இழப்புத் துக்கம்

Bereavement

Below is a Tamil translation of our information resource on bereavement. You can also view our other Tamil translations.

இந்த தகவல் இழப்புத் துக்கத்திற்கு உட்பட்ட எவருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், மற்றும் மேலும் அறிய விரும்பும் வேறு எவருக்கும்.

இந்தப் பக்கத்தில், நீங்கள் பின்வருவன பற்றிய விவரங்களைக் காணலாம்:

  • ஒரு இழப்புக்குப் பிறகு மக்கள் பொதுவாக எப்படி துக்கப்படுகிறார்கள்
  • தீர்க்கப்படாத துக்கம்
  • உதவி பெறுவதற்கான இடங்கள்
  • பிற தகவல் ஆதாரங்கள்
  • நண்பர்களும் உறவினர்களும் எவ்வாறு உதவ முடியும்.

இழப்புத் துக்கம் என்றால் என்ன?

இழப்புத் துக்கம் என்பது ஒரு துன்பகரமான ஆனால் பொதுவான அனுபவம். நம்மில் பெரும்பாலோர், நம் வாழ்க்கையில் ஏதாவது ஒரு தருணத்தில், நாம் நேசிக்கும் ஒருவரின் மரணம் அல்லது இழப்பைக் காண்போம்.

இருந்தாலும், நம் அன்றாட வாழ்க்கையில் நாம் மரணத்தைப் பற்றி மிகக் குறைவாகவே சிந்திக்கிறோம், பேசுகிறோம், ஏனெனில் ஒருவேளை நமது முந்தைய தலைமுறையை விட குறைவாகவே நாம் அதை எதிர்கொள்கிறோம். அவர்களுக்கு, ஒரு சகோதரர் அல்லது சகோதரி, நண்பர் அல்லது உறவினரின் மரணம், குழந்தை பருவத்தில் அல்லது பதின்பருவ ஆண்டுகளில் வாழ்க்கையின் ஒரு பொதுவான பகுதியாக இருந்தது. நமக்கு, இந்த இழப்புகள் பொதுவாக வாழ்க்கையின் பிற்பகுதியில் நிகழ்கின்றன. எனவே, துக்கத்தைப் பற்றி அறிய நமக்கு வாய்ப்பு இல்லை - அது எப்படி உணரவைக்கிறது, செய்ய வேண்டிய சரியான விஷயங்கள் என்ன, 'இயல்பானது' எது என்று. மற்றும், அதை ஏற்றுக்கொள்ளும் அனுபவம் நமக்கு இல்லை.

இருந்த போதிலும், நாம் விரும்பும் ஒருவரின் இழப்பை இறுதியாக எதிர்கொள்ளும்போது நாம் அதை சமாளிக்க வேண்டும். நாம் அனைவரும் தனிநபர்கள், துக்கப்படுவதற்கான நம் தனிப்பட்ட வழிகளைக் கொண்டிருக்கிறோம் - ஆனால் துக்கப்படும்போது நம்மில் பெரும்பாலோர் பகிர்ந்து கொள்ளும் அனுபவங்கள் உள்ளன.

நாம் துக்கத்தை எவ்வாறு உணர்கிறோம்

எந்த வகையான இழப்புக்குப் பிறகும் நாம் துக்கப்படுகிறோம், ஆனால் நாம் நேசிக்கும் ஒருவரின் மரணத்திற்குப் பிறகு மிகவும் தீவீரமாக துக்கப்படுகிறோம். துக்கம் என்பது ஒரு உணர்வு மட்டுமல்ல, ஆனால் அடுத்தடுத்து வரும் உணர்வுகளின் ஒரு தொடர்ச்சியும் கூட. இதிலிருந்து கடந்துவர அவர்கள் சற்று நேரம் எடுத்துக் கொள்வார்கள், மற்றும் ஒவ்வொரு தனி மனிதரும் இதை தங்களுக்கே உரிய வேகத்தில் செய்வார்கள்.

சில காலமாக நமக்குத் தெரிந்த ஒருவருக்காக நாம் பெரும்பாலும் துக்கப்படுவோம். ஆனால், குழந்தை இறந்து பிறக்கிறவர்கள் அல்லது கருச்சிதைவுகள் ஏற்பட்டவர்கள், அல்லது மிகச் சிறிய குழந்தைகளை இழந்தவர்கள் இதே விதமாக துக்கப்படுகிறார்கள். அவர்களுக்கும் அதே மாதிரியான கவனிப்பும் பரிவும் தேவை.

துக்கப்படும்போது மக்கள் பல்வேறு உணர்ச்சிகளை கடந்து செல்லலாம். இந்த உணர்வுகள் எந்த ஒரு குறிப்பிட்ட வரிசை முறையிலும் தோன்றுவதில்லை. அது முடிந்துவிட்டது என்று நீங்கள் நினைத்த பிறகு ஒரு உணர்வு சில நேரங்களில் திரும்பி வரும். நம்மில் சிலருக்கு இந்த உணர்வுகளில் சில இருக்காது.

அதிர்ச்சி

நெருங்கிய உறவினர் அல்லது நண்பர் இறந்ததைத் தொடர்ந்து, பெரும்பாலான மக்கள் அதிர்ச்சி அடைகிறார்கள், இது உண்மையாக நடந்ததை நம்ப முடியாதவர்களைப் போல. மரணம் எதிர்பார்க்கப் பட்டிருந்தாலும் கூட அவர்கள் இப்படி உணரலாம்.

