மது, மன நலம் மற்றும் மூளை

Alcohol, mental health and the brain

Below is a Tamil translation of our information resource on alcohol, mental health and the brain. You can also view our other Tamil translations.

மறுப்பு


தயவுசெய்து எங்கள் மறுத்து, இந்த தளத்தில் கிடைக்கும் அனைத்து மொழிபெயர்ப்புகளுக்கும் பொருந்தும்.

இந்த ஆவணம் மது மற்றும் அது உங்கள் மூளை மற்றும் மன நலத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதைப்பற்றிப் பேசுகிறது. இது மதுவைச் சார்ந்து இருப்பவர்கள் அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிந்தவர்கள், மதுவைப்பற்றி மேலும் அறிய விரும்பும் பெரியவர்களை இலக்காகக் கொண்டது.

இந்த ஆவணத்தில் இவற்றைக் காணலாம்:

 • மது என்பது என்ன
 • அது உங்கள் மூளையை எப்படிப் பாதிக்கிறது
 • அது மன நலத்தை எப்படிப் பாதிக்கிறது
 • மதுவைச் சார்ந்திருத்தல்
 • மதுவுடன் தொடர்புடைய மூளைச் சேதம்
 • நீங்கள் எவ்வளவு குடிக்கிறீர்கள் என்பதை எப்படிக் கணக்கிடுவது
 • நீங்கள் மிகக் கூடுதலாகக் குடிக்கிறீர்கள் என்றால், அதைச் சரி செய்ய உதவி பெறுவது எப்படி

மது என்பது என்ன?

மது (‘எத்தனால்' அல்லது ‘எத்தில் ஆல்கஹால்' என்றும் அழைக்கப்படுகிறது) என்பது, இரத்த ஓட்டத்தில் உறிஞ்சப்பட்டபின் உடலின் ஒவ்வொரு பகுதியினுள்ளும் நுழையக்கூடிய ஒரு பொருளாகும்.

மது இருக்கும் பானங்களை மது பானங்கள் என்று அழைக்கிறார்கள். பலவிதமான மது பானங்கள் உள்ளன. இவை வெவ்வேறு வழிகளில் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் பலவிதமான வேறு பொருட்களும் உள்ளன. எனினும், இவை பொதுவாகப் பின்வரும் வகைகளில் அமைகின்றன:

 • பியர் மற்றும் சிடர்
 • ஒயின்
 • ஸ்பிரிட்ஸ் (வோட்கா, ஜின் அல்லது விஸ்கி போன்றவை)

வெவ்வேறு மது பானங்களில் மதுவின் ‘வலிமை’ வெவ்வேறுவிதமாக உள்ளது. இதன் பொருள், ஒவ்வொரு மது பானமும் உடலில் வெவ்வேறுவிதமான தாக்கத்தைக் கொண்டிருக்கலாம்.

UKல் 18 வயதுக்கு மேற்பட்ட வயதுவந்தோர் மது வாங்குவதும் குடிப்பதும் சட்டப்படி அனுமதிக்கப்படுகிறது. பொதுவாக, 18 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மதுவைக் குடிப்பதோ வாங்குவதோ சட்டத்துக்கு எதிரானது. மது தொடர்பான சட்டங்களைப்பற்றி நீங்கள் மேலும் அறிந்துகொள்ளவேண்டுமென்றால், இந்த அரசாங்க இணையத் தளத்துக்குச் செல்லலாம்.

மக்கள் மது அருந்துவது ஏன்?

2021ல் இங்கிலாந்து மக்களிடையே நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் கலந்துகொண்ட மக்களில் பாதிக்குச் சற்றுக் குறைவானவர்கள் தாங்கள் வாரம் ஒருமுறையாவது மது அருந்துவதாகச் சொன்னார்கள்.

மக்கள் வெவ்வேறு காரணங்களால் மது அருந்துகிறார்கள். சிலர் மகிழ்ச்சிக்கு அல்லது மனத்தை இதமாக்க மது அருந்துகிறார்கள். வேறு சிலர் தங்கள் வாழ்க்கையில் உள்ள சிரமங்களைக் கையாள உதவுவதற்கு மது அருந்துகிறார்கள்.

மதுவானது வெவ்வேறு மக்களை வெவ்வேறுவிதமாகப் பாதிக்கிறது. சிலர் அவ்வப்போது மது அருந்துகிறார்கள், அதை மகிழ்ச்சியுடன் செய்கிறார்கள், அது அவர்களிடம் எதிர்மறைத் தாக்கம் எதையும் கொண்டிருப்பதில்லை. மற்றவர்கள் அளவாகக் குடிக்க இயலாமல் தடுமாறுகிறார்கள், அல்லது, மது அருந்திய நேரத்தில் தாங்கள் வருத்தப்படும்படியான செயல்களைச் செய்துவிடுகிறார்கள்.

சிலர் மதுவை அருந்தாமல் இருக்கத் தீர்மானித்துவிடுகிறார்கள். இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். எடுத்துக்காட்டாக:

 • அவர்கள் குடி போதை உணர்வை விரும்புவதில்லை
 • அவர்களுக்கு அந்தச் சுவை பிடிப்பதில்லை
 • அவர்கள் மது அருந்தும்போது உடல் நலம் சரியில்லாததுபோல் அல்லது மிகவும் தூக்கக் கலக்கமாக உணர்கிறார்கள்
 • சிலர் தங்களுடைய உடல் நலம் கருதி மது அருந்துவதில்லை
 • சிலர் மதக் காரணங்களுக்காக மது அருந்துவதில்லை

சிலர் எந்தக் காரணமும் இல்லாமல் மது அருந்தாமல் இருந்துவிடுகிறார்கள்.

மது பானங்கள் எந்த அளவு வலுவானவை என்று நான் எப்படித் தெரிந்துகொள்வது?

மது பானங்கள் எந்த அளவு வலுவானவை என்று தெரிந்துகொள்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன:

 • அலகுகள் – மக்கள் தாங்கள் எவ்வளவு குடிக்கிறோம் என்பதை எளிதாகத் தெரிந்துகொள்ள உதவுவதற்கென அலகுகள் உருவாக்கப்பட்டன. இந்த அலகுகள் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறுவிதமாக அளக்கப்படுகின்றன. UKல் ஓர் அலகு என்பது, 10மிலி (அல்லது 8கிராம்) தூய மது ஆகும்.
 • பரும அளவின்படி மது, அல்லது ABV – ஒரு மது பானத்தில் எவ்வளவு தூய மது இருக்கிறது என்பதை இது குறிக்கிறது.

எடுத்துக்காட்டாக:

உங்களிடம் 750மிலி or 75செலி ஒயின் பாட்டில் ஒன்று உள்ளது. அந்தப் பாட்டிலில், இது 12% ABV என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பொருள், அந்தப் பாட்டிலில் 12% தூய மது உள்ளது. இந்த ஒயின் பாட்டிலில் 9 அலகுகள் உள்ளன.

இதனுடன் ஒப்பிடும்போது, 100மிலி அல்லது 10செலி வோட்கா பாட்டில் ஒன்று பொதுவாக 40% ABV ஆக இருக்கும். இதன் பொருள், அந்தப் பாட்டிலில் 40 அலகுகள் உள்ளன. இந்த ஆவணத்தின் முடிவில் மது அலகுகளுக்கான கையேடு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதில், வெவ்வேறு மது பானங்களில் உள்ள அலகுகள் மற்றும் ABV தகவல்கள் அட்டவணையாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

Diagram showing the volume, alcohol percentage and units for a bottle of wine and a bottle of vodka, in Tamil

நாம் அருந்தக்கூடிய பாதுகாப்பான மது அளவு என்பது என்ன?

மது அருந்துவதில் ‘பாதுகாப்பான’ அளவு என்று எதுவும் இல்லை. ஏனெனில், ஒவ்வொருவருடைய உடல்களும் வெவ்வேறுவிதமாக இயங்குகின்றன. மது உங்களை எப்படிப் பாதிக்கும் என்று உங்களால் எப்போதும் துல்லியமாகத் தெரிந்துகொள்ள இயலாது.

மது அருந்தும் வயதுவந்தோர் மதுவின்மூலம் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் கட்டுப்படுத்தவேண்டுமென்றால், வாரத்துக்கு 14 அலகுகளுக்குமேல் மது அருந்தவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இதன் பொருள்:

 • 3% க்குக்கீழ் ABV உள்ள பியர் 5 பின்ட் அல்லது
 • 12% ஒயின் 10 சிறிய (125மிலி) கோப்பைகள்.

இந்த அலகுகளை ஒரே நேரத்தில் குடிக்கக்கூடாது, வாரம்முழுவதும் சிறிது சிறிதாகக் குடிக்கவேண்டும். நடுவில் குடிக்காத நாட்களும் இருக்கவேண்டும்.

‘தொடர்ந்து நிறையக் குடிக்கும்' பழக்கத்தை எல்லாரும் தவிர்க்கவேண்டும். இதன் பொருள், ஆண்கள் ஒரே நாளில் 8 அலகுகளுக்குமேல், அல்லது, பெண்கள் ஒரே நாளில் 6 அலகுகளுக்குமேல் குடிப்பது.

கூடுதலாகக் குடிப்பதைத் தவிர்ப்பது எப்படி?

