மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகள்

Antidepressants

Below is a Tamil translation of our information resource on antidepressants. You can also view our other Tamil translations.

இந்தத் தகவல்கள் மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளைப்பற்றி மேலும் அறிய விரும்புவோருக்கானவை. அவை எப்படி வேலை செய்கின்றன, அவை ஏன் பரிந்துரைக்கப்படுகின்றன, அவற்றின் விளைவுகள், பக்க விளைவுகள் மற்றும் மாற்றுச் சிகிச்சைகள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகள் என்றால் என்ன?

மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகள் என்பவை மனச்சோர்வு, பதற்றக் குறைபாடுகள் மற்றும் வேறு சில சூழ்நிலைகளுக்கான அறிகுறிகளைத் தணிக்க உதவுகின்ற மருந்துகளாகும். இவை முதன்முதலாக 1950களில் உருவாக்கப்பட்டன. அதன்பிறகு இவை தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில் ஐந்து முதன்மை வகைகள் உள்ளன:

  • SSRIகள் (தேர்ந்தெடுக்கப்பட்ட செரடோனின் மறு எடுத்துக்கொள்ளல் தடுப்பான்கள்)
  • SNRIகள் (செரடோனின் மற்றும் நோரட்ரீனலின் மறு எடுத்துக்கொள்ளல் தடுப்பான்கள்)
  • NASSAகள் (நோரட்ரீனலின் மற்றும் குறிப்பிட்ட செரோடோனினெர்ஜிக் மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகள்)
  • டிரைசைக்ளிக்ஸ்
  • MAOIகள் (மோனோஅமைன் ஆக்சிடேஸ் தடுப்பான்கள்).

இவற்றுடன், மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளில் வேறு சில வகைகளும் உள்ளன. இவை இப்போதெல்லாம் அவ்வளவாகப் பரிந்துரைக்கப்படுவதில்லை:

  • டெட்ராசைக்ளிக்ஸ்
  • SARIகள் (செரடோனின் அன்டாகானிஸ்ட் மற்றும் மறு எடுத்துக்கொள்ளல் தடுப்பான்கள்)
  • NDRIகள் (நோரெபைன்ஃப்ரைன்-டோபமைன் மறு எடுத்துக்கொள்ளல் தடுப்பான்கள்).

இந்த ஆவணம் மனச்சோர்வுக்கான அறிகுறிகளைக் குணப்படுத்துவதற்கு மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பதில் கவனம் செலுத்துகிறது. அதே நேரம், இந்த ஆவணத்தில் உள்ள பல தகவல்கள் மற்ற சூழ்நிலைகளுக்காக மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளை எடுத்துக்கொள்கிற மக்களுக்கு உதவும்.

மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளை எடுத்துக்கொள்வதைப் பாதுகாப்பாக நிறுத்துவது எப்படி என்பதுபற்றிய தகவல்களுக்கு, எங்கள் மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளை நிறுத்துதல் பக்கத்தைப் பாருங்கள்.

மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகள் எப்படி வேலை செய்கின்றன?

மற்ற பல வகை மருந்துகள் மற்றும் சிகிச்சைகளைப்போல, மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகள் எப்படி வேலை செய்கின்றன என்பது நமக்கு உறுதியாகத் தெரியவில்லை. அவை நம் மூளையில் சில குறிப்பிட்ட வேதிப்பொருட்களின் செயல்பாட்டைப் பாதிக்கின்றன என்பதுமட்டும் நமக்குத் தெரியும். இவை நரம்புக் கடத்திகள் என்று அழைக்கப்படுகின்றன, இவை ஒரு மூளைச் செல்லிலிருந்து இன்னொன்றுக்குச் செய்திகளை அனுப்புகின்றன. மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளால் மிகவும் பாதிக்கப்படும் நரம்புக் கடத்திகள், செரடோனின் மற்றும் நோரட்ரீனலின்.

அதே நேரம், மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகள் மூளையின்மீது எளிய வேதியியல் எதிர்வினைகளைத் தாண்டிய பல வழிகளில் வேலை செய்வதாக ஆராய்ச்சி சொல்கிறது. இந்த ஆராய்ச்சியின்மூலம் தெரியவருவது என்னவென்றால், அவை:

  • உடலானது அழுத்தத்துக்கு எப்படி எதிர்வினையாற்றுகிறது என்பதைப் பாதிக்கின்றன
  • நம் எதிர்மறைச் சிந்தனையை மேம்படுத்துகின்றன
  • மூளைச் செல்கள் சேதமடைவதைத் தடுக்கின்றன அல்லது சேதத்தைச் சரிசெய்கின்றன.

மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகள் எதற்குப் பயன்படுத்தப்படுகின்றன?

பொதுவாக, மிதமான மனச்சோர்வு உள்ளவர்களுக்கு மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளைப் பரிந்துரைக்கக்கூடாது. அதே நேரம், நடுத்தர அல்லது தீவிர மனச்சோர்வுக் குறைபாடு உள்ள வயது வந்தவர்களுக்கு இவை பரிந்துரைக்கப்படுகின்றன. ஏனெனில், இவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை மனச்சோர்வு குறிப்பிடக்கூடிய அளவு குறைக்கிறது, இவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் ஒரு தாக்கத்தைக் கொண்டுள்ளது. மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளைத் தனியாகவோ, உளவியல் சிகிச்சைகளுடன் சேர்த்தோ பயன்படுத்தலாம்.

பொதுவாக இவற்றைக் குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினருக்குப் பயன்படுத்தக்கூடாது. இதற்குப் பின்வரும் சூழ்நிலைகள் விதிவிலக்காகும்:

  • அவர்களுடைய மனச்சோர்வை வேறு சிகிச்சைகளால் படுத்த இயலவில்லை
  • அல்லது, அவர்களுடைய மனச்சோர்வு குறிப்பிடக்கூடிய அளவு தீவிரமாக உள்ளது.

மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகள் வேறு சில சூழ்நிலைகளுக்கும் பரிந்துரைக்கப்படலாம். அவற்றில் சில:

உங்கள் மருத்துவர் உங்களுக்கு மனச்சோர்வுக்கு எதிரான மருந்தைப் பரிந்துரைத்தால், அது ஏன் என்று அவர் உங்களுக்கு விளக்கவேண்டும். மனச்சோர்வுக்கு எதிரான மருந்து ஒன்றை எடுத்துக்கொள்வதில் இருக்கக்கூடிய பலன்கள் மற்றும் ஆபத்துகளையும் அவர் விளக்கவேண்டும்.

மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகள் எந்த அளவுக்கு நன்றாக வேலை செய்கின்றன?

நடுத்தர மற்றும் தீவிர மனச்சோர்வு கொண்ட வயதுவந்தவர்களுடைய அறிகுறிகளைக் குறைப்பதற்கு மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகள் உதவுவதாக ஆராய்ச்சியில் தெரிகிறது. ஆனால், இந்த மருந்துகளின் அனுபவம் ஒருவருக்கு ஒருவர் பெரிய அளவில் மாறுபடுகிறது.