இந்த உணர்ச்சி பூர்வமான மரத்துப்போதல் சில நேரங்களில் உறவினர்களுடன் தொடர்பு கொள்வது மற்றும் இறுதிச் சடங்கை ஏற்பாடு செய்வது போன்ற அனைத்து முக்கியமான நடைமுறை ஏற்பாடுகளையும் கடந்து செல்ல உதவும். இருப்பினும், இந்த உண்மையற்ற உணர்வு நீண்ட காலம் நீடித்தால் ஒரு பிரச்சினையாக மாறக்கூடும். இறந்தவரின் உடலைப் பார்ப்பது, சிலருக்கு, இதை சமாளிக்க ஒரு முக்கியமான வழியாக இருக்கலாம்.

பலருக்கு, இறுதிச் சடங்கு அல்லது நினைவு சேவை என்பது, என்ன நடந்தது என்ற யதார்த்தம் உண்மையில் தோன்றத் தொடங்கும் ஒரு நிகழ்வாகும். உடலைப் பார்ப்பது அல்லது இறுதிச் சடங்கில் கலந்துகொள்வது துன்பத்தைத் தரலாம், ஆனால் இவை நாம் நேசிக்கும் ஒருவரிடம் விடை பெறுவதற்கான வழிகள். அந்த நேரத்தில், இறுதிச் சடங்கிற்குச் செல்வது மிகவும் வேதனையானது என்று நீங்கள் உணரலாம். ஆனால், அப்படிச் செய்யவில்லை என்றால், பின் காலத்தில் இதைப் பற்றி பலர் வருத்தப்படுவார்கள்.

மறுப்பு

இருந்தாலும் விரைவில், இந்த மரத்துப்போதல் மறைந்துவிடும், மேலும் அது மறுப்பு உணர்வால் மாற்றப்படலாம். நடந்ததை ஏற்றுக் கொள்வது உங்களுக்குக் கடினமாக இருக்கும். உங்களுக்கு உண்மைகள் தெரிந்தாலும் கூட இழப்பைப் பற்றி உங்களையே நம்ப வைப்பது கடினம். இறந்த நபருக்காக நீங்கள் ஏங்குவதைக் காண்கிறீர்கள். இது தெளிவாக சாத்தியமற்றது என்றாலும், எப்படியாவது அவர்களைக் கண்டுபிடிக்க விரும்புகிறீர்கள். இது ஓய்வெடுப்பது அல்லது கவனம் செலுத்துவதைக் கடினமாக்குகிறது மற்றும் சரியாகத் தூங்குவதும் கடினமாக இருப்பதை காணலாம். கனவுகள் மிகவும் வருத்தமளிப்பவைகளாக இருக்கலாம்.

சிலர் தாங்கள் செல்லும் எல்லா இடங்களிலும் - தெருவில், பூங்காவில், வீட்டைச் சுற்றி, அவர்கள் ஒன்றாக நேரத்தை செலவிட்ட எங்கும் - தங்கள் அன்புக்குரியவரை 'பார்ப்பதாக' உணர்கிறார்கள்.

கோபம் மற்றும் குற்ற உணர்வு

இந்த நேரத்தில் நீங்கள் மிகவும் கோபமாக உணரலாம் - மரணத்தைத் தடுக்காத மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது, போதுமான அளவு செய்யாத நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மீது, அல்லது இறப்பதன் மூலம் உங்களை விட்டுச் சென்ற நபர் மீதும் கூட. போதுமான அளவு செய்யாததற்காக உங்கள் மீது கூட நீங்களே கோபப்படலாம்.

மற்றொரு பொதுவான உணர்வு குற்ற உணர்வு. நீங்கள் சொல்ல அல்லது செய்திருக்க விரும்பிய எல்லா விஷயங்களையும் நீங்கள் மறுபடி நினைத்துப் பார்ப்பதைக் காண்கிறீர்கள். விஷயங்களை வித்தியாசமாகச் செய்வதன் மூலம், நீங்கள் எப்படியாவது மரணத்தைத் தடுத்திருக்கலாம் என்றும் கூட நீங்கள் நினைக்கலாம். நிச்சயமாக, ஒரு மரணம் பொதுவாக யாருடைய கட்டுப்பாட்டிற்கும் அப்பாற்பட்டது, இழப்புத் துக்கமடைந்த நபருக்கு இதை நினைவூட்ட வேண்டியிருக்கலாம். உங்கள் அன்புக்குரியவர் ஒரு வேதனையான அல்லது துன்பகரமான நோய்க்குப் பிறகு இறந்துவிட்டார் என்று நீங்கள் நிம்மதியாக உணர்ந்தால் கூட நீங்கள் குற்ற உணர்ச்சியை உணர முடியும். இம்மாதிரி நிம்மதியாக உணர்வது இயற்கையானது, புரிந்துகொள்ளக்கூடியது மற்றும் மிகவும் பொதுவானது.

சோகம்

இந்த கிளர்ச்சி நிலையைத் தொடர்ந்து, நீங்கள் நீங்களாகவே இருக்க விரும்பும்போது, வழக்கமாக அமைதியான சோகம் அல்லது பின்வாங்குதல் மற்றும் மௌனம் போன்ற நேரங்கள் தொடர்கின்றன. இந்த திடீர் உணர்ச்சி மாற்றங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும், ஆனால் அவை துக்க உணர்வின் இயல்பான பகுதிகளில் ஒன்றாகும். 