நீங்கள் கூடுதலாகக் குடிக்கிறீர்களோ என்கிற எண்ணம் உங்களுக்கு ஏற்பட்டால், நீங்கள் குடிக்கும் அளவைக் கட்டுப்படுத்தவேண்டும் என்று நீங்கள் விரும்பினால்:

 • நீங்கள் குடிக்கும் ஒட்டுமொத்த அளவைக் குறைக்க, உங்களுக்கு நீங்களே இலக்கு அமைத்துக்கொள்ளுங்கள்.
 • நீங்கள் நிறையக் குடிக்கும்படி ஊக்கப்படுத்தக்கூடிய மக்களுடன் அல்லது அப்படிப்பட்ட சூழல்களில் கூடுதல் நேரம் செலவிடாதீர்கள்.
 • குறைந்த மது கொண்ட அல்லது மது இல்லாத பியர்கள் அல்லது ஒயின்கள் போன்ற வலிமை குறைந்த பானங்களைக் குடியுங்கள்.
 • மது அருந்தாமல் நீங்கள் செய்யக்கூடிய செயல்பாடுகளைப்பற்றிச் சிந்தியுங்கள்.
 • இந்த முயற்சியில் உங்கள் கூட்டாளர் அல்லது நண்பரையும் ஈடுபடுத்துங்கள். நீங்கள் இருவரும் இணைந்து ஓர் இலக்கை ஒப்புக்கொள்ளலாம், அதை நோக்கிய உங்கள் முன்னேற்றத்தைப் பின்தொடரலாம். இந்த ஆவணத்தின் முடிவில், மது அளவைப் பின் தொடரும் கருவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அதைப் பயன்படுத்தலாம்.
 • உங்கள் GPயிடம் இதைப்பற்றிப் பேசுங்கள். பல மக்கள் இந்த எளிய செயலின்மூலம் தாங்கள் அருந்தும் மதுவின் அளவைக் குறைத்துவிடுகிறார்கள்.

நீங்கள் குடிக்கும் அளவைக் கட்டுப்படுத்துவதற்கு இலக்குகளை அமைக்கும்போது, அவற்றைக் குறிப்பிட்டவையாக, எளிதில் அளக்கக்கூடியவையாக, எட்டக்கூடியவையாக, எதார்த்தமானவையாக அமைக்க முயலுங்கள், அவற்றை எந்த நேரத்துக்குள் எட்டவேண்டும் என்று உங்களுக்கு நீங்களே நேர இலக்கும் அமைத்துக்கொள்ளுங்கள். இதன்மூலம், நீங்கள் உங்களுடைய இலக்குகளை எட்டும் வாய்ப்பு பெருகும்.

மதுவானது முதியவர்களை வேறுவிதமாகப் பாதிக்கிறதா?

நமக்கு வயதாக ஆக, நம் உடல்கள் மாறுகின்றன, அவை மதுவை இன்னும் மெதுவாக உடைத்துப் பிரிக்கின்றன. இதனால், முதியவர்கள் மதுவின் தாக்கங்களுக்குக் கூடுதல் நுண்ணுணர்வு கொள்ளக்கூடும்.

முதியவர்கள் மது அருந்துவதைக் கூடுதல் ஆபத்தாக ஆக்கக்கூடிய சில விஷயங்கள்:

 • நலப் பிரச்சனைகள் – முதியவர்களுக்கு மற்ற நலப் பிரச்சனைகள் இருக்கும் வாய்ப்பு கூடுதலாகும். இதன்மூலம், அவர்களை மதுவின் தாக்கங்கள் இன்னும் எளிதாகப் பாதிக்கலாம்.
 • விழும் ஆபத்து – பொதுவாக, ஒருவருக்கு வயதாக ஆக, அவருடைய எதிர்வினை நேரங்களும் சமநிலையும் மோசமடைகின்றன. மது அவர்களை இன்னும் நிலையற்று உணரச்செய்யலாம். அதனால், முதியவர்கள் குடிக்கும்போது கீழே விழுவதற்கான வாய்ப்புகள் கூடுதலாகின்றன.
 • மருந்துகள் – முதியவர்கள் பொதுவாகப் பயன்படுத்துகிற சில மருந்துகள் மதுவுடன் எதிர்வினை புரிந்து ஆபத்தைக் கொண்டுவரலாம். எடுத்துக்காட்டாக, ரத்தத்தை மெலிவிக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்கிற ஒருவர் மது அருந்தினால், அவருக்குக் காயம் ஏற்படும்போது இரத்தக் கசிவு உண்டாகும் ஆபத்து கூடுதலாகலாம். சில குறிப்பிட்ட ஆன்ட்டிபயாடிக்ஸ் மருந்துகளை எடுத்துக்கொள்கிறவர்கள் மது அருந்தினால், அது அவர்களுடைய உடல் நலத்தை மிகவும் பாதிக்கலாம்.
 • மறதி – சில நேரங்களில் மக்கள் மறதியால், அல்லது, டிமென்சியா வந்திருப்பதால், தாங்கள் எவ்வளவு மது அருந்தினோம் என்பதை மறந்துவிடுகிறார்கள். அதனால், இவர்கள் தங்களையும் அறியாமல் கூடுதல் அளவு மதுவை அருந்திவிடக்கூடும்.

மது அருந்துவதா வேண்டாமா என்பது ஒருவருடைய தனிப்பட்ட தீர்மானமாகும். அது பல்வேறு காரணிகளைப் பொறுத்து அமைகிறது. மது உங்கள் நலத்தைப் பாதிக்கிறது என்று உங்களுக்குக் கவலை ஏற்பட்டால், அல்லது, அது உங்கள் மருந்துடன் ஊடாடித் தொல்லை உண்டாக்கலாம் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் GPயிடம் பேசுங்கள்.

மது மூளையை எப்படிப் பாதிக்கிறது?

மதுவானது ‘நியூரோடிரான்ஸ்மிட்டர்ஸ்' (நரம்புக் கடத்திகள்) எனப்படும் மூளை வேதிப்பொருட்கள் பணியாற்றும் விதத்தைப் பாதிக்கிறது. மதுவால் பாதிக்கப்படும் முதன்மையான நியூரோடிரான்ஸ்மிட்டர்ஸ், GABA மற்றும் குளுட்டமேட். இவை எதிரெதிர் வகைகளில் பணியாற்றுகின்றன.

 • GABA மூளையையும் உடலையும் ‘அமைதியாக்குகிறது'. மதுவானது GABAவின் தாக்கத்தைக் கூட்டுகிறது. அதனால், குறைந்த அளவு மது உங்களை இன்னும் அமைதியாக உணரச்செய்யலாம், அல்லது, உங்கள் பதற்றத்தைக் குறைக்கலாம்.
 • குளுட்டமேட் மூளையையும் உடலையும் ‘தூண்டுகிறது'. மதுவானது குளுட்டமேட்டின் தாக்கத்தைக் குறைக்கிறது. அதனால், மது அருந்துவது உங்களுடைய எச்சரிக்கையுணர்வைக் குறைக்கலாம்.

வைட்டமின்கள் மற்றும் நம் மூளை முறையாக இயங்கத் தேவைப்படுகிற மற்ற தேவையான ஊட்டச்சத்துகளாகிய தயமின், மக்னீசியம் போன்றவற்றை நம் உடல் ஏற்றுக்கொள்ளும் திறனையும் மது பாதிக்கலாம்.

மது மன நலத்தை எப்படிப் பாதிக்கிறது?

மது அருந்துவது பல விதங்களில் உங்களுடைய மன நலத்தை எதிர்மறையாகப் பாதிக்கலாம்:

 • நீங்கள் நிறையக் குடிக்கிறீர்கள், அல்லது, ஒவ்வொரு நாளும் குடிக்கிறீர்கள் என்றால், நேரம் செல்லச் செல்ல இது உங்களுடைய மனநிலையில் எதிர்மறைத் தாக்கத்தை உண்டாக்கலாம். இது ஏன் நடக்கிறது என்பதைப்பற்றித் தெரிந்துகொள்ள, இந்த ஆவணத்தைத் தொடர்ந்து படியுங்கள்.
 • உங்களுக்கு மன நலப் பிரச்சனைகள் இருந்தால், அல்லது, உங்களுக்கு ஒரு மன நோய் இருப்பது கண்டறியப்பட்டிருந்தால், மது அருந்துவது இதை இன்னும் மோசமாக்கலாம். மது அருந்துவதால், உங்களை நீங்களே காயப்படுத்திக்கொள்கிற மற்றும் தற்கொலை செய்துகொள்கிற ஆபத்தும் கூடுதலாகலாம்.
 • உங்களுக்கு ஏற்கெனவே ஒரு மன நலப் பிரச்சனை இருந்தது என்றால், நீங்கள் இன்னும் நன்றாக உணர்வதற்கென மது அருந்தக்கூடும். ஆனால், இது எதிர்மறையான விளைவைக் கொண்டுவரலாம்.

மது ஏன் மன நலத்தைப் பாதிக்கிறது?

மது அருந்துவது உங்களுடைய மன நலத்தை எதிர்மறையாகப் பாதிப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக:

 • மூளையின் வேதியில - மதுவானது மூளையின் வேதியியலைப் பாதிக்கிறது, மனச் சோர்வு, அச்சக் குறைபாடு மற்றும் உணர்ச்சிவயப்பட்டுச் செயல்படுதல் ஆபத்தைக் கூட்டுகிறது.
 • ஹேங்க்ஓவர்ஸ் (மது அருந்துதலின் பின்விளைவுகள்) - உங்களுக்கு ஹேங்க்ஓவர் ஏற்பட்டால், அது உங்கள் உடல் நலத்தைப் பாதிக்கலாம், பதற்றத்தை உண்டாக்கலாம், நடுக்கத்தை உண்டாக்கலாம். இது எப்போதும் நடக்கிறது என்றால், இது உங்கள் மன நலத்தில் எதிர்மறைத் தாக்கத்தைக் கொண்டிருக்கலாம்.
 • வாழ்க்கைச் சவால்கள் - உங்களுக்கு மதுவினால் பிரச்சனை வந்தால், உங்கள் வாழ்க்கை மேலும் கடினமாகலாம். மது அருந்துவது உங்களுடைய உறவுகளை, பணியை, நட்புகளை அல்லது பாலுறவு வாழ்க்கையைப் பாதிக்கலாம்.