சிலர் மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளைச் சாப்பிடாமலே காலப்போக்கில் மேம்பட்டுவிடுகிறார்கள். ஆனால், பொதுவாக, மக்கள் மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளைப் பயன்படுத்தியபிறகு, அவர்களுடைய அறிகுறிகளில், வாழ்க்கைத் தரத்தில் ஒரு மேம்பாடு தெரிகிறது. மேலும் தீவிரமான மனச்சோர்வு கொண்டவர்களில் இது மிகவும் உண்மையாகிறது. சிலர் மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளால் தங்களுடைய மனச்சோர்வு அறிகுறிகள் குறைவதைக் காண்கிறார்கள். ஆனால், இவர்களுக்குச் சவால் விடும் பக்க விளைவுகள் வருகின்றன. வேறு சிலர் மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகள் தங்களுக்கு வேலை செய்வதில்லை என்று காண்கிறார்கள்.

உங்கள் மருத்துவர் மனச்சோர்வுக்கு எதிரான ஒரு மருந்தைப் பரிந்துரை செய்தால், நீங்கள் அதைச் சாப்பிடத் தொடங்கிச் சுமார் இரண்டு வாரங்களுக்குப்பிறகு அவர் அதை ஆராயவேண்டும், இவற்றைக் கண்காணிக்கவேண்டும்:

  • நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்
  • உங்களுக்கு ஏதாவது பக்க விளைவுகள் உள்ளனவா
  • நீங்கள் மனச்சோர்வுக்கு எதிரான மருந்தைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளவேண்டுமா.

உங்களுக்கு மனச்சோர்வு உண்டாவதற்கு வழிவகுத்திருக்கக்கூடிய வெளிக் காரணிகளை மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளால் நீக்க இயலாது. எடுத்துக்காட்டாக, உங்களுக்கு அலுவலகத்தில் நிறைய அழுத்தம் இருந்தால், அல்லது, நீங்கள் ஓர் இழப்பை எதிர்கொண்டிருந்தால், மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளால் அந்தச் சிக்கல்களை நீக்க இயலாது. அதே நேரம், மனச்சோர்வின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதற்கும், அந்த வெளிக் காரணிகளைக் கையாள்வதை எளிதாக்கவும் இவற்றால் உதவமுடியும். இவை பல நேரங்களில் உளவியல் சிகிச்சைகளுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படுவதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று.

மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளுக்குப் பக்க விளைவுகள் உண்டா?

எல்லா மருந்துகளுக்கும் பக்க விளைவுகள் இருக்கலாம். நீங்கள் மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளைப் பயன்படுத்த ஒப்புக்கொள்வதற்குமுன்பாக, உங்கள் மருத்துவர் இவற்றை உங்களுடன் பேசவேண்டும். உங்களுக்கு இருக்கக்கூடிய அல்லது இதற்குமுன் இருந்த மருத்துவச் சூழ்நிலைகளைப்பற்றி நீங்கள் உங்கள் மருத்துவரிடம் சொல்லவேண்டும். அதற்கு ஏற்ற வகையிலான மனச்சோர்வுக்கு எதிரான மருந்தை அவர்கள் பரிந்துரைக்கக்கூடும்.

மனச்சோர்வுக்கு எதிரான வெவ்வேறு வகை மருந்துகளால் நீங்கள் எதிர்கொள்ளக்கூடிய பக்க விளைவுகள் கீழே விளக்கப்பட்டுள்ளன. நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துடன் வருகிற சிற்றேடுகளில் இவற்றைப்பற்றிய முழு விவரங்கள் இருக்கும்.

பக்க விளைவுகளின் பட்டியலைப் பார்த்தால் கவலை வரக்கூடும். ஆனால், பெரும்பாலான மக்களுக்கு இவை மிதமான அளவில்தான் இருக்கும். பொதுவாக, சில வாரங்களில் உங்கள் உடல் மருந்துக்குத் தன்னைப் பழகிக்கொண்டபிறகு இவை நின்றுவிடும்.

SSRIகள் மற்றும் SNRIகள்

  • நிலைகொள்ளாமல், நடுக்கமாக அல்லது பதற்றமாக உணர்தல். பல நேரங்களில் மக்கள் மனச்சோர்வுக்கு எதிரான மருந்தை எடுத்துக்கொள்வதை நிறுத்துவதற்கு இதுதான் காரணம். குறிப்பாக, அவர்களுக்கு இதைப்பற்றி விழிப்பூட்டப்படாவிட்டால் அவர்கள் மருந்தை நிறுத்திவிடக்கூடும். அதே நேரம், பொதுவாக, மனச்சோர்வுக்கு எதிரான மருந்தைச் சாப்பிடத் தொடங்கிச் சில வாரங்களுக்குப்பிறகு, இந்தப் பக்க விளைவு குறைந்துவிடும்.
  • உடல் நலமின்றிப் போதல்
  • செரிமானமின்மை அல்லது வயிற்று வலிகள்
  • வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல்
  • பசியின்மை
  • தலைசுற்றல்
  • மங்கலான பார்வை
  • வாய் உலர்தல்
  • வியர்த்தல்
  • நன்கு தூங்காமலிருத்தல் (இன்சோம்னியா), அல்லது மிகவும் தூக்கமாக உணர்தல்
  • தலைவலி
  • பாலுறவில் நாட்டமின்மை
  • பாலுறவின்போது அல்லது சுய இன்பத்தின்போது உச்ச நிலையை எட்டுவதில் சிரமங்கள்
  • ஆண்களில், விரைப்புத்தன்மையைப் பெறுவதில் அல்லது பராமரிப்பதில் சிரமங்கள் (விரைப்புக் குறைபாடு).

அரிதாக, மக்கள் SSRIகளை எடுத்துக்கொள்வதை நிறுத்தியபிறகு இன்னும் தொடர்ச்சியான பாலுறவுப் பக்க விளைவுகளை எதிர்கொள்ளலாம். சிலர் இந்த அறிகுறிகளை விளக்குவதற்கு ‘SSRIக்குப் பிந்தைய பாலுறவுக் குறைபாடு' (PSSD) என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். PSSDஐ எதிர்கொள்கிறவர்களுடைய வாழ்க்கையில் அது ஒரு குறிப்பிடக்கூடிய மற்றும் துன்பமான தாக்கத்தை உண்டாக்கலாம்.

இது ஏன் நடக்கிறது, இது எந்த அளவு பொதுவானது என்பதைப் புரிந்துகொள்ள இன்னும் ஆராய்ச்சி தேவை. தொடர்ந்த பாலுறவுப் பக்க விளைவுகளை எதிர்கொள்கிறவர்கள் உரிய மற்றும் சரியான நேரத்திலான ஆதரவைப் பெறவேண்டும்.

NASSAகள்

NASSAகளுக்கான பக்க விளைவுகள் SSRIகளுக்கான பக்க விளைவுகளைப் போன்றவைதான். இவை உங்களைத் தூக்கக் கலக்கமாக உணரவைக்கலாம், எடையைக் கூட்டலாம். ஆனால், இவற்றால் உண்டாகும் பாலுறவு சார்ந்த சிக்கல்கள் குறைவு. 

