். ஆனால், குழந்தைக்கு இதயச் சிக்கல்கள் வரும் வாய்ப்பு குறிப்பிடக்கூடிய அளவில் உள்ளது. இந்த ஆபத்தையும், உங்களுக்கு மனச் சோர்வு நிலை அல்லது பித்து நிலை வருகிற ஆபத்தையும் ஒப்பிட்டுப் பார்த்துத் தீர்மானம் எடுக்கவேண்டும்.

    கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் இந்த ஆபத்து மிகக் கூடுதலாக உள்ளது. கர்ப்பத்தின் 26வது வாரத்துக்குப்பிறகு லித்தியம் பாதுகாப்பானது. ஆனால், நீங்கள் லித்தியம் எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால், நீங்கள் உங்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கக்கூடாது. ஏனெனில், அது உங்கள் குழந்தைக்கு நஞ்சாகலாம்12.

    மேலே குறிப்பிடப்பட்டுள்ள உளவியல் சிகிச்சைகளில் சிலவற்றைத் தொடங்கும் வாய்ப்பைப்பற்றிப் பேசுவது நல்லது.

    நோயாளியின் கர்ப்பத்தின்போது, அவருக்கு உதவும் அனைவரும் (மகப்பேறியல் வல்லுநர், மருத்துவச்சிகள், நல வருகையாளர்கள், GP, மன நல மருத்துவர் மற்றும் சமூக மன நலச் செவிலியர்) ஒருவரோடொருவர் பேசிக்கொண்டிருக்கவேண்டும்.

    இருமுனைக் குறைபாட்டுக்கான உளவியல் சிகிச்சைகள்

    மனச் சோர்வு நிலை நிகழ்வு ஒன்றின்போது, அல்லது, பித்து நிலை மற்றும் மனச் சோர்வு நிலை நிகழ்வுகளுக்கு இடையில், உளவியல் சிகிச்சைகள் உதவலாம்1 5 11. இவற்றில் சில:

    • உளவியல் கல்வி : இருமுனைக் குறைபாட்டைப்பற்றி மேலும் அறிதல்
    • மனநிலையைக் கண்காணித்தல் : உங்கள் மனநிலை எப்போது ஊசலாடத் தொடங்குகிறது என்பதை அடையாளம் காண்பதற்கு நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள்.
    • பொதுவான சமாளிக்கும் திறன்களை வளர்ப்பதற்கு உதவி
    • மனச் சோர்வு நிகழ்வுகளுக்கும், அதுபோன்ற நிகழ்வுகளுக்கு நடுவிலும் அறிவாற்றல் பழகுமுறைச் சிகிச்சை (CBT) (இந்தச் சிகிச்சையில் பொதுவாக 3 முதல் 4 மாதங்களில் 16 முதல் 20 ஒரு மணி நேர நிகழ்வுகள் இடம்பெறுகின்றன)
    • மக்களுக்கிடையிலான பழகுமுறைச் சிகிச்சை (IPT)
    • இணையர் சிகிச்சை
    • குடும்பக் கூட்டங்கள்.

