வயதுவந்தோர் மனச்சோர்வு
Depression in adults
சோர்வாக, மன உளைச்சலாக, திகைப்பாக அல்லது நம்பிக்கையற்று உணர்கிறவர்கள், தாங்கள் தடுமாறுவதாக உணர்கிறவர்கள், தங்களுக்கு மனச்சோர்வு இருக்கலாம் என்று எண்ணுகிறவர்களுக்கு இந்தத் தகவல் சிற்றேடு பயன்படும். அவர்களுடைய உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இது உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.
மனச்சோர்வு என்பது (உங்கள் மனதிலும் உங்கள் உடலிலும்) எப்படி அமைகிறது, நீங்கள் உங்களுக்கு உதவிக்கொள்வதற்கான வழிகள், கிடைக்கும் சில உதவிகள், மனச்சோர்வு இருக்கக்கூடிய ஒருவருக்கு எப்படி உதவுவது ஆகியவற்றை இது விவரிக்கிறது.
இந்தச் சிற்றேட்டின் முடிவில், நீங்கள் கூடுதல் தகவல்களைப் பெறக்கூடிய இடங்களின் பட்டியல் ஒன்று உள்ளது.
துன்ப உணர்வுக்கும் மனச்சோர்வுக்கும் இடையில் என்ன வேறுபாடு?
எல்லாருடைய வாழ்க்கையிலும் களைப்பான, துன்பமான உணர்வுகள் சில நேரங்களில் வருகின்றன. பொதுவாக, இவை ஒரு குறிப்பிட்ட காரணத்தால் வருகின்றன, அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் அவ்வளவாகக் குறுக்கிடுவதில்லை, ஒரு வாரம் அல்லது அதற்குமேல் நீடிப்பதில்லை.
ஆனால், ஒருவேளை, இந்த உணர்வுகள் பல வாரங்களுக்கு அல்லது மாதங்களுக்குத் தொடர்ந்தால், அல்லது, அவை மிக மோசமாகி உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் பாதிக்கத் தொடங்கினால், உங்களுக்கு மனச்சோர்வு இருக்கலாம், உங்களுக்கு உதவி தேவைப்படலாம்.
மனச்சோர்வின் அறிகுறிகள் என்னென்ன?
மக்கள் மனச்சோர்வின் வெவ்வேறு நிலைகளை வெவ்வேறு வழிகளில் உணர்கிறார்கள். மிதமான, நடுத்தர மற்றும் தீவிர மனச்சோர்வு நிலைகள் உள்ளன.1
மக்கள் மனச்சோர்வை எப்படி உணர்கிறார்கள் என்பது அவர்களுடைய பண்பாட்டுப் பின்னணி மற்றும் அவர்களுடைய தனிப்பட்ட மதிப்பீடுகள், நம்பிக்கைகள் மற்றும் மொழியாலும் பாதிக்கப்படுகிறது.
உங்களுக்கு மனச்சோர்வு இருந்தால், நீங்கள் பின்வருவனவற்றில் சிலவற்றைக் கவனிக்கக்கூடும்:1 2
உங்கள் மனதில், நீங்கள்:
- மகிழ்ச்சியற்று, துன்பமாக, சோர்வாக, தளர்வாக உணர்கிறீர்கள். இந்த உணர்வு மாற மறுக்கிறது, நாளின் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் (பெரும்பாலும், காலையில் முதல் வேலையாக) இது இன்னும் மோசமாக இருக்கலாம்
- எதையும் மகிழ்ந்து அனுபவிக்க இயலாமல் இருக்கிறீர்கள்
- மக்களைச் சந்திப்பதில் ஆர்வம் இழக்கிறீர்கள், நண்பர்களுடன் தொடர்பை இழக்கிறீர்கள்
- முறையாகக் கவனம் செலுத்த இயலாமல் சிரமப்படுகிறீர்கள், தீர்மானங்கள் எடுப்பது உங்களுக்குக் கடினமாக இருக்கிறது
- உங்கள் தன்னம்பிக்கையை இழக்கிறீர்கள்
- குற்றவுணர்ச்சி கொள்கிறீர்கள்; நாம் தகுதியற்றவர் என்று உணர்கிறீர்கள்
- எதிர்மறையாகச் சிந்திக்கிறீர்கள்
- நம்பிக்கையற்று உணரத் தொடங்குகிறீர்கள்; சில நேரங்களில் தற்கொலை உணர்வையும் சந்திக்கிறீர்கள்.
உங்கள் உடலில், நீங்கள்:
- நிலையற்று அல்லது பதற்றமாக அல்லது பரபரப்பாக உணரலாம்
- களைப்பாகவும், ஆற்றலின்றியும் உணரலாம்
- தூக்கம் வராமல் சிரமப்படலாம் அல்லது நிறையத் தூங்கலாம்
- காலையில் விரைவில் எழுந்துவிடலாம் மற்றும்/அல்லது இரவு முழுக்க விழித்திருக்கலாம்
- தலை வலிப்பதுபோல் அல்லது வயிறு வலிப்பதுபோல் உணரலாம்
- பாலுறவில் ஆர்வம் இழக்கலாம்
- சாப்பிட இயலாமலிருக்கலாம், எடை இழக்கலாம் அல்லது 'வசதியுணர்வுக்கென நிறையச் சாப்பிட்டு' எடை கூடலாம்.
நீங்கள் பின்வருவனவற்றைச் செய்வதை மற்றவர்கள் கவனிக்கலாம்:
- பணியிடத்தில் பிழைகளைச் செய்கிறீர்கள் அல்லது உங்களால் கவனம் செலுத்த இயலவில்லை
- வழக்கத்துக்கு மாறாக அமைதியாகவும் விலகியும் இருக்கிறீர்கள், அல்லது, மக்களைத் தவிர்க்கிறீர்கள்
- பல விஷயங்களைப் பற்றி வழக்கத்தைவிடக் கூடுதலாகக் கவலைப்படுகிறீர்கள்
- வழக்கத்தைவிடக் கூடுதலாக எரிச்சலடைகிறீர்கள்
- வழக்கத்தைவிடக் கூடுதலாக அல்லது குறைவாகத் தூங்குகிறீர்கள்
- தெளிவில்லாத உடல் பிரச்சனைகளைப் பற்றிப் புகார் சொல்கிறீர்கள்
- உங்களை முறையாகக் கவனித்துக்கொள்வதில்லை. எடுத்துக்காட்டாக, தலை முடியைத் தூய்மைப்படுத்துவதில்லை அல்லது துணிகளைத் துவைப்பதில்லை
- உங்கள் வீட்டை முறையாகக் கவனித்துக்கொள்வதில்லை. எடுத்துக்காட்டாக, சமைப்பதை நிறுத்திவிடுகிறீர்கள், ஒழுங்குபடுத்துவதை நிறுத்திவிடுகிறீர்கள் அல்லது உங்கள் படுக்கையில் உள்ள படுக்கை விரிப்புகளை மாற்ற மறந்துவிடுகிறீர்கள்.
பெரும்பாலான மக்கள் இவற்றில் அனைத்தையும் அனுபவிக்கமாட்டார்கள். சிலர் உடல் சார்ந்த அறிகுறிகளை மட்டும் அறிந்திருக்கலாம். நீங்கள் மிகவும் களைப்பாக உணர்வதால் அல்லது உங்களுக்குத் தூங்குவதில் பிரச்சனைகள் இருப்பதால் உங்களுக்கு ஏதோ உடல் சார்ந்த நோய் உள்ளது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இதுபோன்ற உடல் சார்ந்த அறிகுறிகள் மனச்சோர்வின் முதல் அடையாளமாக இருக்கலாம்.1 2
நீங்கள் எவ்வளவு மனச்சோர்வில் உள்ளீர்கள் என்பதை நீங்கள் உணராமல் இருக்கலாம். குறிப்பாக, அது படிப்படியாக வந்திருந்தால். சில நேரங்களில், மக்கள் சிரமப்பட்டு இதைச் சமாளிக்க முயல்கிறார்கள். சிலர் தாங்கள் சோம்பேறித்தனமாக இருப்பதாக அல்லது மன உறுதியற்று இருப்பதாக எண்ணித் தங்கள்மீது குற்றம் சாட்டிக்கொள்ளத் தொடங்குகிறார்கள்.
சில நேரங்களில், உங்களுக்கு ஒரு பிரச்சனை உள்ளது என்று ஒரு நண்பர் அல்லது கூட்டாளர்தான் உங்களுக்கு எடுத்துச்சொல்லிப் புரியவைக்க வேண்டியிருக்கிறது, நீங்கள் உதவியை நாடவேண்டும் என்று அறிவுறுத்தவேண்டியிருக்கிறது.
நீங்களோ ஒரு நண்பரோ கூட்டாளரோ இவற்றைக் கவனித்தால், நீங்கள் உதவியை நாடவேண்டியிருக்கலாம்:
- உங்களுடைய மனச்சோர்வு உணர்வுகள் உங்கள் பணியை, ஆர்வங்களை, குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள்மீது உங்கள் உணர்வுகளைப் பாதிக்கின்றன
- உங்கள் மனச்சோர்வு உணர்வுகள் பல நாட்களாகத் தொடர்கின்றன, அவை குணமடைவதாகத் தெரியவில்லை
- வாழ்க்கை வாழத் தகுதியானது இல்லை என்றோ, நீங்கள் இல்லாவிட்டால் மற்றவர்கள் இன்னும் நன்றாக இருப்பார்கள் என்றோ நீங்கள் உணரத் தொடங்குகிறீர்கள்.
