சாராயமதுபானம் - நமக்கு பிடித்த மருந்து

Tamil translation: Alcohol our favourite drug

மறுப்பு


தயவுசெய்து எங்கள் மறுத்து, இந்த தளத்தில் கிடைக்கும் அனைத்து மொழிபெயர்ப்புகளுக்கும் பொருந்தும்.

முன்னுரை:

நம்மில் பலர் இன்பம் அனுபவிக்க மதுபானம் அருந்துவோம் ஆனால் சிலருக்கோ குடிப்பது தீவிர பிரச்னையாக மாறலாம். உண்மையில் சாராயமதுபானம், கஞ்சா மற்றும் ஹெராயினை விட அதிக தீங்கு விளைவிக்கும். மது ஒரு அமைதியூட்டி, அடிமைப்படுத்தும் தன்மையுடையது, விபத்து மற்றும் உடல்நலக்கோளாறுகளால் பல மருத்துவமனை சேர்க்கைகளுக்கு காரணமாகும்.

மதுவினால் உண்டாகும் பிரச்னைகள்:

அளவுக்கு அதிகமாக குடிப்பது, தவறான இடத்தில் அல்லது நேரத்தில் குடிப்பது பல பிரச்னைகளுக்கு காரணமாகும். மது உங்களின் மதிப்பீடும் தன்மையை பாதிக்கும் ஆதலால் நீங்கள் இயல்பாக சிந்தனைகூட செய்யாத விசயங்களை செய்வீர்கள். மதுவினால் ஆபத்துகளை குறைவாக உணர்வீர்கள் ஆதலால் நீங்கள் எளிய இலக்காவீர்கள். நீங்கள் பெரும்பாலான சமயங்களில் சண்டை, வாதங்கள்,  பணப்பிரச்னைகள், குடும்பதுன்பங்கள் அல்லது அக்கணத்தில் உந்தப்பட்டு பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவீ்ர்கள். மது வீடு, சாலை, நீர்நிலைகள் மற்றும் விளையாட்டு களங்களில் ஏற்படும் விபத்துகளுக்கு காரணமாகும்.

மதுவினால் உண்டாகும் உடல்நலக்கோளாறுகள்:

அளவுக்கு அதிகமாக மது அருந்துவதால் தீவிர நீட்டிப்பு (Hangovers), வயிற்று வலி, இரத்த வாந்தி, மயக்கமடைதல் மற்றும் மரணம் நேரிடலாம். மிகவும் அதிகமாக நீண்ட காலம் குடிப்பதால் கல்லீரல் நோய் மற்றும் சில வகையான புற்றுநோய் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கும். 40 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் மாதவிடாய் அடைந்த பெண்கள் மிதமாக மது அருந்துவதால் இதய நோய் உண்டாகும் அபாயத்தை குறைக்க இயலும்.

மதுவினால் உண்டாகும் மனநலக்கோளாறுகள்:

நாம் மதுபானத்தை சந்தோஷமாக இருப்பதற்காக குடிக்கிறோம் என்று நினைத்தாலும் மிகையான குடி மனச்சோர்வை கொண்டுவரக்கூடும். தற்கொலை செய்துகொள்ளும் பலருக்கு குடிப்பழக்கம் இருப்பதுண்டு. மது ஞாபகமறதி மற்றும் மூளை பாதிப்பை உண்டாக்கும். அது குரல் மற்றும் சத்தங்களை கேட்க வைக்கும் - இவ்வனுபவம்  மிகவும் இனிமையற்றதாகவும் விடுபட கடினமானதாகவும் இருக்கும்.

எச்சரிக்கை அறிகுறிகள்:

கீழே குறிப்பிட்டுள்ளவை போதை பழக்கத்திற்கு அடிமையாக்கும் சில எச்சரிக்கை அறிகுறிகளாகும்.

 

  • குடிக்காமல் இயல்பாக இருக்க இயலாதது அல்லது குடிக்காமல் ஒரு நாளை தொடங்க முடியாமல் இருத்தல்
  • குடித்து முடித்த சில மணி நேரத்தில் வேர்வை, நடுக்கம் மற்றும் மனப்பதட்டம் ஏற்படுதல்
  • அதிகமாக குடித்தாலும் போதை இல்லாமல் இருப்பது
  • அதே விளைவைப்பெற மேலும் மேலும் குடிக்க நேரிடும்
  • குடியை நிறுத்த முயன்றாலும் முடியாமல் போதல்
  • வேலை, குடும்பம் மற்றும் உறவுகள் குடியினால் பாதிக்கப்பட்டாலும் உங்கள் குடிப்பழக்கம் தொடரும்
  • உங்களுக்கு “நினைவக வெற்றிடங்கள்” (Memory blanks) ஏற்படும் அதனால் சில மணி நேரங்களுக்கு அல்லது நாட்களுக்கு என்ன நடந்தது என்று நினைவில் இருக்காது   

மதுவினால் வரும் பிரச்னைகளை கையாள்வது:

நீங்கள் உங்களுடைய அல்லது  உங்கள் நண்பரின் குடிப்பழக்கத்தைப் பற்றி கவலைப்பட்டால் உடனடியாக மாற்றங்களை செய்யவேண்டும். உடல்நலத்தை பாதிப்பதற்கு முன் மிக எளிதாக குடியை குறைத்து கொள்ளலாம், குடிப்பழக்கம் கைமீறிவிட்டால் சிரமமாகிவிடும்.