    பித்து நிலை அல்லது மனச் சோர்வு நிலை நிகழ்வைக் குணப்படுத்துதல்

    மனச் சோர்வு நிலை நிகழ்வுகள்

    • உங்களுடைய மனச் சோர்வு குறைந்தபட்சம் நடுத்தரத் தீவிரத்தில் உள்ளது என்றால், உங்கள் மருத்துவர் இவற்றைப் பரிந்துரைக்கலாம்:
      • ஃப்ளுவோக்சிடின் (இது ஓர் SSRI மனச் சோர்வுக்கு எதிரான மருந்து), ஓலன்ஜபைன் (இது மனநல நிலைப்படுத்தியாகச் செயல்படும் எதிர் உளவியல் மருந்து) உடன்
      • குவெடியாபைன்
      • மேலுள்ள தேர்ந்தெடுப்புகள் உதவாவிட்டால், மற்ற தெரிவுகள்.
    • நீங்கள் ஏற்கெனவே லித்தியம் அல்லது சோடியம் வால்ப்ரொவேட்டை எடுத்துகொள்கிறீர்கள் என்றால், குவெடியாபைனைச் சேர்ப்பது உதவலாம்.
    • சமீபத்தில் உங்களுக்குப் பித்து நிலை நிகழ்வு வந்திருந்தால், அல்லது, உங்களுக்கு விரைவாகச் சுழலாகும் குறைபாடு இருந்தால், மனச் சோர்வுக்கு எதிரான மருந்து உங்களைப் பித்து நிலை ஊசலாட்டத்துக்குள் தள்ளலாம். மனச் சோர்வுக்கு எதிரான மருந்து இல்லாமல் மனநிலை நிலைப்படுத்தியின் மருந்தளவைக் கூட்டுவது இன்னும் பாதுகாப்பாக இருக்கலாம்.
    • மனநிலை நிலைப்படுத்திகள் உங்களுடைய மனநிலையை மேம்படுத்துவதற்கு இரண்டு முதல் ஆறு வாரங்கள்வரை ஆகலாம். ஆனால், முதலில் தூக்கம் மற்றும் பசி எடுத்தல் ஆகியவை மேம்படுகின்றன. மனச் சோர்வு மேம்பட்டபிறகும், மனச் சோர்வுக்கு எதிரான மருந்துகளை நான்கு வாரங்களுக்குத் தொடரவேண்டும். அதன்பிறகு, மருந்துகளைத் எப்படித் தொடர்வது என்பதுபற்றியோ, பேசிக் குணப்படுத்துவதை முயன்று பார்ப்பதா என்பதுபற்றியோ நீங்களும் உங்கள் மருத்துவரும் பேசலாம். உங்களுடைய மனச் சோர்வுக்கு எதிரான மருந்தை நிறுத்தவேண்டும் என்றால், அதை மெதுவாகக் குறைத்துதான் முழுமையாக நிறுத்தவேண்டும்.
    • உங்களுக்கு மனச் சோர்வு நிலை நிகழ்வுகள் திரும்பத் திரும்ப வருகின்றன, ஆனால், மனச் சோர்வுக்கு எதிரான மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது அது பித்து நிலைக்கு மாறவில்லை என்றால், நீங்கள் மனநிலை நிலைப்படுத்தி மற்றும் மனச் சோர்வுக்கு எதிரான மருந்து ஆகிய இரண்டையும் தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம், அதன்மூலம் வருங்கால நிகழ்வுகளைத் தடுக்கலாம்.
    • உங்களுக்குப் பித்து நிலை நிகழ்வுகள் வந்துள்ளன என்றால், நீங்கள் மனச் சோர்வுக்கு எதிரான மருந்துகளை நீண்ட நாள் எடுக்கக்கூடாது.

    பித்து நிலை மற்றும் கலவை மனச் சோர்வு நிகழ்வுகள்

    மனச் சோர்வுக்கு எதிரான எந்த மருந்தையும் நிறுத்திவிடவேண்டும். பித்து நிலை நிகழ்வைக் குணப்படுத்த, ஹாலோபெரிடால், ஓலன்ஜபைன், குவெடியாபைன் அல்லது ரிஸ்பெரிடனைப் பயன்படுத்தலாம். இவை நன்றாக வேலை செய்யாவிட்டால், லித்தியத்தைச் சேர்க்கலாம்.

    இந்தக் குணப்படுத்தலைத் தொடங்கியபிறகு, பொதுவாகச் சில நாட்களுக்குள் அறிகுறிகள் மேம்படும். ஆனால், முழுமையாகக் குணமாவதற்குப் பல வாரங்கள் ஆகலாம். இந்த வகை மருந்தை எடுத்துக்கொள்ளும்போது நீங்கள் வண்டி ஓட்ட விரும்பினால், அதுபற்றி உங்கள் மருத்துவரிடம் கேட்கவேண்டும்.

