மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT)

Electroconvulsive therapy (ECT)

Below is a Tamil translation of our information resource on electroconvulsive therapy (ECT). You can also view our other Tamil translations.

இந்தத் தகவல் நூல் மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) செய்து கொள்ளலாமா என்று யோசிக்கும் எவருக்கும், அவர்களுடைய குடும்பங்கள் அல்லது நண்பர்களுக்குமானவை.

மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) செய்து கொள்ளலாமா வேண்டாமா என்பது குறித்து முடிவெடுக்கும் போது, ​​நீங்கள் முழுமையாகத் தகவல் அறிந்திருப்பதை நீங்களும் உங்கள் மருத்துவர்களும் உறுதி செய்ய வேண்டும். உங்கள் மருத்துவர் இதைப் பற்றி உங்களிடம் பேசுவார். இந்தத் தகவல் நூலில் பின்வரும் தகவல்களை வழங்குவதன் மூலம் இந்த முடிவை எடுப்பதில் உங்களுக்கு உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்:

  • மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) என்றால் என்ன, அது ஏன் பயன்படுத்தப்படுகிறது
  • மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) சிகிச்சையில் என்னென்ன அடங்கும்
  • மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சையின் (ECT) நன்மைகள்
  • மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சையின் (ECT) அபாயங்கள் மற்றும் சாத்தியமான பக்க விளைவுகள்
  • நீங்கள் சிகிச்சை பெறாவிட்டால் என்ன நடக்கும்
  • மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) சிகிச்சை பற்றி முடிவெடுப்பது
  • மேலும் தகவல்களை எங்கே கண்டுபிடிப்பது.

மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) என்றால் என்ன, அது ஏன் பயன்படுத்தப்படுகிறது?

சில வகையான கடுமையான மன நல நிலைகளுக்கு மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) ஒரு சிறந்த சிகிச்சையாகும். உளவியல் சிகிச்சை அல்லது மருந்து வழங்கல் போன்ற மற்ற சிகிச்சைத் தேர்வுகள் வெற்றி தராதபோது, அல்லது, மிகவும் நலக் குறைவுள்ள ஒருவருக்கு அவசரச் சிகிச்சை தேவைப்படும்போது மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சையைக் (ECT) கருத்தில் கொள்ளலாம்.

மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) ஒரு சிகிச்சைத் தொடராக வழங்கப்படுகிறது, பொதுவாக 3–8 வாரங்களுக்கு வாரத்திற்கு இரண்டு முறை. உங்களுக்கு மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) வழங்கப்பட்டால், அது பொது உணர்விழப்பு மருந்தின் கீழ் நடைபெறும். இதன் பொருள், அது நடக்கும்போது நீங்கள் தூங்கிக் கொண்டிருப்பீர்கள்.

நீங்கள் தூங்கும்போது, ​​உங்கள் மூளை குறுகிய மின் துடிப்புகளால் தூண்டப்படும். இது இரண்டு நிமிடங்களுக்கும் குறைவான நேரம் நீடிக்கும் ஒரு வலிப்புத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உணர்விழப்பு மருந்தோடு, தசைத் தளர்த்தியும் உங்களுக்கு வழங்கப்படும், இது வலிப்புத் தாக்கத்தின்போது உங்கள் உடல் அசைவுகளைக் குறைக்கும்.

மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சையை (ECT) எந்தெந்தச் சூழ்நிலைகளுக்குப் பயன்படுத்தலாம்?

மற்ற சிகிச்சைகள் பலனளிக்காத கடுமையான மனச்சோர்வுக்கு மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது காடடோனியாவுக்குச் சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது; இது ஓர் அசாதாரண நிலை; இதில் ஒரு நோயாளி பேசுவதையோ, சாப்பிடுவதையோ அசைவதையோ நிறுத்தலாம். எப்போதாவது, இருமுனைக் குறைபாட்டின் பித்து நிலைக் கட்டத்தில் உள்ளவர்களுக்கு அல்லது பித்து நிலை மற்றும் மனச்சோர்வு இரண்டின் கலவையான அறிகுறிகளைக் கொண்டவர்களுக்குச் சிகிச்சையளிக்க இது பயன்படுத்தப்படுகிறது.