நான் மது அருந்துவதை நிறுத்திவிட்டால் அல்லது மது அருந்தும் அளவைக் குறைத்துக்கொண்டால் என்னுடைய மன நலன் மேம்படுமா?

பொதுவாக, மது அருந்தும் அளவைக் குறைப்பது அல்லது மது அருந்துவதை நிறுத்துவது உங்கள் மன நலனில் நேர்விதமான தாக்கத்தைக் கொண்டிருக்கலாம். மது அருந்துவது உங்களை மோசமாக உணரச் செய்தால், சில வாரங்கள் மது அருந்துவதை நிறுத்தியபின் நீங்கள் உடலளவிலும் மனத்தளவிலும் இன்னும் நன்றாக உணரத் தொடங்கலாம். எனினும், மதுவுக்கும் மன நலத்துக்கும் இடையிலான உறவு சிக்கலானது. குறிப்பாக, அதிர்ச்சியை எதிர்கொண்டுள்ளவர்கள், மது அருந்தும் பழக்கத்தை நிறுத்தவேண்டுமென்றால் அடித்தளத்திலிருக்கும் சவால்களைக் கையாள்வதற்கு உதவி தேவைப்படுகிறவர்களுக்கு இது மேலும் உண்மை.

நீங்கள் மது அருந்துவதை நிறுத்த இயலாமல் தடுமாறுகிறீர்கள் என்றால், அல்லது, மது உங்களுடைய மன நலத்தை இன்னும் மோசமாக்கினால், உங்கள் GPயிடம் பேசுங்கள். நீங்கள் மன நலப் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு வேறொரு காரணம் இருக்கலாம், உங்களுக்குக் கூடுதல் உதவி தேவைப்படலாம். எடுத்துக்காட்டாக, உளவியல் சிகிச்சை அல்லது மருந்துகள் உங்களுக்கு உதவலாம்.

எனக்கு ஏற்கெனவே ஒரு மன நோய் உள்ளது என்றால், நான் மது அருந்தலாமா?

மது அருந்தும் பழக்கம் இல்லாதவர்களுக்கு மன நோயோ, மன நலத் தடுமாற்றங்களோ இருந்தால், அவர்கள் புதிதாக மது அருந்தத் தொடங்காமல் இருப்பது நல்லது. மன நோய் உள்ள ஒருவர் மது அருந்தினால், அவருடைய மனநிலையில் அது எதிர்மறைத் தாக்கத்தைக் கொண்டிருக்கலாம், அவருடைய பிரச்சனைகளை இன்னும் மோசமாக்கலாம். அது குறிப்பிட்ட மருந்துகளுடன் குறுக்கிடவும் வாய்ப்புள்ளது.

உங்களுக்கு ஏற்கெனவே ஒரு மன நலப் பிரச்சனை உள்ளது, அல்லது, உங்களுக்கு மன நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றால், மது அருந்துவது உங்களிடம் எப்படிப்பட்ட தாக்கத்தைக் கொண்டிருக்கிறது என்று தெரிந்துகொள்ள, உங்கள் GPயிடம் பேசுங்கள். நீங்கள் சில குறிப்பிட்ட மருந்துகளை உட்கொள்கிறீர்கள் என்றால், நீங்கள் மது அருந்தவேண்டாம் என்று உங்களுடைய GP உங்களுக்கு அறிவுறுத்தலாம்.

மது அருந்துவதன் குறுகிய காலத் தாக்கங்கள் என்னென்ன?

மது அருந்துவதால் நேர்விதமான தாக்கங்கள் இருக்கலாம். அடிப்படையில் நீங்கள் இவ்வாறு உணரலாம்:

 • மகிழ்ச்சியாக
 • அமைதியாக
 • நிறையப் பேசவேண்டும் என்பதுபோல்
 • தன்னம்பிக்கையாக.

அதே நேரம், மதுவினால் சங்கடமான அல்லது ஆபத்தைக் கொண்டுவரக்கூடிய தாக்கங்களும் இருக்கலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள்:

 • தூக்கக் கலக்கமாக உணரலாம்
 • தடுமாறலாம்
 • பேசும்போது வாய் குழறலாம்.

நீங்கள் மது அருந்தும் அளவு கூடக் கூட, அது உங்களுடைய சுய கட்டுப்பாடு மற்றும் தீர்மானமெடுத்தலைப் பாதிக்கலாம். இதன் பொருள், நீங்கள்:

 • வழக்கமாகச் செய்யாத செயல்களைச் செய்யலாம்
 • வழக்கமாகச் சொல்லாத விஷயங்களைச் சொல்லலாம்
 • ஆபத்தான அல்லது பொறுப்பற்ற செயல்களில் ஈடுபடலாம்
 • மது அருந்தியபோது என்ன செய்தீர்கள் என்பதை மறந்துவிடலாம்
 • அடுத்த நாள் ஹேங்க்ஓவரைச் சந்திக்கலாம்.

மதுவானது வெவ்வேறு மக்களை வெவ்வேறுவிதமாகப் பாதிக்கிறது. சிலர் அடிக்கடி குடிக்காவிட்டாலும், கூடுதல் அளவு குடிக்காவிட்டாலும்கூட அவர்களுக்கு இந்த விஷயங்கள் நடக்கின்றன.

ஹேங்க்ஓவர்கள்

நீங்கள் மது அருந்துவதை நிறுத்தும்போது, உங்கள் உடலில் மதுவின் அளவு குறைகிறது. அப்போது, ஹேங்க்ஓவர் என்கிற பின்விளைவு உண்டாகிறது. நீங்கள் மது அருந்துவதை நிறுத்திச் சில மணிநேரங்களுக்குப்பிறகு இது நடக்கிறது. ஆனால், நீங்கள் தூங்கி எழும்வரை இதைக் கவனிக்காமலிருக்கலாம். உங்களுக்கு ஹேங்க்ஓவர் இருந்தால், பின்வரும் விஷயங்கள் நடக்கக்கூடும்:

 • உங்கள் தலை வலிக்கலாம்
 • உங்களுக்கு உடல் நலம் சரியில்லாததுபோல் நீங்கள் உணரலாம்
 • உங்களுக்குத் தூக்கம் வருவதில் சிரமம் ஏற்படலாம்
 • நீங்கள் எரிச்சலாகவும் பதற்றமாகவும் உணரலாம்.

இந்த உணர்வுகள் மதுவாலும் மது பானங்களில் உள்ள மற்ற வேதிப் பொருட்களாலும் உருவாக்கப்படுகின்றன. இவை உங்களை நீரிழக்கச்செய்கின்றன, உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கின்றன.

ஹேங்க்ஓவரை முழுமையாக நீக்குவதற்கு எந்த வழியும் இல்லை. எனினும், நீங்கள் தண்ணீர் குடிக்கவேண்டும், உங்கள் உடல் முறையாகக் குணமாகும்வரை மீண்டும் மது அருந்தக்கூடாது.

மது அருந்தும்போது உங்களுக்கு ஹேங்க்ஓவர் வருவதில்லை என்றால், அது நல்ல விஷயம் என்று எண்ணவேண்டாம். ஒருவருக்கு ஹேங்க்ஓவர் வரவில்லை என்பது, அவர் நிறைய மது அருந்துவதற்கு அவருடைய உடல் பழகிவிட்டது என்பதன் அடையாளமாக இருக்கலாம். அதன் பொருள், அவர் மதுவைச் சார்ந்திருக்கத் தொடங்கிவிட்டார் என்பதாக இருக்கலாம்.

இருட்டடிப்பு

நீங்கள் குறுகிய நேரத்துக்குள் நிறைய மது அருந்தும்போது, மது அருந்திய நேரத்தில் என்ன நடந்தது என்பதை உங்களால் நினைவுகூர இயலவில்லை என்றால், அதை இருட்டடிப்பு என்கிறோம். நீங்கள் என்ன சொன்னீர்கள், என்ன செய்தீர்கள், அல்லது, நீங்கள் எங்கு இருந்தீர்கள் என்பதெல்லாம் உங்கள் நினைவுக்கு வராமல் போகலாம். இருட்டடிப்பின்போது, பின்னர் நீங்கள் வருந்தக்கூடிய செயல்களை நீங்கள் செய்யலாம், ஆபத்தான சூழ்நிலைகளில் சிக்கிக்கொள்ளலாம், அல்லது, பிறர் உங்களைக் காயப்படுத்தும் ஆபத்தில் சிக்கலாம்.

மதுவானது உங்கள் மூளை புதிய நினைவுகளை உருவாக்காதபடி தடுத்துவிடுவதால் இருட்டடிப்புகள் நிகழ்கின்றன. இருட்டடிப்பு என்பது, நீங்கள் அளவுக்கு மீறிக் குடிக்கிறீர்கள் என்பதற்கான ஓர் எச்சரிக்கை ஆகும். மதுவானது உங்கள் மூளையைச் சேதப்படுத்துகிறது மற்றும் நீங்கள் மதுவைச் சார்ந்திருக்கத் தொடங்கிவிட்டீர்கள் என்பதன் தொடக்க அடையாளமாகவும் இது இருக்கிறது.

மது நஞ்சாதல்

நீங்கள் நிறையக் குடித்து, அதனால், உங்கள் உடலில் உள்ள மது அளவு ஆபத்தான நிலைக்குச் செல்லும்போது, மது நஞ்சாதல் நிகழ்கிறது. மது நஞ்சாதல் உங்களுடைய மூச்சுவிடலை மெதுவாக்கலாம், அதனால் நீங்கள் மயங்கலாம், அல்லது, உங்களுக்கு வலிப்பு வரலாம், இது பெரிய பிரச்சனையைக் கொண்டுவரக்கூடும்.