நீங்கள் குறைவான கிளர்ச்சியை உணர்ந்தாலும், மனச்சோர்வடையும் காலங்கள் காலப்போக்கில் அடிக்கடி நிகழ்கின்றன. நீங்கள் இழந்த நபரின் நினைவுகளை மீண்டும் கொண்டு வரும் நபர்கள், இடங்கள் அல்லது விஷயங்களால் தூண்டப்பட்ட துக்கத்தின் பிடிப்புகளை நீங்கள் அவ்வப்போது பெறலாம்.

வெளிப்படையான காரணமின்றி நீங்கள் திடீரென்று கண்ணீர் விட்டு குமுறும்போது, மற்றவர்களுக்கு அதைப் புரிந்துகொள்வது கடினமாக அல்லது தர்ம சங்கடமாக இருக்கலாம். இந்த கட்டத்தில், துக்கத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளாத அல்லது பகிர்ந்து கொள்ளாத மற்றவர்களிடமிருந்து விலகி இருப்பதற்கு தூண்டுகிறது. இருப்பினும், மற்றவர்களைத் தவிர்ப்பது எதிர்காலத்தில் சிக்கலை அதிகரிக்கக்கூடும், மேலும் ஓரிரு வாரங்கள் அல்லது அதற்குப் பிறகு ஒருவரின் இயல்பான வாழ்க்கைக்கு (முடிந்தவரை) திரும்புவது பொதுவாக சிறந்தது.

இந்த நேரத்தில், நீங்கள் உட்கார்ந்து, எதுவும் செய்யாமல், நீங்கள் நிறைய நேரம் செலவிடுவதைப் போல மற்றவர்களுக்கு இது தோன்றலாம். உண்மையில், நீங்கள் இழந்த நபரைப் பற்றி நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம், நீங்கள் ஒன்றாக இருந்த நல்ல நேரங்களையும் கெட்ட நேரங்களையும் மீண்டும் மீண்டும் நினைத்துக்கொண்டு. இது ஒரு அமைதியான ஆனால் ஒரு மரணத்தை ஏற்றுக்கொள்வதில் இன்றியமையாத பகுதியாகும்.

நேரம் செல்லச் செல்ல, ஆரம்பகால இழப்புத் துக்கத்தின் கடுமையான வலி குறையத் தொடங்குகிறது. மனச்சோர்வு குறைகிறது, மற்றும் மற்ற விஷயங்களைப் பற்றி சிந்திக்கவும், எதிர்காலத்தை மீண்டும் நோக்கவும் கூட முடியும். இருப்பினும், உங்களின் ஒரு பகுதியை இழந்துவிட்டோம் என்ற உணர்வு ஒருபோதும் முழுவதுமாக நீங்காது.

நீங்கள் ஒரு வாழ்க்கைத் துணையை இழந்திருந்தால், புதிய தனிமையின் நிரந்தரமான நினைவூட்டல்கள் உள்ளன, மற்ற ஜோடிகளை ஒன்றாகப் பார்ப்பதிலும், மகிழ்ச்சியான குடும்பங்களின் ஊடகப் படங்களிலிருந்தும். அப்படியிருந்தும், உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதி இல்லாமலிருந்தாலும், சிறிது காலம் கழிந்து நீங்கள் மீண்டும் முழுமையை உணர முடியும். அப்படியிருந்தும், பல ஆண்டுகளுக்குப் பிறகும், நீங்கள் இழந்த நபர் இன்னும் உங்களுடன் இருப்பதைப் போல சில சமயங்களில் நீங்கள் பேசுவதைக் காணலாம்.

ஏற்றுக்கொள்ளல்

இந்த பல்வேறு அனுபவங்கள் ஒன்றுடன் ஒன்று மற்றும் வெவ்வேறு நபர்களில் தங்களை வெவ்வேறு வழிகளில் காட்டக்கூடும். நம்மில் பெரும்பாலோர் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குள் ஒரு பெரிய இழப்புத் துக்கத்திலிருந்து மீண்டு வருகிறோம். இழப்புத் துக்கத்தின் இறுதி கலை இறந்த நபரை விட்டுவிடுவதும், ஒரு புதிய வகையான வாழ்க்கையை ஆரம்பிப்பதும் ஆகும். உங்கள் மனநிலை மேம்படுகிறது, உங்கள் தூக்கம் மேம்படுகிறது, உங்கள் ஆற்றல் இயல்பு நிலைக்குத் திரும்புகிறது. உங்கள் பாலியல் தூண்டுதல் இயல்புநிலைக்கு கூட திரும்புவதால்- நீங்கள் உங்கள் வழக்கமான சுயநிலைக்கு வருகிறீர்கள்.

இதையெல்லாம் சொன்னாலும், வெவ்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்கள் மரணத்தை தங்கள் தனித்துவமான வழியில் கையாள்கிறார்கள். சில சமூகங்களில், மரணம், வாழ்க்கை மற்றும் இறப்பின் தொடர்ச்சியான சுழற்சியின் ஒரு படியாகக் காணப்படுகிறது; ஒரு 'முற்றுப்புள்ளிக்கு' மாறாக. துக்கத்தின் சடங்குகள் மற்றும் விழாக்கள் மிகவும் பொதுவாக மற்றும் ஆர்ப்பாட்டமாக இருக்கலாம் அல்லது தனிப்பட்டு மற்றும் அமைதியாக இருக்கலாம். சில கலாச்சாரங்களில், துக்க காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, மற்றவற்றில் இல்லை. இழப்புத் துக்கமடைந்த வெவ்வேறு கலாச்சாரங்களைச் சார்ந்த மக்கள் அனுபவிக்கும் உணர்வுகள் ஒரே மாதிரியாக இருக்கலாம், ஆனால் அவற்றை வெளிப்படுத்தும் அவர்களின் வழிகள் மிகவும் வித்தியாசமானவை.

குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர்

குழந்தைகள் மிகவும் இளமையாக இருக்கும்போது மரணத்தின் அர்த்தத்தை புரிந்து கொள்ளாவிட்டாலும், நெருங்கிய உறவினர்களின் இழப்பை பெரியவர்களைப் போலவே அவர்களும் உணர்கிறார்கள். குழந்தைப் பருவத்திலிருந்தே, பிள்ளைகள் துக்கப்படுகிறார்கள், மிகுந்த மன உளைச்சலை உணர்கிறார்கள்.

இருப்பினும், அவர்களின் நேர அனுபவம் பெரியவர்களுக்கு உடையதிலிருந்து மாறுபட்டது, மேலும் அவர்கள் துக்கத்தின் நிலைகளை மிக விரைவாக கடந்து செல்லலாம். பள்ளிப் பருவ ஆரம்ப காலகட்டட்தில், நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்ததற்கு அவர்கள் தாமே காரணம் என்று குழந்தைகள் நினைக்கலாம். அதனால், அது அவர்களுடைய தவறு அல்ல என்று அவர்களுக்கு உறுதியளிக்க வேண்டியிருக்கலாம். தங்களைச் சுற்றியுள்ள பெரியவர்களுக்கு கூடுதல் சுமைகளைக் கூட்டிவிடுவோமோ என்ற பயத்தில் இளைஞர்கள் தங்கள் துக்கத்தைப் பற்றி பேசாமல் இருக்கலாம்

குடும்ப அங்கத்தினர் ஒருவர் இறந்த தருணத்தில், குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினருடைய துயரமும், துக்கப்பட வேண்டியதின் தேவையும் புறக்கணிக்கப் படக்கூடாது. உதாரணமாக, அவர்கள் பொதுவாக இறுதிச் சடங்கு ஏற்பாடுகளில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.

தற்கொலையைத் தொடர்ந்து ஏற்படும் இழப்புத் துயரம்

உங்களுக்குத் தெரிந்த ஒருவரின் தற்கொலையால் ஏற்பட்ட மரணத்தை சமாளிப்பது மிகவும் கடினமாக இருக்கும். இழப்புத் துக்கத்தின் வழக்கமான உணர்வுகளுடன், பல முரண்பட்ட உணர்ச்சிகளும் இருக்கலாம். நீங்கள் பின்வருமாறு உணரலாம்:

  • தங்கள் உயிரையே மாய்த்துக் கொண்டதற்காக அந்த நபர் மீது கோபம்.
  • அவர்கள் செய்தவற்றால் நிராகரிக்கப்படுவது போல்
  • ஏன் அதைச் செய்தார்கள் என்று குழப்பப்படுவது.
  • குற்ற உணர்வு- பெரும்பாலான மக்கள் தங்கள் உயிரை விரக்தியின் ஒரு செயலாக மாய்த்துக் கொள்கிறார்கள்: இறந்தவர் எப்படி உணர்ந்திருப்பார் என்பதை நீங்கள் எப்படி கவனிக்காமல் இருந்திருக்க முடியும்?
  • அவர்களின் மரணத்தைத் தடுக்க முடியவில்லை என்ற குற்ற உணர்வு - இறந்தவருடன் அவர்கள் செலவழித்த நேரங்களை உங்கள் மனதில் நினைத்துப் பார்த்து, அதைத் தடுத்திருக்க முடியுமா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளலாம்
  • இறந்தவர் கஷ்டப்பட்டாரா என்ற கவலைப்படுவது
  • அவர்களின் துயரத்தை இனியும் நீங்கள் தாங்க வேண்டியதில்லை என்ற மகிழ்ச்சி
  • நீங்கள் இனி அந்த நபருக்கு ஆதரவளிக்கவோ அல்லது அவர்களின் தற்கொலை எண்ணங்கள் மற்றும் தூண்டுதல்களைக் கையாளவோ வேண்டியதில்லை என்பதில் நிம்மதி
  • அவர்கள் செய்த செயலுக்காக வெட்கப்படுவது- குறிப்பாக கலாச்சாரம் அல்லது மதம் தற்கொலையை பாவமாகவோ அல்லது அவமானமாகவோ பார்த்தால்
  • இதைப் பற்றி மற்றவர்களுடன் பேச தயங்குவது, ஏனெனில் அ) அவர்களின் கலாச்சாரத்தில் தற்கொலைக்கான களங்கம் அல்லது ஆ) இறந்த நபர் அல்லது அவரது உணர்வுகளைக் காட்டிலும், சூழ்நிலையின் நாடகத்தில் அதிக அக்கறை காட்டுகிறார்கள் என்பதால்
  • தனிமைப் படுத்தப்படுவது– தற்கொலை மூலம் அன்புக்குரியவரை இழந்த மற்றவர்களுடன் பேசுவதற்கு இது உதவக்கூடும்.

நைஸ் வழிகாட்டுதல் 105 (பிரிவு 1.8) சந்தேகப்படும் தற்கொலையால் இழப்புத் துக்கம் அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிப்பதற்கான பரிந்துரைகளை வழங்குகிறது.  பிற பயனுள்ள ஆதாரங்கள் பின்வருமாறு:

ஒரு பிரேத பரிசோதனை

எந்தவொரு எதிர்பாராத மரணத்திற்குப் பிறகும் பிரேத பரிசோதனை வழக்கமாகச் செய்யப்படுகிறது. இது ஒரு நபரின் மத அல்லது கலாச்சார நம்பிக்கைகளுக்கு எதிரானதாக இருந்தால், அவர்களின் நண்பர்கள் அல்லது உறவினர்கள் மரண விசாரணை அதிகாரிக்கும், சம்பந்தப்பட்ட எந்தவொரு தொழில் வல்லுனர்களுக்கும் விரைவில் இதைப் பற்றி தெரியப்படுத்த வேண்டும்.