பதற்றம் என்பது என்ன?
மனச்சோர்வு கொண்ட மக்கள் சிலர் மிகவும் பதற்றமாக உணர்வதும் உண்டு.1 3
நீங்கள் எல்லா நேரங்களிலும் பரபரப்பாக, கவலையாக, அச்சமாக உணரலாம், வெளியில் செல்லவோ நண்பர்களுடன் நேரம் செலவிடவோ சிரமப்படலாம். அல்லது, நீங்கள் உலர்ந்த வாய், வியர்வை, மூச்சுத் திணறல் அல்லது வயிறு புரட்டப்படுதல் போன்ற உடல் சார்ந்த அறிகுறிகளை அனுபவிக்கலாம்.
பொதுவாக, நீங்கள் மனச்சோர்வு மற்றும் பதற்றத்தை அனுபவிக்கிறீர்கள் என்றால், அவற்றில் எது உங்களுக்குக் கூடுதல் சிரமத்தை உண்டாக்குகிறதோ அதற்குச் சிகிச்சை வழங்கப்படும்.1
இருமுனையப் பிறழ்வு (மேனியாக் மனச்சோர்வு) என்றால் என்ன?
மனச்சோர்வு கொண்ட சிலர் சில சூழ்நிலைகளில் நெடுநேரத்துக்கு மகிழ்ச்சியையோ மிக அதிகமான பரபரப்பையோ உணரலாம். இது 'மேனியா' என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பிரச்சனை கொண்டவர்களுக்கு இருமுனையப் பிறழ்வு (இது முன்பு மேனியாக் மனச்சோர்வு என்று அழைக்கப்பட்டது) இருக்கலாம்.4 5
மனச்சோர்வு ஏன் உண்டாகிறது?
மனச்சோர்வு வலுவின்மையின் அடையாளம் இல்லை. அது மிகவும் மன உறுதி கொண்ட மக்களுக்கும் வரலாம். புகழ் பெற்றவர்கள், தடகள வீரர்கள், கொண்டாடப்படும் ஆளுமைகள் கூட மனச்சோர்வைச் சந்திக்கலாம்.
சில நேரங்களில், மனச்சோர்வு ஏன் வருகிறது என்பதற்குத் தெளிவான ஒரு காரணம் இருக்கும். சில நேரங்களில் அவ்வாறு எந்தக் காரணமும் இருக்காது. ஓர் ஏமாற்றத்தால், ஓர் எரிச்சலால், நீங்கள் எதையோ இழந்துவிட்டதால், அல்லது, உங்களுக்கு முக்கியமான ஒருவரைப் பிரிந்துவிட்டதால் இது நடக்கலாம்.
பல நேரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்களும் இருக்கலாம். இந்தக் காரணங்கள் வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறுவிதமாக அமையலாம். சில பொதுவான காரணங்களை நாங்கள் இங்கு விவரிக்கிறோம்.
வாழ்க்கை நிகழ்வுகள் மற்றும் தனிப்பட்ட சூழ்நிலைகள்
மனச்சோர்வானது அழுத்தம் மிக்க அல்லது அழுத்தத்தைத் தருகிற ஒரு நிகழ்வால் தூண்டப்படலாம், எடுத்துக்காட்டாக, துயரம், உறவு முறிவு அல்லது வேலை இழப்பு.6 7
உங்கள் வாழ்க்கைச் சூழல்களால் நீங்கள் தனியாக வசிக்கிறீர்கள் அல்லது உங்களுடைய நண்பர்கள் அல்லது உறவினர்கள் அருகில் இல்லை என்றால், நீங்கள் மனச்சோர்வைச் சந்திக்கும் வாய்ப்புகள் கூடுதலாகும்.8 9
உடல் நலம்
தூக்கம், உணவுப் பழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சி நம் மனநிலையைப் பாதிக்கலாம், நாம் பல்வேறு விஷயங்களை எப்படிச் சமாளிக்கிறோம் என்பதையும் பாதிக்கலாம்.
உடல் நலப் பிரச்சனைகள், குறிப்பாக, தீவிரமானவை அல்லது நெடுங்காலமாகத் தொடர்பவை மனச்சோர்வை உண்டாக்கலாம், அல்லது, அதை இன்னும் மோசமாக்கலாம்.10 11 இவற்றில் சில:
- உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் நோய்கள். எடுத்துக்காட்டாக, புற்றுநோய் மற்றும் இதய நோய்
- நெடுங்காலமாகத் தொடர்கிற மற்றும்/அல்லது வலியைத் தருகிற நோய்கள். எடுத்துக்காட்டாக, மூட்டு வலி
- 'ஃப்ளூ' அல்லது கிளான்டுலர் காய்ச்சல் போன்ற வைரல் நோய்த்தொற்றுகள், குறிப்பாக, இளைஞர்களிடம்
- ஹார்மோன் சார்ந்த பிரச்சனைகள், எடுத்துக்காட்டாக, செயல்வேகம் குறைந்த தைராய்ட்
- மூளையை அல்லது நரம்பு அமைப்பைப் பாதிக்கும் சூழ்நிலைகள்.12
குழந்தைப் பருவத்தில் அதிர்ச்சி
சிலருக்கு மனச்சோர்வு வரும் வாய்ப்பு மற்றவர்களைவிடக் கூடுதலாக உள்ளது. இதற்குக் காரணம், கடினமான குழந்தைப் பருவ அனுபவங்கள் அல்லது அதிர்ச்சியாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக, தவறாகப் பயன்படுத்தப்படுதல் (உடல் சார்ந்து, பாலியல் சார்ந்து அல்லது உளவியல் சார்ந்து), புறக்கணிக்கப்படுதல், வன்முறை அல்லது அதிர்ச்சி தரும் நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்தல், அல்லது, நிலையற்ற குடும்பச் சூழலைச் சந்தித்தல்.13 14 15
மது மற்றும் போதைப் பொருள் பயன்பாடு
தொடர்ந்து நிறைய மது அருந்துதல்16 17 அல்லது, கஞ்சா போன்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்துதல்18 19 போன்றவற்றால் தொலைநோக்கில் உங்களுக்கு மனச்சோர்வு வரும் வாய்ப்பு கூடுதலாகும்.
மரபு சார்ந்த காரணிகள்
ஒருவருக்குத் தீவிர மனச்சோர்வு, இருமுனைக் குறைபாடு அல்லது ஸ்கிஜோஃப்ரெனியா வருவதைத் தீர்மானிப்பதில் ஒரே மாதிரியான மரபு சார்ந்த 'ஆபத்துக் காரணிகள்' பங்கேற்கின்றன. சுற்றுச்சூழல் ஆபத்துக் காரணிகளும் உள்ளன. இவை பொதுவான ஆபத்துக் காரணிகளுடன் இணைந்து செயல்பட்டு, உங்களுக்கு இந்த நிலைகள் வருகிற ஆபத்தைக் கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்.
எடுத்துக்காட்டாக, உங்களுக்குத் தீவிர மனச்சோர்வு வரும் வாய்ப்பை மிகுதியாக்கும் மரபணி ஆபத்துக் காரணிகள் உங்களிடம் இருக்கலாம். எனினும், நீங்கள் ஒரு நிலையான மற்றும் நேர்விதமான சூழலில் வளர்ந்தால் அல்லது வாழ்ந்தால், உங்களுக்கு ஒரு தீவிர மன நல நோய் வரும் ஆபத்தை இது குறைக்கலாம்.
ஒருவருக்குத் தீவிர மன நலப் பிரச்சனை வருவதற்கு அறியப்பட்டிருக்கும் மிக வலுவான ஆபத்துக் காரணி, அவருடைய பெற்றோரில் ஒருவருக்குத் தீவிர மனச்சோர்வு போன்ற தீவிர மன நலப் பிரச்சனை வந்திருப்பது. தீவிர மன நலப் பிரச்சனை கொண்ட பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளுக்குத் தீவிர மன நலப் பிரச்சனை வருகிற வாய்ப்பு 3ல் 1 பங்கு உள்ளது.
மனச்சோர்வு உண்டாவதற்கான காரணங்களைப்பற்றிச் சிந்திக்கும்போது, இது பல்வேறு விஷயங்களைச் சார்ந்திருக்கிறது என்பதையும், ஏதோ ஓர் ஆபத்துக் காரணி மனச்சோர்வை உண்டாக்குவதில்லை என்பதையும் நினைவில் கொள்வது முக்கியம்.20
மனச்சோர்வில் பாலினம் மற்றும் பாலியல் தன்மை சார்ந்த வேறுபாடுகள் உண்டா?