    பிற உதவி

    நீங்கள் உயர் நிலையில் இருக்கும்போது நிறையச் செலவழிப்பது போன்ற சிக்கல்கள் உங்களுக்கு வந்தால், அதுபற்றி உங்கள் வங்கியிடம் பேசுவது, அல்லது, உங்களுக்குக் கடன் கொடுத்திருப்பவர்களிடம் பேசுவது போன்றவற்றில் உங்கள் மன நலக் குழு உங்களுக்கு உதவலாம். இது நடந்திருக்கிறது என்றால், உங்கள் விவகாரங்களுக்கான சட்ட அதிகாரத்தை (Power of Attorney) உங்களைக் கவனித்துக்கொள்கிற ஒருவர் அல்லது நீங்கள் நம்புகிற உறவினர் ஒருவரிடம் கொடுப்பதுபற்றிச் சிந்திப்பது நல்லது.

    உங்களுடைய மனநிலை ஊசலாட்டங்களைக் கையாளுதல்

    தற்கண்காணிப்பு

    உங்களுடைய மனநிலை கட்டுப்பாட்டை மீறி ஊசலாடுகிறது என்பதற்கான அடையாளங்களைக் கண்டறிவது எப்படி என்று கற்றுக்கொள்ளுங்கள். இதன்மூலம், நீங்கள் முன்கூட்டியே உதவியைப் பெறலாம். இதன்மூலம், நீங்கள் முழு நிகழ்வுகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதைத் தடுக்கலாம். உங்கள் வாழ்க்கையில் எந்தெந்த விஷயங்கள் உங்களுக்கு உதவுகின்றன, எவை உதவவில்லை என்பதை அடையாளம் காண்பதற்கு, மனநிலை நாட்குறிப்பு ஒன்றை எழுதிவரலாம்.

    அறிவு

    உங்கள் நோயைப்பற்றியும், அதற்கு என்னென்ன உதவிகள் கிடைக்கின்றன என்பதுபற்றியும் இயன்றவரை நிறையத் தெரிந்துகொள்ளுங்கள். இந்தச் சிற்றேட்டின் முடிவில், கூடுதல் தகவல்களுக்கான வளங்கள் உள்ளன. ஆதரவுக் குழுக்கள் மற்றும் கவனித்துக்கொள்ளும் அமைப்புகளுக்கு, கீழே பாருங்கள்.

    அழுத்தம்

    குறிப்பிட்ட அழுத்தம் தரும் சூழ்நிலைகளை, அதாவது, பித்து நிலை அல்லது மனச் சோர்வு நிலை நிகழ்வைத் தூண்டிவிடக்கூடிய சூழ்நிலைகளைத் தவிர்க்க முயலுங்கள். அழுத்தத்தை முழுக்கத் தவிர்ப்பதற்கு வாய்ப்பில்லை. அதனால், அதை இன்னும் நன்றாகக் கையாள்வதற்கான வழிகளைக் கற்றுக்கொள்வது உதவியாக இருக்கலாம். நீங்கள் CDக்கள் அல்லது DVDக்கள் மூலம் மனத்தை இதமாக்கும் பயிற்சிகளைச் செய்யலாம், மனத்தை இதமாக்கும் குழு ஒன்றில் இணையலாம், அல்லது, மருத்துவ உளவியலாளர் ஒருவரிடம் அறிவுறுத்தலைப் பெறலாம்.

    உறவுகள்

    மனச் சோர்வு நிலை அல்லது பித்து நிலை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடையில் நிறைய அழுத்தத்தைக் கொண்டுவரலாம். இப்படிப்பட்ட ஒரு நிகழ்வுக்குப்பிறகு, நீங்கள் சில உறவுகளை மீண்டும் கட்டமைக்கவேண்டியிருக்கலாம்.

