மனப்பதற்றம் மற்றும் பொது மனப்பதற்றம் குறைபாடு(GAD)
Anxiety and generalised anxiety disorder (GAD)
Below is a Tamil translation of our information resource on anxiety and generalised anxiety disorder (GAD). You can also view our other Tamil translations.
இந்தத் தகவல் கையேடு, பதற்ற உணர்வுகளுடன் தடுமாறுகின்ற, அல்லது பொதுவாக்கப்பட்ட பதற்றக் குறைபாடு (GAD) உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ள மக்களுக்கென எழுதப்பட்டுள்ளது.
உங்களுக்கு நீங்களே உதவிக்கொள்வது எப்படி, தொழில்முறை உதவி பெறுவது எப்படி என்று இது விளக்குகிறது. பதற்றத்தினால் தடுமாறுகின்ற ஒருவரை அறிந்தவர்கள் அல்லது அவருக்கு உதவிக்கொண்டிருக்கிறவர்களுக்கான பயனுள்ள தகவல்களும் இதில் உள்ளன.
பதற்றம் என்பது என்ன?
நாம் ஓர் அழுத்தமான, அச்சுறுத்துகிற அல்லது கடினமான சூழலில் இருக்கும்போது, அல்லது, ஒரு சிக்கலை எதிர்கொள்ளும்போது வருகிற மகிழ்ச்சியல்லாத உணர்வை விவரிப்பதற்குப் ‘பதற்றம்' என்ற சொல்லை நாம் பயன்படுத்துகின்றோம். இது ஒரு மன நலக் குறைபாடு இல்லை.
நம்மில் பெரும்பாலானோர் நம் வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் வெவ்வேறு காரணங்களால் பதற்றத்தை உணர்கிறோம். அந்தச் சூழலில் அது ஓர் இயல்பான எதிர்வினையாக இருக்கலாம். பொதுவாக இது காலப்போக்கில் சரியாகிவிடுகிறது. அதாவது, பதற்றத்தை உண்டாக்கும் அந்தச் சூழல் மாறும்போது, அல்லது நீங்கள் அங்கிருந்து விலகும்போது இது சரியாகிவிடுகிறது.
பதற்றம் எப்போது ஒரு சிக்கலாக ஆகிறது?
இந்தச் சூழ்நிலைகளில் பதற்றம் ஒரு சிக்கலாக ஆகலாம்:
- உங்கள் பதற்றம் மிகவும் வலுவாக இருக்கும்போது
- நீங்கள் எல்லா நேரங்களிலும் அல்லது பெரும்பாலான நேரங்களில் பதற்றமாக உணரும்போது
- நீங்கள் பதற்றமாக உணர்வதற்கு வெளிப்படையான எந்தக் காரணமும் இல்லாதபோது
- அது உங்கள் அன்றாட வாழ்க்கையை எதிர்மறையாகப் பாதிக்கும்போது
இது நடக்கும்போது, பதற்றமானது உங்களைத் தொடர்ந்து சிரமமாக உணரச்செய்யலாம், நீங்கள் விரும்பும் செயல்களைச் செய்ய இயலாதபடி தடுக்கலாம், நீங்கள் வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவிப்பதைக் கடினமாக்கலாம்.
பதற்ற உணர்வு எப்படி இருக்கும்?
பதற்றமானது உங்களை மனத்திலும் உடலிலும் பலவிதமாக உணரச்செய்யலாம். எடுத்துக்காட்டாக:
மனத்தில்
- எப்போதும் கவலையாக உணர்தல்
- களைப்பாக உணர்தல் அல்லது ஒழுங்காகத் தூங்காமல் இருத்தல்
- கவனம் செலுத்த இயலாமல் இருத்தல்
- எரிச்சலாக அல்லது மனச்சோர்வாக உணர்தல்
- சிரமமாக அல்லது அழுத்தமாக உணர்தல்
- மலைப்பாக, திகைப்பாக உணர்தல்
- ஏதோ மோசமாக நடக்கக்கூடும் என்று அச்சத்தை உணர்தல்.
உடலில்
- விரைவான அல்லது ஒழுங்கற்ற இதயத் துடிப்பு (படபடப்பு)
- வியர்த்தல்
- வாய் உலர்தல்
- தசை அழுத்தம் மற்றும் வலி
- தலைவலி
- நடுக்கம்/நடுங்குதல்
- கை, கால் விரல்கள் அல்லது உதடுகள் மரத்துப்போதல் அல்லது கூசுதல்
- விரைவாக மூச்சுவிடல்
- தலை சுற்றுவதுபோல் அல்லது மயங்குவதுபோல் உணர்தல்
- செரிமானமின்மை போன்ற வயிறு சார்ந்த சிக்கல்கள், தசைப்பிடிப்பு அல்லது உடல்நலம் சரியில்லாததுபோன்ற உணர்வு
- அடிக்கடி கழிப்பறைக்குச் செல்லுதல்
- இந்த உடல் சார்ந்த உணர்வுகள் தொடர்பாக மிகவும் பதற்றப்படுதல்.