மனச்சோர்வைச் சந்திக்கும் ஆண்கள் தங்கள் உணர்வுகளைப்பற்றிப் பேசும் வாய்ப்பு குறைவு, அவர்கள் உதவி கேட்கும் வாய்ப்பும் குறைவு.21 அவர்கள் தங்களுடைய மனச்சோர்வை வேறுவிதமாக வெளிப்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, திடீர்ச் சினம், கூடுதலாகக் கட்டுப்பாட்டை இழத்தல், கூடுதல் ஆபத்தை எதிர்கொள்ளுதல், ஆவேசம், நிலைமையைச் சமாளிக்க மது மற்றும் போதைப் பொருட்களைப் பயன்படுத்துதல் போன்றவை.23 24 பெண்களுடன் ஒப்பிடும்போது, ஆண்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழக்கும் வாய்ப்பு கூடுதலாகும்.21 23
கர்ப்பமாக இருக்கும் பெண்களில் சுமார் 12% பேர் கர்ப்பக் காலத்தில் மனச்சோர்வைச் சந்திக்கிறார்கள், 15 முதல் 20% பேர் குழந்தை பெற்றுக்கொண்ட முதல் ஆண்டில் மனச்சோர்வைச் சந்திக்கிறார்கள்.24
பிறந்தபோது தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாலினத்துடன் தங்களை அடையாளப்படுத்திக்கொள்கிறவர்களைவிட, திருநபர்கள் (பிறந்தபோது தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாலினம் அல்லாத இன்னொரு பாலினத்துடன் தங்களை அடையாளப்படுத்திக்கொள்கிறவர்கள்) மனச்சோர்வு மற்றும் பதற்றத்தின் கூடுதல் நிலைகளைச் சந்திக்கும் வாய்ப்பு கூடுதலாகும். இருமை அல்லாதவர்களும் (பெண் அல்லது ஆணாகத் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளாதவர்களும்) மனச்சோர்வு மற்றும் பதற்றத்தின் கூடுதல் நிலைகளைச் சந்திக்கும் வாய்ப்பு கூடுதலாக இருக்கலாம்.25 26
எதிர்ப்பாலினத்தின்மீது நாட்டம் கொண்டவர்களைவிட, பெண்மீது நாட்டம் கொண்ட பெண் அல்லது ஆண்மீது நாட்டம் கொண்ட ஆண் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பாலினத்தவர்மீது நாட்டம் கொண்டவர் எனத் தங்களை அடையாளம் காண்கிறவர்களுக்கு (மனச்சோர்வு உள்ளிட்ட) மன நலப் பிரச்சனை வரும் வாய்ப்பு கூடுதலாகும்.27 இவர்கள் தற்கொலை செய்துகொள்ள அல்லது தங்களைக் காயப்படுத்திக்கொள்ள முயல்வதற்கும் வாய்ப்புகள் அதிகம்.27 28
என்னை நானே குணப்படுத்திக்கொள்ள இயலுமா?
நல்ல செய்தி என்னவென்றால், மனச்சோர்வு கொண்ட பெரும்பாலான மக்கள் தங்களுக்குத் தாங்களே உதவிக்கொண்டு அந்தச் சூழ்நிலையிலிருந்து மேம்படலாம். நீங்கள் நீங்களாக மனச்சோர்விலிருந்து விடுபட்டால், அது உங்களுக்குச் சாதனை உணர்வை அளிக்கும், வருங்காலத்தில் நீங்கள் சோர்வாக உணர்ந்தால் அதுபோன்ற சூழ்நிலைகளைக் கையாள்வதற்கான தன்னம்பிக்கை உணர்வை அளிக்கும்.
இந்தச் சிற்றேட்டில் உள்ள சில ஆலோசனைகளைப் பின்பற்றுவதன்மூலம் மனச்சோர்வுக் காலகட்டம் குறையலாம். வருங்காலத்தில் நீங்கள் நலமாக இருக்க இவை உதவலாம்.
ஆனால், சிலருக்குக் கூடுதல் உதவி தேவை. குறிப்பாக, அவர்களுடைய மனச்சோர்வு தீவிரமாக இருந்தால், அல்லது, அது நெடுங்காலம் தொடர்ந்தால், அல்லது, அவர்கள் மேம்படுவதற்கு முயன்றுபார்த்த விஷயங்கள் வேலை செய்யாவிட்டால் இந்தச் சூழ்நிலை வரலாம்.
நீங்கள் மனச்சோர்வை உணர்வது இப்போதுதான் முதன்முறை என்றால், நீங்கள் மீண்டும் மனச்சோர்வை உணர்வதற்குச் சுமார் 50:50 வாய்ப்பு உள்ளது. அதனால், உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் அதை எப்படிப் பெறுவது என்று அறிந்திருப்பது முக்கியமாகும்.1, 29
அதனால், நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதுபற்றி யாரிடமாவது பேசவேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அதைத் தள்ளிப்போடாமலிருக்க முயலுங்கள். ஏனெனில், இதில் நீங்கள் உடனடி நடவடிக்கை எடுத்தால், இன்னும் விரைவாகக் குணமாகலாம், நீங்கள் முன்பு மகிழ்ச்சியுடன் செய்துகொண்டிருந்த விஷயங்களில் மீண்டும் ஈடுபடுவதற்கு அது உதவலாம்.
சில நேரங்களில், நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதைப் பிறருக்குப் புரியவைப்பதற்கு அதை வெவ்வேறுவிதமாக விளக்கவேண்டியிருக்கலாம். நம்பிக்கை இழக்காதீர்கள், விடாமுயற்சியுடன் தொடர்ந்து பேசுங்கள். அதன்மூலம் நீங்கள் சரியான உதவியைப் பெறலாம்.
எனக்கு நானே உதவிக்கொள்வது எப்படி?
நீங்கள் மனச்சோர்வை உணரும்போது முயலக்கூடிய சில அறிவுறுத்தல்களை இங்கு பட்டியலிடுகிறோம். உங்களுக்கு எது மிகச் சிறப்பாக வேலை செய்கிறது என்பதை நீங்கள்தான் கண்டறியவேண்டும், உங்களுக்கு உதவுகின்ற வியூகங்களின் தனிப் பட்டியலை உருவாக்கவேண்டும்.
யாரிடமாவது பேசுங்கள்: உங்கள் வாழ்க்கையில் ஏதாவது கெட்ட செய்தி அல்லது மிகப் பெரிய துன்பம் ஏற்பட்டுள்ளது என்றால், அதை மனத்துக்குள் பூட்டிவைக்காமலிருக்க முயலுங்கள். நீங்கள் அதைப்பற்றி எப்படி உணர்கிறீர்கள் என்பதை உங்களுக்கு நெருக்கமான யாரிடமாவது சொல்வது உதவியாக இருக்கலாம். நீங்கள் யாரிடமும் பேசவேண்டும் என்பதுபோல் உணராவிட்டால், நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை எழுத முயலுங்கள்.
சுறுசுறுப்பாக இருங்கள்: உங்களால் இயன்றால், வீட்டிலிருந்து வெளியில் சென்று சிறிது உடற்பயிற்சி செய்யுங்கள். சிறிது தூரம் நடந்தால்கூடப் போதும். இதன்மூலம் நீங்கள் உடற்தகுதியைப் பெறலாம், இன்னும் நன்றாகத் தூங்கலாம். நீங்கள் வலியைத் தரும் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளில் கவனம் செலுத்தாமல் மற்ற விஷயங்களைச் சிந்திக்கவும் இது உங்களுக்கு உதவலாம்.
முறையாகச் சாப்பிடுங்கள்: உங்களுக்கு அவ்வளவாகப் பசிக்காமலிருக்கலாம். ஆனால், தொடர்ந்து முறையாகச் சாப்பிட முயலுங்கள். நீங்கள் மனச்சோர்வில் இருக்கும்போது எடை குறைவதும் வைட்டமின்கள் குறைவதும் மிக எளிது. அல்லது, நீங்கள் நிறையக் குப்பை உணவுகளைச் சாப்பிட்டுத் தேவையில்லாத எடையை ஏற்றிக்கொள்வதும் எளிது. நிறையப் பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்ட சமநிலையான உணவுப் பழக்கம் உங்கள் உடலையும் மனத்தையும் நலத்துடன் வைக்கலாம்.
மது மற்றும் போதைப் பொருட்களைத் தவிர்த்து விடுங்கள்: மதுவானது சில மணி நேரங்களுக்கு உங்களை இன்னும் நன்றாக உணரவைக்கலாம். ஆனால், அது தொலைநோக்கில் மனச்சோர்வை இன்னும் மோசமாக்கும் என்பதுதான் உண்மை. தெருக்களில் கிடைக்கும் போதைப் பொருட்கள், குறிப்பாக, கஞ்சா, அம்ஃபெடமைன்கள், கொக்கைன், எக்ஸ்டசி போன்றவையும் இதே விளைவைத்தான் உண்டாக்கும்.
ஒரு தூக்கப் பழக்கத்தை உருவாக்குங்கள்: ஒவ்வோர் இரவும் ஒரே நேரத்தில் தூங்கச் செல்ல முயலுங்கள். ஒவ்வொரு காலையும் ஒரே நேரத்தில் எழ முயலுங்கள். நீங்கள் தூங்கச் செல்லுமுன், நீங்கள் விரும்பிச் செய்கிற எதையாவது செய்யுங்கள். எடுத்துக்காட்டாக, இதமான இசையைக் கேட்டல் அல்லது ஒரு புத்தகத்தைப் படித்தல். உங்களுக்குத் தூக்கம் வரவில்லை என்றால், படுக்கையிலிருந்து எழுந்து, அமைதியான வேறெதையாவது செய்யுங்கள். எடுத்துக்காட்டாக, சோஃபாவில் அமைதியாக அமர்ந்திருத்தல்.