    நீங்கள் நம்பக்கூடிய, மனம் விட்டுப் பேசக்கூடிய ஒருவராவது இருந்தால் உதவியாக இருக்கும். நீங்கள் நன்றாக இருக்கும்போது, உங்களுக்கு முக்கியமான நபர்களிடம் இந்த நோயைப்பற்றி விளக்க முயலுங்கள். உங்களுக்கு என்ன நடக்கிறது என்பதையும், தாங்கள் உங்களுக்கு என்ன செய்ய இயலும் என்பதையும் அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

    செயல்பாடுகள்

    உங்கள் வாழ்க்கை, வேலை, ஓய்வு, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடனான உறவுகள் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்த முயலுங்கள். நீங்கள் மிகவும் பரபரப்பாக வேலை செய்துகொண்டிருந்தால், நீங்கள் ஒரு பித்து நிலை நிகழ்வை வரவழைத்துக்கொள்ளக்கூடும்.

    மனத்தை இதமாக்கவும் ஓய்வெடுக்கவும் போதுமான அளவு நேரத்தை வழங்குங்கள். நீங்கள் வேலையில் இல்லை என்றால், ஒரு பயிற்சி வகுப்பில் சேர்வது, அல்லது, மன நலக் குறைபாடுகளுடன் தொடர்பில்லாத தன்னார்வலர் பணி ஒன்றில் ஈடுபடுவது ஆகியவற்றைப்பற்றிச் சிந்தியுங்கள்.

    உடற்பயிற்சி

    வாரத்துக்கு மூன்று முறை சுமார் 20 நிமிடங்களுக்கு ஓரளவு தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபடுவது மனநிலையை மேம்படுத்துவதாகத் தெரிகிறது.

    மகிழ்ச்சி

    நீங்கள் மகிழ்ந்து செய்கிற, உங்கள் வாழ்க்கைக்குப் பொருளைத் தருகிற விஷயங்களை அவ்வப்போது கண்டிப்பாகச் செய்யுங்கள்.

    உங்களுடைய மருந்துகளைத் தொடருங்கள்

    உங்களுடைய மருந்துகளைப் பாதுகாப்பாக நிறுத்திவிடலாம் என்று உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பதற்குமுன்னால், நீங்களே உங்கள் மருந்துகளை நிறுத்திவிட விரும்பலாம். ஆனால், இது இன்னொரு மனநிலை ஊசலாட்டத்துக்கு வழிவகுக்கக்கூடும். நீங்கள் நன்றாக இருக்கும்போது, இதைப்பற்றி உங்கள் மருத்துவரிடமும் உங்கள் குடும்பத்தினரிடமும் பேசுங்கள்.

    உங்களுடைய இருமுனைக் குறைபாடு எப்படிக் குணப்படுத்தப்படுகிறது என்பதுபற்றிய உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

    நீங்கள் இருமுனைக் குறைபாட்டால் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறீர்கள் என்றால், உங்கள் மருத்துவர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து நீங்கள் இவற்றை எழுத விரும்பலாம்:

    • உங்களுக்கு மீண்டும் நோய் வந்தால் நீங்கள் எப்படிக் குணப்படுத்தப்படவேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்பதை விவரிக்கும் ஒரு ‘முன்கூட்டிய அறிக்கை’. (இதில் உங்கள் நலம் அல்லது பராமரிப்புக்கு முக்கியம் என்று நீங்கள் உணர்கிற எந்தத் தகவலும் இடம்பெறலாம்)
    • நீங்கள் பெற விரும்பாத குறிப்பிட்ட சிகிச்சைகள் எவையேனும் இருந்தால், அவற்றைப்பற்றிய ஒரு ‘முன்கூட்டிய தீர்மானம்'.