சில நேரங்களில், பதற்றம் கொண்ட மக்கள் தங்களுடைய அறிகுறிகள் ஏதோ உடல் சார்ந்த நோயின் அடையாளம் என்று கவலைப்படுகிறார்கள். இது அவர்களுடைய பதற்றத்தை இன்னும் மோசமாக்கலாம்.
ஒருவருடைய பதற்றம் நெடுநாள் தொடரும்போது, அவர் மனச் சோர்வாக உணரக்கூடும். பதற்றம் கொண்ட சிலருக்கு அதே நேரத்தில் மனச் சோர்வும் வருகிறது.
பதற்றம் எதனால் உண்டாகிறது?
பதற்றம் பல்வேறு காரணங்களால் உண்டாகலாம். அவற்றில் சில:
- அன்றாட நிகழ்வுகள், எடுத்துக்காட்டாக, அலுவலகத்தில் அழுத்தம் தரும் மின்னஞ்சல் ஒன்று வருதல், கடினமான வாடிக்கையாளர் ஒருவருடன் உரையாடுதல் போன்றவை
- மிகப் பெரிய வாழ்க்கை நிகழ்வுகள், எடுத்துக்காட்டாக, மண முறிவு, உடல் சார்ந்த நோய் வருதல் அல்லது தெரிந்த ஒருவர் இறந்துபோதல்.
சில நேரங்களில், நல்லது நடக்கும்போதும் நாம் பதற்றம் கொள்வதுண்டு. எடுத்துக்காட்டாக, டேட்டிங் செல்லும்போது அல்லது வேலைக்கான நேர்காணலின்போது. இவை கெட்ட நிகழ்வுகள் இல்லை. ஆனால், இவை நம் உடலில் பதற்றத்தின் உடல் மற்றும் உளவியல் தாக்கங்களை உண்டாக்கலாம்.
பதற்றம் ஏன் நடக்கிறது?
பதற்றம் மகிழ்ச்சியற்ற உணர்வாக இருக்கலாம். ஆனால், சில சூழ்நிலைகளில், குறிப்பிட்ட கால அளவுக்கு அது உதவியாகவும் இருக்கலாம்:
- உளவியல் அடிப்படையில் – கடினமான சூழல்களின்போது, பதற்றமானது ஏதோ தவறாகிவிட்டது என்று நமக்குச் சொல்கிறது, நம்மை விழிப்புடன் வைக்கிறது, நாம் முறையாக எதிர்வினையாற்ற உதவுகிறது.
- உடல் அடிப்படையில் – பதற்றத்தின் உடல் சார்ந்த உணர்வுகள் ஆபத்திலிருந்து விலகி ஓட அல்லது நம்மைப் பாதுகாத்துக்கொள்ள நம் உடலைத் தயார் செய்யலாம். இது “மோது அல்லது ஓடு" எதிர்வினை என்று அழைக்கப்படுகிறது.
பொதுவாக்கப்பட்ட பதற்றக் குறைபாடு என்றால் என்ன?
பொதுவாக்கப்பட்ட பதற்றக் குறைபாடு (GAD) என்பது ஒரு வகைப் பதற்றக் குறைபாடாகும். இதுபோல் இன்னும் பல வகைப் பதற்றக் குறைபாடுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு (OCD) அல்லது அச்சக் குறைபாடு. அவற்றைப்பற்றியெல்லாம் நாம் இந்தக் கையேட்டில் பேசப்போவதில்லை.
உங்களுக்கு GAD இருந்தால், நீங்கள்:
- ஒரே நேரத்தில் பல விஷயங்களைப்பற்றிக் கவலைப்படுவீர்கள்
- சூழலின் தன்மைக்குப் பொருந்தாத அளவில் கவலை கொள்வீர்கள்
- உங்கள் கவலைகளைக் கட்டுப்படுத்தச் சிரமப்படுவீர்கள்.
GAD மிகவும் பொதுவானது. UKல் 25 பேரில் 1 நபருக்கு GAD உள்ளது.
GAD எதனால் உண்டாகிறது?
GADக்கு ஒரே ஒரு காரணம் என்று எதுவும் இல்லை. உங்களுடைய மரபணுக்கள், சமூகச் சூழல், வாழ்க்கை அனுபவங்கள் ஆகிய அனைத்தும் இதில் ஒரு பங்காற்றுகின்றன, ஒன்றோடொன்று ஊடாடுகின்றன.