வழக்கமாக விசாரணை பின்தொடரும். சரியாக என்ன நடந்தது என்பதைக் கண்டறிய முயற்சிக்க நீதிமன்ற விசாரணையில் மரண விசாரணை அதிகாரிக்கு ஆதாரங்கள் வழங்கப்படுகின்றன. விசாரணைக்குச் செல்வது உங்களுக்கு உதவியாக இருக்கலாம் - ஆனால் நீங்கள் வேண்டாம் என்று முடிவு செய்தால், மரண விசாரணை அதிகாரி அலுவலகத்திலிருந்து விசாரணையின் முழு அறிக்கையையும் நீங்கள் பெறலாம் (இதற்கு கட்டணம் இல்லை).

கூடுதல் தகவல்களைப் பின்வருவனவற்றில் காணலாம் மரண விசாரணை சேவைகள் மற்றும் பிரேத பரிசோதனையாளர் விசாரணைகளுக்கான அரசாங்கத்தின் வழிகாட்டிகள் மற்றும்  மரண விசாரணை அதிகாரிக்கு மரணம் தெரிவிக்கப்படும்போது என்ன நடக்கிறது. 

நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எப்படி உதவ முடியும்?

  • இழப்புத் துக்கமடைந்த நபருடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் நீங்கள் உதவலாம். வார்த்தைகளை விட, வலி மற்றும் துன்பமான இந்த நேரத்தில் நீங்கள் அவர்களுடன் இருப்பீர்கள் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். வார்த்தைகள் போதுமானதாக இல்லாதபோது தோள்களைச் சுற்றி ஒரு அனுதாபமான கை அக்கறையையும் ஆதரவையும் வெளிப்படுத்தும்.
  • அவர்கள் விரும்பினால், ஒரு இழப்புத் துக்கத்தில் உள்ள நபர் யாருடனாவது சேர்ந்து அழலாம் மற்றும் வலி மற்றும் துயரத்தின் உணர்வுகளைப் பற்றி பேசலாம்-அவரை நிதானத்திற்கு வரும்படி சொல்லாமல் காலப்போக்கில், அவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள், ஆனால் முதலில் அவர்கள் பேச வேண்டும், அழ வேண்டும்.
  • இழப்புத் துக்கத்தில் இருப்பவர் ஏன் ஒரே மாதிரியான விஷயங்களைத் திரும்பத் திரும்பப் பேச வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது மற்றவர்களுக்குக் கடினமாக இருக்கலாம். ஆனால், இது துக்கத்தைத் தீர்ப்பதற்கான செயல்முறையின் ஒரு பகுதியாகும், இதை ஊக்குவிக்க வேண்டும். உங்களுக்கு என்ன சொல்வது என்று தெரியாவிட்டால், அல்லது அதைப் பற்றி பேசலாமா வேண்டாமா என்று கூட தெரியவில்லை என்றால், நேர்மையாக இருங்கள், மற்றும் அவ்வாறே சொல்லுங்கள். இது இழப்புத் துக்கத்தில் உள்ள நபருக்கு அவர் அல்லது அவள் என்ன விரும்புகிறார் என்பதை உங்களுக்குச் சொல்ல வாய்ப்பளிக்கிறது. இறந்த நபரின் பெயரைக் குறிப்பிடுவது வருத்தமளிக்கும் என்ற பயத்தில் மக்கள் அதைப் பெரும்பாலும் தவிர்க்கிறார்கள். ஆனால், இழப்புத் துக்கத்தில் உள்ள நபருக்கு, மற்றவர்கள் தங்களுடைய இழப்பை மறந்துவிட்டது போலத் தோன்றலாம், அது அவர்களின் வேதனையான உணர்வுகளுக்கு தனிமைப்படுத்தப்பட்ட உணர்வைச் சேர்க்கிறது.
  • பண்டிகை சந்தர்ப்பங்கள் மற்றும் ஆண்டுவிழாக்கள் (மரணம் மட்டுமல்ல, பிறந்தநாள் மற்றும் திருமணங்களும் கூட) குறிப்பாக வேதனையான நேரங்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நண்பர்களும் உறவினர்களும் உடன் இருப்பதற்கு விசேஷ முயற்சி எடுக்கலாம்.
  • சுத்தம் செய்வது, பொருட்களை வாங்குவது அல்லது குழந்தைகளைக் கவனித்துக்கொள்வது போன்றவற்றில் நடைமுறையான உதவிகளைச் செய்வது, தனியாக இருப்பதன் சுமையைக் குறைக்கும். இறந்த வாழ்க்கைத்துணை கையாண்டு வந்த வேலைகளைச் செய்ய இழப்புத் துக்கத்திலுள்ள முதிய வாழ்க்கைத்துணைக்கு உதவி தேவைப்படலாம் - மசோதாக்கள், சமையல், வீட்டு வேலைகள், காரை சர்வீஸ் செய்வது மற்றும் பலவற்றைச் சமாளித்தல் போன்றவற்றிற்கு.
  • துக்கப்படுவதற்கு மக்களுக்கு போதுமான நேரத்தை அனுமதிப்பது முக்கியம். சிலர் இழப்பை விரைவில் சமாளித்து வெளிவருவதாகத் தோன்றலாம், ஆனால் மற்றவர்களுக்கு அதிக நேரம் தேவை. எனவே, இழப்புத் துக்கத்திலுள்ள உறவினர் அல்லது நண்பரிடமிருந்து மிக அதிகமாக, மிக விரைவில் எதிர்பார்க்க வேண்டாம் - அவர்களுக்கு சரியாக துக்கப்பட நேரம் தேவை, இது எதிர்காலத்தில் சிக்கல்களைத் தவிர்க்க உதவும். 