மனத்தை இதமாக்கும் செயல்களை முயன்று பாருங்கள்: நீங்கள் எப்போதும் அழுத்தமாக உணர்கிறீர்கள் என்றால், மனத்தைத் தளர்வாக்கும் உடற்பயிற்சிகளை முயன்றுபாருங்கள். எடுத்துக்காட்டாக, யோகாசனம், மசாஜ், நறுமண மருத்துவம் அல்லது உங்கள் மனத்தை இதமாக்கும் வேறொரு செயல்பாடு.
நீங்கள் மகிழ்ந்து செய்கிற எதையாவது செய்யுங்கள்: நீங்கள் உண்மையாக மகிழ்ந்து செய்கிற எதையாவது செய்வதற்குத் தொடர்ந்து நேரம் ஒதுக்குங்கள். எடுத்துக்காட்டாக, ஒரு விளையாட்டை விளையாடுதல், படித்தல், அல்லது இன்னொரு பொழுதுபோக்கு.
மனச்சோர்வைப் பற்றிப் படியுங்கள்: மனச்சோர்வைப்பற்றிப் பல புத்தகங்கள் மற்றும் இணையத் தளங்கள் உள்ளன. என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு இவை உங்களுக்கு உதவலாம், நிலைமையை இன்னும் நன்றாகச் சமாளிப்பதற்கு உங்களுக்கு வியூகங்களை வழங்கலாம், நீங்கள் எதை அனுபவிக்கிறீர்கள் என்பதை நண்பர்களும் உறவினர்களும் புரிந்துகொள்வதற்கும் உதவலாம்.
உங்கள்மீது இரக்கம் காட்டப் பழகுங்கள்: நீங்கள் எதையும் கச்சிதமாகச் செய்யவேண்டும் என்று நினைக்கிறவராக இருக்கலாம். அதனால், உங்களை நீங்களே மிகவும் தூண்டிக்கொள்ளலாம். உங்களுக்கு இன்னும் எதார்த்தமான இலக்குகள் அல்லது எதிர்பார்ப்புகளை அமைக்க முயலுங்கள். உங்கள்மீது இன்னும் இரக்கம் காட்டுங்கள்.
ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்: சில நாட்கள் ஓய்வெடுத்துக்கொண்டு, உங்களுடைய வழக்கமான நாட்களிலிருந்து விலகியிருப்பது உண்மையில் உதவியாக இருக்கலாம். உங்களுடைய அன்றாட அழுத்தம் மற்றும் கவலைகளிலிருந்து சிறிது ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். உங்களால் உங்களுடைய சூழலை மாற்றிக்கொள்ள இயலுமானால் அது உங்களுக்கு உதவியாக இருக்கலாம். அது சில மணிநேர மாற்றமாக இருந்தால்கூடப் பரவாயில்லை.
ஓர் ஆதரவுக் குழுவில் சேருங்கள்: நீங்கள் மனச்சோர்வில் இருக்கும்போது, உங்களுக்கு நீங்களே உதவிக்கொள்வது கடினமாக இருக்கலாம். இதேபோன்ற சூழ்நிலையில் உள்ள மற்ற மக்களுடன் பேசுவது இதற்கு உதவலாம். இந்தச் சிற்றேட்டின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் பட்டியலைப் பாருங்கள். அதன்மூலம் உங்களுக்குச் சில யோசனைகள் கிடைக்கலாம்.
நம்பிக்கையுடன் இருங்கள்: உலகில் பலர் மனச்சோர்வைச் சந்தித்துள்ளார்கள், அதிலிருந்து மேம்பட்டுள்ளார்கள், நீங்களும் இதிலிருந்து மேம்படுவதற்கு உதவி கிடைக்கும், இன்னும் நன்றாக உணர்வதற்கான உதவியைப் பெறும் தகுதி உங்களுக்கு உண்டு என்பதையெல்லாம் உங்களுக்கு நீங்களே நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.
மனச்சோர்வு தொடர்பாக எனக்கு என்ன உதவி கிடைக்கும்?
நீங்களாக மேம்படுவது சரிப்படாவிட்டால், அல்லது, நீங்கள் விரும்பும் வேகத்தில் அது நடக்காவிட்டால், உங்கள் GPயிடம் அதுபற்றிப் பேசுவது நல்லது.
மனச்சோர்வு கொண்ட பெரும்பாலான மக்கள் அவர்களுடைய GPயிடம் மருத்துவம் பெறுகிறார்கள். உங்களுக்கு வழக்கமான GP யாரும் இல்லை என்றால், உங்கள் பகுதியில் உள்ள, நீங்கள் வசதியாக உணர்கிற, நீங்கள் தொடர்ச்சியாகக் காணக்கூடிய ஒரு மருத்துவரைக் கண்டறிய முயலுங்கள்.
உங்கள் GP உங்களுடன் பேசி உங்கள் அறிகுறிகளை ஆராய்வார், உங்களுக்கு எந்த மருத்துவங்கள் வேலை செய்யும் என்பதைக் கண்டறிவார்.
உங்களுக்கான மிகச் சிறந்த மருத்துவம், உங்களுடைய இப்போதைய மனச்சோர்வு நிலை, அது எவ்வளவு நாளாக உள்ளது, உங்களுக்கு இதற்குமுன் மனச்சோர்வு வந்துள்ளதா ஆகியவற்றைப் பொறுத்து அமையும்.
உங்கள் GP உங்களுக்கு ஒரு முறையான உடற்பரிசோதனையையும் வழங்கலாம். இதற்குக் காரணம், உடல் சார்ந்த சில நோய்களும் மனச்சோர்வை உண்டாக்கலாம். நீங்கள் ஏற்கெனவே உடல் சார்ந்த நோய் ஒன்றுக்கு மருத்துவம் பெற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், உங்கள் GPக்கு அதைப்பற்றிச் சொல்லுங்கள்.
தொடக்க மருத்துவம் (மிதமான மனச்சோர்வு)
நீங்கள் முதன்முறையாக மனச்சோர்வை எதிர்கொள்கிறீர்கள் என்றால், பொதுவாக உங்களுக்கு ஆன்ட்டி-டிப்ரசன்ட் வகை மருந்துகள் வழங்கப்படாது. உங்கள் GP தீவிரம் குறைந்த உளவியல் இடையீடு (அல்லது பேசும் மருத்துவம்) ஒன்றை உங்களுக்குப் பரிந்துரைக்கலாம். எடுத்துக்காட்டாக:1 2
- உங்களுக்கு நீங்களே உதவிக்கொள்ள உதவும் சிற்றேடுகள் அல்லது அறிவாற்றல் நடவடிக்கை மருத்துவக் (CBT) கொள்கைகள் அடிப்படையிலான புத்தகங்கள் (நலப் பராமரிப்புத் தொழில் வல்லுநர் ஒருவருடைய ஆதரவுடன்)
- உங்களுக்கு நீங்களே உதவிக்கொள்ள உதவுகின்ற, கணினிமயமாக்கப்பட்ட CBT திட்டங்கள் (இவையும் நலப் பராமரிப்புத் தொழில் வல்லுநர் ஒருவருடைய ஆதரவுடன்)
- குழு அடிப்படையிலான உடற்பயிற்சி
- குழு அடிப்படையிலான ஒரு திட்டம், சக நபர் ஆதரவு, தனக்குத் தானே உதவிக்கொள்வது அல்லது CBT அடிப்படையில்.
உங்களுக்கு ஏற்ற சரியான மருத்துவத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு உங்கள் GP உங்களுக்கு உதவலாம்.
இவை உங்களுக்கு நன்றாக உதவாவிட்டால், நடுத்தர மற்றும் தீவிர மனச்சோர்வுக்கான மருத்துவங்களைப்பற்றிய அடுத்த பிரிவில் இருக்கும் இடையீடுகளில் ஒன்றை முயன்றுபார்க்கலாம் என்று உங்கள் GP அறிவுறுத்தலாம்.
கூடுதல் மருத்துவம் (நடுத்தர மற்றும் தீவிர மனச்சோர்வு)
உயர் தீவிர உளவியல் தலையீடு அல்லது ஆன்ட்டி-டிப்ரசன்ட் மருந்துகளை அல்லது இரண்டையும் முயன்று பார்க்கலாம் என்று உங்கள் GP பரிந்துரைக்கலாம்.1 உங்களுக்கு மிகவும் பொருந்துகின்ற மருத்துவம் எது என்பதைத் தீர்மானிக்க நீங்கள் அவரிடம் பேசலாம்.
உளவியல் இடையீடுகள்
மனச்சோர்வு கொண்ட மக்களுக்குப் பல வகை உளவியல் இடையீடுகள் உள்ளன. இவற்றில் உங்கள் உள்ளூர்ப் பகுதியில் கிடைக்கும் இடையீடு உங்களுக்குப் பரிந்துரைக்கப்படலாம்.1
நீங்கள் ஒரு குறிப்பிட்ட உளவியல் இடையீடைப் பெறுவதற்குக் காத்திருப்போர் பட்டியலில் சேரவேண்டியிருந்தால், அந்த வாய்ப்பு கிடைக்கும்வரை உங்களைக் கவனித்துக்கொள்வதற்கு நீங்கள் என்ன செய்யலாம் என்று நீங்கள் உங்கள் மருத்துவரிடம் பேசவேண்டும்.