உங்களுடைய நெருங்கிய குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு GAD வந்திருந்தால், உங்களுக்குப் பதற்றக் குறைபாடு வரும் வாய்ப்பு நான்கிலிருந்து ஆறு மடங்கு கூடுகிறது. ஆனால், எந்தக் குறிப்பிட்ட மரபணுவும் பதற்றக் குறைபாடுகளை உண்டாக்குவதில்லை. அதற்குப் பதிலாக, பல மரபணுக்கள் ஒன்றோடொன்று ஊடாடி, அவை ஒவ்வொன்றும் ஒரு சிறிய தாக்கத்தை உண்டாக்கி உங்களுடைய ஆபத்தை மிகுதியாக்குகின்றன.
நான் எப்போது உதவியை நாடவேண்டும்?
உங்களுடைய பதற்றம் உங்கள் வாழ்க்கையில் எதிர்மறைத் தாக்கத்தைக் கொண்டிருந்தால், அல்லது, உங்களுக்கு GAD வந்திருக்கலாம் என்று நீங்கள் நினைத்தால், எவ்வளவு விரைவாக இயலுமோ அவ்வளவு விரைவாக உதவி கேளுங்கள். நீங்கள் இன்னும் நன்றாக உணரத் தொடங்குவதற்கு இது உதவும்.
மக்கள் உதவியை நாடுவதைத் தள்ளிப்போடுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவர்களுக்குப் பின்வரும் எண்ணங்கள் வருவது இயல்புதான் (அவை உண்மையாக இல்லாவிட்டாலும்):
- “இதுதான் என்னுடைய இயல்பு, இதை நான்தான் சொந்தமாகச் சமாளிக்கவேண்டும்” – யாரும் தனியாகத் தடுமாறவேண்டியதில்லை, ஒவ்வொருவரும் உதவியைப் பெறலாம், பெறவேண்டும். நீங்கள் யார்மீதாவது அக்கறை காட்டினால் அவர்களிடம் அன்போடும் பரிவோடும் பேசுவீர்கள் அல்லவா? அதைப்போல் உங்களுக்கு நீங்களே அன்பையும் பரிவையும் காட்ட முயலுங்கள்.
- “நான் வேறு பல முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும்” – பலர் தங்களுடைய மன நலத்திற்கு முக்கியத்துவம் வழங்க இயலாமல் தடுமாறுகிறார்கள். குறிப்பாக, அவர்களுடைய குடும்பத்தில் அல்லது பரந்த சமூகத்தில் அவர்களுக்கு முக்கியமான பொறுப்புகள் இருந்தால், அல்லது, அவர்கள் மற்ற வெளிச் சவால்களை எதிர்கொள்கிறார்கள் என்றால், இது இன்னும் கடினமாக இருக்கலாம். ஆனால், நீங்கள் நலமின்றி இருந்தால், அந்த முக்கியமான வேலைகளை உங்களால் தொடர்ந்து செய்ய இயலாது. உங்களுக்கு நீங்களே உதவிக்கொள்வதன்மூலம், மற்றவர்களுக்கு உங்களால் இன்னும் நன்றாக உதவ இயலும்.
- “நான் உதவியை நாடினால் மற்றவர்கள் என்னைப்பற்றி என்ன நினைப்பார்களோ என்று எனக்குக் கவலையாக இருக்கிறது” – கவலை வேண்டாம். உங்களுடைய சிக்கலைப் பெரும்பாலானோர் புரிந்துகொள்வார்கள். அநேகமாக அவர்களும் இதேபோன்ற சவால்களைத் தாண்டி வந்திருப்பார்கள். உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் மக்களில் யாரெல்லாம் உங்களைப் புரிந்துகொள்ளக்கூடியவர்கள், உங்களுக்கு உதவக்கூடியவர்கள் என்று சிந்தியுங்கள், அவர்கள் சொல்வதைக் கேட்க முயலுங்கள்.
எனக்கு நானே உதவிக்கொள்வது எப்படி?
நீங்கள் பதற்றத்தால் தடுமாறுகிறீர்கள், அல்லது, உங்களுக்கு GAD வந்துள்ளது என்றால், உங்களுக்கு நிறைய உதவி கிடைக்கும். பல நேரங்களில், உங்களுக்கு நீங்களே உதவிக்கொள்வதன்மூலம் பதற்றச் சிக்கலை மேம்படுத்தலாம்:
- அதைப்பற்றிப் பேசுங்கள் – உங்களுடைய பதற்றம் உங்கள் வாழ்வில் நடந்த ஏதோ ஒரு நிகழ்வால் (எடுத்துக்காட்டாக, உறவு முறிவு, குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாமல் இருப்பது அல்லது வேலையை இழப்பது போன்றவற்றால்) தொடங்கியுள்ளது என்றால், யாரிடமாவது அதைப்பற்றிப் பேசுவது உதவியாக இருக்கலாம். நீங்கள் நம்புகிற, மதிக்கிற, பிறர் பேசுவதை நன்கு கேட்கக்கூடிய ஒருவரிடம் பேசுங்கள். எடுத்துக்காட்டாக, நெருங்கிய நண்பர், GP, மதத் தலைவர், அல்லது, நீங்கள் உதவி கேட்கத் தயங்காத ஒருவர்.