உங்களுக்கோ உங்களுக்குத் தெரிந்த இன்னொருவருக்கோ மது நஞ்சாதல் பிரச்சனை இருக்கலாம் என்பதற்கான அடையாளங்களின் பட்டியலை NHS இணையத் தளத்தில் காணலாம்.

உங்களுக்கோ உங்களுக்குத் தெரிந்த இன்னொருவருக்கோ மது நஞ்சாதல் பிரச்சனை உள்ளது என்று நீங்கள் நினைத்தால், உடனடியாக 999ஐ அழையுங்கள்.

மது அருந்துவதன் நீண்ட காலத் தாக்கங்கள் என்னென்ன?

மதுவும் உடலும்

நீங்கள் நிறைய மது அருந்துகிறீர்கள், அல்லது, நெடுநாட்களாக அடிக்கடி மது அருந்துகிறீர்கள் என்றால், உங்களுக்கு இவை நடப்பதற்கான ஆபத்து கூடுதலாகிறது:

 • உடல் காயம்
 • உயர் இரத்த அழுத்தம்
 • இதயச் செயலிழப்பு
 • பக்கவாதம்
 • கணைய அழற்சி : இந்தப் பிரச்சனை உள்ளவர்களுடைய கணையம் வீங்கிச் சேதமடைகிறது
 • கல்லீரல் நோய் : மது தொடர்பான கல்லீரல் நோய் படிப்படியாக நிகழ்கிறது. இதன்மூலம் கல்லீரல் நிரந்தரமாகச் சேதமடைந்து வடுக்கள் ஏற்படலாம்
 • புற்றுநோய்கள், கல்லீரல், வாய், தலை மற்றும் கழுத்து, மார்பகம் மற்றும் குடல் புற்றுநோய் உள்பட
 • ஆண்மைக்குறைவு அல்லது விந்து முந்துதல் போன்ற பாலியல் பிரச்சனைகள்
 • மலட்டுத்தன்மை
 • மூளைச் சேதம் - இதுபற்றிய கூடுதல் தகவல்களுக்கு, இந்த ஆவணத்தில் “மது தொடர்பான மூளைச் சேதம்" பற்றிய பகுதியைப் பாருங்கள்

மதுவைச் சார்ந்திருத்தல்

மதுவைச் சார்ந்திருத்தல் என்பது, மதுவுக்கு அடிமையாதல் அல்லது குடிப்பழக்கம் என்றும் அறியப்படுகிறது. மதுவைச் சார்ந்திருப்பவர் சில நேரங்களில் ‘குடிகாரர்' என்று அழைக்கப்படுகிறார். இந்தச் சொற்களில் சிலவற்றைச் சிலர் களங்கமாகக் கருதுகிறார்கள்.

UKல் வயதுவந்த 100 நபர்களில் 1 நபர் மதுவைச் சார்ந்திருக்கிறார். நீங்கள் மதுவைச் சார்ந்திருக்கிறீர்கள் என்றால், நீங்கள்:

 • மது அருந்தவேண்டும் என்ற தீவிர உந்துதலை உணரக்கூடும்
 • நீங்கள் அருந்தும் மதுவின் அளவைக் கட்டுப்படுத்த இயலாமல் தடுமாறக்கூடும்
 • மது அருந்துவதால் உங்கள் வாழ்க்கையில் ஓர் எதிர்மறை விளைவு ஏற்பட்டாலும், தொடர்ந்து மது அருந்தக்கூடும்.

நீங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு மதுவை அருந்தினால் அல்லது எந்நேரமும் மது அருந்திக்கொண்டிருந்தால்தான் நீங்கள் மதுவைச் சார்ந்திருக்கிறீர்கள் என்று பொருள் இல்லை.

மதுவைச் சார்ந்திருக்கிற சிலர் உடல் சார்ந்த அறிகுறிகளையும் கொண்டிருக்கக்கூடும். எடுத்துக்காட்டாக:

 • மதுவைச் சகித்துக்கொள்கிறவராக ஆதல் - நீங்கள் தொடர்ச்சியாக நிறைய மது அருந்திக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், நாளாக ஆக, உங்கள் மூளை அதன் நேர்விதமான தாக்கங்களுக்குக் குறைந்த எதிர்வினைகளை ஆற்றத் தொடங்கும். நீங்கள் முன்பு பெற்றுக்கொண்டிருந்த அதே தாக்கங்களைப் பெறுவதற்கு நீங்கள் இன்னும் கூடுதலான அளவு மதுவை அருந்தவேண்டியிருக்கும் அல்லது இன்னும் வலுவான மதுவை அருந்தவேண்டியிருக்கும். இதன் பொருள், நீங்கள் மதுவைச் ‘சகித்துக்கொள்கிறவராக' ஆகிவிட்டீர்கள்.
 • விலகல் அறிகுறிகள் – நீங்கள் மதுவைச் சார்ந்திருக்கிறீர்கள் என்றால், உங்கள் மூளையில் GABA மற்றும் குளுடமேட் நரம்புக் கடத்திகளுக்கிடையிலான சமநிலையை அது மாற்றிவிடும். இதன் பொருள், நீங்கள் திடீரென்று குடிப்பதை நிறுத்தினால், அல்லது, குடிக்கும் அளவைக் குறைத்தால், உங்கள் மூளை மிகையாக எதிர்வினையாற்றும். இது உங்களைப் பதற்றமாக, எரிச்சலாக ஆக்கலாம், நடுங்கச்செய்யலாம், வியர்த்து வழியச்செய்யலாம். இவை விலகல் அறிகுறிகள் என்று அழைக்கப்படுகின்றன.

மது விலகல் நோய்க்குறி

நெடுங்காலமாக நிறையக் குடித்துக்கொண்டிருந்த ஒருவர் மது அருந்துவதை நிறுத்தினால் அவருக்கு மது விலகல் நோய்க்குறி வருகிறது.

இது பொதுவாக மது அருந்துவதை நிறுத்தி ஓரிரு நாட்களில் தொடங்குகிறது, மூன்று நாட்கள்வரை நீடிக்கிறது.

மது விலகல் நோய்க்குறி கொண்டவர்கள் பின்வரும் உடல் சார்ந்த அறிகுறிகளில் சிலவற்றை அனுபவிப்பார்கள்:

 • நடுக்கம்
 • உடல் நலம் சரியில்லை என்பதுபோல் உணர்தல்
 • தூங்குவதில் சிரமம்
 • இதயத் துடிப்பு விரைவாதல்
 • உயர் இரத்த அழுத்தம்
 • வலிப்பு

இவர்களுக்குப் பின்வரும் மன அறிகுறிகளில் சிலவும் உண்டாகலாம்:

 • அச்சம்
 • மனச்சோர்வு
 • கிளர்ச்சி
 • மாயத் தோற்றங்கள் (உண்மையில் இல்லாத பொருட்களைக் காணுதல், உணர்தல் அல்லது கேட்டல்)

மது விலகல் நோய்க்குறி என்பது ஒரு தீவிரமான மருத்துவ நிலை ஆகும். மேற்சொன்ன அறிகுறிகளில் எவையேனும் உங்களுக்கு இருந்தால், நீங்கள் உங்கள் GP அல்லது மற்ற நலப் பராமரிப்பு வல்லுநர் ஒருவரிடம் உதவி பெறவேண்டும்.

மது விலகல் நோய்க்குறிக்கு எப்படிச் சிகிச்சை அளிக்கப்படுகிறது?

மது விலகல் நோய்க்குறி எவ்வளவு தீவிரமானது என்பதைப் பொறுத்து அதற்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிலர் மருத்துவச் சிகிச்சை இல்லாமலே குடிப்பதை நிறுத்திவிட இயலும். ஆனால், நடுத்தர அல்லது தீவிர விலகல் அறிகுறிகளைக் கொண்டிருக்கக்கூடிய மற்றவர்களுக்குச் தொழில்முறைச் சிகிச்சை மற்றும் ஆதரவு தேவைப்படும்.

மது விலகல் நோய்க்குறியை பென்ஜோடியாஜெபைன் என்ற மருந்தைக் கொண்டு குணப்படுத்தலாம். உங்களுக்கு மது விலகல் நோய்க்குறி உள்ளது என்றால், உங்களுக்குப் பல நாட்களுக்கு, அல்லது, உங்கள் விலகல் அறிகுறிகள் நிற்கும்வரை பென்ஜோடியாஜெபைன் மருந்து வழங்கப்படும்.

அதன்பிறகு, உங்கள் பென்ஜோடியாஜெபைன் மருந்தளவு மெதுவாகக் குறைக்கப்பட்டு, பின்னர் முழுமையாக நிறுத்தப்படும். இதற்குக் காரணம், ஒருவர் பென்ஜோடியாஜெபைனை நெடுநாட்களுக்கு எடுத்துக்கொண்டால், அவர் அதற்கு அடிமையாகிவிடக்கூடும்.

சிலர் மது விலகல் நோய்க்குறிச் சிகிச்சைக்கென மருத்துவமனைக்குச் செல்லவேண்டியிருக்கும்.

டெலிரியம் டிரெமென்ஸ்

டெலிரியம் டிரெமென்ஸ் (DTகள் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது மது விலகலின் தீவிரமான மற்றும் ஆபத்தான ஒரு சிக்கலாகும். ‘டெலிரியம்' என்பது ஒருவிதமான நோக்குநிலையின்மை நிலையை விவரிக்கிறது. இதில் பல நேரங்களில் மாயத் தோற்றங்களும் தவறான நம்பிக்கைகளும் சேர்ந்துள்ளன. ‘டிரெமென்ஸ்’ என்பது, ஒருவர் மதுவிலிருந்து விலகும்போது உண்டாகும் அதிர்ச்சிகள் அல்லது நடுக்கங்களை விவரிக்கிறது.