    நான் என் GPயிடம் என்ன எதிர்பார்க்கலாம்? (இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்மட்டும்)

    நீங்கள் உங்களுடைய இருமுனைக் குறைபாட்டைக் குணமாக்குவதற்கு லித்தியம் அல்லது வேறு மருந்தை எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால், உங்கள் GP ஆண்டுதோறும் உங்களுடைய உடல்நிலையைப் பரிசோதிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.1 இது பின்வருவனவற்றைச் சரிபார்க்கும்:

    • இரத்த அழுத்தம்.
    • எடை மற்றும் உடல் நிறைக் குறியீட்டெண் (BMI).
    • புகை பிடித்தல் மற்றும் மதுப் பயன்பாடு.
    • இரத்தச் சர்க்கரை அளவுகள்.
    • கொழுமிய (லிபிட்) அளவுகள் : 40 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும்.
    • நீங்கள் லித்தியம் எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால், இவையும் தேவை:
      • 3 முதல் 6 மாதங்களுக்கு ஒருமுறை லித்தியம் அளவுப் பரிசோதனை.
      • 6 மாதங்களுக்கு ஒருமுறை தைராய்டு மற்றும் சிறுநீரகச் செயல்பாட்டுக்கான இரத்தப் பரிசோதனை. ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், நீங்கள் இந்த இரத்தப் பரிசோதனைகளை மேலும் அடிக்கடி செய்யவேண்டியிருக்கலாம்.

    குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கான தகவல்கள்

    பித்து நிலை அல்லது மனச் சோர்வு நிலை குடும்பத்தினர், நண்பர்களுக்குத் துன்பத்தைத் தரலாம், களைப்பை உண்டாக்கலாம்.

    மனநிலை நிகழ்வைக் கையாளுதல்

    மனச் சோர்வு
    மனச் சோர்வில் இருக்கும் ஒருவரிடம் என்ன சொல்வது என்பது பலருக்குச் சிரமமாக இருக்கலாம். அவர்கள் எல்லாவற்றையும் எதிர்மறை ஒளியில் பார்க்கிறார்கள். நீங்கள் என்ன செய்யவேண்டும் என்கிற தங்களுடைய எதிர்பார்ப்புகளை அவர்களால் சொல்ல இயலாமலிருக்கலாம். அவர்கள் யாருடனும் பேசாமல் விலகியிருக்கலாம், எரிச்சலுடன் காணப்படலாம். ஆனால் அதே நேரத்தில், அவர்களுக்கு உங்கள் உதவியும் ஆதரவும் தேவைப்படும். அவர்கள் கவலைப்படலாம். ஆனால், அறிவுரையை ஏற்றுக்கொள்ள விரும்பாமலோ இயலாமலோ இருக்கலாம். இயன்றவரை பொறுமையாக இருக்க முயலுங்கள், அவர்களைப் புரிந்துகொள்ள முயலுங்கள்.

    பித்து நிலை
    பித்து நிலை மனநிலை ஊசலாட்டத்தின் தொடக்கத்தில் இருப்பவர் மகிழ்ச்சியாக, ஆற்றலுடன், பிறருடன் நன்கு பழகிக்கொண்டு இருப்பதாகத் தோன்றும். அவர் எந்த ஒரு கொண்டாட்டத்தின் அல்லது சூடான விவாதத்தின் உயிராகவும் ஆன்மாவாகவும் தோன்றுவார். ஆனால், இதுபோன்ற சூழ்நிலைகளினால் உண்டாகும் மகிழ்ச்சி அவர்களுடைய மனநிலையை மேலும் உயரத்துக்குத் தள்ளக்கூடும். அதனால், அதுபோன்ற சூழ்நிலைகளிலிருந்து அவர்களை விலக்கப் பாருங்கள். நீங்கள் அவர்களுடன் பேசி, அவர்களை உதவி பெறும்படி தூண்டலாம், அல்லது, இந்த நோயைப்பற்றிய மற்றும் அதற்குப் பெறக்கூடிய தன்னுதவியைப்பற்றிய சில தகவல்களை அவர்களுக்குப் பெற்றுத்தரலாம்.

    எதார்த்தமான உதவி மிகவும் முதன்மையானதாகும். இந்தச் சூழ்நிலையில் அது மிகவும் பாராட்டப்படுகிறது. உங்களுடைய உறவினர் அல்லது நண்பரால் தன்னை முறையாகப் பார்த்துக்கொள்ள இயலுகிறது என்பதையும், பில்களுக்குப் பணம் செலுத்துவது போன்ற எதார்த்தமான அன்றாடச் செயல்களை அவர் மறந்துவிடுவதில்லை என்பதையும் உறுதிப்படுத்துங்கள்.