- தனக்குத் தானே உதவிக்கொள்ளும் கருவிகள் – உங்களுடைய மன நலத்தை மேம்படுத்திக்கொள்வதற்கு நீங்கள் பயன்படுத்தக்கூடிய பல தன்னுதவிக் கருவிகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, தியானம் அல்லது மனமுழுமைக்கான செயலிகள், அறிவாற்றல் பழகுமுறைச் சிகிச்சையை (CBT) நீங்களே செய்துகொள்ள உதவும் புத்தகங்கள் அல்லது செயலிகள். கீழுள்ள உளவியல் சிகிச்சைகளைப்பற்றிய பிரிவில் நீங்கள் CBTபற்றி மேலும் தெரிந்துகொள்ளலாம்.
- சுய உதவிக் குழுக்கள் – உங்கள் GPயிடம் பேசுங்கள், இதேபோன்ற சிக்கல்களைக் கொண்ட மக்களை நீங்கள் சந்திக்கக்கூடிய சுய உதவிக் குழுக்களைப்பற்றிக் கேளுங்கள். இந்தக் குழுக்களிடம் நீங்கள் மனம் விட்டுப் பேசலாம். அத்துடன், பிறர் தங்களுடைய பதற்றத்தை எப்படிக் கையாள்கிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்ளலாம். இந்தக் குழுக்களில் சில, குறிப்பிட்ட பதற்றங்கள் மற்றும் அச்சங்களில் கவனம் செலுத்துகின்றன. எந்த வகைக் குழு உங்களுக்கு உதவலாம் என்று உங்கள் GPஐக் கேளுங்கள்.
- சக மனிதரின் உதவி – சக மனிதரின் உதவி என்றால், உங்களுடைய அனுபவங்களைப் போன்ற அனுபவங்களைக் கொண்ட மற்ற மக்களை ஒரு பாதுகாப்பான, ஆதரவான சூழலில் சந்திப்பதாகும். சக மனிதரின் உதவியைப் பெறுவதுபற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.
இன்னொரு வழி, நீங்கள் ஒரு தொண்டு அமைப்பின்மூலம் ஒரு சுய உதவிக் குழு அல்லது சக மனிதரின் உதவியைப் பெற இயலலாம். எடுத்துக்காட்டாக, Mind என்ற மன நலத் தொண்டு அமைப்பு தன்னுடைய உள்ளூர்ச் சேவைகளின்மூலம் வெவ்வேறு குழுக்களை நடத்துகிறது. நீங்கள் யார், உங்களுக்கு என்ன தேவை என்பதைப் பொறுத்து ஒரு சரியான குழுவில் நீங்கள் இணையலாம்.
நான் தொழில்முறை உதவி பெறுவது எப்படி?
நீங்கள் உங்களுக்கு நீங்களே உதவிக்கொள்ள முயன்றீர்கள், ஆனால், அதன்பிறகும் உங்களுடைய தடுமாற்றங்கள் தொடர்கின்றன என்றால், நீங்கள் கூடுதல் உதவியை நாடலாம். உங்களுக்கு என்ன சிகிச்சை வழங்கப்படும் என்பது, உங்களுடைய சூழல்களைப் பொறுத்து அமையும். ஆனால், GAD உள்ளவர்களுக்குப் பொதுவாக வழங்கப்படக்கூடிய சில சிகிச்சைகள் இவை:
உளவியல் சிகிச்சைகள்
உளவியல் சிகிச்சைகள் அல்லது ‘பேசும் சிகிச்சைகள்' என்றால், நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைப்பற்றி நீங்கள் ஒரு சிகிச்சையாளரிடம் பேசுவதாகும்.
வெவ்வேறு மன நல நிலைகளில் உள்ளவர்களுக்கு உதவுவதற்கு வெவ்வேறு அணுகுமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. GADக்குப் பின்வரும் இரண்டு அணுகுமுறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன:
அறிவாற்றல் பழகுமுறைச் சிகிச்சை (CBT)
CBT என்பது, சிந்திக்கவும் அன்றாடச் சூழல்களுக்கு எதிர்வினையாற்றவும் இன்னும் நன்றாக உதவுகிற வழிகளைக் கற்றுக்கொள்ள உங்களுக்கு உதவும் ஒரு பேச்சுச் சிகிச்சையாகும். இதன் இலக்கு, உங்களுடைய எண்ணங்கள், செயல்கள் மற்றும் உணர்வுகளுக்கிடையிலான இணைப்புகளை அடையாளம் காண்பதற்கு உங்களுக்குக் கற்றுக்கொடுத்து, அதன்மூலம் உங்கள் மன நிலையை மேம்படுத்துவதுதான்.