அறிவாற்றல் நடவடிக்கை மருத்துவம் (CBT)
நம்மில் பலருக்கு எதிர்மறைச் சிந்தனைப் பழக்கங்கள் உள்ளன. அவர்களுடைய வாழ்க்கையில் நடக்கிற விஷயங்கள் ஒருபுறமிருக்க, இந்தப் பழக்கங்கள் அவர்களுக்கு மனச்சோர்வைத் தரலாம், தொடர்ந்து மனச்சோர்வில் இருக்கச்செய்யலாம். CBT இவற்றில் உங்களுக்கு உதவுகிறது:
- எதார்த்தத்துக்குப் பொருந்தாத, உதவாத சிந்தனை வழிகளை அடையாளம் காணுதல்
- அதன்பிறகு, புதிய, இன்னும் உதவிகரமான சிந்தனை வழிகளையும் நடவடிக்கைகளையும் உருவாக்குதல்.
மனச்சோர்வுக்கான மருத்துவம் என்ற முறையில் CBT மிகச் சிறந்த சான்றைக் கொண்டுள்ளது.1 30 31
தனிப்பட்ட பழகுமுறை மருத்துவம் (IPT)
உறவினர்கள், கூட்டாளிகள் மற்றும் நண்பர்களுடனான உங்களுடைய உறவுகளில் இருக்கக்கூடிய பிரச்சனைகளைக் கண்டறிந்து கையாள்வதற்கு தனிப்பட்ட பழகுமுறை மருத்துவம் உங்களுக்கு உதவலாம்.
நடவடிக்கைச் செயல்படுத்தல்
நடவடிக்கைச் செயல்படுத்தல் என்பது, செயல்களைத் திட்டமிடுதல் மற்றும் நீங்கள் பொதுவாகத் தவிர்க்கக்கூடிய ஆக்கப்பூர்வமான விஷயங்களைச் செய்தல் போன்ற கூடுதல் நேர்வித நடவடிக்கைகளை வளர்த்துக்கொள்ள உங்களை ஊக்குவிக்கிறது.
இணையர் மருத்துவம்
உங்களுடைய உறவு ஒன்று உங்கள் மனச்சோர்வைப் பாதிப்பதாகத் தோன்றினால், மனச்சோர்வுக்கும் உங்கள் உறவுக்கும் இடையிலான இணைப்புகளைப் புரிந்துகொள்ள இணையர் மருத்துவம் உதவலாம். உங்கள் இணையருடன் இன்னும் ஆதரவான உறவைக் கட்டமைக்கவும் இது உங்களுக்கு உதவலாம்.
அறிவுறுத்துதல்
பயிற்சி பெற்ற அறிவுறுத்துநர்கள் உங்களுடைய அறிகுறிகள் மற்றும் பிரச்சனைகளை ஆராய்வதற்கு உங்களுக்கு உதவலாம், உங்களுக்கு ஆதரவையும் வழிகாட்டுதலையும் வழங்கலாம்.
உளவியல் இயக்கவியல் உளவியல் மருத்துவம்
உங்களுடைய முந்தைய அனுபவங்கள் இப்போதைய, இங்குள்ள உங்கள் வாழ்க்கையை எப்படிப் பாதிக்கலாம் என்பதைக் காண்பதற்கு இந்த மருத்துவம் உங்களுக்கு உதவுகிறது.
ஆன்ட்டி-டிப்ரசன்ட்கள்
ஒருவேளை, உங்களோ மனச்சோர்வு நடுத்தர அல்லது தீவிர அளவில் இருந்தால், அல்லது, பல நாட்களுக்குத் தொடர்ந்தால், உங்கள் மருத்துவர் ஆன்ட்டி-டிப்ரசன்ட்கள் எடுத்துக்கொள்வதைப் பரிந்துரைக்கலாம். பொதுவாக இது தேர்ந்தெடுக்கப்பட்ட செரொடோனின் மீண்டும் எடுத்துக்கொள்ளுதலைத் தடுப்பான் (SSRI) வகையில் அமையும்.1 32 எந்த ஆன்ட்டி-டிப்ரசன்ட்கள் உங்களுக்கு நன்றாக வேலை செய்யலாம் என்பதுபற்றி அவர்கள் உங்களுடன் பேசுவார்கள். நீங்கள் இதற்குமுன் ஆன்ட்டி-டிப்ரசன்ட்களை எடுத்துக்கொண்டுள்ளீர்களா, நீங்கள் வேறு மருந்துகளை எடுத்துக்கொள்கிறீர்களா ஆகியவற்றையும், உங்களுக்கு இருக்கக்கூடிய வேறு உடல் சார்ந்த நலப் பிரச்சனைகளையும் சார்ந்து இது அமையும்..
ஆன்ட்டி-டிப்ரசன்ட்களுக்குப் பக்க விளைவுகள் உண்டா?
எல்லா மருந்துகளையும்போல், ஆன்ட்டி-டிப்ரசன்ட்களுக்கும் பக்க விளைவுகள் உண்டு. ஆனால், பொதுவாக இவை மிதமானவை, சில வாரங்களில் குறைந்து மறைந்துவிடக்கூடியவை.32 33
நீங்கள் எதை எதிர்பார்க்கலாம் என்பதுபற்றி உங்கள் மருத்துவர் உங்களுக்கு அறிவுறுத்தலாம். உங்களுக்கு இதுபற்றி ஏதேனும் கவலை இருந்தால், அல்லது, நீங்கள் நிறையப் பக்க விளைவுகளை அனுபவிக்கிறீர்கள் என்றால், நீங்கள் அவர்களுடன் பேசவேண்டும். மருந்தைப்பற்றிய எழுதப்பட்ட தகவலையும் உங்கள் மருந்தாளுநர் வழங்குவார்.
ஒரு குறிப்பிட்ட ஆன்ட்டி-டிப்ரசன்ட் உங்களைத் தூக்கக் கலக்கமாக உணரச்செய்கிறது என்றால், நீங்கள் அதை இரவு நேரத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும். அது உங்களுக்கு நல்ல உறக்கத்தைத் தந்து உதவும். ஒருவேளை, நீங்கள் பகல் நேரத்தில் தூக்கக் கலக்கமாக உணர்ந்தால், அந்தத் தூக்கக் கலக்கம் போகும்வரை நீங்கள் வண்டி ஓட்டக்கூடாது, இயந்திரங்களில் பணியாற்றக்கூடாது. நீங்கள் இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது மது அருந்தினால், அது உங்களுக்கு மிகுந்த தூக்கக் கலக்கத்தை அளிக்கலாம். அதனால், மது அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது.34
(நிக்கோடின் அல்லது மது போன்ற) மற்ற மருந்துகள் அல்லது போதை மருந்துகளைப்போலின்றி, நீங்கள் ஆன்ட்டி-டிப்ரசன்ட்களுக்கென ஏங்கமாட்டீர்கள், அல்லது, அதே தாக்கத்தைப் பெற இதை மேலும் கூடுதலாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்று உணரமாட்டீர்கள்.1
நான் எவ்வளவு நாள் ஆன்ட்டி-டிப்ரசன்ட் எடுத்துக்கொள்ளவேண்டும்?
முதலில், மருத்துவம் வேலை செய்கிறதா என்பதை உறுதிப்படுத்துவதற்கு உங்கள் மருத்துவர் உங்களைத் தொடர்ந்து பார்க்கவேண்டும் (முதல் 2 வாரங்களுக்குப்பிறகு, அதன்பிறகு, முதல் 3 மாதங்களில் 2-4 வாரங்களுக்கிடையில், அதன்பிறகு, இன்னும் கூடுதலான கால இடைவெளியில்).1
உங்களுக்குத் தற்கொலை எண்ணங்கள் வருகின்றன என்றால், அல்லது, உங்கள் வயது 30ஐவிடக் குறைவு என்றால், உங்கள் மருத்துவர் உங்களை இன்னும் அடிக்கடி (பொதுவாக, வாரந்தோறும்) பார்க்க விரும்பலாம். இதற்குக் காரணம், சில ஆன்ட்டி-டிப்ரசன்ட்கள் தொடக்கத்தில் தற்கொலை எண்ணங்களை மிகுதியாக்கலாம், குறிப்பாக, நீங்கள் இளைய வயதினராக இருந்தால்.1
ஆன்ட்டி-டிப்ரசன்ட்களை எடுத்துக்கொள்வது உங்களுக்கு உதவுகிறது என்றால், நீங்கள் குறைந்தது 6 மாதங்களுக்கு அவற்றை எடுத்துக்கொள்ளவேண்டும். அதனிடையில் நீங்கள் இன்னும் நன்றாக உணர்ந்தாலும், மருந்தை விடாமல் தொடரவேண்டும். உங்களுக்கு மீண்டும் மனச்சோர்வு வருகிற வாய்ப்பைக் குறைப்பதற்கு இது உதவலாம்.1
இதற்குமுன் உங்களுக்கு மனச்சோர்வு வந்திருந்தால், நீங்கள் இவற்றை இன்னும் கூடுதலான நாட்களுக்கு எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கலாம். நீங்கள் இவற்றை எடுத்துக்கொள்வதை எப்போது நிறுத்தலாம், அதைப் பாதுகாப்பாகச் செய்வது எப்படி என்று உங்கள் மருத்துவர் உங்களுக்கு அறிவுறுத்துவார்.