டிரைசைக்ளிக்ஸ்

பல நேரங்களில் இவை இவற்றை உண்டாக்கலாம்:

  • வாய் உலர்தல்
  • பார்வை சற்று மங்கலாதல்
  • மலச்சிக்கல்
  • சிறுநீர் கழிப்பதில் சிக்கல்கள்
  • தூக்கக் கலக்கம்
  • தலைசுற்றல்
  • எடை கூடுதல்
  • மிகுதியான வியர்வை (குறிப்பாக இரவில்)
  • இதயத் துடிப்புச் சிக்கல்கள், எடுத்துக்காட்டாக, நன்கு தெரியக்கூடிய படபடப்பு அல்லது விரைவான இதயத் துடிப்பு (டாசிகார்டியா).

SSRIகள்/SNRIகளில் உள்ளதைப்போல், இந்தப் பக்க விளைவுகள் பொதுவாக மிதமாக இருக்கும், ஓரிரு வாரங்களில் நின்றுவிடும்.

MAOIகள்

MAOIகள் என்கிற இந்த வகை மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகள் அவ்வளவாகப் பரிந்துரைக்கப்படுவதில்லை. பொதுவாக இவற்றைச் சிறப்பு வல்லுனர்கள்மட்டும்தான் பயன்படுத்துகிறார்கள். இதற்கு முதன்மைக் காரணம், இந்த மருந்துகளை எடுத்துக்கொள்கிறவர்கள் ஒரு கண்டிப்பான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றவேண்டும், டைரமைன் (ஓர் அமினோ அமிலம்) கூடுதலாக உள்ள உணவுப் பொருட்களை உண்ணக்கூடாது. இந்த உணவுப் பழக்கம் பின்பற்றப்படாவிட்டால், மிகவும் ஆபத்தான உயர் இரத்த அழுத்தம் உண்டாகும் வாய்ப்பு இருக்கிறது. பொதுவாக, MAOIகள் மிக நன்றாகப் பொறுத்துக்கொள்ளப்படுகின்றன. மற்ற மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகள் வேலை செய்யாத, அல்லது, அவை விரும்பப்படாத பக்க விளைவுகளை உண்டாக்குகிற குறிப்பிட்ட சூழ்நிலைகளில் இவை செயல்திறனுடன் செயல்படலாம். 

நீங்கள் ஏதாவது ஒரு வகை மனச்சோர்வுக்கு எதிரான மருந்தைப் பயன்படுத்துகிறீர்கள் மற்றும் அதனால் நீங்கள் எதிர்கொள்கிற பக்க விளைவுகள் சில வாரங்களைத் தாண்டி நீள்கின்றன, அல்லது, பொறுத்துக்கொள்ள முடியாதபடி உள்ளன என்றால், உங்கள் மருத்துவருடன் பேசுங்கள். நீங்கள் மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளைப் பயன்படுத்தத் தொடங்குகிறீர்கள் என்பதை உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் சொல்வதும் உதவிகரமாக இருக்கும். ஒருவேளை நீங்கள் பக்க விளைவுகளை எதிர்கொண்டால், அவர்கள் உங்களை ஆதரிப்பதற்கு இது உதவலாம்.

நீங்கள் எடுத்துக்கொள்ளும் மனச்சோர்வுக்கு எதிரான மருந்தைப்பற்றியும், அதன் பக்க விளைவுகளைப்பற்றியும் முழுமையான தகவல்களுக்கு, எலக்ட்ரானிக் மருந்துகள் தொகுப்பைப் (EMC) பாருங்கள். இந்தப் பக்கத்தின் மேற்பகுதியில் உள்ள தேடல் பெட்டியில் மருந்தின் பெயரைத் தட்டச்சு செய்யுங்கள். உங்களுக்கு உங்கள் மருந்து கொடுக்கப்படும்போது, இந்தத் தகவல்களின் தாள் பிரதி ஒன்றும் உங்களுக்குக் கொடுக்கப்படும். இது உங்களுக்குக் கிடைக்காவிட்டால், உங்கள் மருந்தாளுநரிடம் இதை வழங்கும்படி கேளுங்கள்.

மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளும் தற்கொலை எண்ணங்களும்

மனச்சோர்வு உங்களுக்குத் தற்கொலை எண்ணங்களை உண்டாக்கலாம். சிலர் மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளை எடுத்துக்கொள்ளத் தொடங்கும்போது அவர்களுடைய தற்கொலை எண்ணங்கள் மிகுதியாவதும் உண்டு. குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினரில் இது நடக்கிற ஆபத்து கூடுதலாக இருக்கலாம். இதனால், இவர்களுக்கு மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டால், அவற்றைப் பரிந்துரைக்கிற மருத்துவரோ இன்னொரு நலப் பராமரிப்பு வல்லுனரோ இவர்களுடைய தற்கொலை எண்ணங்களைக் கவனமாகக் கண்காணிக்கவேண்டும்.

நீங்கள் தற்கொலை எண்ணங்களை அல்லது உணர்வுகளை எதிர்கொண்டால், அவற்றை உடனடியாக உங்கள் மருத்துவரிடம் தெரிவிப்பது மிகவும் முக்கியம். நீங்கள் மனச்சோர்வுக்கு எதிரான மருந்தை எடுத்துக்கொள்வதை நிறுத்தும்படி அவர்கள் பரிந்துரைக்கக்கூடும்.

நீங்கள் உங்களைக் காயப்படுத்திக்கொள்கிற ஆபத்தில் உள்ளீர்கள் என்று நீங்கள் உணர்ந்தால், 999 ஐ அழையுங்கள் அல்லது உங்கள் அருகில் உள்ள A&E க்குச் செல்லுங்கள்.

நீங்கள் நெருக்கடி நிலையில் இல்லை, ஆனால், உங்களுக்கு உதவி தேவை என்றால், NHS 111 ஐ அழையுங்கள்.

வண்டி ஓட்டுவது அல்லது இயந்திரங்களை இயக்குவது போன்றவற்றைச் செய்யலாமா?

மனச்சோர்வுக்கு எதிரான சில மருந்துகள் உங்களுக்குத் தூக்கக் கலக்கத்தை உண்டாக்கி உங்கள் எதிர்வினையை மெதுவாக்கலாம். அதனால், நீங்கள் வண்டி ஓட்டும்போது அல்லது இயந்திரங்களை இயக்கும்போது அவற்றை எடுத்துக்கொள்ள இயலாது. இதை உறுதியாகத் தெரிந்துகொள்வதற்காக, நீங்கள் உங்கள் மருத்துவரிடம் பேசவேண்டும், மற்றும் மருந்துடன் வருகிற சிற்றேட்டைப் பார்க்கவேண்டும்.

உங்கள் சூழ்நிலை அல்லது மருந்துகள் உங்கள் வண்டி ஓட்டும் திறனைப் பாதிக்கிறது என்றால், நீங்கள் அதை ஓட்டுநர் மற்றும் வண்டி உரிம அமைப்புக்குத் (DVLA) தெரிவிக்கவேண்டும்.

மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளை நிறுத்துவது எப்படி இருக்கும்?