உங்களுக்கு GAD இருந்தால், உங்களுடைய அச்சங்களைப் பரிசோதித்துப் பார்க்கவும், உங்கள் பதற்றத்தைச் சகித்துக்கொள்ளவும் CBT உங்களுக்கு உதவலாம். CBT தனி நபருக்கு வழங்கப்படலாம், அல்லது, அவர் ஒரு குழுவின் பகுதியாகப் பங்கேற்கலாம். CBT நேரில் வழங்கப்படலாம், அல்லது, இணையத்தில் வழங்கப்படலாம். இது பொதுவாக வாரம் ஒருமுறை என்ற அளவில் பல வாரங்கள் அல்லது மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.
நீங்கள் CBTபற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பினால், எங்களுடைய CBT தகவல் வளத்தைப் பார்க்கலாம்.
செயல்படுத்தப்பட்ட இதமாக்கல்
செயல்படுத்தப்பட்ட இதமாக்கல் என்பது, நீங்கள் பொதுவாகப் பதற்றத்தை உணர்கிற சூழல்களில் உங்கள் உடலைத் தளர்த்தி இதமாக்க உங்களுக்கு உதவும் ஒரு சிகிச்சையாகும். பயிற்சி பெற்ற சிகிச்சையாளர் ஒருவர் ஒவ்வொரு வாரமும் ஒரு மணி நேரம் என்ற அளவில் உங்களுடன் பணியாற்றுவார், உங்கள் உடலை எப்படி இதமாக்குவது என்று உங்களுக்குக் கற்றுத்தருவார். இது பல மாதங்களுக்குத் தொடரும்.
நீங்கள் இந்தச் சிகிச்சையைப் பெற்றபிறகு, நீங்கள் பதற்றத்தை உணர்கிற அன்றாடச் சூழல்களில் இந்தச் செயல்படுத்தப்பட்ட இதமாக்கலை உங்களால் பயன்படுத்த இயலும்.
மருந்துகள்
உளவியல் சிகிச்சைகள் உதவவில்லை என்றால், அல்லது, நீங்கள் அவற்றைப் பெற விரும்பவில்லை என்றால், உங்களுக்கு மருந்துகள் வழங்கப்படலாம்.
உங்கள் மருத்துவர் உங்களுக்கு மருந்துகள் மற்றும் பேச்சுச் சிகிச்சை ஆகியவற்றின் கலவையையும் வழங்கலாம். ஏனெனில், சிலருக்கு வெறும் மருந்துகள் அல்லது வெறும் பேச்சுச் சிகிச்சை பெறுவதைவிட, இரண்டையும் ஒரே நேரத்தில் பெறுவது கூடுதல் செயல்திறன் கொண்டதாக இருக்கலாம்.
SSRIகள்
தேர்ந்தெடுக்கப்பட்ட செரோட்டொனின் ரீஅப்டேக் தடுப்பான்கள் (SSRIகள்) என்பவை ஒரு வகையான மனச் சோர்வுக்கு எதிரான மருந்துகள் ஆகும். SSRIகள் மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகள் என்று அழைக்கப்பட்டாலும், அவற்றைப் பொதுவாக்கப்பட்ட பதற்றக் குறைபாட்டைக் குணப்படுத்தப் பயன்படுத்தலாம்.
SSRIகள் மூளையில் செரோட்டொனின் அளவைக் கூட்டுகின்றன என்று எண்ணப்படுகிறது. இந்தச் செரோட்டொனின் மனநிலை, உணர்வு மற்றும் தூக்கத்தில் நல்லவகையில் தாக்கம் கொண்டிருக்கும் என்று எண்ணப்படுகிறது. மனச் சோர்வுக்கு எதிரான மற்ற மருந்துகளைவிட, SSRIகள் குறைந்த பக்க விளைவுகளைத்தான் உண்டாக்குகின்றன.
SNRIகள்
SSRIகள் உங்களுக்கு வேலை செய்யாவிட்டால், உங்களுக்கு செரோட்டொனின்-நோராட்ரெனலின் ரீஅப்டேக் தடுப்பான் (SNRI) வழங்கப்படலாம். இது மனச் சோர்வுக்கு எதிரான இன்னொரு வகை மருந்தாகும். இதுவும் SSRIகளைப் போன்றதுதான். ஆனால், இது சற்று வேறுவிதமாக வேலை செய்கிறது.