பதற்றக் குறைபாடுகள் அல்லது பெரும்பாலான பிற மன நல நிலைமைகளுக்குச் சிகிச்சையளிக்க மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) பரிந்துரைக்கப்படவில்லை. நடுத்தர காலத்தில், மருந்துகளால் குணமடையாத ஸ்கிசோஃப்ரினியாவின் அறிகுறிகளுக்கு மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) உதவும். இருப்பினும், தொடர்ச்சியான மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) தேவைப்படும் நீண்டகால நன்மைகள் அவ்வளவு தெளிவாக இல்லை. இந்தக் காரணத்திற்காக, இது இங்கிலாந்தில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை.

உங்கள் மருத்துவர் எப்போது மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சையைப் (ECT) பரிந்துரைக்கலாம்?

உங்கள் நிலை பின்வருமாறு இருந்தால் மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) பொதுவாகப் பரிந்துரைக்கப்படும்:

  • உயிருக்கு ஆபத்தானது; உங்கள் உயிரைக் காப்பாற்ற நீங்கள் விரைவாகக் குணமடைய வேண்டும்
  • உங்களுக்கு மிகுந்த துன்பத்தை ஏற்படுத்துகிறது
  • மருந்து வழங்கல் மற்றும் உளவியல் சிகிச்சை போன்ற பிற சிகிச்சைகள் பதிலளிக்கவில்லை
  • கடந்த காலத்தில் மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சைக்கு (ECT) உங்களுக்கு நன்றாகப் பலனளித்துள்ளது.

மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்?

மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) உள்ளவர்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், பெரும்பாலான மக்கள் தங்கள் அறிகுறிகளில் முன்னேற்றத்தைக் காண்கிறார்கள் என்று தெரிவிக்கின்றனர். 2018-2019 ஆம் ஆண்டில், மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) பெற்றவர்களில் 68% பேர் சிகிச்சையின் முடிவில் "மிகவும் மேம்பட்டார்கள்" அல்லது "மிக மிக மேம்பட்டார்கள்" (மொத்தம் 2,004 சிகிச்சைத் தொடர்களில் 1,361). இவர்களில் சிலரின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான (1%) மக்களின் நிலை மோசமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மனச்சோர்வுக்குச் சிகிச்சை அளித்தல்

மிகக் கடுமையான மனச்சோர்வு நிகழ்வுகளுக்குச் சிகிச்சையளிப்பதில் மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) ஒப்பிடப்பட்ட வேறு எந்தச் சிகிச்சையையும் விட மிகவும் வெற்றிகரமாக உள்ளது என்பதை ஏராளமான சான்றுகள் காட்டுகின்றன. இவற்றில் சில:

  • மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகள்
  • மருந்துப்போலிகள் - புதிய சிகிச்சைகளின் செயல்திறனைச் சோதிக்க உடல் ரீதியான விளைவை ஏற்படுத்தாத ஒரு பொருள் அல்லது செயல்முறை ஒருவருக்குக் கொடுக்கப்படும்போது
  • டிரான்ஸ்க்ரானியல் காந்தத் தூண்டுதல் (rTMS) போன்ற நரம்பியல் பண்பேற்றச் சிகிச்சைகள்.

மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) எடுத்துக்கொண்டவர்களின் தற்கொலைக்கான ஆபத்து, அதை எடுத்துக்கொள்ளாதவர்களைவிடக் குறைவாக உள்ளது.

நலமாக இருத்தல்

மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பவர்கள் மற்ற வகையான சிகிச்சைகளைப் பெறும் அளவுக்குக் குணமடைய மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) உதவும். இது அவர்கள் நீண்ட காலம் நன்றாக இருக்க உதவும்.