சிலருக்கு மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளை நிறுத்துவது கடினமாக இருக்கலாம்; மற்ற சிலர் ஒப்பீட்டளவில் எளிதாக அவற்றை நிறுத்திவிடலாம்.

மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளை எப்போதும் நேரடியாக நிறுத்தக்கூடாது. இதுபற்றி விரிவாகப் பேசுவதற்காக நாங்கள் மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளை நிறுத்துதல் என்ற தனித் தகவல் வளத்தை உருவாக்கியுள்ளோம். இவற்றைப் படிப்படியாக நிறுத்துவது எப்படி என்பதுபற்றிய அறிவுரையை அது வழங்குகிறது.

பொதுவாக, மனச்சோர்வுக்கு எதிரான மருந்தை நிறுத்திய சில நாட்களுக்குள் விலக்கல் அறிகுறிகள் தோன்றுகின்றன. இவற்றில் சில:

  • தலைவலி
  • தலையில் லேசான உணர்வு
  • குமட்டல்
  • தூங்குவதில் சிரமம்
  • தெளிவான அல்லது அச்சுறுத்தும் கனவுகள்
  • மின்சாரம் போன்ற உணர்வுகள் (இவற்றை ‘ஜேப்ஸ்' என்றும் அழைப்பார்கள்)
  • மிக விரைவான மனநிலை மாற்றங்கள், பதற்றம் மற்றும் எரிச்சல்தன்மை உள்பட.

சில வாரங்கள் அல்லது மாதங்களுக்குப்பின் மனச்சோர்வு மீண்டும் வருகிறது என்றால், அது அநேகமாகப் பழைய மனச்சோர்வின் மறுவருகையால்தான் இருக்கும், விலக்கல் அறிகுறிகளால் இருக்காது.

நீங்கள் இதுபற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பினால், மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளை நிறுத்துவதுபற்றிய எங்கள் தகவல் வளத்தைப் படியுங்கள்.

மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகள் நம்மை அடிமையாக்குமா அல்லது நாம் அவற்றை சார்ந்திருக்கிறவர்களாகிவிடுவோமா?

சிலர் மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளைப் பயன்படுத்துவதை நிறுத்தும்போது, விரும்பப்படாத விலக்கல் அறிகுறிகளை எதிர்கொள்கிறார்கள். பெரும்பாலான மக்களுக்கு, மனச்சோர்வுக்கு எதிரான மருந்தின் அளவைச் சில வாரங்களுக்கு மெதுவாகக் குறைப்பதன்மூலம் இந்த விலக்கல் அறிகுறிகளைக் குறைத்துவிடலாம். ஆனால், சிலர் அதை மீண்டும் தொடங்கவேண்டியிருக்கலாம், இன்னும் மெதுவாக அதைக் குறைக்கவேண்டியிருக்கலாம்.

மனச்சோர்வுக்கு எதிரான மருந்தை நீங்கள் விரும்பும்போது நிறுத்த இயலாது என்றால், நீங்கள் அதற்கு அடிமையாகிவிட்டீர்கள் என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், உண்மையில் இது ‘அடிமையாதல்' இல்லை.

அடிமையாதலின் பொதுவான விளக்கம்:

  • ஒரு பொருளைப் பயன்படுத்தவேண்டும் என்கிற ஒரு துடிப்பு அல்லது ஆசை உங்களுக்குள் உண்டாகிறது
  • அந்தப் பொருளைப் பயன்படுத்துவதில் உங்களுக்குக் கட்டுப்பாடு இருப்பதில்லை
  • அந்தப் பொருளைப் பயன்படுத்தும்போது உங்களுக்கு ஒரு மகிழ்ச்சி அல்லது ‘ஓர் உயர் உணர்வு' உண்டாகிறது.

மது, நிகோடின் மற்றும் பென்ஜோடயாஜெபைன் போன்ற பொருட்களுக்கு மக்கள் அடிமையாகலாம்.

மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளை எடுத்துக்கொள்வதை நிறுத்துவது கடினமாக இருக்கலாம். ஆனால், இதை உடல் சார்ந்த சார்ந்திருத்தல் என்று விளக்குவதுதான் மிகத் துல்லியமாக இருக்கும்.

‘உடல் சார்ந்த சார்ந்திருத்தல்' என்ற சொல் அடிமையாதலுடன் சேர்த்துக் குழப்பப்பட்டுவிட்டது. உடல் சார்ந்த சார்ந்திருத்தல் என்றால், உங்கள் உடல் ஒரு பொருள் அல்லது மருந்தின் இருப்புக்குத் தன்னைத் தகவமைத்துக்கொண்டுவிட்டது.

பின்னர், அந்தப் பொருள் இல்லாதபோது உடல் அதை ‘இழந்து வாடுகிறது'. அதனால் சகிப்புத்தன்மை மற்றும் விலக்கல் தாக்கங்கள் உண்டாகின்றன. சார்ந்திருத்தலை உண்டாக்குவதற்கு ஒரு மருந்து ஓர் ‘உயர் உணர்வை’ உண்டாக்கவேண்டியதில்லை.

எனக்கு மனச்சோர்வுக்கு எதிரான எந்த மருந்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது?

பொதுவாகப் பயன்படுத்தப்படுகிற மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகள், UKல் அவற்றின் வணிகப் பெயர்கள் மற்றும் அவற்றின் ‘குழு' ஆகியவற்றை இங்கு காணலாம்.

மருந்து

வணிகப் பெயர்

குழு

அமிட்ரிப்டைலைன் டிரைப்டிஜால் டிரைசைக்ளிக்
அகோமெலடைன் வால்டாக்ஸன் பிற*
பப்ரோபியான் ஜைபான் NDRI
சைடலோப்ராம் சிப்ராமில் SSRI
க்ளோமிப்ரமைன் அனஃப்ரனில் டிரைசைக்ளிக்
டெசிப்ரமைன் நார்ப்ரமைன் டிரைசைக்ளிக்
டெஸ்வென்லஃபாக்சைன் பிரிஸ்டிக் SNRI
டோசுலெபின் ப்ரோதியாடென் டிரைசைக்ளிக்
டாக்செபின் சினெக்வான் டிரைசைக்ளிக்
டுலோக்செடைன் சிம்பல்டா, யென்ட்ரெவெ SNRI
எஸ்சிடலோப்ராம் சிப்ராலெக்ஸ் SSRI
ஃப்ளுவோக்செடைன் ப்ரொஜாக் SSRI
ஃப்ளுவோக்சமைன் ஃபவெரின் SSRI
இமிப்ரமைன் டொஃப்ரானில் டிரைசைக்ளிக்
இசோகார்பாக்சஜிட் மார்ப்ளான் MAOI
லொஃபெப்ரமைன் கமனில் டிரைசைக்ளிக்
மியான்செரின் டொல்வோன் டெட்ராசைக்ளிக்
மில்னசிப்ரான் இக்செல் மற்றும் சவெல்லா SNRI
மிர்டாஜபைன் ஜிஸ்பின் NASSA
மொக்ளொபெமைட் மனெரிக்ஸ் MAOI
நெஃபஜொடோன் செர்ஜோன் SARI
நோர்ட்ரிப்டிலைன் அல்லெக்ரான் டிரைசைக்ளிக்
பாரோக்செடைன் செரோக்சாட் SSRI
ஃபெனெல்ஜைன் நார்டில் MAOI
ரெபாக்செடைன் எட்ரோநாக்ஸ் SNRI
செர்ட்ரலைன் லஸ்ட்ரால் SSRI
டிரானைல்சிப்ரொமைன் பர்னேட் MAOI
டிராஜோடோன் மோலிபாக்சின் டிரைசைக்ளிக்-தொடர்பானது
டிரிமிப்ரமைன் சர்மோன்டில் டிரைசைக்ளிக்
வென்லஃபாக்சைன் எஃபெக்சார் SNRI
விலாஜோடோன் வீப்ரைட் SSRI
வோர்டியோக்செடைன் பிரின்டெல்லிக்ஸ் SSRI