பொதுவாக, மனச் சோர்வுக்கு எதிரான மருந்துகள் வேலை செய்வதற்கு 2 முதல் 8 வாரங்கள் ஆகும். அவை வேலை செய்யவேண்டுமென்றால் அவற்றைத் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளவேண்டும். எல்லா மருந்துகளையும்போல், மனச் சோர்வுக்கு எதிரான மருந்துகளும் பக்க விளைவுகளை உண்டாக்கலாம். அதைப்பற்றி உங்கள் மருத்துவர் உங்களிடம் பேசுவார். நீங்கள் இவற்றைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பினால், எங்களுடைய மனச் சோர்வுக்கு எதிரான மருந்துகளைப்பற்றிய வளத்தைப் பார்க்கலாம்.
பிரிகபாலின்
SSRIகளும் SNRIகளும் உங்களுக்கு வேலை செய்யாவிட்டால், உங்களுக்கு பிரிகபாலின் கொடுக்கப்படலாம். இது வலிப்பு மற்றும் வலிக்குச் சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. பதற்றம் கொண்டோருக்கு இது உதவுவது கண்டறியப்பட்டிருக்கிறது.
பிரிகபாலின் தனக்கு உங்களை அடிமையாக்கிக்கொள்ளக்கூடியது. நீங்கள் பிரிகபாலினைச் சார்ந்திருக்கத் தொடங்குகிறீர்கள் என்று நீங்கள் உணர்ந்தால், அல்லது, உங்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிடக் கூடுதலாக அதை எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால், உடனடியாக உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.
மற்ற சிகிச்சைகள்
பென்சோடியாஜெபைன்கள்
பென்சோடியாஜெபைன்கள் என்பவை ஒருவகையான அமைதிப்படுத்தும் மருந்துகளாகும். நீங்கள் நிலைமையைச் சமாளிக்க இயலாமல் தடுமாறுகிறீர்கள், உங்கள் பதற்றம் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாகத் தோன்றுகிறது என்றால், உங்களுக்குக் குறுகிய காலத்துக்கு இவை வழங்கப்படலாம். பென்சோடியாஜெபைன்கள் நெடுநாட்களுக்குப் பயன்படுத்தப்பட்டால், உங்களைத் தனக்கு அடிமையாக்கிக்கொள்ளக்கூடியவையாகும். நீங்கள் பென்சோடியாஜெபைன்களைச் சார்ந்திருக்கத் தொடங்குகிறீர்கள் என்று நீங்கள் உணர்ந்தால், உடனடியாக உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.
பீட்டா-தடுப்பான்கள்
அரிதாக, உங்களுக்கு பீட்டா-தடுப்பான்கள் கொடுக்கப்படலாம். இந்த மருந்துகள் உங்கள் இதயத்தை மெதுவாக்குவதன்மூலம் செயல்படுகின்றன. இவை பதற்றத்தின் உடல் சார்ந்த உணர்வுகளைத் தடுக்க உதவலாம்.
மூலிகைத் தீர்வுகள்
சிலர் தங்களுடைய பதற்றத்தைக் குறைக்க மூலிகைத் தீர்வுகள் உதவுவதாகச் சொல்கிறார்கள். ஆனால், இவை வேலை செய்கின்றன என்பதற்கான வலுவான சான்று எதுவும் இல்லை. இந்த மாற்று மருந்துகளைப் பயன்படுத்துவதற்குமுன்னால், நீங்கள் உங்களுடைய மருத்துவரிடம் பேசவேண்டும். ஏனெனில், இவற்றை மற்ற மருந்துகளுடன் எடுத்துக்கொண்டால் தீவிரச் சிக்கல்கள் வரலாம்.
நீங்கள் இவற்றைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பினால், ஈடு செய்கிற மற்றும் மாற்று மருந்துகள் மற்றும் உடல் சார்ந்த சிகிச்சைகளைப்பற்றிய எங்களுடைய தகவல் வளங்களைப் படிக்கலாம்.
ஒருவர் பதற்றத்தால் தடுமாறுகிறார் என்று நான் எப்படித் தெரிந்துகொள்வது?
பெரும்பாலான மக்களுக்கு அவ்வப்போது பதற்றம் வருகிறது. ஆனால், அது ஒரு சிக்கலாக மாறுவதில்லை. உங்களுக்குத் தெரிந்த ஒருவர் வழக்கத்தைவிடக் கூடுதலான பதற்ற நிலைகளை எதிர்கொள்கிறார் என்று நீங்கள் நினைத்தால், இவற்றைக் கவனியுங்கள்:
- அவர் எதைப்பற்றியோ, அல்லது, பல விஷயங்களைப்பற்றிப் பகுத்தறிவுக்குப் பொருந்தாத ஒரு நிலையில் கவலைப்படுவதாகத் தோன்றுகிறது.