    உங்கள் அன்புக்குரியவர்கள் நன்றாக இருக்க உதவுவது

    மனநிலை மாற்ற நிகழ்வுகளுக்கிடையில், இருமுனைக் குறைபாட்டைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர் அல்லது அன்புக்குரியவர் GP அல்லது மன நல மருத்துவரைச் சந்திக்கச் செல்லும்போது, ஒருமுறை நீங்களும் அவருடன் செல்லலாம். இது உங்களுக்கு உதவியாக இருக்கும்.

    உங்களுடைய உள்ளூர் மன நல மருத்துவச் சேவை இருமுனைக் குறைபாட்டுக்கான ஆதரவு, குடும்பக் கூட்டங்கள் மற்றும் அதுபற்றிய தகவல்களை வழங்கும்.

    நீங்கள் நன்றாக இருத்தல்

    உங்களுடைய சோர்வைப் போக்கிப் புத்துணர்ச்சி பெறுவதற்குத் தேவையான இடம் மற்றும் நேரத்தை உண்டாக்கிக்கொள்ளுங்கள். உங்களுக்கென்று, அல்லது, உங்களுக்குத் தேவையான ஆதரவைக் கொடுக்கக்கூடிய நம்பிக்கையான நண்பர்களுடன் செலவிடுவதற்கு நேரத்தை உண்டாக்குங்கள். உங்கள் உறவினர் அல்லது நண்பர் மருத்துவமனைக்குச் செல்லவேண்டியிருந்தால், அவரைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை இன்னொருவருடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நீங்கள் மிகவும் களைப்பாக இல்லாவிட்டால், உங்கள் நண்பர் அல்லது உறவினரை இன்னும் நன்றாகப் பார்த்துக்கொள்ளலாம்.

    நெருக்கடி நிலையைக் கையாளுதல்

    • தீவிரப் பித்து நிலையில் உள்ள ஒருவர் பிறரிடம் பகைமையுடன் நடந்துகொள்ளலாம், ஐயப்படலாம், சொற்களால் அல்லது உடலால் சினத்தைக் காட்டலாம்.
    • தீவிர மனச் சோர்வு நிலையில் உள்ள ஒருவர் தற்கொலையைப்பற்றிச் சிந்திக்கத் தொடங்கலாம்.

    நீங்கள் இவற்றைப் பார்த்தால்:

    • ஒருவர் எதையும் சாப்பிடாமல் அல்லது எதையும் குடிக்காமல் தன்னைத் தானே மிகவும் புறக்கணித்துக்கொள்கிறார்
    • அவர்களை அல்லது பிறரை ஆபத்துக்கு ஆளாக்கும் விதத்தில் நடந்துகொள்கிறார்
    • தன்னைக் காயப்படுத்திக்கொள்வது அல்லது தற்கொலை செய்துகொள்வதுபற்றிப் பேசுகிறார்

    உடனடியாக மருத்துவ உதவி பெறுங்கள். மன நல அறக்கட்டளை அல்லது நெருக்கடி நேரக் குழுவின் நெருக்கடி நேர உதவி எண்ணை அழைக்கலாம். A&E துறைகளில் 24 மணிநேரமும் மன நல மருத்துவர் ஒருவர் இருப்பார்.

    நம்பிக்கையான, இதுபோன்ற நெருக்கடி நேரங்களில் நீங்கள் அழைக்கக்கூடிய தொழில் வல்லுநர் ஒருவருடைய பெயர், தொலைபேசி எண்ணைக் குறித்துவையுங்கள். சில நேரங்களில், அவர்கள் சிறிது நேரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவேண்டியிருக்கலாம்.