துக்கம் தீர்க்கப் படாவிட்டால் என்ன ஆகும்?

துக்கப்படுவதாகவே தோன்றாத நபர்கள் உள்ளனர். அவர்கள் இறுதிச் சடங்கில் அழுவதில்லை, அவர்களின் இழப்பைப் பற்றி எதுவும் குறிப்பிடுவதைத் தவிர்த்து, குறிப்பிடத்தக்க வகையில் விரைவாக தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புகிறார்கள். இது இழப்பைக் கையாள்வதற்கான அவர்களின் இயல்பான வழியாகும், மற்றும் எந்தத் தீங்கும் ஏற்படுவதில்லை, ஆனால் மற்றவர்கள் அடுத்துவரும் ஆண்டுகளில் விசித்திரமான உடல் அறிகுறிகளால் அல்லது மீண்டும் மீண்டும் மனச்சோர்வை அனுபவிக்கலாம். சிலருக்கு சரியாக துக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லாமல் இருக்கலாம். ஒரு குடும்பம் அல்லது வணிகத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தினால், வேறு எதற்கும் நேரம் இல்லாமல் போவது

சில நேரங்களில் பிரச்சனை என்னவென்றால், இழப்பு ஒரு 'சரியான' இழப்புத் துக்கமாகப் பார்க்கப்படுவதில்லை. கருச்சிதைவு அல்லது பிரசவம் அல்லது கருக்கலைப்பு செய்தவர்களுக்கு இது அடிக்கடி நிகழ்கிறது, ஆனால் எப்போதுமே என்று இல்லை. மீண்டும், அடிக்கடி மனச்சோர்வு நிகழ்வுகள் ஏற்படலாம்.

சிலர் துக்கப்பட ஆரம்பிக்கலாம், ஆனால் அதில் சிக்கிக் கொள்ளலாம் ஆரம்பகால அதிர்ச்சி மற்றும் அவநம்பிக்கையின் உணர்வு தொடர்ந்து கொண்டே போகிறது. ஆண்டுகள் பல கடந்து செல்லலாம், மற்றும் அவர்கள் நேசித்த நபர் இறந்துவிட்டார் என்பதை நம்புவது அவர்களுக்கு இன்னமும் கடினமாக இருக்கிறது. மற்றவர்கள் வேறு எதைப் பற்றியும் சிந்திக்க முடியாமல் தொடர்ந்து இருக்கலாம், பெரும்பாலும் இறந்தவரின் அறையை அவர்களின் நினைவாக ஒரு வகையான ஆலயமாக மாற்றலாம்.

சில நேரங்களில், ஒவ்வொரு இழப்புத் துக்கத்திலும் ஏற்படும் மனச்சோர்வு, உணவு மற்றும் பானமும் மறுக்கப்படும் அளவுக்கு வலுவடையக்கூடும், மற்றும் தற்கொலை எண்ணங்கள் எழுகின்றன.

உங்கள் மருத்துவரிடமிருந்து உதவி

இழப்புத் துக்கம் நம் உலகத்தை தலைகீழாகப் புரட்டுகிறது மற்றும் அது நாம் சகித்துக் கொள்ளும் மிகவும் வேதனையான அனுபவங்களில் ஒன்றாகும். இது விசித்திரமாகவும், பயங்கரமானதாகவும், பிரமிக்க வைப்பதாகவும் இருக்கலாம். அப்படி இருந்தாலும், இது நாம் அனைவரும் கடந்து செல்லும் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும், மற்றும் பொதுவாக மருத்துவ கவனிப்பு தேவையில்லை. இருந்தாலும், சில சமயங்களில், துக்கம் ஒரு பெரிய பிரச்சினையாக மாறுகிறது.

  • சில மாதங்களுக்குப் பிறகும் ஒருவரின் துக்கம் குறையவில்லை என்றால், அவர்களின் பொது மருத்துவர் உதவ முடியும். சிலருக்கு, மக்களைச் சந்தித்து அதே அனுபவத்தை அனுபவித்த மற்றவர்களுடன் பேசினால் போதுமானதாக இருக்கும். மற்றவர்கள் ஒரு இழப்புத் துக்க ஆலோசகர் அல்லது உளவியல் சிகிச்சையாளரை ஒரு சிறப்புக் குழுவில் அல்லது சிறிது காலம் தனியாகப் பார்க்க வேண்டியிருக்கலாம்.
  • அரிதாக, தூக்கமில்லாத இரவுகள் ஒரு கடுமையான பிரச்சினையாக மாறும் வரை நீடிக்கக் கூடும். மருத்துவர் பின்னர் சில நாட்களுக்கு தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும்படி பரிந்துரைக்கலாம்.
  • மனச்சோர்வு தொடர்ந்து அதிகமாகி, பசி, ஆற்றல் மற்றும் தூக்கத்தை பாதித்தால், மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகள் உதவக்கூடும்; மேலும் தகவலுக்குமனச்சோர்வுக்கு எதிரான மருந்துகள் பற்றிய எங்கள் துண்டுப்பிரசுரத்தைப் பார்க்கவும். மனச்சோர்வு இன்னமும் சரியாகவில்லை என்றால், உங்கள் பொது மருத்துவர், ஒரு மனநல மருத்துவருடன் சந்திப்பை ஏற்பாடு செய்யலாம்.
  • கடைசி நிலை நோயால் ஒருவரை இழந்தவர்களுக்கு, பல இறப்பு நிலை உதவி மருத்துவமனைகள் உங்களுக்கு இலவச இழப்புத் துக்க சேவையையும் ஆதரவையும் வழங்கும்.
  • சிக்கலில் சிக்குவோருக்கு, உதவி மருத்துவர்களிடமிருந்து மட்டுமல்லாமல், கீழே பட்டியலிடப்பட்டுள்ள அமைப்புகளிடமிருந்தும் கிடைக்கும்.