- அவர் முன்பு தவிர்த்திருக்காத சூழ்நிலைகள் அல்லது சூழல்களை இப்போது தவிர்க்கிறார். எடுத்துக்காட்டாக, கொண்டாட்டங்களுக்குச் செல்வது, வெளியில் இரவு உணவுக்குச் செல்வது அல்லது கூட்டமான இடங்களுக்குச் செல்வது போன்றவை.
- தலைவலி, வயிற்று வலி அல்லது களைப்பு போன்ற உடல் சார்ந்த அறிகுறிகளைப்பற்றி அவர் புகார் சொல்கிறார்.
- அவர் வெளிப்படையான எந்தக் காரணமும் இல்லாமல் வருந்துவதாக, சினம் கொள்வதாக, அல்லது, எரிச்சல் கொள்வதாகத் தோன்றுகிறது.
- அவர் திட்டங்களை ரத்து செய்கிறார், அல்லது, தான் செய்யப்போவதாகச் சொல்லும் விஷயங்களைச் செய்வதில்லை.
- நீங்கள் அவரிடம் பேசும்போது, அவருடைய கவனம் சிதறியிருப்பதாகத் தோன்றுகிறது, அல்லது, அவரால் கவனிக்க இயலுவதில்லை என்று தோன்றுகிறது.
வெவ்வேறு மக்கள் பதற்றத்தை வெவ்வேறுவிதமாக எதிர்கொள்கிறார்கள், அதைப்பற்றிப் பேசுகிறார்கள். இது அவர்களுடைய வாழ்க்கை அனுபவங்கள், பண்பாட்டு அல்லது மதப் பின்னணி மற்றும் அவர்களுடைய முதன்மை மொழியைப் பொறுத்து அமைகிறது. இதன் பொருள், ஒருவருடைய பதற்றம் உங்களுக்கு உடனடியாக வெளிப்படையாகத் தெரியாமலிருக்கலாம்.
பதற்றத்தால் தடுமாறுகின்ற ஒருவருக்கு நான் எப்படி உதவலாம்?
பதற்றம் கொண்ட ஒருவருக்கு உதவுவது சிரமமாக இருக்கலாம். குறிப்பாக, நீங்கள் பதற்றம் கொண்ட ஒருவராக இல்லாவிட்டால். இந்தச் சூழ்நிலையில் நீங்கள் அவருக்கு உதவுவதற்குச் செய்யக்கூடிய சில விஷயங்கள்:
- காது கொடுத்துக் கேட்பது - பதற்றத்தால் தடுமாறிக்கொண்டிருக்கும் ஒருவருடைய மனக் கருத்துகளைக் காது கொடுத்துக் கேட்பது ஒரு பெரிய உதவியாக இருக்கலாம். சில நேரங்களில், இன்னொருவருடன் பதற்ற உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வது அவர்களுடைய பதற்றத்தைக் குறைக்க உதவலாம்.
- பொறுமையாக இருப்பது - உங்களுக்குத் தெரிந்த நபரால் நீங்கள் போட்ட திட்டங்களைப் பின்பற்ற இயலவில்லை, அல்லது, அவர் எரிச்சலுடன் அல்லது கவனம் சிதறிக் காணப்படுகிறார் என்றால், அவரிடம் பொறுமை காட்ட முயலுங்கள். இதைத் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளாமலிருப்பது முக்கியம்.
- அவர்கள் சொல்வதைத் தீவிரமாக எடுத்துக்கொள்வது - ஒருவர் உங்களுக்குப் பகுத்தறிவுக்குப் பொருந்தாததாகத் தோன்றும் விஷயங்களைப்பற்றிப் பதற்றப்படுகிறார் என்றாலும், அவர்களுடைய உணர்வு அவர்களுக்கு மிக உண்மையாக இருக்கும். நீங்கள் அவர்களுடைய பதற்ற எண்ணங்களை ஊக்குவிக்கவேண்டியதில்லை. ஆனால், அவர்களுடைய உணர்வுகள் புரிந்துகொள்ளக்கூடியவை என்றும் அவர்களுக்கு உதவி கிடைக்கவேண்டும் என்றும் நீங்கள் அவர்களுக்குச் சொல்லி வலியுறுத்தலாம்.
உங்களுக்குத் தெரிந்த ஒருவர் தன்னுடைய பதற்றத்தால் தடுமாறிக்கொண்டிருக்கிறார் என்றால், அவர் உதவியை நாடவேண்டும் என்று அவரை ஊக்குவியுங்கள். அவர் தனக்குத் தானே உதவிக்கொள்ளலாம், அல்லது, ஒரு தொழில் வல்லுநரிடமிருந்து உதவி பெறலாம்.
பதற்றம் கொண்ட ஒருவருக்கு உதவுவதுபற்றிய உதவிக் குறிப்புகளை Anxiety UK என்ற தொண்டு நிறுவனம் வழங்குகிறது.