டெலிரியம் டிரெமென்ஸ் என்பது ஒரு மருத்துவ நெருக்கடி நிலை ஆகும். டெலிரியம் டிரெமென்ஸ் கொண்ட ஒருவர் மரணமடையும் ஆபத்து எப்போதும் உள்ளது. டெலிரியம் டிரெமென்ஸ் உள்ளவர்கள் உடனடி மருத்துவ ஆதரவுக்கென மருத்துவமனையில் சேர்க்கப்படவேண்டும்.

டெலிரியம் டிரெமென்ஸின் அறிகுறிகள் என்னென்ன?

உங்களுக்கு டெலிரியம் டிரெமென்ஸ் உள்ளது என்றால், மது விலகல் நோய்க்குறியின் சில அறிகுறிகள் உங்களுக்கு இருக்கும், அத்துடன்:

 • உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளச் சிரமப்படுவீர்கள்
 • நீங்கள் எங்கு இருக்கிறீர்கள், ஏன் அங்கு இருக்கிறீர்கள் அல்லது அப்போதைய நேரம் என்ன என்பவை உங்களுக்குத் தெரியாது
 • அங்கு இல்லாத பொருட்களைப் பார்ப்பீர்கள் அல்லது கேட்பீர்கள். எடுத்துக்காட்டாக, சிறு விலங்குகள் அல்லது பூச்சிகள், ஒலிகள் அல்லது குரல்கள்
 • நீங்கள் ஆபத்தில் உள்ளதுபோல் உணர்வீர்கள்
 • அஞ்சுவீர்கள் அல்லது தீவிரமாக நடந்துகொள்வீர்கள்

டெலிரியம் டிரெமென்ஸ் மிக ஆபத்தானது. இதனால் பின்வருவன உண்டாகலாம்:

 • நீரிழப்பு
 • வேதிச் சமநிலையின்மைகள்
 • இதயத்தில் அழுத்தம்
 • நோய்த்தொற்றுகளுக்கான எதிர்ப்பு குறைதல்.

டெலிரியம் டிரெமென்ஸுக்கு எப்படிச் சிகிச்சை அளிக்கப்படுகிறது?

உங்களுக்கு டெலிரியம் டிரெமென்ஸ் உள்ளது என்றால், நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவேண்டும். இங்கு, மது விலகலின் தீவிரத்தைக் குறைப்பதற்கான சிகிச்சை உங்களுக்கு வழங்கப்படும். இது பொதுவாக பென்ஜோடியாஜெபைன் மருந்தாக இருக்கும்.

மது சார்ந்த ஹலுசினோசிஸ்

மது சார்ந்த ஹலுசினோசிஸ் என்றால், நீங்கள் குடித்திருக்கும்போது அல்லது குடிப்பதைத் திடீரென்று நிறுத்தாதபோது உங்களுக்கு ஒலிகள், குரல்கள் அல்லது இசை கேட்கிற நிலையாகும். நீங்கள் தொடர்ச்சியாகக் குடிக்கிறீர்கள், மதுவைச் சார்ந்திருக்கிறீர்கள் என்றால் இது நடக்கலாம். இது டெலிரியம் டிரெமென்ஸிலிருந்து மாறுபட்டது. நீங்கள் குடிப்பதை நிறுத்தியபிறகும் மது சார்ந்த ஹலுசினோசிஸ் தொடரலாம்.

மதுவுடன் தொடர்புடைய மூளைச் சேதம்

நீங்கள் நெடுங்காலத்துக்கு நாள்தோறும் அதிக அளவில் குடித்தால், மதுவுடன் தொடர்புடைய மூளைச் சேதம் (ARBD) ஏற்படலாம்.

மதுவைச் சார்ந்திருக்கும் 10 நபர்களில் 3 நபர்களுக்கு ARBD இருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இவர்களுக்கு ARBD உடன் தொடர்புடைய நினைவு மற்றும் சிந்தனை மாற்றம் வரும் வாய்ப்பு கூடுதலாக உள்ளது:

 • ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்குமேல் வாரந்தோறும் 50 அலகு மது அருந்தும் பெண்கள்
 • ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்குமேல் வாரந்தோறும் 60 அலகு மது அருந்தும் ஆண்கள்.

ARBD பெரும்பாலும் 50களில் உள்ள மக்களைப் பாதிக்கிறது. ஆனால், அது எந்த வயதிலும் வரலாம். நிறையக் குடிக்கும் ஆண்களுடன் ஒப்பிடும்போது, நிறையக் குடிக்கும் பெண்களுக்கு முன்கூட்டியே நினைவாற்றல் பிரச்சனைகள் வரக்கூடும்.

மது மூளையை எப்படிச் சேதப்படுத்துகிறது?

நெடுங்காலத்துக்கு நிறைய மது அருந்துவதால், மூளைச் சேதத்துக்கு வழிவகுக்கக்கூடிய பல விஷயங்கள் நடக்கின்றன. எடுத்துக்காட்டாக:

 • நரம்புச் செல் சேதம் – இது நினைவாற்றல் பிரச்சனைகள், நடவடிக்கை மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது.
 • வைட்டமின் குறைபாடு – மதுவானது உங்கள் உடல் வைட்டமின் B1 மற்றும் பிற ஊட்டச்சத்துகளை ஏற்றுக்கொள்வதைக் கடினமாக்குகிறது. போதுமான வைட்டமின் B1 இல்லாதபோது, உங்கள் மூளைச் செல்கள் சேதமடையலாம். நீங்கள் நிறைய மது அருந்துகிறீர்கள் என்றால், நீங்கள் முறையாகச் சாப்பிடுவதற்கும் மறந்துபோகலாம், இது கூடுதல் ஊட்டச்சத்துக் குறைபாடுகளை உண்டாக்கலாம்.
 • மூளைக்கான இரத்த வழங்கல் - நீங்கள் நிறைய மது அருந்துகிறீர்கள் என்றால், உங்களுக்குப் பக்கவாதம் வரும் ஆபத்து கூடுதலாகிறது. இது உங்கள் மூளைக்கான இரத்த வழங்கலைச் சேதப்படுத்தலாம்.
 • தலைக் காயங்கள் – நீங்கள் நிறைய மது அருந்துகிறீர்கள் என்றால், உங்களுக்குத் தலைக் காயங்கள் வரும் வாய்ப்பு கூடுதலாகிறது. இவை உங்கள் மூளையை நேரடியாகச் சேதப்படுத்தலாம்.
 • செரெபெல்லா சேதம் - சமநிலை மற்றும் நடத்தலுக்குப் பொறுப்பான இந்த மூளைப் பகுதி மதுப் பயன்பாட்டால் மிகவும் பாதிக்கப்படலாம், இதனால், கீழே விழும் ஆபத்து கூடுதலாகலாம்.
 • மூளை சுருங்குதல் – நமக்கு வயதாக ஆக, நம் மூளைகள் சிறிதாகலாம், அல்லது, சுருங்கலாம். ஆனால், நிறைய மது அருந்துவது இந்தச் சுருக்கத்தைக் கூடுதலாக்கலாம் என்று ஓர் ஆய்வு காண்பித்துள்ளது.

மதுவானது என் மூளையைப் பாதிக்கிறது என்று நான் தெரிந்துகொள்வது எப்படி?

மதுவானது உங்கள் மூளையைப் பாதிக்கிறது என்றால், நீங்கள் இவற்றைக் கவனிக்கலாம்:

 • நீங்கள் எரிச்சலடைவீர்கள்
 • கவனம் தொடர்பான பிரச்சனைகள் வரும், உங்களைச் சுற்றி நடப்பவை அல்லது உங்களுடைய சொந்த எண்ணங்களால் நீங்கள் கவனம் சிதறுவீர்கள்
 • உங்களை முறையாகக் கவனித்துக்கொள்வதை நிறுத்திவிடுவீர்கள்
 • நெடுநேரம் என்ன நடந்தது என்றோ நீங்கள் என்ன செய்தீர்கள் என்றோ உங்களுக்கு நினைவிருக்காது
 • உங்களுடைய தடைகளை இழந்து இவற்றைச் செய்யத் தொடங்குவீர்கள்:
  • முறையற்ற விஷயங்களைச் சொல்லுதல். எடுத்துக்காட்டாக, பிறரை வருந்தச்செய்தல் அல்லது அச்சுறுத்துதல்
  • உடல் சார்ந்து, உணர்வு சார்ந்து அல்லது பாலியல் சார்ந்து பிறரைத் தவறாகப் பயன்படுத்தும்படி நடந்துகொள்வீர்கள்.

மது மூளையின் முன் பகுதியைப் பாதிப்பதால் இந்த மாற்றங்கள் உண்டாகின்றன. இந்தப் பகுதிதான் நடவடிக்கை மற்றும் சமூக ஊடாடல்களைக் கட்டுப்படுத்துகிறது.

ARBDல் என்னென்ன வகைகள் உள்ளன?

ARBD பல வகைப்படும். அவற்றில் சில:

 • வெர்னிகெ என்செஃபலோபதி
 • கொர்சகாஃப் நோய்க்குறி
 • மது தொடர்பான டிமென்சியா

வெர்னிகெ என்செஃபலோபதி

உங்கள் உடலில் வைட்டமின் B1 தீரும்போது வெர்னிகெ என்செஃபலோபதி உண்டாகிறது. உங்களுக்கு வெர்னிகெ என்செஃபலோபதி உள்ளது என்றால், பின்வரும் மூன்று விஷயங்களில் ஒன்றோ பலவோ திடீரென்று நடக்கலாம்:

 • நீங்கள் குழப்பமாகவும் நோக்குநிலையின்றியும் ஆவீர்கள். எடுத்துக்காட்டாக, நீங்கள் எங்கு இருக்கிறீர்கள், இப்போது என்ன நேரம் என்றெல்லாம் உங்களுக்குத் தெரியாது
 • உங்களுடைய கால்கள் நிலையின்றித் தள்ளாடும்
 • உங்கள் கண்கள் விரைவாக இரு பக்கங்களிலும் நகரும் (இது ‘நிஸ்டக்மஸ்' என்று அழைக்கப்படுகிறது)

இந்த மூன்று விஷயங்களில், பெரும்பாலான மக்களுக்குக் (80%) குழப்ப அறிகுறிகள்மட்டும்தான் வருகின்றன.