நீங்கள் ஆன்ட்டி-டிப்ரசன்ட் எடுத்துக்கொள்வதைத் திடீரென்று நிறுத்தினால், உங்களுக்குப் பிடுங்கப்பட்ட உணர்வின் அறிகுறிகள் வரக்கூடும். இவற்றுக்குச் சில எடுத்துக்காட்டுகள்: தூங்குவதில் பிரச்சனைகள், பதற்றம், மயக்கம் அல்லது வயிற்று வலி.1
நீங்கள் எடுத்துக்கொள்ளும் ஆன்ட்டி-டிப்ரசன்ட் வேலை செய்யவில்லை என்று நீங்கள் நினைத்தால் (அவற்றை எடுத்துக்கொள்ளத் தொடங்கிச் சுமார் 3 முதல் 4 வாரங்களுக்குப்பிறகு), உங்கள் மருத்துவரிடம் அதைப்பற்றிப் பேசுங்கள். அவர் உங்கள் மருந்தளவை மாற்றலாம், அல்லது, இன்னொரு வகை ஆன்ட்டி-டிப்ரசன்ட் அல்லது மருந்தை உங்களுக்கு வழங்கலாம்.1
மேலும் உதவி பெறுதல் (தீவிர மனச்சோர்வு)
மனச்சோர்வு கொண்ட பெரும்பாலான மக்கள் தங்களுக்குத் தேவையான உதவியைத் தங்கள் GPயிடமிருந்து பெறுகிறார்கள். ஒருவேளை, உங்கள் GP வழியாக மருத்துவ உதவி பெற்றபிறகும் உங்கள் மனச்சோர்வு மேம்படவில்லை என்றால், உங்களுக்குச் சிறப்பு வல்லுநருடைய உதவி தேவைப்பட்டால், நீங்கள் ஒரு சிறப்பு வல்லுநர்களைக் கொண்ட மன நலச் சேவையிடம் அல்லது குழுவிடம் அனுப்பப்படலாம்.1
அந்த மன நலத் தொழில்வல்லுநர் உங்களுடைய பொதுவான பின்னணியைப்பற்றியும், இதற்குமுன் உங்களுக்கு வந்திருக்கக்கூடிய எந்த ஒரு தீவிர நோய் அல்லது உணர்வுப் பிரச்சனையைப்பற்றியும் தெரிந்துகொள்ள விரும்புவார்.
சமீபத்தில் உங்கள் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதுபற்றியும், மனச்சோர்வு எப்படி உருவாகியுள்ளது என்பதுபற்றியும், நீங்கள் ஏற்கெனவே அதற்கு ஏதேனும் மருத்துவ உதவி பெற்றீர்களா என்பதுபற்றியும் அவர் உங்களைக் கேட்பார்.
சில நேரங்களில், இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் பதில் சொல்வது சிரமமாக இருக்கலாம். ஆனால், நீங்கள் கொடுக்கிற தகவல்கள் நீங்கள் யார் என்பதை மருத்துவர் புரிந்துகொள்ளவும், உங்களுக்கான நல்ல தெரிவுகளைப்பற்றிச் சிந்திக்கவும் உதவும்.
உங்கள் மனச்சோர்வு தீவிரமாக இருந்தால், அல்லது, அதற்குச் சிறப்பு வல்லுநர் மருத்துவம் தேவைப்பட்டால், நீங்கள் மருத்துவம் பெறுவதற்கு மருத்துவமனைக்கு வரவேண்டியிருக்கலாம். உங்களுக்கு உதவுகின்ற மருத்துவம், ஆதரவை நீங்கள் பெறுகிறீர்கள் என்பதை உங்கள் பராமரிப்புக் குழு உறுதிசெய்யும்.
எலக்ட்ரோகன்வல்சிவ் மருத்துவம் (ECT)
எலக்ட்ரோகன்வல்சிவ் மருத்துவம் (சுருக்கமாக, ECT) என்பது இந்தச் சூழ்நிலைகளில் பயன்படுத்தப்படும் மருத்துவமாகும்:
- தீவிர மனச்சோர்வு; அதைக் கொண்டிருக்கும் நபருடைய உயிருக்கு ஆபத்து; அவருக்கு உடனடி மருத்துவம் தேவை
- நடுத்தர அல்லது தீவிர மனச்சோர்வு; வேறு எந்த மருத்துவமும் அதைச் சரி செய்ய உதவவில்லை.1
ECT என்பது, மூளையின் வழியாக மின் துடிப்பு ஒன்றை அனுப்புவதாகும். அதனால், இது எப்போதும் மருத்துவமனையில் பொது மயக்க மருந்தின்கீழ் செய்யப்படுகிறது. சிலருக்கு ECTக்குப்பின் தாற்காலிக நினைவுப் பிரச்சனைகள் இருக்கலாம்.
மாற்றுச் சிகிச்சைகள்
St. John's Wort என்பது நல உணவுக் கடைகள் மற்றும் மருந்துக்கடைகளில் கிடைக்கிற மூலிகை மருந்தாகும். சிலர் இதை மனச்சோர்வுக்கான மருத்துவமாகப் பயன்படுத்துகிறார்கள். இது பொதுவாக மருத்துவர்களால் வழங்கப்படுவதில்லை அல்லது பரிந்துரைக்கப்படுவதில்லை. ஏனெனில்:
- மனச்சோர்வுக்கான மருந்தளவு தெளிவாக இல்லை
- வெவ்வேறு வகை மருந்துகளில் வெவ்வேறு உட்பொருட்கள் இருக்கலாம்
- இதை மற்ற மருந்துகளுடன் (குறிப்பாக, கருத்தடை மாத்திரை, உறைதலைத் தடுக்கும் மருந்துகள், வலிப்புக்கு எதிரான மருந்துகள் போன்றவற்றுடன்) எடுத்துக்கொண்டால் தீவிரப் பிரச்சனைகள் வரலாம்.1
இதுபற்றி உங்களுக்குக் கூடுதல் அறிவுரை தேவைப்பட்டால், நீங்கள் உங்களுடைய GP அல்லது மருந்தாளுநருடன் பேசவேண்உம்.
மனச்சோர்வில் இருக்கும் ஒருவருக்கு நான் எப்படி உதவலாம்?
- கேளுங்கள். இது எளிது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், உண்மையில் இது கடினமானது. நீங்கள் ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பக் கேட்கவேண்டியிருக்கலாம். பொதுவாக, அறிவுரை கேட்கப்பட்டாலன்றி அதை வழங்காமலிருப்பது மிகச் சிறந்தது. ஒருவேளை, ஒரு கேள்விக்கான பதில் உங்களுக்கு மிகத் தெளிவாகத் தோன்றினாலும் பரவாயில்லை. உங்களிடம் அவர் அந்தக் கேள்வியைக் கேட்காதவரையில் அந்தப் பதிலைச் சொல்லாதீர்கள். மனச்சோர்வானது ஒரு குறிப்பிட்ட பிரச்சனையால் வந்திருக்கிறது என்றால், அதற்கு ஒரு தீர்வு காண்பதற்கு உங்களால் உதவ இயலலாம். அல்லது, குறைந்தபட்சம் அந்தச் சிரமத்தைக் கையாள்வதற்கான ஒரு வழியைக் கண்டறிவதற்கு உங்களால் உதவ இயலலாம்.
- அவர்களுடன் நேரம் செலவிடுங்கள். மனச்சோர்வில் இருக்கும் ஒருவருடன் நேரம் செலவிடுவதுகூட அவருக்கு நல்ல உதவிதான். நீங்கள் அவர்களுக்கென இருக்கிறீர்கள் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்தினால், அவர்கள் பேசுவதற்கு ஊக்கம் பெறலாம். அவர்கள் மற்ற விஷயங்களைத் தொடர்ந்து செய்து இன்னும் நன்றாக உணர்வதற்கு அது உதவலாம்.
- அவர்களுக்கு உறுதியளியுங்கள். மனச்சோர்வில் இருக்கிற ஒருவர் தான் எப்போதாவது குணமாவோமா என்று திகைக்கக்கூடும், தன்னால் நலம் பெற இயலும் என்பதை நம்ப இயலாமலிருக்கக்கூடும். அவர்கள் குணமடைவார்கள் என்பதை நீங்கள் அவர்களுக்கு எடுத்துச்சொல்லி உறுதியளிக்கலாம். ஆனால், நீங்கள் இதைத் திரும்பத்திரும்பப் பலமுறை சொல்லவேண்டியிருக்கலாம்.
- அவர்களுடைய தனிப்பட்ட பராமரிப்பில் உதவுங்கள். அவர்கள் போதுமான உணவை வாங்குகிறார்களா, முறையாகச் சாப்பிடுகிறார்களா, அவர்களுடைய உணவில் பழங்கள், காய்கறிகள் நல்ல அளவில் உள்ளனவா என்பதையெல்லாம் உறுதிப்படுத்துங்கள். அவர்கள் வெளியில் சென்று உடற்பயிற்சியில் ஈடுபடவோ மற்ற மகிழ்ச்சியான செயல்பாடுகளில் ஈடுபடவோ நீங்கள் அவர்களுக்கு உதவலாம். அவர்கள் தங்களுடைய உணர்வுகளைச் சமாளிப்பதற்கு மது அல்லது போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதைவிட இது மிகச் சிறந்த மாற்றாக இருக்கும்.