இழப்புத் துக்கம் பற்றிய ஆதரவு மற்றும் ஆலோசனை

இழப்புத் துக்க ஆலோசனை மையம்

உதவிக்கான இணைப்பு: 0800 634 9494

ஒரு இலவசத் தொலைப்பேசி எண் வழியாக பலப்பல நடைமுறை சிக்கல்களில் இழப்புத் துக்கத்தில் உள்ள மக்களுக்கு ஆதரவு அளிக்கிறது. இறப்பைப் பதிவு செய்வது மற்றும் இறுதிச் சடங்கு இயக்குநரைக் கண்டுபிடிப்பது முதல் சான்றளிக்கப்பட்ட உயில், வரி மற்றும் நன்மை வினவல்கள் வரை இழப்புத் துக்கத்தின் அனைத்து அம்சங்களுக்கும் இது ஆலோசனை வழங்குகிறது.

ப்ரீத்திங்க் ஸ்பேஸ் ஸ்காட்லாண்ட்

உதவிக்கான இணைப்பு: 0800 83 85 87

மனச்சோர்வில் உள்ளவர் பேச வேண்டியபோது அதைக் காதுகொடுத்துக் கேட்பதற்கும், மற்றும் ஆலோசனை மற்றும் தகவல்களை வழங்கவும் அனுபவம் வாய்ந்த ஆலோசகர்கள் இருக்கிறார்கள்.

சைல்ட் பிரீவ்மெண்ட் யூகே

ஆதரவு மற்றும் தகவல் இணைப்பு: 0800 02 888 40

துக்கப்படும் குடும்பங்களுக்கும் அவர்களைப் பராமரிக்கும் தொழில்முறை நிபுணர்களுக்கும் உதவும் ஒரு தேசியத் தொண்டு.

க்ரூஸ் பிரீவ்மெண்ட் கேர் மற்றும் க்ரூஸ் பிரீவ்மெண்ட் கேர் ஸ்காட்லாண்ட்

உதவிக்கான இணைப்பு: 0808 808 1677

உதவிக்கான இணைப்பு(ஸ்காட்லாண்ட்):  0845 600 2227

நெருங்கிய ஒருவரின் மரணத்திற்குப் பிறகு அந்த மக்களை ஆதரிக்கிறது. இங்கிலாந்து முழுவதும், பயிற்சி பெற்ற இழப்புத் துக்க ஆதரவு தன்னார்வலர்களால் வழங்கப்படும் நேருக்கு நேரான மற்றும் குழு ஆதரவு.

டையிங்க் மாட்டர்ஸ்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் உள்ள 32000 உறுப்பினர்களின் கூட்டணி, இது இறப்பு, இறப்பு மற்றும் இழப்புத் துக்கம் பற்றி வெளிப்படையாகப் பேசவும், வாழ்க்கையின் முடிவுக்கான திட்டங்களை உருவாக்கவும் மக்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ரோஸி க்ரேன் ட்ரஸ்ட்

உதவிக்கான இணைப்பு: 01460 55120

மின்னஞ்சல்: contact@rosiecranetrust.co.uk

எந்த வயதிலும் ஒரு மகன் அல்லது மகளை இழந்த துயரத்தின் மூலம் இழப்புத் துக்கமடைந்த பெற்றோருக்கு இந்த அறக்கட்டளை ஆதரவளிக்கிறது.

ஸமாரிடன்ஸ்

உதவிக்கான இணைப்பு: 116 123

மின்னஞ்சல்: jo@samaritans.org

தற்கொலை எண்ணம் அல்லது விரக்தியாக உணரும் மற்றும் பேசுவதற்கு யாராவது தேவைப்படுபவர்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு தேசிய அமைப்பு.

சப்போர்ட் ஆஃப்டெர் ஸூயிஸைட் பார்ட்னர்ஷிப்

தற்கொலையால் பாதிக்கப்பட்ட அல்லது இழப்புத் துக்கத்தில் இருப்பவர்களுக்கு ஆதரவளிக்கும் அமைப்புகளின் ஒரு வலைப்பின்னல்.

சர்வைவர்ஸ் ஆஃப் பிரீவ்மெண்ட் பை ஸூயிஸைட்

உதவிக்கான இணைப்பு: 0300 111 5065

இங்கிலாந்து முழுவதும் இழப்புத் துக்கமடைந்த பெரியவர்களுக்கான ஒரு சுய உதவி அமைப்பு, இழப்புத் துக்கமடைந்த மக்களால் நடத்தப்படுகிறது.