முதல் படி:

உங்கள் குடிப்பழக்கத்தை ஒரு நாட்குறிப்பில் குறியிடுங்கள் - நீங்களே உங்கள் குடியின் அளவைக் கண்டு வியந்து போவீர்கள் மற்றும் இது உங்கள் குடியை குறைக்க ஊக்குவிக்கும். நண்பரிடமோ அல்லது உறவினரிடமோ உங்கள் திட்டங்களைப்பற்றி பேசுவது உதவி செய்யும். பிறரிடம் பேசுவதற்கு வெட்கப்படாதீர்கள். மிகவும் உண்மையான நண்பர்கள் உதவ சந்தோஷப்படுவார்கள் - அவர்களும் சில நேரம் உங்களைப்பற்றி கவலை கொண்டிருப்பதை உணர்வீர்கள்.

 

உதவி பெறுவது:

உங்கள் குடிப்பழக்கத்தை மாற்றுவது கடினமாக இருந்தால் மருத்துவரிடம் பேச முயற்சி செய்யலாம் அல்லது உள்ளூர் மது அமைப்பிடமிருந்து ஆலோசனை பெறலாம். குடியை குறைக்க முயல்கையில் மிதமிஞ்சிய நடுக்கமோ, அமைதியற்ற நிலையோ குடிப்பழக்கத்தை நிறுத்த தடையானால் உங்கள் மருத்துவர் குறுகிய காலத்திற்கு சில மருந்தளித்து உதவமுடியும். இதற்கு பின்னும் குடிப்பழக்கத்தை மாற்றுவது சிரமமாக  இருந்தால் உங்களுக்கு சிறப்பு உதவி தேவைப்படும்.

பழக்கத்தை மாற்றுதல்:

நாம் அனைவரும் ஒரு பழக்கத்தை மாற்ற சிரமப்படுவோம். குறிப்பாக அப்பழக்கம் நம் வாழ்வின் ஒரு பெரும்பகுதியாய் இருக்கும் பொழுது. இந்த பிரச்னை தீர மூன்று வழிகள் உண்டு

 

  • பிரச்னை உள்ளது என்பதை உணர்தல் மற்றும் ஏற்றுக்கொள்ளுதல்
  • பழக்கத்தை மாற்ற உதவி பெறுதல்
  • ஒருமுறை மாற்றங்கள் செய்ய தொடங்கியபின் அவற்றை தொடர்ந்து செய்தல்

நீங்கள் மது அருந்துவது உங்கள் மன அழுத்தம் மற்றும் கவலையை கையாளும் வழியாக இருக்கலாம். ஒரு மனநல மருத்துவரோ அல்லது உளவியல் வல்லுநரோ கவலைகளை சமாளிப்பதற்கு குடி சாராத வழிமுறைகள் மூலமாக உதவமுடியும்.

 

இதே பிரச்னை உள்ள மற்றவர்களை குழுக்களில் சந்திப்பது மிகவும் பயனளிக்கும். சுய உதவி குழுக்களான “ஆல்ககாலிக் அனானிமஸ்” மற்றும் மது சிகிச்சை பிரிவுகளில் குழு சார்ந்த சிகிச்சைகள் நடைபெறுகின்றன.

 

பெரும்பாலானவர்களுக்கு குடிப்பழக்கத்தை சமாளிக்க மருத்துவமனை செல்ல வேண்டிய அவசியம் இல்லை. சிலருக்கு குடிக்கும் இடங்கள் மற்றும் உடன் குடிக்கும் நபர்களிடம் இருந்து விடுபடுதல் அவசியம். இவர்களுக்கு, மது சிகிச்சை பிரிவில் குறுகிய காலத்திற்கு சிகிச்சை பெறுவது இன்றியமையாதது. மது விலகல் நோய் அறிகுறிகளை (Withdrawal symptoms)சரிசெய்ய மட்டுமே மருந்துகள் பயன்படும். முக்கியமாக அமைதியூட்டிகளை மாற்று மருந்தாக சார்ந்திருப்பதை தவிர்க்க வேண்டும்

 

குடிப்பவர் எவராயினும் அவருக்கு மது சார்ந்த பிரச்னைகள் உண்டாகலாம் - சிலர் எல்லாவற்றையும் இழக்க நேரிடும் - மது வீடற்ற நிலைக்கு முக்கிய காரணமாகும். சிலருக்கு வெறும் ஆதரவு மற்றும் பேசுவது மட்டுமே போதுமானாலும் மற்றவருக்கோ வேலைக்கு செல்ல, ஏதோ ஓரிடத்தில் வாழ மற்றும் உறவு முறைகளை தொடங்க  நீண்ட கால உதவி தேவைப்படும்.