    உங்களுக்கு இருமுனைக் குறைபாடு இருக்கும்போது குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளுதல்

    நீங்கள் பித்து நிலை அல்லது மனச் சோர்வு நிலையில் இருந்தால், உங்களால் சிறிது காலத்துக்கு உங்கள் குழந்தைகளை முறையாகப் பார்த்துக்கொள்ள இயலாமல் போகலாம். நீங்கள் நலமின்றி இருக்கும் நேரத்தில் உங்கள் துணைவர் அல்லது இன்னொரு குடும்ப உறுப்பினர் சிறிது காலத்துக்கு இதைச் செய்யவேண்டியிருக்கும். இதற்கு முன்கூட்டியே, அதாவது, நீங்கள் நன்றாக இருக்கும்போதே திட்டமிட்டுக்கொள்வது நல்லது.

    நீங்கள் நலமின்றி இருக்கும்போது, உங்கள் குழந்தை பதற்றமாகவும் குழப்பமாகவும் உணரலாம். சிறு குழந்தைகளால் தங்கள் துன்பத்தைச் சொற்களில் வெளிப்படுத்த இயலாவிட்டால், அவர்கள் கடினமானவர்களாக அல்லது சார்ந்திருக்கிறவர்களாக ஆகக்கூடும். வளர்ந்த குழந்தைகள் அதை வேறுவிதமாகக் காண்பிப்பார்கள்.

    குழந்தைகளைச் சுற்றியிருக்கும் பெரியவர்கள் நுண்ணுணர்வுடனும், புரிந்துகொள்கிறவர்களாகவும் இருந்தால், அவர்களுடைய சிரமங்களுக்கும் கேள்விகளுக்கும் அமைதியான, ஒரேமாதிரியான மற்றும் ஆதரவான முறையில் பதிலளித்தால், அது அந்தக் குழந்தைகளுக்கு உதவியாக இருக்கும். அவர்களுடைய தந்தை அல்லது தாய் ஏன் வேறுவிதமாக நடந்துகொள்கிறார் என்பதை வேறொரு பெரியவர் அவர்களுக்கு விளக்கிப் புரியவைக்கலாம். கேள்விகளுக்கு அமைதியாகவும், தகவல்கள் அடிப்படையிலும், அவர்கள் புரிந்துகொள்ளக்கூடிய மொழியிலும் பதிலளிக்கவேண்டும். அவர்கள் தங்களுடைய வழக்கமான அன்றாட வேலைகளை எப்போதும்போல் செய்ய இயன்றால், அவர்கள் இன்னும் நன்றாக உணர்வார்கள்.

    இருமுனைக் குறைபாட்டைப்பற்றிக் குழந்தைகளுக்கு விளக்குதல்

    சில நேரங்களில், வளர்ந்த குழந்தைகள் தங்களால்தான் தங்களுடைய தந்தை அல்லது தாய்க்கு நோய் வந்துவிட்டது என்று கவலைப்படுகிறார்கள். இந்த நோய்க்கு அவர்கள் காரணம் இல்லை என்பதை அவர்களுக்கு உறுதியாகப் புரியவைக்கவேண்டும். அத்துடன், அவர்கள் தேறி வருவதற்கு வேண்டிய நேரத்தையும் ஆதரவையும் வழங்கவேண்டும். வளர்ந்த குழந்தை ஒருவர் நலமின்றி இருக்கும் தன்னுடைய தந்தை அல்லது தாயைக் கவனித்துக்கொள்கிறார் என்றால், அவருக்குக் குறிப்பிட்ட புரிந்துகொள்ளலும் எதார்த்தமான ஆதரவும் தேவைப்படும்.