வெர்னிகெ என்செஃபலோபதி என்பது உயிருக்கு ஆபத்தானது. ஆனால், உங்களுக்கு விரைவாக உதவி கிடைத்தால், இதைக் குணப்படுத்தலாம். வெர்னிகெ என்செஃபலோபதி-க்கான சிகிச்சை, வைட்டமின் B1ஐ ஊசிகளின்மூலம் செலுத்துவது. பொதுவாக இவை மருத்துவமனையில் ‘சொட்டு' மருந்தாகவோ, வீட்டில் ஊசியாகவோ வழங்கப்படும்.

உங்களிடமோ உங்களுக்குத் தெரிந்த ஒருவரிடமோ வெர்னிகெ என்செஃபலோபதி அறிகுறிகள் தெரிகின்றன என்றால், உடனடியாக 999ஐ அழையுங்கள்.

வெர்னிகெ என்செஃபலோபதி பல நாட்களுக்கு நீடிக்கிறது. துரதிருஷ்டவசமாக, இதை மக்கள் கவனிக்காமல் விடலாம், அல்லது, ஒருவர் குடி போதையில் இருப்பதால் இப்படி நடக்கிறது என்று நினைத்துவிடலாம். வெர்னிகெ என்செஃபலோபதி கொண்ட ஒருவருக்குச் சிகிச்சை அளிக்காவிட்டால், அவருக்கு நிரந்தர நினைவுப் பிரச்சனைகள் வரலாம். இவை கொர்சகாஃப் நோய்க்குறி என்று அழைக்கப்படுகின்றன.

கொர்சகாஃப் நோய்க்குறி

வெர்னிகெ என்செஃபலோபதி-க்குச் சிகிச்சை அளிக்கப்படாதபோது கொர்சகாஃப் நோய்க்குறி வருகிறது. உங்களுக்கு கொர்சகாஃப் நோய்க்குறி வந்துள்ளது என்றால், மூளைச் சேதத்தின் அடையாளங்கள் உங்களிடம் தோன்றலாம். எடுத்துக்காட்டாக:

 • ஆளுமை மாற்றங்கள்
 • சமீபத்தில் நடந்த எதையும் நினைவுக்குக் கொண்டுவர இயலாமல் இருத்தல். எனினும், நீங்கள் படிக்க, எழுத மற்றும் கவனம் செலுத்த இயலலாம்.
 • புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் சிரமம்
 • இந்த நோய் தொடங்குவதற்குமுன்னால் நடந்த விஷயங்களைப்பற்றிய நினைவுகளை இழத்தல்
 • ‘கன்ஃபாபுலேஷன்' - அதாவது, உங்கள் நினைவில் இருக்கும் ஓர் இடைவெளியை நீங்கள் தவறான தகவல்களைக் கொண்டு நிரப்புவது. எடுத்துக்காட்டாக, வேறோர் இடத்தில் நடந்த ஒரு பழைய நினைவை இங்கு பயன்படுத்துவது. நீங்கள் இதைச் செய்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. ஆனால், மற்ற நபர்களுக்குத் தெரியலாம்.

மது தொடர்பான டிமென்சியா

டிமென்சியா என்பது காலப்போக்கில் மோசமாகிற நினைவுப் பிரச்சனைகள் மற்றும் சிந்தித்தல் மற்றும் ஆளுமை மாற்றங்களுக்கான ஒரு பொதுவான சொல்லாகும். பொதுவாக, டிமென்சியா வயதானவர்களிடம்தான் காணப்படுகிறது.

மதுவானது மூளைச் செல்களைச் சேதப்படுத்துவதால், அது டிமென்சியாவைத் தூண்டலாம். மது தொடர்பான டிமென்சியா இவற்றில் பிரச்சனைகளை உண்டாக்குகிறது:

 • நினைவாற்றல்
 • பிரச்சனைகளைத் தீர்த்தல்
 • ஆளுமை மாற்றங்கள்.

மற்ற டிமென்சியா வகைகளைப்போலின்றி, உங்களுக்கு மது தொடர்பான டிமென்சியா வந்திருந்தால், நீங்கள் உங்களுடைய மொழித் திறன்களை இழக்கமாட்டீர்கள். எனினும், உங்களுக்கு மது தொடர்பான டிமென்சியா வந்துள்ளது என்பதை மற்றவர்கள் கவனிப்பதை இது மேலும் கடினமாக்கலாம். மது தொடர்பான டிமென்சியாவின் அறிகுறிகள் நீங்கள் குடி போதையில் இருப்பதன் அறிகுறிகளாகத் தவறாகக் கருதப்படலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஊக்கக் குறைவுடன் இருப்பதாக, அல்லது, முறையின்றி நடந்துகொள்வதாகத் தோன்றலாம்.

பெரும்பாலான வகை டிமென்சியாக்கள் நேரம் செல்லச் செல்ல மோசமாகின்றன. ஆனால், மது தொடர்பான டிமென்சியா கொண்ட ஒருவர் குடிப்பதை நிறுத்தினால், அவருடைய பிரச்சனைகள் மோசமாகாமல் இருக்கலாம், அல்லது, அவருடைய நிலை மேம்படலாம்.

நான் மது தொடர்பான மூளைச் சேதத்திலிருந்து குணமாக இயலுமா?

உங்களுக்கு மிதமான ARBD இருந்தால், பல நேரங்களில் நீங்கள் மது அருந்துவதை நிறுத்தியதும் உங்கள் நினைவாற்றல் மற்றும் பிற சிந்தனைத் திறன்கள் குறிப்பிடக்கூடிய அளவு மேம்படும். ஆனால், இதற்குச் சிறிது நேரமாகலாம்.

உங்களுக்கு இன்னும் தீவிரமான ARBD இருந்தால், குறிப்பாக கொர்சகாஃப் நோய்க்குறி இருந்தால், நீங்கள் மது அருந்துவதை நிறுத்தி இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் அது மேம்படலாம். எனினும், சிலருக்குத் தீவிரப் பிரச்சனைகள் தொடரலாம். அவர்களுக்கு நீண்ட நாள் பராமரிப்பு தேவைப்படும்.

ARBD கொண்ட மக்கள் குடிப்பதை நிறுத்தினால், இவை நிகழலாம் என மதிப்பிடப்படுகிறது:

 • நான்கு பேரில் ஒருவர் முழுக்கக் குணமாவார்கள்
 • நான்கு பேரில் இரண்டு பேர் ஓரளவு குணமாவார்கள். ஆனால், இவர்களுக்குச் சில பிரச்சனைகள் தொடரும்
 • நான்கு பேரில் ஒருவருக்குத் தொடர்ந்து தீவிரப் பிரச்சனைகள் இருக்கும்.

ஒருவருக்கு வயதாக ஆக, அவர் குணமாவதற்கான வாய்ப்புகள் குறையும்.

உங்களுக்கு ARBD இருந்தால், அது நீங்கள் செயல்படும் திறனைப் பாதித்தால், நீங்கள் பலன்களை, வேறு வகை ஆதரவைக் கோர இயலலாம். பலன்கள், நிதி ஆதரவு மற்றும் கடன் அறிவுறுத்தலைப்பற்றிய கூடுதல் தகவல்களை நீங்கள் எங்களுடைய இணையத் தளத்தில் காணலாம்.

குடிப்பதை நிறுத்துவதற்கு நான் உதவி பெறுவது எப்படி?

நீங்கள் நிறைய மது அருந்துகிறீர்கள் என்று உங்களுக்குக் கவலை ஏற்பட்டால், நீங்கள் மது அருந்துவதை நிறுத்த அல்லது பாதுகாப்பாக மது அருந்த உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், உங்கள் GPயிடம் பேசுங்கள். அவர்கள் உங்களிடம் இந்தக் கேள்விகளைக் கேட்பார்கள்:

 • நீங்கள் எவ்வளவு குடிக்கிறீர்கள்
 • நீங்கள் எப்போதெல்லாம் குடிக்கிறீர்கள்
 • மதுவுடனான உங்கள் வரலாறு
 • நீங்கள் வேறு எந்தப் பொருளையேனும் மிகையாகப் பயன்படுத்தும் குறைபாட்டைச் சந்திக்கிறீர்களா
 • உங்களுக்கு வேறு ஏதேனும் மன அல்லது உடல் நலப் பிரச்சனைகள் உள்ளனவா.

உங்களுக்கு எந்த வகை ஆதரவு தேவைப்படலாம் என்பதைப் புரிந்துகொள்வதற்கு இது அவர்களுக்கு உதவும்.

நீங்கள் GPயின் பரிந்துரை இல்லாமலேயே உள்ளூர் மதுச் சேவையை அணுகிப் பேசலாம். உங்களுக்கு அருகில் உள்ள சேவைகளைக் கண்டறிய, நீங்கள் ஃபிராங்க் இணையத் தளத்தைப் பயன்படுத்தலாம்.

சுய உதவி

சிலருக்குத் தாங்கள் குடிக்கும் மதுவின் அளவைக் குறைக்க அல்லது குடிப்பதை நிறுத்தத் தொழில்முறை வல்லுநர் உதவி தேவைப்படுவதில்லை.