 

குடிப்பழக்கத்தை கண்காணிப்பது மிகவும் கடின உழைப்பாயினும் இறுதியில் அது உங்கள் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் மாற்றங்களை உண்டு பண்ணி பலனளிக்கும்.

 

எவ்வளவு மதுபானம் அருந்துவது மிக அதிகமானது?

சில மதுபானங்கள் மற்றவைகளவிட வலிமையானவை. நாம் அருந்தும் மதுவின் அளவை “அலகுகள்”(Units) மூலமாக கணக்கிடுவது, எவ்வளவு மதுபானம் அருந்துகிறோம் என்பதை சுலபமாக அறிந்துகொள்ளும் வழியாகும். ஒரு அலகு 10 மில்லி சாரயத்துக்கு சமமானதாகும் -  மதுக்கடையில் கிடைக்கும் நிலையான சாரய அளவு (Standard pub measure), அரை திரவளவு (Half pint) சாதரண பீர் அல்லது லாஹர்,  ஒரு சிறிய கண்ணாடிக்குடுவை (glass) திராட்சைபழச்சாறு (Wine) ஆகியவற்றில் உள்ள சாரயத்தின் அளவு ஒரு அலகாகும்.

 

ஒரே எடையுடைய ஆணும் பெண்ணும் சமமான அளவு மதுபானம் பருகினாலும் மதுவின் அளவு ஆண்களைவிட பெண்களின் உடம்பில் அதிக அளவில் காணப்படும். ஆதலால், நியாயமற்றதாகத் தோன்றினாலும், பெண்களின் பாதுகாப்பான (Safe limit) மது அளவு (ஒரு வாரத்திற்கு14 அலகுகள்) ஆண்களைவிட (ஒரு வாரத்திற்கு 21 அலகுகள்) குறைவானதாகும்.

 

அதிகப்படியான குடி (Binge Drinking):

ஒரு சமயத்தில் நீங்கள் எவ்வளவு குடிக்கிறீர்கள் என்பது மிக முக்கியம். மேற்குறிப்பிட்ட “பாதுகாப்பான குடியளவு” (Safe limits) என்பது உங்கள் குடி, வாரம் முழுவதும் பரவியிருக்கும் என்ற ஊகத்தில் அமைந்ததாகும்.

 

எந்த ஒரு நாளிலும் ஆண்கள் 4 அலகுகளுக்கு மேலும் பெண்கள் 3 அலகுகளுக்கு மேலும் குடிக்காமலிருப்பது மிகச் சிறந்தது. ஒரே நாளில் ஆண்கள் 8 அலகுகளுக்கு அதிகமாகவும் பெண்கள் 6 அலகுகளுக்கு மேலும் குடிப்பதே “அதிகப்படியான குடி”யாகும்.

 

ஒரே இரவில் பாதுகாப்பான குடி அளவிற்கு மேல் குடித்தாலும் அந்த வாரம் முழுவதும் நீங்கள் பாதுகாப்பான  குடியளவு எல்லைக்குள்ளேயே இருக்ககூடும். இரண்டு நாட்கள் அதிகப்படியாக குடித்தல் (Binge drinking) மூளையின் உயிரணுக்களை கொல்லத் தொடங்கும் என சில ஆய்வுகள் கூறுகின்றன. இது தொடர்ந்து நீண்ட நாட்கள் குடிப்பவர்களுக்கு மட்டுமே  நிகழும் என முன்னர் கருதப்பட்டது. அதிகப்படியான குடி (Binge Drinking) நடுத்தரவயதுடைய ஆடவருக்கு மரணம் விரைவில் சம்பவிக்கும் ஆபத்தை அதிகப்படுத்தும்.

 

பயனுள்ள அமைப்புகள்:

அடிக்சன் ஹெல்பர் – தொலை பேசி எண்:  08000241488 / 02031316354. “உதவி” (HELP) என்ற உரை செய்தியை (Text) 66777 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.

ஆல்ககாலிக் அனானிமஸ் - தொலை பேசி எண் : 08457697555

ஆல்ககால் போக்கஸ் ஸ்காட்லந்து - தொலை பேசி எண்: 01415726700

குடிப்பழக்கத்தைப் பற்றி கவலையா? - தேசிய குடி உதவி இணைப்பை அழைக்கவும் - 03001231110

Read more to receive further information regarding a career in psychiatry