*மனச்சோர்வுக்கு எதிரான இந்த மருந்து செரடோனினை ஒழுங்குபடுத்துகிறது. ஆனால், வழக்கமான மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளுடன் ஒப்பிடும்போது, இது வேறு வழியில் செயல்படுகிறது. இது தூக்கத்துடன் தொடர்புடைய ஹார்மோனாகிய மெலட்டோனின்மீதும் செயல்படுகிறது.

மனச்சோர்வுக்கு எதிரான எல்லா மருந்துகளும் இங்கு பட்டியலிடப்படவில்லை. சில நேரங்களில் சிறப்புச் சூழல்களில் பயன்படுத்தப்படுகிற வேறு மருந்துகளும் உள்ளன.

கர்ப்பமாக உள்ளவர்கள் பாலூட்டும் தாய்மார்கள் இவற்றை உட்கொள்ளலாமா?

பலர் கர்ப்பமாவதற்கு முன்பும், கர்ப்பத்தின்போதும், குழந்தை பிறந்தபிறகும் உடல் அல்லது மன நலச் சிக்கல்களுக்காக மருந்துகளை எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. சில மருந்துகள் கர்ப்பிணிகளில் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மற்றவை (எடுத்துக்காட்டாக, சோடியம் வால்ப்ரொவேட் போன்றவை) கர்ப்பிணிகளுக்கு ஆபத்தானவை என்று அறியப்பட்டுள்ளன.

கர்ப்பமாக உள்ளபோது அல்லது குழந்தைக்குப் பாலூட்டும்போது மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாமா, மாற்றலாமா அல்லது நிறுத்திவிடலாமா என்பவை நேரடியான அல்லது எளிதான தீர்மானங்கள் இல்லை. இதற்கு நீங்கள் பல காரணிகளைக் கருத்தில் கொள்ளவேண்டும். எடுத்துக்காட்டாக:

  • நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்து
  • உங்கள் தனிப்பட்ட நோய் வரலாறு
  • சிகிச்சைக்கு உங்கள் எதிர்வினை
  • உங்கள் பார்வைகள்.

கர்ப்பமாக உள்ளபோது, மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகள் உள்ளிட்ட மருந்துகளை எடுத்துக்கொள்வதால் வரக்கூடிய இடர்களைச் சிகிச்சை இல்லாமல் ஏற்படக்கூடிய நலக்குறைவு இடருடன் சமநிலைப்படுத்திச் சிந்திக்கவேண்டும். நீங்கள் உங்கள் பொதுப் பின்பற்றுநர் அல்லது மன நல மருத்துவருடன் இதுபற்றிக் கவனமாக உரையாடவேண்டும்.

கர்ப்பமாக உள்ளபோது மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளை எடுத்துக்கொண்ட பல்லாயிரம் பெண்களை ஆராய்ச்சிகள் கவனித்துள்ளன. இந்த ஆய்வுகளைப் புரிந்துகொள்வது எப்போதும் எளிதில்லை. ஏனெனில், பல காரணிகள் குழந்தைகளுக்கான பலன்களைப் பாதிக்கின்றன. உங்கள் தனிப்பட்ட சூழலில் வெவ்வேறு மருந்துகளைப்பற்றி இப்போதைய ஆராய்ச்சி என்ன சொல்கிறது என்று புரிந்துகொள்ள உங்கள் பொதுப் பின்பற்றுநர் அல்லது மன நல மருத்துவர் உங்களுக்கு உதவுவார்.

பல பெண்கள் கர்ப்பமாக உள்ளபோது மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். SSRIகள் போன்ற மிகப் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிற மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளைப்பற்றியும், கர்ப்பமாக உள்ளபோது அவற்றைப் பயன்படுத்துவதுபற்றியும் கூடுதல் தகவல்கள் உள்ளன. வோர்ட்டியாக்சிடைன் போன்ற மனச்சோர்வுக்கு எதிரான புதிய மருந்துகளைப்பற்றி மிகக் குறைவான தகவல்கள்தான் உள்ளன. நீங்கள் தனிப்பட்ட மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளைப்பற்றிய தகவல்களை கர்ப்பமாக உள்ளபோது மருந்துகளைச் சிறப்பாகப் பயன்படுத்துதல் இணையத் தளத்தில் காணலாம்.

நீங்கள் இன்னும் கர்ப்பமாகவில்லை என்றால்

இயன்றால், நீங்கள் கர்ப்பமாவதற்குமுன் உங்கள் மருத்துவரிடம் பேசவேண்டும். அதே நேரம், பல கர்ப்பங்கள் திட்டமிடப்படாதவை. அதனால், நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது மருந்தைப்பற்றிய தீர்மானங்களை எடுக்கவேண்டியிருக்கும்.

நீங்கள் ஏற்கெனவே கர்ப்பமாக உள்ளீர்கள் என்றால்

நீங்கள் ஏற்கெனவே கர்ப்பமாக உள்ளீர்கள் என்றால், நீங்கள் இயன்றவரை விரைவாக உங்கள் மருத்துவரைப் பார்க்கவேண்டும். உங்கள் மருந்தை உடனடியாக நிறுத்தும்படி உங்கள் மருத்துவர் சொன்னாலன்றி நீங்கள் அதை உடனடியாக நிறுத்தாமலிருப்பது மிகவும் முதன்மையானது. மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளைத் திடீரென்று நிறுத்துவது உங்கள் மன நலச் சிக்கல்களை மீண்டும் கொண்டுவரக்கூடும். அது விரும்பப்படாத பக்க விளைவுகளையும் உண்டாக்கலாம். மருந்தை நிறுத்துவது பாதுகாப்பானதா என்று தீர்மானிப்பதற்குமுன், உங்களுடைய முந்தைய நோயின் தீவிரத்தைப்பற்றி நீங்கள் சிந்திக்கவேண்டும். பல பெண்கள் கர்ப்பத்தின்போது மருந்தை நிறுத்திவிட்டு மீண்டும் பழைய நோயை எதிர்கொள்கிறார்கள்.

மேலும் தகவல்களுக்கு, எங்களுடைய கர்ப்பமாக உள்ளபோது மன நலம் என்ற சிற்றேட்டைப் பாருங்கள்.

நான் எவ்வளவு காலத்துக்கு மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளை எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கும்?