இப்போது, உங்களுக்கு மிகச் சிறந்த ஆதரவு எது என்பதைக் கண்டறிய உங்களுக்கு உதவும் சில மிகச் சிறந்த இணையப் பக்கங்கள் உள்ளன. குடிப்பதை நிறுத்துவதற்கு அல்லது நீங்கள் அருந்தும் மதுவின் அளவைக் குறைப்பதற்கு உங்களுக்கு உதவக்கூடிய உள்ளூர் அமைப்புகள் அல்லது ஆதரவுக் குழுக்களைப்பற்றி நீங்கள் உங்களுடைய GPயிடம் கேட்டு அறியலாம்.

நீங்கள் மதுவைச் சார்ந்திருக்கிறீர்கள், மது அருந்துவதை நீங்களாக நிறுத்துவதற்குச் சிரமப்படுகிறீர்கள் என்றால், உங்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்கப்படலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு சமூக அடிமையாதல் சேவைக்கு அனுப்பப்படலாம்.

உளவியல் சிகிச்சைகள்

உங்களுக்கு இதுபோன்ற உளவியல் சிகிச்சை ஒன்று வழங்கப்படலாம்:

 • அறிவாற்றல் பழகுமுறைச் சிகிச்சை (CBT)
 • சமூகப் பழகுமுறை மற்றும் வலைப்பின்னல் சிகிச்சை
 • வேறொரு பழகுமுறைச் சிகிச்சை.

நீங்கள் ஏன் குடிக்கிறீர்கள் என்பதையும், குடிப்பது உங்கள் பழகுமுறை மற்றும் சமூக வாழ்க்கையை எப்படிப் பாதிக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள இது உங்களுக்கு உதவும்.

மருந்துகள்

மருத்துவ உதவி பெற்ற விலகல்

நீங்கள் இன்னும் தீவிரமாக மதுவைச் சார்ந்திருந்தால், குடிக்கும் பழக்கத்தைப் பாதுகாப்பாக நிறுத்துவதற்கு உங்களுக்கு உதவி தேவைப்படலாம். மது ஆதரவுச் சேவைகள் உங்களை மதிப்பிட்டு, நீங்கள் வீட்டிலேயே குடிப்பதை நிறுத்தலாமா, அல்லது, சிறப்பு மதுச் சிகிச்சை மையம் ஒன்றுக்கு வரவேண்டியிருக்குமா என்று கண்டறிவார்கள்.

பழைய நிலை திரும்புவதைத் தடுக்கும் மருந்துகள்

நீங்கள் மீண்டும் மது அருந்தத் தொடங்காமல் தடுக்க உதவக்கூடிய சில மருந்துகள்:

 • அகம்ப்ரோசடெ – இந்த மருந்து மது ஆசையைக் குறைக்க உதவும். நீங்கள் மது அருந்துவதை நிறுத்தியதும் உங்களுக்கு அகம்ப்ரோசடெ கொடுக்கப்படலாம். நீங்கள் அதை 6 மாதங்கள்வரை எடுத்துக்கொள்ளலாம்.
 • நல்டிரெக்ஸோன் – இந்த மருந்து மதுவின் தாக்கங்களை நிறுத்தவும், அதன்மூலம் மக்களை மது அருந்துவதிலிருந்து தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இதை 6 மாதம்வரை அல்லது அதற்குமேல் எடுத்துக்கொள்ளலாம்.
 • டிசுல்ஃபிரம் – நீங்கள் அகம்ப்ரோசடெ மற்றும் நல்டிரெக்ஸோனை எடுத்துக்கொண்டுள்ளீர்கள், ஆனால், அவை பலன் தரவில்லை என்றாலோ, ஏதோ ஒரு காரணத்தால் நீங்கள் இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ள இயலாது என்றாலோ இந்த மருந்து உங்களுக்குத் தரப்படலாம்.

உண்டுறை மறுவாழ்வு

உங்களுக்கு இந்த அனுபவங்களும் இருந்தால், நீங்கள் உண்டுறை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்படலாம்:

 • உடல் நலப் பிரச்சனைகள்
 • மன நலப் பிரச்சனைகள்
 • சமூகப் பிரச்சனைகள், எடுத்துக்காட்டாக, வீட்டு வசதி அல்லது நிதிப் பிரச்சனைகல்.

இது அதிகபட்சம் மூன்று மாதங்கள்வரை இருக்கலாம். நீங்கள் உண்டுறை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்படுகிறீர்களா என்பது, உங்கள் பகுதியில் இந்த வசதிகள் உள்ளனவா என்பதைப் பொறுத்தும் அமையும்.

குடிப்பதைத் திடீரென்று நிறுத்துவது ஆபத்தானதா?

மது அருந்துவது உங்கள் உடல் அல்லது மன நலத்தைப் பாதிக்கிறது என்றால், நீங்கள் குடிக்கும் அளவை விரைவாகக் குறைக்கவோ குடிப்பதை மொத்தமாக நிறுத்தவோ விரும்பலாம். எனினும், நீங்கள் நாள்தோறும் அதிக அளவில் குடித்துவந்துள்ளீர்கள், அல்லது, நெடுங்காலமாகக் குடித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், இது மிகவும் ஆபத்தாக இருக்கலாம்.

குடிப்பதைத் திடீரென்று நிறுத்துவதால்:

 • நீங்கள் மது விலகல் அறிகுறிகளால் துன்பப்படலாம்
 • உங்களுக்கு வலிப்பு வரலாம் - பொதுவாக இவை நீங்கள் குடிப்பதை நிறுத்தி முதல் 48 மணிநேரத்துக்குப்பிறகு வருகின்றன. பொதுவாக இவை உங்களுடைய விலகல் அறிகுறிகள் வந்தபிறகு வருகின்றன.
 • உங்களுக்குத் தீவிர மது விலகல் சிக்கல்கள் வரலாம். எடுத்துக்காட்டாக: DTகள், வெர்னிக்கெ என்செஃபலோபதி அல்லது கொர்சகாஃப் நோய்க்குறி.

நீங்கள் குடிப்பதை மெதுவாக நிறுத்தவேண்டும். அத்துடன், இதை உரிய ஆதரவுடன் செய்வது பாதுகாப்பானது. குறிப்பாக, நீங்கள் நெடுநாட்களாக நிறையக் குடித்துக்கொண்டிருந்தால் இது மிகவும் தேவை.

மதுவைச் சார்ந்திருக்கும் ஒருவருக்கு நான் எப்படி உதவலாம்?

மது அடிமையாக்கக்கூடியது. அதை நிறுத்துவது கடினமாக இருக்கலாம். உங்களுக்குத் தெரிந்த யாராவது மதுவைச் சார்ந்திருக்கிறார்கள் என்றால், நீங்கள் அவர்களை ஆதரிக்க விரும்புகிறீர்கள் என்றால், பின்வரும் படிநிலைகளைக் கருத்தில் கொள்ளுங்கள்:

 • இன்னும் கூடுதலாகத் தெரிந்துகொள்ளுங்கள் – மதுவைச் சார்ந்திருத்தல் என்றால் என்ன என்றும், அது எப்படி வேலை செய்கிறது என்றும் நீங்கள் புரிந்துகொண்டால், உங்களுக்குத் தெரிந்த நபரை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ளலாம், நீங்கள் இருவரும் எதிர்கொள்ளப்போகும் சூழலை இன்னும் நன்கு உணரலாம்.
 • உங்களுடைய எதிர்பார்ப்புகளைத் தெளிவாக்குங்கள் - ஒருவர் குடிப்பதைப் பல நாட்கள் நிறுத்திவிட்டு, பின்னர் மீண்டும் அதைத் தொடங்கக்கூடும். இது பொதுவானதுதான். இது ஒரு பின்னடைவுபோல் தோன்றலாம். ஆனால், நீங்கள் ‘தோற்றுவிட்டீர்கள்' என்று இதற்குப் பொருள் இல்லை என்பதை நினைவில் வையுங்கள். அதேபோல், வருங்காலத்தில் உங்களால் அதை மீண்டும் நிறுத்தமுடியாது என்றும் இதற்குப் பொருள் இல்லை.
 • உங்களால் என்ன செய்ய இயலும், என்ன செய்ய இயலாது என்று புரிந்துகொள்ளுங்கள் – உங்களுக்குத் தெரிந்த நபர் தன்னுடைய குடிப் பழக்கத்தை நிறுத்தவோ, தான் குடிக்கும் அளவைக் குறைக்கவோ விரும்பவேண்டும். அவர்கள் அந்தத் தீர்மானத்தை எடுப்பதற்கு உங்களால் ஓரளவுதான் உதவ இயலும். ஒருவர் தன்னுடைய குடிப் பழக்கத்தால் தன்னையோ பிறரையோ காயப்படுத்துகிறார் என்று உங்களுக்குத் தெரிந்தால், அது ஒரு கடினமான சூழ்நிலையாக இருக்கலாம். நீங்கள் உங்களுடைய உணர்வுகளைப்பற்றி நம்பிக்கையோடு பேசக்கூடிய ஒருவரைக் கண்டறியுங்கள்.
 • உங்களுக்கு ஆதரவு பெறுங்கள் - மதுவைச் சார்ந்திருக்கும் யாரையாவது நீங்கள் அறிவீர்கள் என்றால், அதைச் சரி செய்ய உதவக்கூடிய உள்ளூர் அமைப்புகளை உங்கள் GP தெரிவிக்கக்கூடும். குறிப்பாக, உறவினர்கள் மற்றும் நண்பர்களை ஆதரிக்கக்கூடிய சில நிறுவனங்கள் அல்லது குழுக்கள் இருக்கின்றன.
 • பாதுகாப்பாக இருங்கள் – இன்னொருவருடைய குடிப் பழக்கம் உங்களையோ உங்களுக்குத் தெரிந்த இன்னொருவரையோ ஆபத்தில் தள்ளினால், நீங்கள் நம்பும் ஒருவருடன் பேசுங்கள். நீங்கள் உடனடி ஆபத்தில் இருக்கிறீர்கள் என்றால், 999ஐ அழையுங்கள்.