    ஆதரவுக் குழுக்கள் மற்றும் கவனித்துக்கொள்ளும் அமைப்புகள்

    Bipolar UK
    Bipolar UK இருமுனைக் குறைபாடு கொண்டவர்கள், அவர்களுடைய நண்பர்கள், அவர்களைப் பார்த்துக்கொள்கிறவர்களுக்கு உதவி, அறிவுறுத்தல் மற்றும் தகவல்களை வழங்குகிறது.
    Peer support line:
    07591375544 (பதிலளிக்கும் தொலைபேசி மற்றும் திரும்ப அழைத்தல்)

    Bipolar Fellowship Scotland
    Bipolar Fellowship Scotland இருமுனைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களைப் பார்த்துக்கொள்கிற எல்லாருக்கும் தகவல்கள், உதவி மற்றும் அறிவுறுத்தலை வழங்குகிறது. இவர்கள் ஸ்காட்லாந்து முழுவதும் சுய உதவியை முன்னிறுத்துகிறார்கள், இந்த நோயைப்பற்றியும் இந்த அமைப்பைப்பற்றியும் மக்களுக்குத் தெரிவிக்கிறார்கள், கற்பிக்கிறார்கள்.
    தொலைபேசி:
    0141 560 2050

    Side by Side - MIND இணையச் சமூகம்
    Side by Side என்பது, ஓர் ஆதரவளிக்கும் இணையச் சமூகமாகும். இங்கு நீங்கள் உங்களுடைய மன நலத்தைப்பற்றி இயல்பாகப் பேசலாம், உங்களுடைய நிலையைப் புரிந்துகொள்ளும் பிறருடன் இணையலாம்.

    MIND உதவித் தொலைபேசி இணைப்புகள்
    MIND மன நலத்தைப்பற்றி விவாதிப்பதற்குப் பல உதவித் தொலைபேசி இணைப்புகளை வழங்குகிறது.

    Samaritans
    Samaritans அமைப்பு, கவலை கொண்டவர்கள், வருந்துகிறவர்கள் அல்லது தற்கொலை எண்ணம் கொண்டவர்களுக்குத் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் நாள்தோறும் 24 மணிநேரமும் ரகசியமான, தீர்ப்பளிக்காத ஆதரவை வழங்குகிறது.
    தொலைபேசி:
    116 123
    மின்னஞ்சல்:
    jo@samaritans.org

    மேலும் படிக்க

    • ஃபாஸ்ட் A. J., பிரெஸ்டன் J. D. இருமுனைக் குறைபாடு கொண்ட ஒருவர்மீது அன்பு செலுத்துதல்: உங்கள் துணைவரைப் புரிந்துகொள்ளுதல், அவருக்கு உதவுதல். நியூ ஹர்பிங்கர் பதிப்பகம்; 2012.
    • கெட்டெஸ், J. (2003) இருமுனைக் குறைபாடு. சான்று அடிப்படையிலான மன நலம், 6 (4): 101-2.
    • குட்வின், G.M. (2009) இருமுனைக் குறைபாட்டைக் குணப்படுத்துவதற்கான சான்று அடிப்படையிலான வழிகாட்டுதல்கள்: திருத்தப்பட்ட மூன்றாம் பதிப்பு: உளவியல் மருந்தியலுக்கான பிரிட்டிஷ் அமைப்பின் பரிந்துரைகள். உளவியல் மருந்தியல் சஞ்சிகை, 30(6); 495-553.
    • கே ரெட்ஃபீல்ட் ஜாமிசன். அமைதியில்லாத ஒரு மனம். ஆல்ஃப்ரெட் A. க்னாப்ஃப்; 1995.

    பொதுமக்களுக்கான NICE தகவல்கள்

    தகவல் உதவி

    RCPsych பொது ஊடாடல் ஆசிரியர் வாரியத்தால் தயாரிக்கப்பட்டது

    இந்த வரிசையின் ஆசிரியர்: டாக்டர் ஃபில் டிம்ஸ்

    இந்த வரிசையின் மேலாளர்: தாமஸ் கென்னடி

    © ஆகஸ்ட் 2020 Royal College of Psychiatrists

    இந்தச் சிற்றேட்டை Royal College of Psychiatrists அனுமதியின்றி முழுமையாக அல்லது பகுதியளவு திரும்ப வெளியிடக்கூடாது.

    This translation was produced by CLEAR Global (May 2024)

    Read more to receive further information regarding a career in psychiatry