நீங்கள் எவ்வளவு காலத்துக்கு மனச்சோர்வுக்கு எதிரான ஒரு மருந்தை எடுத்துக்கொள்கிறீர்கள் என்பது, உங்களுக்கு அது ஏன் பரிந்துரைக்கப்பட்டது மற்றும் இதற்குமுன் நீங்கள் அதை எடுத்துக்கொள்ளவேண்டியிருந்ததா என்பதைப் பொறுத்தது.

நீங்கள் இப்போதுதான் முதல் அல்லது இரண்டாவது முறை மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளை எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால், நீங்கள் நன்றாக உணரத் தொடங்கியபின் குறைந்தது ஆறு மாதங்களுக்கு அவற்றைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வது நல்லது. நீங்கள் அதற்குமுன் மருந்தை நிறுத்தினால், மனச்சோர்வு அறிகுறிகள் திரும்ப வருவதற்கான வாய்ப்பு கூடுதலாக உள்ளது. இதற்குமுன் உங்களுக்கு மனச்சோர்வு நிகழ்வுகள் வந்திருந்தால், நீங்கள் அவற்றை இன்னும் கூடுதலான காலகட்டத்துக்கு எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கும். அதே நேரம், அவற்றை எப்போது, எப்படி நிறுத்துவது என்பதுபற்றி நீங்களும் உங்கள் மருத்துவரும் தொடர்ந்து பேசவேண்டும்.

உங்களுக்கு வந்துள்ள நலச் சிக்கலுக்கு எது பங்களித்திருக்கலாம் என்பதைப்பற்றிச் சிந்திப்பது நல்லது. சில நேரங்களில், மனச்சோர்வு போன்ற மன நலச் சிக்கல்கள் திடீரென்று நடக்கின்றன. அவை ஏன் நடக்கின்றன என்பதற்கான வெளிப்படையான காரணம் எதுவும் இருப்பதில்லை. அதே நேரம், உங்கள் வாழ்வில் சில விஷயங்கள் கடினமாக இருந்திருக்கலாம், அது உங்களுக்கு இந்தச் சிக்கலைக் கொண்டுவந்திருக்கலாம். எடுத்துக்காட்டாக, நிதி அழுத்தம், தனிமை அல்லது ஒரு வேலையை இழத்தல். சில நேரங்களில் அழுத்தங்களை முற்றிலும் தவிர்க்க இயலாது. அதே நேரம், வருங்காலத்தில் உங்களுக்கு மீண்டும் நலச் சிக்கல் வருவதற்கான வாய்ப்பைக் குறைப்பதற்கு நீங்கள் சில செயல்களைச் செய்யலாம்.  

மனச்சோர்வு திரும்பி வந்தால் என்ன செய்வது?

சில நேரங்களில், நன்றாக இருப்பதற்குத் தேவையான அனைத்தையும் நீங்கள் செய்திருந்தாலும், மனச்சோர்வு திரும்ப வரக்கூடும். அந்தச் சூழ்நிலையில், நீங்கள் இவற்றைச் செய்யவேண்டியிருக்கலாம்:

  • உங்கள் பொதுப் பின்பற்றுநருடன் பேசியபிறகு, மீண்டும் மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளை எடுத்துக்கொள்ளத் தொடங்குதல்
  • உங்கள் மனச்சோர்வுக்கு எதிரான மருந்தை மாற்றுதல்
  • அல்லது, பேச்சுச் சிகிச்சைகள் போன்ற இன்னொரு குணப்படுத்தல் வடிவத்தை முயன்று பார்த்தல்.

சிலர் நன்றாக இருப்பதற்கு நெடுங்காலத்துக்கு மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளை எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கலாம். மனச்சோர்வுக்கு எதிரான மருந்தை எடுத்துக்கொள்வதை நிறுத்திவிட இயலும் என்று நீங்கள் நம்பியிருந்தால், இது எரிச்சலளிக்கலாம். வருங்காலத்தில் நீங்கள் மீண்டும் மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளை எடுத்துக்கொள்வதை நிறுத்த இயலலாம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். இதனால் நீங்கள் ‘தோற்றுவிட்டீர்கள்' என்று பொருள் ஆகாது.

நான் மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளை எடுத்துக்கொள்ளாவிட்டால் என்ன ஆகும்?

இதைச் சொல்வது கடினம். அவை ஏன் பரிந்துரைக்கப்பட்டன, உங்கள் மனச்சோர்வு எவ்வளவு மோசமானது மற்றும் உங்களுக்கு இந்தச் சிக்கல் எத்தனை நாட்களாக உள்ளது ஆகியவற்றைப் பொறுத்து இது மாறும். சில நேரங்களில், மனச்சோர்வு எந்தச் சிகிச்சையும் இல்லாமல், அல்லது, பேச்சுச் சிகிச்சைகள் போன்ற மற்ற சிகிச்சைகளின்மூலம் சரியாகிறது.

பேசுச் சிகிச்சை போன்ற மற்ற சிகிச்சைகளுடன் நீங்கள் ஊடாடுவதை மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகள் எளிதாக்கலாம். இது பேச்சுச் சிகிச்சையை இன்னும் செயல்திறன் கொண்டதாகவும் ஆக்கலாம்.

உங்கள் மருத்துவர் உங்களுக்கு மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளைப் பரிந்துரைப்பதற்கு முன்னால் இதைப்பற்றிப் பேசவேண்டும். மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளை எடுத்துக்கொள்வது மற்றும் எடுத்துக்கொள்ளாமலிருப்பதன் பலன்கள் மற்றும் இடர்களை நீங்கள் முழுமையாகப் புரிந்துகொண்டிருப்பதை அவர்கள் உறுதி செய்யவேண்டும்.

மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளைப்பற்றி நான் வேறு என்ன தெரிந்துகொள்ளவேண்டும்?

நீங்கள் மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளை எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால், இந்த விஷயங்களைத் தெரிந்துகொள்வது உங்களுக்கு உதவியாக இருக்கும்:

  • நீங்கள் எடுத்துக்கொள்ளும் மனச்சோர்வுக்கு எதிரான மருந்து உங்களுக்குத் தடுமாற்றத்தை உண்டாக்குகிறது என்றால், உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள். உங்களுக்கு வேலை செய்கிற, கையாளமுடியாத பக்க விளைவுகளை உங்களுக்கு உண்டாக்காத இன்னொரு வகை மருந்து அல்லது மருந்தளவைக் கண்டறிய அவர்கள் உங்களுக்கு உதவவேண்டும். நீங்கள் பல மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளை முயன்றுள்ளீர்கள் என்றால், அவர்கள் மாற்றுகளைத் தேட விரும்பலாம்.
  • உங்களுக்குப் பக்க விளைவுகள் வந்தால், நம்பிக்கை இழக்காமலிருக்க முயலுங்கள். இவை வருத்தம் தரலாம். சில நேரங்களில், மக்கள் இவற்றின் விளைவாகத் தங்களுடைய மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளை எடுத்துக்கொள்வதை நிறுத்திவிடுகிறார்கள் என்பது புரிந்துகொள்ளக்கூடியதுதான். அதே நேரம், பெரும்பாலான பக்க விளைவுகள் ஓரிரு வாரங்களில் நின்றுவிடுகின்றன. உங்களால் இயலுமானால், மருந்தை நிறுத்தாமல் இந்தக் காலகட்டம்வரை காத்திருக்க முயலுங்கள். அதே நேரம், பக்க விளைவுகள் தாங்கமுடியாதபடி இருந்தால், அல்லது, உங்களுக்குத் தற்கொலை எண்ணங்கள் வந்தால், உடனடியாக உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.
  • ஒவ்வொரு வேளையும் மருந்தை எடுத்துக்கொள்ள முயலுங்கள். இல்லாவிட்டால், உங்களுக்கு விலகல் அறிகுறிகள் வரலாம். ஒரு குறிப்பிட்ட வேளையில் நீங்கள் மருந்தை எடுத்துக்கொள்ளாவிட்டால், அடுத்த வேளையில் வழக்கம்போல் மருந்தை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் மருந்து எடுத்துக்கொள்ளாத வேளையைச் ‘சரி செய்வதற்காக’, வழக்கத்தைவிடக் கூடுதலான அளவு மருந்தை எடுத்துக்கொள்ளாதீர்கள்.
  • பெரும்பாலானோருக்கு மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகள் வேலை செய்யத் தொடங்குவதற்கு 1 வாரம் முதல் 2 வாரங்கள் ஆகின்றன. சிலர் இதன் முழுத் தாக்கத்தை உணரத் தொடங்குவதற்கு 6 வாரங்கள்வரை ஆகிறது. நீங்கள் உங்கள் மனச்சோர்வுக்கு எதிரான மருந்தின் பலன்களை இன்னும் உணரவில்லை என்றாலும், அவற்றை நிறுத்திவிடாதீர்கள், சில வாரங்களுக்குத் தொடர்ந்து எடுத்துக்கொள்ள முயலுங்கள். அதன்மூலம் நிலைமை மேம்படுவதை நீங்கள் காணக்கூடும்.
  • மது அருந்துவதுபற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள். பெரும்பாலான மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகள் மதுவுடன் எதிர்வினையாற்றுவதில்லை. எனினும், சில மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது மதுவை உட்கொண்டால், உங்கள் உடல்நிலை கெடலாம் அல்லது தூக்கக் கலக்கம் உண்டாகலாம், அல்லது, மதுவின் தாக்கங்கள் கூடலாம்.
  • மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகள் உங்கள் உடல் அல்லது மன நலத்தில் எதிர்மறையான ஒரு விளைவைக் கொண்டிருப்பதாக நீங்கள் நினைத்தால், உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.
  • மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகள் சில குறிப்பிட்ட உணவுகள் மற்றும் மருந்துகளுடன் ஊடாடக்கூடும். எடுத்துக்காட்டாக, கிரேப்ஃப்ரூட் என்ற பழம் செர்ட்ரலைன் என்ற மனச்சோர்வுக்கு எதிரான மருந்துடன் ஊடாடலாம். உங்கள் மனச்சோர்வுக்கு எதிரான மருந்து ஏதாவது உணவுகள் அல்லது மருந்துகளுடன் ஊடாடுமா என்று நீங்கள் உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளுநரைக் கேட்கவேண்டும், உங்கள் மருந்துச் சீட்டுடன் வரும் தகவல்களைக் கவனமாகப் படிக்கவேண்டும். நீங்கள் ஒரு புதிய மருந்தைத் தொடங்கினால், அதனுடன் வரும் தகவல்களைப் படியுங்கள், அது உங்கள் மனச்சோர்வுக்கு எதிரான மருந்துடன் ஊடாடுவதில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

மனச்சோர்வுக்கு வேறு என்ன சிகிச்சைகள் உள்ளன?

பேச்சுச் சிகிச்சைகள் (உளவியல் சிகிச்சைகள்)

மனச்சோர்வு கொண்டோருக்கு உதவுகிற பல பேச்சுச் சிகிச்சைகள் உள்ளன. பல நேரங்களில் இவை முதல் தேர்வாகப் பரிந்துரைக்கப்படுகின்றன, அல்லது, மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளுடன் பயன்படுத்தப்படுகின்றன.

  • அறிவுறுத்துதல் – அறிவுறுத்துதலானது மிதமான மனச்சோர்வின்போது பயன்படக்கூடும், நீங்கள் சிக்கல்களைத் தீர்க்கும் உத்திகளை வளர்த்துக்கொள்ள உதவக்கூடும். உங்கள் வாழ்க்கையில் வந்த சிரமங்களால் மனச்சோர்வு உண்டாகியிருந்தால், அறிவுறுத்துதல் உங்களுக்கு உதவலாம்.
  • அறிவாற்றல் பழகுமுறைச் சிகிச்சை (CBT) – CBT உங்கள் எண்ணங்கள், செயல்கள் மற்றும் உணர்வுகளுக்கு இடையிலான இணைப்புகளைக் கண்டறிவதற்கு உங்களுக்குக் கற்றுத்தருவதன்மூலம் உங்கள் மனநிலையை மேம்படுத்த உதவுகிறது. மற்ற உளவியல் சிகிச்சைகளைப்போலின்றி, இது உங்கள் கடந்த காலத்தில் குறைவாகத்தான் கவனம் செலுத்துகிறது, உங்கள் நிகழ்காலத்தில் என்ன நடக்கிறது என்பதில் கூடுதல் கவனம் செலுத்துகிறது.

இந்த உளவியல் சிகிச்சைகள் மற்றும் பிற உளவியல் சிகிச்சை வடிவங்களைப்பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, எங்களுடைய இந்தத் தகவல்களைப் பாருங்கள்:

மற்ற மருந்துகள்

மனச்சோர்வுக்கு எதிரான மருந்தை எடுத்துக்கொண்டபிறகும் நீங்கள் மேம்படவில்லை என்றால், வேறொரு மருந்தை முயலும்படி உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கலாம். அதாவது, உங்களுடைய இப்போதைய மனச்சோர்வுக்கு எதிரான மருந்துடன், அல்லது அதற்குப் பதிலாக இவை சேர்க்கப்படலாம்:

  • இன்னொரு வகையைச் சேர்ந்த மனச்சோர்வுக்கு எதிரான மருந்து
  • ஓர் ஆன்ட்டிசைக்கோடிக் (எடுத்துக்காட்டாக, அரிபிப்ரஜோல், ஓலான்ஜபைன், க்வெடியாபைன் அல்லது ரிஸ்பெரிடோன்)
  • லித்தியம்
  • லமோடிரைஜைன்
  • டிரையோடோதிரோனைன் (லியோதைரோனைன்)

இந்தத் தெரிவுகள் UKல் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. அதே நேரம், இது முழுமையான பட்டியல் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT)

மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) என்பது, சில தீவிர மன நல நிலை வகைகளுக்குச் செயல்திறன் மிக்க சிகிச்சையாகும். உளவியல் சிகிச்சை அல்லது மருந்துகள் போன்ற மற்ற சிகிச்சைத் தேர்வுகள் வெற்றி தராதபோது, அல்லது, மிகவும் நலக் குறைவுள்ள ஒருவருக்கு அவசரச் சிகிச்சை தேவைப்படும்போது ECTஐக் கருத்தில் கொள்ளலாம்.