கூடுதல் தகவல்கள் மற்றும் ஆதரவு

மது பற்றிய தகவல்கள்

மது அறிவுரை, NHS - மது, அலகுகளை, கலோரிகளைக் கணக்கிடுதல் பற்றிய தகவல்கள் மற்றும் குறைத்தலுக்கான உதவிக் குறிப்புகள்.

மது ஆதரவுச் சேவைகள்
நீங்கள் வசிக்கும் இடத்தில் உள்ள மது ஆதரவுச் சேவைகளைக் கண்டறிய, பின்வரும் இணையத் தளங்களைப் பயன்படுத்துங்கள்:

Alcohol Change UK - Alcohol Change UK என்பது, மது சார்ந்த தலைப்புகளில் இயங்கும் UKன் முன்னணித் தொண்டு நிறுவனமாகும். இது Alcohol Concern மற்றும் Alcohol Research UK ஐ இணைத்து உருவாக்கப்பட்டது. இவர்கள் மதுபற்றியும் உங்கள் குடித்தலை நிர்வகிப்பதுபற்றியும் தகவல்களை வழங்குகிறார்கள்.

மதுவைச் சார்ந்திருத்தல் பற்றிய தகவல்கள்

மதுப் பயன்பாட்டுக் குறைபாடுகள்: தீங்கு விளைவிக்கும் குடித்தல் (அதிக ஆபத்துக் குடித்தல்) மற்றும் மதுச் சார்பை நோய் கண்டறிதல், மதிப்பிடுதல் மற்றும் மேலாண்மை, NICE - நலம் மற்றும் பராமரிப்பு உன்னதத்துக்கான தேசியக் கல்விக் கழகம் வழங்கும் இந்தத் தகவல் பொதுமக்களுக்கென எழுதப்பட்டுள்ளது. இதன்மூலம், மதுவைச் சார்ந்திருக்கும் மக்கள் தாங்கள் எந்தப் பராமரிப்புக்குத் தகுதிபெறுகிறோம் என்று புரிந்துகொள்ளலாம்.

SMART Recovery - SMART Recovery என்பது, மக்கள் அடிமையாக்கும் நடவடிக்கைகளிலிருந்து விடுபட உதவுவதற்கென, ஒருவருக்கொருவர் உதவும் கூட்டங்கள் மற்றும் இணையப் பயிற்சித் திட்டங்களின் தேசிய வலைப்பின்னல் ஒன்றை வழங்கும் தொண்டு நிறுவனமாகும்.

Alcoholics Anonymous (AA) - AA என்பது, மதுச் சார்பிலிருந்து குணமாவதற்கு மக்களுக்கு உதவும் நோக்கத்தைக் கொண்ட சுய-உதவிக் குழுவாகும். இது UK முழுவதிலும் வெளிநாடுகளிலும் கூட்டங்களை வழங்குகிறது.

With You - With You என்பது, முன்பு Addaction என்று அறியப்பட்ட தொண்டு நிறுவனமாகும். இது மது அல்லது போதைப் பொருள் பயன்பாட்டுக் குறைபாடு கொண்ட மக்களை ஆதரிக்கிறது. இது, இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் தகவல்கள், சேவைகளை வழங்கும் ஓர் இணைய ஆதரவுச் சேவையாகும்.

Nacoa – என்பது, பெற்றோருடைய குடிப் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட எல்லாருக்கும் தகவல்கள், அறிவுரை மற்றும் ஆதரவை வழங்கும் தொண்டு நிறுவனமாகும்.

நண்பர்கள், உறவினர்கள் மற்றும் கவனித்துக்கொள்வோருக்கான தகவல்கள்

Alcohol Change UK நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கான ஆதரவுச் சேவைகளின் பட்டியல் ஒன்றை வழங்குகிறது.

ARBD பற்றிய தகவல்கள்

 • மது தொடர்பான மூளைச் சேதம்: குணமாகும் பாதை, Alcohol Change UK - மது தொடர்பான மூளைச் சேதம் (ARBD) கொண்ட மக்களுடைய உறவினர்கள், அவர்களைக் கவனித்துக்கொள்வோர் மற்றும் அவர்களுடைய நண்பர்களுக்கான ஒரு கையேடு.
 • ARBD Network - நலப் பராமரிப்புத் தொழில் வல்லுநர்கள் மற்றும் பொதுமக்களிடையே கல்வி மற்றும் தகவல்களின் வழியாக மது தொடர்பான மூளைச் சேதம் பற்றிய விழிப்புணர்வை வளர்க்கும் ஒரு வலைப்பின்னல்.

இல்ல வன்முறைபற்றிய வளங்கள்

யாரோ ஒருவருடைய மதுப் பயன்பாட்டின் விளைவாக நீங்களோ உங்களுக்குத் தெரிந்த ஒருவரோ இல்ல வன்முறையை எதிர்கொள்கிறீர்கள் என்றால், அல்லது, உங்களுடைய குடிப் பழக்கம் பிறரைத் தவறாக நடத்தும் நடவடிக்கைகளில் உங்களைச் செலுத்துகிறது என்று நீங்கள் நினைத்தால், இந்த ஆவணங்கள் உங்களுக்குப் பயன்படும்:

மது அலகுகளுக்கான கையேடு

பியர், சிடார் மற்றும் அல்கோபாப்ஸ்

  வலிமை (ABV) அரை பின்ட் பின்ட் பாட்டில்/கேன் (330மிலி) பாட்டில்/கேன் (500மிலி)
மிதமான வலிமை கொண்ட பியர், லாஜெர் அல்லது சிடார் 3-4% 1 அலகு 2 அலகுகள் 1.5 அலகுகள் 2 அலகுகள்
இயல்பான வலிமை கொண்ட பியர், லாஜெர் அல்லது சிடார் 4-5% 1.5 அலகுகள் 3 அலகுகள் 1.7 அலகுகள் 2.5 அலகுகள்
கூடுதல் வலிமை கொண்ட பியர், லாஜெர் அல்லது சிடார் 7.5-9% 2.5 அலகுகள் 5 அலகுகள் 3 அலகுகள் 4.5 அலகுகள்
அல்கோபாப்ஸ் 5% - - 1.7 அலகுகள் -

ஒயின் மற்றும் ஸ்பிரிட்கள்

  வலிமை (ABV) ஒற்றை (25மிலி) இரட்டை (50மிலி) ஒற்றை ஒயின் கோப்பை (125மிலி) பெரிய ஒயின் கோப்பை (250மிலி) பாட்டில் (750மிலி)
ஒயின்கள் 12-14% -  
-
1.5 முதல் 1.8 அலகுகள் 3 முதல் 3.5 அலகுகள் 9 முதல் 10.5 அலகுகள்
உறுதியாக்கப்பட்ட ஒயின்கள் (ஷெர்ரி, மார்டினி, போர்ட்) 15-20% - 1 அலகு - - 14 அலகுகள்
ஸ்பிரிட்கள் (விஸ்கி, வோட்கா, ஜின்) 40% 1 அலகு 2 அலகுகள் - - 30 அலகுகள்

மதுப் பயன்பாட்டைப் பின்பற்றும் அட்டவணை

நம்மில் பெரும்பாலானோர் நாம் குடிக்கும் அளவைக் குறைத்து மதிப்பிடுகிறோம். உண்மையில் என்ன நடக்கிறது என்பதைச் சரிபார்க்க, ஒரு வாரம்முழுக்க நீங்கள் எவ்வளவு குடிக்கிறீர்கள் என்பதைக் குறித்துவையுங்கள்.

இதன்மூலம், நீங்கள் எவ்வளவு குடிக்கிறீர்கள் என்பதுபற்றிய ஒரு தெளிவான கருத்து உங்களுக்குக் கிடைக்கும். ஆபத்தான சூழ்நிலைகளை, அதாவது உங்களைக் கூடுதலாகக் குடிக்கவைக்கும் நேரங்கள், இடங்கள் மற்றும் மக்களைச் சுட்டிக்காண்பிக்கவும் இது உதவலாம்.

நாள் எவ்வளவு? எப்போது? எங்கு? யாருடன்? அலகுகள் மொத்தம்
திங்கட்கிழமை            
செவ்வாய்க்கிழமை            
புதன்கிழமை            
வியாழக்கிழமை            
வெள்ளிக்கிழமை            
சனிக்கிழமை            
ஞாயிற்றுக்கிழமை            
வாரம் முழுவதும் குடித்த மொத்தம்            

தகவல் உதவி

இந்தத் தகவல் உளவியலாளர்களுக்கான அரசக் கல்லூரியின் பொது ஊடாடல் ஆசிரியர் வாரியத்தால் (PEEB) உருவாக்கப்பட்டது. இதை எழுதும்போது கிடைத்துள்ள மிகச் சிறந்த சான்றுகளை இது பிரதிபலிக்கிறது.

வல்லுநர் எழுத்தாளர்கள்: டாக்டர் ஜிம் போல்டன், டாக்டர் டோனி ராவ், பேராசிரியர் வின்டி பர்ன் மற்றும் பேராசிரியர் ஜூலியா சின்க்ளைர்

இந்த ஆவணத்தை உருவாக்க உதவிய சேவைப் பயனர் Ms டயானெ கோஸ்லர் அவர்களுக்குச் சிறப்பு நன்றி.

முழுப் பார்வை ஆவணங்கள் கேட்டால் கிடைக்கும்.

© Royal College of Psychiatrists

This translation was produced by CLEAR Global (Mar 2024)

Read more to receive further information regarding a career in psychiatry