- அவர்களுடைய சொற்களைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களுடைய நிலை மோசமாகிறது, அவர்கள் வாழ விரும்பவில்லை என்று பேசத் தொடங்குகிறார்கள், அல்லது, தங்களைத் தாங்களே காயப்படுத்திக்கொள்வதுபற்றிக் கோடிட்டுக் காண்பிக்கிறார்கள் என்றால், அவர்களுடைய சொற்களைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளுங்கள். இதை அவர்கள் தங்களுடைய மருத்துவரிடம் சொல்லவேண்டும் என்று வலியுறுத்துங்கள், அவர்கள் அவ்வாறு சொல்கிறார்களா என்று உறுதிப்படுத்துங்கள்.
- உதவியை ஏற்றுக்கொள்ளும்படி அவர்களை ஊக்கப்படுத்துங்கள். அவர்கள் தங்கள் மருத்துவரைப் பார்க்கவேண்டும், தங்கள் மருந்துகளை எடுத்துக்கொள்ளவேண்டும், அல்லது, தங்களுக்குப் பேச்சு மருத்துவம் அல்லது அறிவுறுத்தல் அளிக்கிற வல்லுநரிடம் பேசவேண்டும் என்று ஊக்கப்படுத்துங்கள். அவர்களுக்குத் தங்களுடைய மருத்துவத்தைப்பற்றிக் கவலைகள் இருந்தால், அதைப்பற்றி அவர்களுடைய மருத்துவரிடம் பேசும்படி அவர்களை ஊக்கப்படுத்துங்கள்.
- உங்களைக் கவனித்துக் கொள்ளுங்கள். மனச்சோர்வை உணர்கிற ஒருவருக்கு ஆதரவளிப்பது உணர்வுகளை வடியச்செய்கிற செயலாக இருக்கலாம். அதனால், கண்டிப்பாக உங்களுடைய சொந்த மன நலன் மற்றும் நலத்தை நன்கு கவனித்துக்கொள்ளுங்கள்.
உங்களுக்குத் தெரிந்த யாராவது தற்கொலை எண்ணத்துடன் இருக்கலாம் என்று உங்களுக்குக் கவலை ஏற்பட்டால்
மனச்சோர்வு கொண்ட மக்களில் சிறு சதவிகிதத்தினர் தற்கொலைக்கு முயலலாம் அல்லது தற்கொலை செய்துகொள்ளலாம்.35 36
யாராவது ஒருவர் தற்கொலையைப்பற்றி எண்ணுகிறார் என்று உங்களுக்குக் கவலை ஏற்பட்டால், அவர்களிடம் தற்கொலை எண்ணங்களைப்பற்றி, உணர்வுகளைப்பற்றிப் பேசுவதும் அவர்களுடைய சொற்களைத் தீவிரமாக எடுத்துக்கொள்வதும் முக்கியமாகும்.
ஒருவருக்குத் தற்கொலை உணர்வு வருகிறதா என்று கேட்பது அவர்களுடைய மனத்தில் அந்த எண்ணத்தை விதைக்காது, அல்லது, அவர்கள் தங்கள் எண்ணப்படி நடப்பதை இன்னும் உறுதியாக்காது.37 38
அதன்பிறகும் ஒருவரைப்பற்றி உங்களுக்குக் கவலையாக இருந்தால், நீங்கள் கீழுள்ள சேவைகளில் ஒன்றைத் தொடர்புகொண்டு மேலும் ஆதரவு மற்றும் அறிவுறுத்தலைப் பெறலாம்.
'தி ஜீரோ சூசைட் அல்லயன்ஸ்' அமைப்பு தற்கொலை விழிப்புணர்வு மற்றும் அதைத் தடுத்தல்பற்றி இலவச இணையப் பயிற்சியை வழங்குகிறது. ஒருவர் தற்கொலை எண்ணத்தில் இருக்கிறாரோ என்று கவலை கொள்கிற, அவருக்கு உதவ விரும்புகிற மக்களுக்கான தொடக்கப் பயிற்சியாக இது அமைகிறது.
தற்கொலை எண்ணங்களை அகற்றுவதற்கான உதவி பெறுதல்
உங்களுக்கு ஏதேனும் உடனடி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு உதவக்கூடிய சேவைகள் இவை:
UK முழுவதும்
- Samaritans அமைப்பை 116 123 (இலவசத் தொலைபேசி) என்ற எண்ணில் அழையுங்கள், jo@samaritans.org என்ற மின்னஞ்சலில் அவர்களுக்கு எழுதுங்கள் அல்லது Samaritans இணையத் தளத்துக்கு வாருங்கள்
- NHS 111 (இலவசத் தொலைபேசி) அமைப்பை அழையுங்கள், அல்லது, NHS இணையப் பக்கத்தில் இந்தப் பகுதிக்கு வாருங்கள்: மன நலத்துக்கான அவசர உதவியை எங்கு பெறலாம்
- உங்கள் GPயைத் தொடர்புகொண்டு ஓர் அவசரச் சந்திப்பு அனுமதி பெறுங்கள் (இதைத் தொலைபேசி வழியாக அல்லது வீடியோ மூலம் செய்யலாம்)
- உங்கள் உள்ளூர் மன நல நெருக்கடிக் குழுவைத் தொடர்புகொள்ளுங்கள் (அவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், NHS 111 உங்களுக்கு உதவலாம்)
- மைன்ட் (Mind) அமைப்பின் எனக்கு அவசர உதவி தேவை என்ற இணையப் பக்கத்தின் வழியாக இணையத்தில் உதவி பெறுங்கள்
வேல்ஸ்
- ‘C.A.L.L’ (வேல்ஸ்) என்ற வெல்ஷ் அரசு மன நல அறிவுரை வசதிக்கு வாருங்கள், அல்லது, 0800 132 737 (இலவசத் தொலைபேசி) என்ற எண்ணை அழையுங்கள்
ஸ்காட்லாந்து
- Breathing Space (ஸ்காட்லாந்து) என்ற வசதிக்கு வாருங்கள் அல்லது 0800 83 85 87 (இலவசத் தொலைபேசி) என்ற எண்ணை அழையுங்கள்
வடக்கு அயர்லாந்து
- Lifeline என்ற வசதிக்கு வாருங்கள், அல்லது 0808 808 8000 (இலவசத் தொலைபேசி) என்ற எண்ணை அழையுங்கள்
இந்தக் கணத்தில் உங்களால் உங்களைப் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்ள இயலாது என்று உங்களுக்குத் தோன்றினால், மற்ற ஆதரவுகள் உங்களுக்கு உதவப் போதாவிட்டால், 999ஐ அழையுங்கள் அல்லது உங்களுக்கு மிக அருகில் உள்ள மருத்துவமனையின் A&E பிரிவுக்குச் செல்லுங்கள் (இது சில நேரங்களில் நெருக்கடிப் பிரிவு என்றும் அழைக்கப்படுகிறது). அல்லது, உங்கள் சார்பாக இன்னொருவர் 999ஐ அழைக்கவேண்டும் என்றோ உங்களை A&Eக்கு அழைத்துச்செல்லவேண்டும் என்றோ நீங்கள் கேட்கலாம்.
கூடுதல் உதவி
குழந்தைப் பிறப்புக்குப் பிந்தைய நோய்க்கான அமைப்பு (APNI): தாய்மார்களுக்குக் குழந்தைப் பிறப்புக்குப்பின் வரக்கூடிய மனச்சோர்வுக்கு APNI ஆதரவளிக்கிறது. இந்த நிலையைப்பற்றிய பொது விழிப்புணர்வை மிகுதியாக்குவதும், அதற்கான காரணம் மற்றும் இயல்புபற்றிய ஆராய்ச்சியை ஊக்குவிப்பதும் இந்த அமைப்பின் நோக்கங்களாகும். உதவித் தொலைபேசி எண்: 0207 386 0868 (காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை, திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமைவரை).
கருப்பின, ஆப்பிரிக்க மற்றும் ஆசிய மருத்துவ வலைப்பின்னல் (BAATN): UKன் மிகப் பெரிய சுதந்தர அமைப்பாகிய BAATN, கருப்பின, ஆப்பிரிக்க, தெற்கு ஆசிய மற்றும் கரிபிய மக்களுக்கு முறையான உளவியல் சேவைகள் கிடைப்பதில் உள்ள சமநிலையின்மையைச் சரிசெய்யும் இலக்குடன் இயங்கிவருகிறது. இந்த அமைப்பு மன நலன்பற்றிய தகவல்கள், மக்கள் தங்களுக்கு மருத்துவம் வழங்கக்கூடிய ஒருவரைக் கண்டறிவதற்கான பட்டியல், நிகழ்வுகள், பயிற்சிகள், மற்ற வளங்களை வழங்குகிறது. மின்னஞ்சல்: connect@baatn.org.uk
CALM (துன்பத்துடன் வாழ்வதற்கு எதிரான பரப்புரை): நாடு முழுவதும் நடைபெறும் இந்தப் பரப்புரை இளம் ஆண்களுக்கிடையில் மனச்சோர்வு மற்றும் தற்கொலையை எதிர்த்துப் போராடுவதில் கவனம் செலுத்துகிறது. ரகசிய உதவித் தொலைபேசி எண்: 0800 58 58 58 (மாலை 5 மணிமுதல் நள்ளிரவுவரை, வாரத்தில் 7 நாட்களும்).