கடுமையான மனச்சோர்வு உள்ள, மருந்துகளால் குணமடையாதவர்கள் மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) செய்து கொண்டால் அவர்கள் குணமடைந்து நீண்ட காலம் நன்றாக இருக்க அதிக வாய்ப்புள்ளது என்று ஆராய்ச்சி கூறுகிறது.

மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சைக்குப்பிறகு (ECT) குணமடைபவர்களில் பாதிப் பேர் குறைந்தது ஒரு வருடமாவது நன்றாக இருப்பார்கள். மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) முடிந்தபிறகு இவர்களுக்கு மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகள் அல்லது லித்தியம் போன்ற ஒரு சிகிச்சை அளிக்கப்பட்டால் இது அதிகமாக நிகழ வாய்ப்புள்ளது.

ஒப்பிடுகையில், மனச்சோர்வுக்கு எதிரான இரண்டு வெவ்வேறு மருந்துகளை முயன்றபிறகும் குணமடையாத தீவிர மனச்சோர்வு உள்ளவர்களுக்கு, மனச்சோர்வுக்கு எதிரான மூன்றாவது மருந்து ஒன்று கொடுக்கப்பட்டால், அவர்கள் குணமடைந்து குறைந்தது ஒரு வருடமாவது நன்றாக இருக்க 5% வாய்ப்பு மட்டுமே உள்ளது.

மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) எப்படி வேலை செய்கிறது?

ஒவ்வொரு சிகிச்சைக்குப்பிறகும் மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சையின் (ECT) விளைவுகள் படிப்படியாக அதிகரிக்கும். மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) சில மூளை இரசாயனங்களை வெளியிடுகிறது, இது மனச்சோர்வால் சுருங்கக்கூடிய சில மூளைப் பகுதிகளின் வளர்ச்சியைத் தூண்டுவதாகத் தெரிகிறது.

உணர்ச்சிகளில் ஈடுபடும் மூளையின் பாகங்கள் ஒன்றுக்கொன்று எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதையும் மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) மாற்றுவதாகத் தெரிகிறது. மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி மேலும் புரிந்துகொள்ள உதவும் வகையில் இந்தப் பகுதியில் தொடர்ந்து ஆராய்ச்சி நடந்து வருகிறது.

மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சையில் (ECT) வெவ்வேறு வகைகள் உள்ளனவா?

மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) பல ஆண்டுகளாக மாறி, வளர்ச்சியடைந்துள்ளது. உதாரணமாக, பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவு மற்றும் வடிவம் மாறிவிட்டது. இது பக்க விளைவுகளுக்கான வாய்ப்பைக் குறைத்துள்ளது.

மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) இரண்டு வழிகளில் வழங்கப்படுகிறது: இருதரப்பு மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) மற்றும் ஒருதரப்பு மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT). எந்த வகையான மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) உங்களுக்கு மிகவும் பொருத்தமானது என்பது குறித்து உங்கள் மருத்துவர் உங்களுக்கு மேலும் விளக்குவார், ஆலோசனை வழங்குவார்.

இருதரப்பு மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சையில் (ECT), தூண்டுதல் மின் துடிப்புகள் உங்கள் தலையின் குறுக்கே, உங்கள் நெற்றியின் பக்கங்களில் உள்ள Temples எனப்படும் பகுதிகளுக்கு இடையில் செல்கின்றன. ஒருதரப்பு மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சையில் (ECT), அவை உங்கள் வலப்புற டெம்பிளுக்கும் உங்கள் தலையின் மேற்பகுதிக்கும் இடையில் செல்கின்றன. இருதரப்பு மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) விரைவாக வேலை செய்யக்கூடும், அதே நேரத்தில் ஒருதரப்பு மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) நினைவாற்றலில் குறைவான விளைவைக் கொண்டுள்ளது. பக்க விளைவுகளைப்பற்றிய கூடுதல் தகவல்கள் இந்தத் தகவல் நூலின் பின்பகுதியில் உள்ளன.