தி கம்பேஷனேட் ஃப்ரெண்ட்ஸ்: சப்போர்டிங்க் பிரீவ்டு பேரன்ட்ஸ் அண்ட் தேர் ஃபாமலிஸ்

உதவிக்கான இணைப்பு: 0345 123 2304

ஒரு குழந்தை / குழந்தைகளின் மரணத்தால் பாதிக்கப்பட்ட இழப்புத் துக்கமடைந்த பெற்றோர், உடன்பிறப்புகள் மற்றும் தாத்தா பாட்டிகளுக்கான தொண்டு நிறுவனம்.

தி லல்லபி ட்ரஸ்ட்

தொலைபேசி: 0808 802 6868

மின்னஞ்சல்: support@lullabytrust.org.uk

ஒரு குழந்தையின் திடீர் இழப்பை அனுபவிக்கும் இழப்புத் துக்கத்திலுள்ள குடும்பங்களுக்கு சிறப்பு ஆதரவை வழங்கும் ஒரு தொண்டு நிறுவனம், குழந்தையின் பாதுகாப்பான தூக்கம் பற்றி நிபுணர் ஆலோசனையை ஊக்குவிக்கிறது மற்றும் திடீரென இறக்கும் குழந்தை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது

தி லாஸ் ஃபவுண்டேஷன்

புற்றுநோயால் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு தொண்டு நிறுவனம். லண்டன் மற்றும் ஆக்ஸ்போர்டில் (முக்கியமாக மாணவர்களுக்கு) ஆதரவு குழுக்கள் மற்றும் பிற ஆதரவு நிகழ்வுகளை இயக்குகிறது.

வே: விடோடு அண்ட் யங்க்

50 வயது அல்லது அதற்குக் குறைவான வயதுடைய ஆண்கள் மற்றும் பெண்களுக்கு, அவர்களுடைய வாழ்க்கைத்துணை இறக்கும்போது உதவும் ஒரு தொண்டு நிறுவனம்.

வின்ஸ்டன்ஸ் விஷ்

வின்ஸ்டன்ஸ் விஷ் என்பது ஒரு தேசிய இங்கிலாந்து தொண்டு நிறுவனமாகும், இது குழந்தைகள், இளைஞர்கள் (25 வயதுவரை) மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு நெருக்கமான ஒருவர் இறக்கும்போது இழப்புத் துக்க ஆதரவை வழங்குகிறது.

இலவச தொலைபேசி உதவிக்கான இணைப்பு: 08088 020 021

மின்னஞ்சல்: ask@winstonswish.org

மேலும் படிக்க

பார்வைக் குறிப்புகள்

Zisook, S., & Shear, K. (2009). Grief and bereavement: what psychiatrists need to know. World Psychiatry, 8 (2), 67-74.

Bonanno, G.A., & Kaltman, S. (2001). The varieties of grief experience. Clinical Psychology Review, 21 (5), 705-734.

Zisook, S., et al. (2014). Bereavement: Courses, consequences and care. Current Psychiatry Reports, 16, 482-492.

Lobar, S.L., Youngblut, J.M., & Brooten, D. (2006). Cross-cultural beliefs, ceremonies and rituals surrounding death of a loved one. Pediatric Nursing, 32 (1), 44-50.

Watson-Jones, R.E., Busch, J.T.A., Harris, P.L., & Legare, C.H. (2017). Does the body survive death? Cultural variation in beliefs about life everlasting. Cognitive Science, 41 (Suppl.3), 455-476.

Bibby, R.W. (2017). Life after death: Data and reflections on the last information gap: A research note. Studies in Religion, 46 (1), 130-141.

Perkins, H.S., Cortez, J.D., & Hazuda, H.P. (2012). Diversity of patients’ beliefs about the soul after death and their importance in end of life care. Southern Medical Journal, 105 (5), 266-272.

Bonoti, F., Leondari, A., & Mastora, A. (2013). Exploring children’s understanding of death: through drawings and the death concept questionnaire. Death Studies, 37, 47-60.

Slaughter, V. (2005). Young children’s understanding of death. Australian Psychologist, 40 (3), 179-186.

Willis, C.A. (2002). The grieving process in children: strategies for understanding, educating and reconciling children’s perceptions of death. Early Childhood Education Journal, 29 (4), 221-226.

Simon, N.M. (2013). Complicated grief. JAMA, 310 (4), 416-423.

Horowitz, M.J., et al. (1997). Diagnostic criteria for complicated grief disorder. American Journal of Psychiatry, 154 (7), 904-910.

Monk, T.H., Germain, A., & Reynolds, C.F. (2008). Sleep disturbance in bereavement. Psychiatric Annals, 38 (10), 671-675.

தகவல் உதவி

இந்தத் தகவல் உளவியலாளர்களுக்கான ராயல் கல்லூரியின் பொது ஊடாடல் ஆசிரியர் வாரியத்தால் (PEEB) உருவாக்கப்பட்டது.

இந்தத் தொடர் ஆசிரியர்: டாக்டர் பிலிப் டிம்ஸ்
இந்தத் தொடரின் மேலாளர்: தாமஸ் கென்னடி
நிபுணர் விமர்சனம்: டாக்டர் மனோஜ் ராஜகோபால்

வெளியிடப்பட்டது: மார்ச் 2020

மதிப்பாய்வு செய்யவேண்டியது: மார்ச் 2023

© ராயல் காலேஜ் ஆஃப் ஸைகியாட்ரிஸ்ட்ஸ் (Royal College of Psychiatrists)

This translation was produced by CLEAR Global (Apr 2025)

Read more to receive further information regarding a career in psychiatry