டிப்ரஷன் UK (Depression UK): மனச்சோர்வு கொண்ட மக்களுக்கான நாடு தழுவிய இணை ஆதரவுக் குழு இது. மின்னஞ்சல்: info@depressionuk.org
மென்'ஸ் ஹெல்த் ஃபாரம் (Men’s Health Forum): இந்தத் தொண்டு அமைப்பு ஆராய்ச்சி, ஆண்களுடைய நலப் பிரச்சனைகளைப்பற்றிய விழிப்புணர்வை உண்டாக்குதல் மற்றும் நலத் தகவல் மற்றும் அறிவுரையை வழங்குதல் போன்றவற்றின் வழியாக இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்தில் ஆண்களுடைய நலனை ஆதரிக்கிறது. தொலைபேசி எண்: 020 7922 7908.
மென்டல் ஹெல்த் ஃபாரம் (Mental Health Forum): இந்த இணையச் சமூகத்தில் மக்கள் தங்களைப்போன்ற அனுபவம் கொண்ட மக்களிடமிருந்து ஒருவருக்கொருவர் ஆதரவு பெறலாம்.
மைன்ட் (Mind): இந்த மன நலத் தொண்டு நிறுவனம் மன நலப் பிரச்சனைகளைக் கொண்டோருக்கு அறிவுரை, ஆதரவை வழங்குகிறது, உள்ளூர் இணை ஆதரவுக் குழுக்களைப்பற்றிய தகவல்களையும் வழங்குகிறது. உதவித் தொலைபேசி எண்: 0300 123 3393 (காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை, திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமைவரை). இன்னொருவரை ஆதரிக்கும் மக்கள் அந்த நிலைமையை எப்படிச் சமாளிக்கலாம் என்பதுபற்றிய தகவல்களையும் வழங்குகிறது. லோக்கல் மைன்ட்ஸ் அமைப்பு நீங்கள் வசிக்கும் இடத்துக்கு அருகில் மன நலச் சேவை ஒன்றைக் கண்டறிய உங்களுக்கு உதவலாம்.
மைன்ட்அவுட் (MindOut): பெண்மீது நாட்டம் கொண்ட பெண்கள், ஆண்மீது நாட்டம் கொண்ட ஆண்கள், இருபாலினத்தவர்மீதும் நாட்டம் கொண்டவர்கள், திருநபர்கள் மற்றும் மாறுபட்ட விருப்பம் கொண்ட மக்களால் (LGBTQ) அவ்வகை மக்களுக்கென நடத்தப்படுகிற மன நலச் சேவை இது. இவர்கள் அறிவுரை, தகவல்கள், இணைய ஆதரவு, அறிவுறுத்தல், இணை ஆதரவு மற்றும் குரல்கொடுத்தலை வழங்குகிறார்கள். தொலைபேசி எண்: 01273 234 839 மின்னஞ்சல்: info@mindout.org.uk
NHS: மன நலச் சேவைகளை எப்படி அணுகுவது என்பதுபற்றிய தகவல்கள்
பாபிரஸ் ஹோப்லைன் UK (Papyrus Hopeline UK): தொழில்முறை வல்லுநர்கள் பணியாற்றும் இந்த உதவித் தொலைபேசி இணைப்பு, 35 வயதுக்குக் குறைவான, தற்கொலை எண்ணம் கொண்ட, அல்லது, தற்கொலை எண்ணம் கொண்ட இன்னொருவரைப்பற்றிக் கவலைப்படுகிற மக்களுக்கு ஆதரவு, எதார்த்த அறிவுரை மற்றும் தகவல்களை வழங்குகிறது. ஹோப்லைன்: 0800 068 41 41.
ரீடிங் வெல் ஏஜென்சி (Reading Well Agency): புக்ஸ் ஆன் பிரிஸ்கிரிப்ஷன் (Books on Prescription): மக்கள் தங்களுக்குத் தானே உதவி பெறுகிற நூல்களைப் படிப்பதன்மூலம் தங்கள் நலத்தைத் தாங்களே மேம்படுத்திக்கொள்வதற்கு உதவுகின்ற திட்டம் இது. உளவியல் மருத்துவர்களுக்கான அரசக் கல்லூரி உள்ளிட்ட நலத் தொழில்வல்லுநர்கள் இதை வலியுறுத்தியுள்ளார்கள். பொது நூலகங்கள் இந்தத் திட்டத்தை ஆதரிக்கின்றன.
ரிலேட் (Relate): உறவுகளைப்பற்றிய ஆதரவை வழங்கும் UKயின் மிகப் பெரிய சேவை வழங்குநர். இங்கு பலவிதமான அறிவுறுத்தல் சேவைகள் வழங்கப்படுகின்றன. விசாரணைகள்: 0300 003 0396.
சமாரிடன்ஸ் (Samaritans): UK மற்றும் அயர்லாந்துக் குடியரசை அடிப்படையாகக் கொண்ட நாடு தழுவிய தொண்டு நிறுவனம் இது, தற்கொலை எண்ணம் கொண்ட அல்லது துன்பத்தில் உள்ள எந்த ஒரு நபருக்கும் ரகசியமான உணர்வு ஆதரவை வழங்குகிறது. உதவித் தொலைபேசி எண்: 116 123. மின்னஞ்சல்: jo@samaritans.org
சேன்லைன் (SaneLine): நாடு தழுவிய, வழக்கமான நேரங்களுக்குப்பிறகு செயல்படுகிற தொலைபேசி உதவி இணைப்பை வழங்குகிற இந்த அமைப்பு, மன நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணர்வு ஆதரவு, தகவல்களை வழங்குகிறது. உதவித் தொலைபேசி எண்: 0300 304 700 (மாலை 4.30 மணிமுதல் இரவு 10.30 மணிவரை, நாள்தோறும்). மின்னஞ்சல்: support@sane.org.uk
ஸ்டோன்வால் (Stonewall): LGBTQ+ சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தகவல்கள், ஆதரவை வழங்குகிறது. சேவைகள் மற்றும் உள்ளூர்க் குழுக்களைப்பற்றிய தகவல்களையும் வழங்குகிறது. இலவசத் தொலைபேசி: 0800 050 2020 (திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமைவரை 9:30 முதல் 4:30 வரை திறந்திருக்கும்) மின்னஞ்சல்: info@stonewall.org.uk
சுவிட்ச்போர்ட் (Switchboard): LGBTQ+ சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கான உதவி இணைப்பு இது. தங்களுடைய பாலியல் நாட்டம் மற்றும்/அல்லது பாலின அடையாளம் தொடர்பான, தங்களுடைய மன நலன் உள்ளிட்ட பிரச்சனைகளைப்பற்றீ விவாதிக்க விரும்பும் மக்களுக்கான தகவல்கள், ஆதரவு மற்றும் பரிந்துரைச் சேவையை இது வழங்குகிறது. இவர்கள் இணையம் வழியிலான அரட்டைச் சேவையையும், தொலைபேசி இணைப்பையும் வழங்குகிறார்கள்: 0300 330 0360 (காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரை, நாள்தோறும்) மின்னஞ்சல்: chris@switchboard.lgbt
யங் மைன்ட்ஸ் (Young Minds): இந்த நாடு தழுவிய தொண்டு அமைப்பு, குழந்தைகள் மற்றும் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுடைய மன நலனை மேம்படுத்துவதற்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ளது. பெற்றோருக்கான உதவித் தொலைபேசி எண்: 0808 802 5544 (காலை 9.30 மணிமுதல் மாலை 4 மணிவரை, திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமைவரை).
ஜீரோ சூசைட் அல்லயன்ஸ் (Zero Suicide Alliance): தற்கொலைபற்றிய விழிப்புணர்வு, அதைத் தடுத்தல் ஆகியவை தொடர்பான இலவச இணையப் பயிற்சியை வழங்குகிறது. தங்களுக்குத் தெரிந்த யாரோ தற்கொலை எண்ணத்தில் இருக்கிறார்கள் என்று எண்ணிக் கவலைப்படக்கூடிய மக்கள் அவர்களுக்கு ஆதரவு வழங்க இந்தப் பயிற்சிகள் உதவுகின்றன.
ஒப்புகைகள்
RCPsych பொது ஊடாடல் ஆசிரியர் வாரியம், மன நலனுக்கான தேசிய உடனுழைத்தல் மையத்தால் தயாரிக்கப்பட்டது.
இந்த வரிசையின் ஆசிரியர்: டாக்டர் ஃபில் டிம்ஸ்
இந்த வரிசையின் மேலாளர்: தாமஸ் கென்னடி
© அக்டோபர் 2020 உளவியல் மருத்துவர்களுக்கான அரசக் கல்லூரி
This translation was produced by CLEAR Global (Nov 2023)