குழந்தைகள் அல்லது இளைஞர்களுக்கு மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சையைப் (ECT) பயன்படுத்தலாமா?

11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) பயன்படுத்தப்படுவதில்லை. 11 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சைக்கு (ECT) நன்றாகப் பதிலளிக்கும் மன நல நிலைகள் அரிதாகவே உருவாகின்றன, ஆனால் அவ்வாறு உருவாகும் சிறிய எண்ணிக்கையிலான குழந்தைகளுக்கு மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) உதவியாக இருக்கும். அதை வழங்குவதற்கு முன், ஒரு முறையான, சுதந்தரமான இரண்டாவது கருத்து தேவை.

உங்களுக்கு மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) வழங்கப்படும்போது என்ன நடக்கும்?

மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) மருத்துவமனையில் வழங்கப்படுகிறது, பொதுவாக 'மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சைத் (ECT) தொகுப்பு அறைகள்' எனப்படும் அறைகளின் தொகுப்பில் செய்யப்படுகிறது. எப்போதாவது, இது கிடைக்கவில்லை என்றால் அல்லது உங்களுக்கு குறிப்பிடக்கூடிய உடல் நல நிலைகள் இருந்தால், சிகிச்சையானது அதிக மருத்துவ ஆதரவுடன் வேறொரு மருத்துவமனையில் அல்லது ஓர் அறுவைச் சிகிச்சை அரங்கில் நடைபெறக்கூடும்.

மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) உள்ள சிலர் மருத்துவமனையில் உள்நோயாளிகளாக உள்ளனர், மற்றவர்கள் பகல் நேர நோயாளிகளாக மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) சிகிச்சை பெறுவார்கள். நீங்கள் பகல்நேர நோயாளியாக இருந்தால், பெயரிடப்பட்ட, பொறுப்பான, வயது வந்தவர் ஒருவர் மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) தொகுப்பு அறைகளுக்கு உங்களுடன் வர வேண்டும்.

மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சைத் (ECT) தொகுப்பு அறைகளில் நீங்கள் காத்திருக்க ஓர் அறை, உங்களுக்குச் சிகிச்சை அளிக்க ஓர் அறை மற்றும் நீங்கள் புறப்படுவதற்கு முன்பு சரியாகக் குணமடைய ஓர் அறை இருக்க வேண்டும்.

நீங்கள் அங்கு இருக்கும் எல்லா நேரங்களிலும் தகுதிவாய்ந்த பணியாளர்கள் உங்களைக் கவனித்துக்கொள்வார்கள். சிகிச்சை பெறுவதற்கு முன்பு உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது கவலைகள் இருந்தால் அவர்கள் அவற்றுக்குப் பதிலளித்து உதவுவார்கள். உணர்விழப்பு மருந்திலிருந்து விழித்தெழும் செயல்முறையிலும், சிகிச்சைக்குப் பிறகு உடனடியாகவும் அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.

மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சைக்குத் (ECT) தயாராகுதல்

உங்கள் மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சைத் (ECT) தொடர் தொடங்குவதற்குச் சில நாட்களுக்கு முன்பு, பொது உணர்விழப்பு மருந்து உங்களுக்குப் பாதுகாப்பானதா என்பதை உறுதிப்படுத்த உங்கள் மருத்துவர் சில சோதனைகளை ஏற்பாடு செய்வார். இவற்றில் உங்கள் இதயத் துடிப்புப் பதிவு (ECG) மற்றும் இரத்தப் பரிசோதனைகள் அடங்கலாம்.

மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சைக்குக் (ECT) குறைந்தது 6 மணி நேரத்திற்கு முன்பு நீங்கள் எதையும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது, இருப்பினும் 2 மணி நேரத்திற்கு முன்பு வரை நீங்கள் சிறிதளவு தண்ணீர் குடிக்க அனுமதிக்கப்படலாம். இதன் மூலம் நீங்கள் பாதுகாப்பாக உணர்விழப்பு மருந்தைப் பெறலாம்.

இந்த நேரத்தில் நீங்கள் வழக்கமாக மருந்து எடுத்துக்கொள்வீர்கள் என்றால், நீங்கள் இன்னும் இதைச் செய்ய வேண்டுமா என்பது குறித்து மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சைக் (ECT) குழுவிடம் ஆலோசனை கேளுங்கள்.

உங்கள் மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) நாளில் என்ன நடக்கும்?

  • நீங்கள் ஓர் உள்நோயாளியாக இருந்தால், மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சைத் (ECT) தொகுப்பு அறைக்கு ஒரு பணியாளர் உங்களுடன் வருவார். அவர் உங்கள் நோயைப் பற்றி அறிந்திருப்பார், மேலும், என்ன நடக்கிறது என்பதை அவரால் விளக்க முடியும். பல மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) தொகுப்பு அறைகளில், நீங்கள் சிகிச்சை பெறும்போது உங்கள் குடும்ப உறுப்பினர்கள் தங்குவதற்கான காத்திருப்பு அறைகள் உள்ளன.
  • மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சைப் (ECT) பணியாளர்களில் ஒருவர் உங்களைச் சந்திப்பார், அவர் வழக்கமான உடல் பரிசோதனைகளைச் செய்வார் (ஏற்கனவே அவ்வாறு செய்யவில்லை என்றால்).
  • ஒவ்வொரு சிகிச்சைக்கும் முன்பும் உங்கள் நினைவாற்றல் மற்றும் அது எவ்வளவு நன்றாக இருக்கிறது என்பது குறித்து உங்களிடம் கேட்கப்படும்.
  • நீங்கள் தன்னார்வமாக மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) பெறுகிறீர்கள் என்றால், நீங்கள் இப்போதும் அதைப் பெற விரும்புகிறீர்களா என்று பணியாளர்கள் கேட்பார்கள், உங்களுக்குக் கூடுதல் கேள்விகள் ஏதேனும் உள்ளனவா என்று கேட்பார்கள்.
  • நீங்கள் தயாரானதும், மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சைப் (ECT) பணியாளர்கள் உங்களைச் சிகிச்சைப் பகுதிக்குள் அழைத்துச் செல்வார்கள்.
  • உங்கள் இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம், ஆக்சிஜன் அளவுகள் மற்றும் மூளை அலைகளை அளவிடுவதற்கான கண்காணிப்பு உபகரணங்களைப் பணியாளர்கள் இணைப்பார்கள்.
  • நீங்கள் சுவாசிப்பதற்கான ஆக்சிஜன் ஒரு முகமூடி வழியாக வழங்கப்படும். உணர்விழப்பு வல்லுனர் உங்கள் கையின் பின்புறத்தில் ஓர் ஊசி மூலம் உணர்விழப்பு மருந்தைக் கொடுப்பார்.

நீங்கள் தூங்கும்போது என்ன நடக்கும்?