கூடுதல் தகவல்கள் மற்றும் ஆதரவு
நீங்களோ உங்களுக்குத் தெரிந்த ஒருவரோ பதற்றம் அல்லது GAD வந்து தடுமாறுகிறீர்கள் என்றால், உங்களுக்குப் பயன்படக்கூடிய தகவல் வளங்கள் மற்றும் ஆதரவு வளங்கள் சில, இதோ.
பதற்றம்பற்றிய தகவல்கள் மற்றும் உதவி
- பதற்ற மற்றும் அச்சத் தாக்குதல்கள், NHS – NHS இணையத் தளத்தின் இந்தப் பகுதி, பதற்றம்பற்றிய பரவலான தகவல்களை வழங்குகிறது.
- ஒவ்வொரு மனமும் முதன்மையானது, பதற்றம்பற்றிய தகவல்கள் – NHS இலிருந்து கிடைக்கும் இந்தத் தகவல்கள் பதற்றத்தைச் சமாளிப்பதற்கான உதவிக் குறிப்புகளையும், அழுத்தம் மற்றும் பதற்றத்தைக் கையாள்வதற்கு உங்களுக்கு உதவக்கூடிய ஓர் இலவசத் திட்டத்தையும் வழங்குகின்றன.
- Anxiety UK, பதற்றம்பற்றிய தகவல்கள் – தொண்டு நிறுவனமான Anxiety UK வழங்கும் இந்தப் பக்கம், பதற்றம் என்றால் என்ன என்று விளக்குகிறது, அதைக் கையாள்வதற்கான எதார்த்தமான உதவிக் குறிப்புகளைக் கொண்ட ஒரு வீடியோவைக் கொண்டிருக்கிறது.
- மனம், பதற்றம் மற்றும் அச்சத் தாக்குதல்கள் – மன நலத் தொண்டு நிறுவனமான Mind வழங்கும் இந்தத் தகவல்கள் பதற்றக் குறைபாடுகளைப் பொதுவாக ஆராய்கின்றன, GADபற்றிய தகவல்களைக் கொண்டிருக்கின்றன.
- மன நல அறக்கட்டளை, பதற்றம் – மன நல அறக்கட்டளை வழங்கும் இந்தத் தகவல்கள் பதற்றம் மற்றும் பதற்றக் குறைபாடுகளைப்பற்றி ஆராய்கின்றன.
GAD பற்றிய தகவல்கள் மற்றும் ஆதரவு
- வயதுவந்தோரில் பொதுவாக்கப்பட்ட பதற்றக் குறைபாடு பற்றிய தகவல்கள், NHS – GAD என்பது என்ன, அதற்கு உதவி பெறுவது எப்படி என்று இந்த அறிமுகம் விளக்குகிறது.
- Anxiety UK, பொதுவாக்கப்பட்ட பதற்றக் குறைபாடு பற்றிய தகவல்கள்– Anxiety என்னும் தொண்டு அமைப்பு GAD பற்றிய தகவல்களையும் இலவசத் தகவல் தாள் ஒன்றையும் வழங்குகிறது. இவற்றை நீங்கள் பதிவிறக்கிக்கொள்ளலாம்.
- வயதுவந்தோரில் பொதுவாக்கப்பட்ட பதற்றக் குறைபாடு மற்றும் அச்சக் குறைபாடு: கையாளுதல் – நலம் மற்றும் பராமரிப்பு உன்னதத்துக்கான தேசியக் கல்விக்கழகம் (NICE) வழங்கும் பொதுமக்களுக்கான இந்தத் தகவல் கையேடு GAD உள்ளவர்கள் எவ்விதமான பராமரிப்பைப் பெறக்கூடும் என்று விளக்குகிறது.
தகவல் உதவி
இந்தத் தகவல் உளவியலாளர்களுக்கான அரசக் கல்லூரியின் பொது ஊடாடல் ஆசிரியர் வாரியத்தால் (PEEB) உருவாக்கப்பட்டது. இதை எழுதும்போது கிடைத்துள்ள மிகச் சிறந்த சான்றுகளை இது பிரதிபலிக்கிறது.
வல்லுநர் எழுத்தாளர்கள்: பேராசிரியர் டேவிட் வீலெ மற்றும் பேராசிரியர் டேவிட் நட்ட்
இந்தத் தகவல் பக்கத்தின் முழுப் பார்வைக் குறிப்புகள் கோரிக்கையின்பேரில் கிடைக்கும்.
பதிப்பிக்கப்பட்டது: மே 2022
ஆய்வு செய்யவேண்டிய நாள்: மே 2025
© Royal College of Psychiatrists
This translation was produced by CLEAR Global (Jun 2024)