மூலிகைத் தீர்வுகள்

மூலிகைத் தீர்வுகள் செடிகளிலிருந்து வருகின்றன. இவை UKல் NHSல் பரிந்துரைக்கப்படுவதில்லை.

சில மூலிகைத் தீர்வுகள் மனச்சோர்வு கொண்ட மக்களிடம் நேர்விதத் தாக்கங்களைக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. இவற்றில் ஒன்று, ஹைபெரிகம். இது புனித ஜான் வார்ட் என்னும் மூலிகையிலிருந்து செய்யப்படுகிறது. இது ஒரு மூலிகைச் சிகிச்சை என்பதால், இது அவ்வளவாக ஆராயப்படவில்லை. இது எப்படி விற்கப்படுகிறது என்பதைப்பற்றிய விதிமுறைகள் குறைவு. நீங்கள் அதை எங்கு வாங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்து அளவுகள் மாறலாம்.

SSRI மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகள் மற்றும் பிற மருந்துகளுடன் புனித ஜான் வார்ட்-ஐ எடுத்துக்கொண்டால் ஆபத்து உண்டாகலாம். கருத்தடை மாத்திரை போன்ற பிற மருந்துகளுடனும் இது ஊடாடலாம். நீங்கள் மூலிகைத் தீர்வு ஒன்றை எடுத்துக்கொள்வதுபற்றிச் சிந்திக்கிறீர்கள் என்றால், முதலில் உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.

பொது நலம்

நீங்கள் உங்கள் பொது நலத்தைப்பற்றிச் சிந்திப்பது முக்கியம். நீங்கள் இன்னும் நன்றாக உணர்வதற்கும், உங்களுக்கு மீண்டும் மனச்சோர்வு வருகிற வாய்ப்பைக் குறைப்பதற்கும் நீங்கள் பல விஷயங்களைச் செய்யலாம். இவற்றில் சில:

  • நீங்கள் பேசக்கூடிய ஒருவரைக் கண்டறிதல்
  • உடல் தகுதியுடன் இருத்தல்
  • மது குடிப்பதைக் குறைத்தல், பொழுதுபோக்கு மருந்துகளை எடுத்துக்கொள்ளாமலிருத்தல்
  • நன்கு சாப்பிடுதல், எடுத்துக்காட்டாக, மீன், பழங்கள், காய்கறிகளை நிறையச் சாப்பிடுதல்
  • உங்கள் மனத்தை இதமாக்குவதற்கு உதவும் தன்னுதவி உத்திகளைப் பயன்படுத்துதல்
  • மனச்சோர்வை உண்டாக்கிய எதார்த்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான வழிகளைக் கண்டறிதல்
  • சக நபர் ஆதரவு - உங்களுக்கு இருப்பதுபோன்ற சிக்கல்களை எதிர்கொள்கிற மக்களுடன் பேசுவது உங்களுக்கு உதவியாக இருக்கலாம். உங்களுக்குப் பொருந்தக்கூடிய சக நபர் ஆதரவுக் குழுக்களைப்பற்றி உங்கள் பொதுப் பின்பற்றுநரிடம் பேசுங்கள்.

தன்னுதவிக்கான சில உதவிக் குறிப்புகளுக்கு, மனச்சோர்வு பற்றிய எங்கள் சிற்றேட்டைப் பாருங்கள்.

சமூகப் பரிந்துரைத்தல்

சமூகப் பரிந்துரைத்தல் என்பது, மக்கள் உள்ளூர்ச் சமூக சேவைகள் மற்றும் குழுக்களுடன் இணைய உதவுகிறது. இது அவர்களுடைய மன மற்றும் உடல் நலத்தை ஆதரிக்க உதவலாம்.

எடுத்துக்காட்டாக, உங்களுக்குத் தோட்ட வேலை பிடிக்கிறது என்றால், சமூகப் பரிந்துரைத்தல் உங்களுக்கு அருகில் உள்ள ஒரு வாரத் தோட்டம் போடுதல் குழுவுடன் உங்களை இணைக்கலாம். நீங்கள் பிறரைச் சந்திக்கலாம், அவர்களுடன் ஒன்றாக நேரம் செலவிடலாம், உங்களுக்குப் பிடித்த ஒன்றைச் செய்யலாம்.

இதைப்பற்றி மேலும் அறிய, எங்கள் சமூகப் பரிந்துரைத்தல் பக்கத்தைப் பாருங்கள்.

ஒளி

சிலர் தங்களுடைய மனநிலை பருவத்தால் பாதிக்கப்படுகிறது என்று உணர்கிறார்கள். இது பருவம் சார்ந்த மனநிலைக் குறைபாடு (SAD) என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் ஒவ்வொரு குளிர்காலத்திலும் மனச்சோர்வை எதிர்கொள்கிறீர்கள், ஆனால், நாட்கள் நீளமாகும்போது அது சரியாகிவிடுகிறது என்றால், உங்களுக்கு ஓர் ஒளிப் பெட்டி உதவலாம். இது ஒளிமயமான விளக்கை வழங்கும் ஒரு மூலமாகும். இதை ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு எரியவிடவேண்டும். இது குளிர்காலத்தில் ஒளி குறைவதை ஈடுகட்ட உதவலாம். நீங்கள் SADஐ எதிர்கொள்கிறீர்கள் என்று உங்களுக்குத் தோன்றினால், உங்கள் மருத்துவரிடம் இதைப்பற்றிப் பேசுங்கள்.

நான் கூடுதல் தகவல்களை எங்கு பெறலாம்?

உங்களுக்கு மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளைப்பற்றி ஏதாவது கேள்விகள் இருந்தால், இங்குள்ள வேறு சில தகவல் வளங்களைப் பாருங்கள், அல்லது, உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.

தகவல் உதவி

இந்தத் தகவல்கள் உளவியலாளர்களுக்கான ராயல் கல்லூரியின் (Royal College of Psychiatrists) பொது ஊடாடல் ஆசிரியர் வாரியத்தால் (PEEB) உருவாக்கப்பட்டவை. இதை எழுதும்போது கிடைத்த மிகச் சிறந்த சான்றுகளை இது பிரதிபலிக்கிறது.

முதன்மை எழுத்தாளர்: பேராசிரியர் வென்டி பர்ன்

வல்லுனர் விமர்சனம்: உளவியலாளர்களுக்கான ராயல் கல்லூரியின் (Royal College of Psychiatrists) உளவியல் மருந்தியல் குழு

அனுபவ வல்லுனர்கள்: ஃபியோனா ராஜெ மற்றும் விக்டோரியா பிரிட்ஜ்லாண்ட்

முழுப் பார்வை ஆவணங்களும் கோரிக்கையின் பேரில் கிடைக்கும்.

© உளவியலாளர்களுக்கான ராயல் கல்லூரி (Royal College of Psychiatrists)

This translation was produced by CLEAR Global (Sep 2025)

Read more to receive further information regarding a career in psychiatry