  • நீங்கள் தூங்கும்போது, ​​உணர்விழப்பு வல்லுனர் உங்களுக்கு ஒரு தசைத் தளர்த்தியைக் கொடுப்பார், மேலும் உங்கள் பற்களைப் பாதுகாக்க ஒரு வாய்க் கவசம் உங்கள் வாயில் போடப்படும்.
  • உங்கள் தலையில் இரண்டு உலோக வட்டுகள் வைக்கப்படும். இருதரப்பு மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சையில் (ECT), இந்த இரண்டு வட்டுகளும் உங்கள் தலையின் இரு பக்கங்களிலும் செல்கின்றன. அதே சமயம் ஒருதரப்பு மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சையில் (ECT) இவை இரண்டும் உங்கள் தலையின் ஒரே பக்கத்தில் செல்கின்றன.
  • மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) இயந்திரம் மூன்று முதல் எட்டு விநாடிகள் வரை சுருக்கமான மின் துடிப்புகளைத் தொடர்ச்சியாக வழங்கும். இதனால், சராசரியாக 40 விநாடிகள் நீடிக்கும் கட்டுப்படுத்தப்பட்ட வலிப்பு உண்டாகும். இது 120 விநாடிகள்வரை நீடிக்கலாம். உங்கள் உடல் விறைத்து, பின்னர் இழுப்பு ஏற்படும், இது பொதுவாக உங்கள் கைகள், கால்கள் மற்றும் முகத்தில் காணப்படும். தசைத் தளர்த்தி உங்கள் உடல் அசைவின் அளவைக் குறைக்கிறது.
  • கொடுக்கப்படும் மின் துடிப்புகளின் அளவு, வலிப்பைத் தூண்டுவதற்குத் தேவையான அளவை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் எதிர்வினை கண்காணிக்கப்படும், மேலும் தேவைக்கேற்ப மருந்தளவு சரிசெய்யப்படும்.

நீங்கள் விழித்தெழுந்ததும் என்ன நடக்கும்?

  • தசைத் தளர்த்தியின் தாக்கம் ஒரு சில நிமிடங்களில் தேய்ந்துவிடும். நீங்கள் விழித்தெழுந்தவுடன், பணியாளர்கள் உங்களை மீட்புப் பகுதிக்கு அழைத்துச் செல்வார்கள். இங்கே, நீங்கள் முழுமையாக விழித்திருக்கும் வரை ஓர் அனுபவம் வாய்ந்த செவிலியர் உங்களைக் கவனித்துக்கொள்வார்.
  • செவிலியர் உங்கள் இரத்த அழுத்தத்தை அளப்பார், நீங்கள் எவ்வளவு விழித்திருக்கிறீர்கள் என்பதைச் சரிபார்க்கச் சில எளிய கேள்விகளைக் கேட்பார். உங்கள் இரத்தத்தில் உள்ள ஆக்சிஜனை அளவிட உங்கள் விரலில் ஒரு சிறிய கண்காணிப்புக் கருவி இருக்கும். நீங்கள் ஆக்சிஜன் முகமூடியுடன் எழுந்திருக்கலாம். முழுமையாக விழித்தெழச் சிறிது நேரம் ஆகலாம். முதலில், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். அரை மணி நேரத்திற்குப் பிறகு, இந்த விளைவுகள் நீங்கியிருக்க வேண்டும்; இதைச் சரிபார்க்க உங்களிடம் சில எளிய கேள்விகள் கேட்கப்படும்.
  • பெரும்பாலான மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சைத் (ECT) தொகுப்பு அறைகளில் ஓர் இரண்டாவது பகுதி உள்ளது, அங்கு நீங்கள் உட்கார்ந்து ஒரு கோப்பைத் தேநீர் அருந்தலாம், அல்லது வேறு ஏதேனும் லேசான சிற்றுண்டியை உண்ணலாம். உங்கள் உடல் நிலை சீராக இருக்கும்போது ​​நீங்கள் மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சைத் (ECT) தொகுப்பு அறையை விட்டு வெளியேறுவீர்கள், மேலும் நீங்கள் அதற்குத் தயாராக இருப்பதாக உணருவீர்கள்.
  • முழுச் செயல்முறையும் முடிவதற்குப் பொதுவாக ஒரு மணி நேரம் ஆகும்.

ஒவ்வொரு சிகிச்சைக்குப் பிறகும் 24 மணிநேரத்திற்குள், நீங்கள் மது அருந்தவோ, எந்தச் சட்ட ஆவணங்களிலும் கையெழுத்திடவோ கூடாது.

24 மணிநேரமும் ஒரு பொறுப்பான பெரியவர் உங்களுடன் இருக்க வேண்டும்.

மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) எப்போதெல்லாம், எத்தனை முறை கொடுக்கப்படுகிறது?

மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) வழக்கமாக வாரத்திற்கு இரண்டு முறை வழங்கப்படுகிறது; ஒவ்வொரு சிகிச்சைக்கும் இடையில் சில நாட்கள் இடைவெளி இருக்கும். நீங்கள் முன்னேற்றத்தைக் கவனிப்பதற்குப் பல அமர்வுகள் தேவைப்படலாம்.

உங்களுக்கு எத்தனைச் சிகிச்சைகள் தேவைப்படும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது. சராசரியாக, ஒரு சிகிச்சைத் தொடரில் நீங்கள் 9 அல்லது 10 சிகிச்சைகளைப் பெறுவீர்கள்; இருப்பினும், இதைவிடக் கூடுதலாகச் சிகிச்சை பெறுவது பொதுவானது.

6 சிகிச்சைகளுக்குப் பிறகும் உங்களுக்கு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றால், மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சையைத் (ECT) தொடரலாமா அல்லது மாற்றலாமா என்று விவாதிக்க உங்கள் சிகிச்சைத் திட்டம் உங்கள் மருத்துவரிடம் மதிப்பாய்வு செய்யப்படும்.

உங்கள் மருத்துவக் குழு உங்கள் முன்னேற்றத்தையும் இருக்கக்கூடிய பக்க விளைவுகளையும் மதிப்பாய்வு செய்யும். வழக்கமாக இது ஒவ்வொரு வாரமும் நடக்கும். உங்கள் நினைவாற்றல் பற்றி உங்களிடம் கேட்கப்படும்; அது அவ்வப்போது பரிசோதிக்கப்படும்.

பொதுவாக நீங்கள் முழுமையாகக் குணமடைந்தவுடன், அல்லது இனி அதை விரும்பவில்லை என்றும், இந்த முடிவைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு ஆரோக்கியமாக இருப்பதாகவும் சொன்னால், மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) நிறுத்தப்படும்.

மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சைத் தொடருக்குப்பிறகு (ECT) என்ன நடக்கும்?

மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) என்பது குணமடைவதன் ஒரு பகுதியாகும். இது மற்ற சிகிச்சைகள் அல்லது ஆதரவு வகைகளைத் தொடங்க அல்லது மறுதொடக்கம் செய்ய உங்களுக்கு உதவும்.

நீங்கள் வழக்கமாக மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சைக்குப்பிறகு (ECT) மருந்துகளைத் தொடர்வீர்கள் அல்லது தொடங்குவீர்கள். இது உங்கள் மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சையிலிருந்து (ECT) நீங்கள் பெற்ற முன்னேற்றங்களைப் பராமரிக்க உதவும்.

சில சமயங்களில், மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதைத் தடுக்க மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) தொடர்ந்து செய்யப்படலாம். குறிப்பாக, இதற்குமுன் உங்களுக்கு மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சைத் (ECT) தொடர் வழங்கப்பட்டு, அதன்பிறகு உங்களுக்கு அதே சிக்கல் திரும்ப வந்திருந்தால் இது செய்யப்படலாம். இது 'தொடர்ச்சி' அல்லது 'பராமரிப்பு' மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) என்று அழைக்கப்படுகிறது; மேலும் இது குறைவாகவே வழங்கப்படுகிறது, எடுத்துக்காட்டாக 2 முதல் 4 வாரங்களுக்கு ஒருமுறை.

அறிவாற்றல் பழகுமுறைச் சிகிச்சை (CBT) மற்றும் ஆலோசனை பெறுதல் போன்ற பேச்சுச் சிகிச்சைகள் நீங்கள் நோய்வாய்ப்பட்டதற்கான காரணங்களைப் புரிந்துகொள்ளவும், நலமாக இருப்பதற்கான வழிகளை வளர்த்துக் கொள்ளவும் உதவும். உங்கள் அன்றாட வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்களும் உதவியாக இருக்கும். இதில் வழக்கமான உடற்பயிற்சி, நன்றாகச் சாப்பிடுதல், வழக்கமான தூக்க முறையை வளர்த்துக் கொள்ளுதல் மற்றும் மனமுழுமை, தியானம் போன்ற நுட்பங்களைப் பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

உங்கள் கடைசிச் சிகிச்சைக்குப் பின் 2 மாதங்களுக்குப் பிறகு, உங்கள் நினைவாற்றல் குறித்து விசாரிக்க மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) மருத்துவமனை அல்லது சிகிச்சையை ஏற்பாடு செய்த மன நல மருத்துவர் உங்களைத் தொடர்புகொள்வார். உங்கள் நினைவாற்றலில் சிக்கல்கள் ஏற்பட்டால், விரிவான சோதனைக்காக ஒரு நரம்பியல் உளவியலாளர் அல்லது நினைவாற்றல் மதிப்பீட்டுச் சேவையைப் பரிந்துரைக்கும்படி நீங்கள் கேட்கலாம்.

மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சையின் (ECT) பக்க விளைவுகள் என்ன?

எந்தவொரு சிகிச்சையையும் போலவே, மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சையும் (ECT) பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

பக்க விளைவுகள் பொதுவாக லேசானவை மற்றும் குறுகிய காலமே இருக்கும்; ஆனால் சில நேரங்களில் அவை மிகவும் கடுமையாகவும் நீண்ட காலம் நீடிக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளவையாகவும் இருக்கலாம்.

நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால், அல்லது, வயதானவராக இருந்தால், அத்துடன், உங்களுக்கு அதிக அளவு தூண்டுதல் துடிப்புகள் தேவைப்பட்டால், பக்க விளைவுகளின் ஆபத்து சற்று அதிகரிக்கிறது.

மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சைத் (ECT) தொடரின் போது பக்க விளைவுகள் ஏற்பட்டால், சிகிச்சையைச் சரிசெய்யலாம்.

குறுகிய காலப் பக்க விளைவுகள்

மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சைக்குப்பிறகு (ECT) உடனடியாக நீங்கள் இவற்றை அனுபவிக்கலாம்:

  • தலைவலிகள்
  • தசைகள் மற்றும்/அல்லது தாடையில் வலி
  • உணர்விழப்பு மருந்தின் விளைவுகள் குறையும்போது சோர்வு
  • குழப்பம், குறிப்பாக, நீங்கள் வயதானவராக இருந்தால் (இது பொதுவாக 30 நிமிடங்களுக்குப் பிறகு மறைந்துவிடும்)
  • வாந்தி அல்லது குமட்டல்.

மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சைக்குப்பிறகு (ECT) நீங்கள் எழுந்திருக்கும்போது ஒரு செவிலியர் உங்களுடன் இருப்பார். அவர்கள் பாராசிட்டமால் போன்ற எளிய வலிக் குறைப்பு மருந்துகளையும் உங்களுக்கு வழங்கலாம்.

40% நோயாளிகளுக்கு மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) அளிக்கும்போது தற்காலிக நினைவாற்றல் பிரச்சினைகள் ஏற்படலாம். உதாரணமாக, இந்த நேரத்தில் அவர்கள் பார்வையாளர்களுடனான உரையாடல்களை மறந்துவிடலாம்.

இருப்பினும், மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) செய்வதற்கு முன்பே, சுமார் ஐந்தில் ஒரு பங்குப் (17%) பேர் ஏற்கனவே தங்கள் நினைவாற்றல் பிரச்சினைகளை ஏற்படுத்தும் அளவுக்கு மோசமாக இருந்ததாகக் கூறுகிறார்கள். மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) நினைவாற்றலில் ஏற்படுத்தும் விளைவுகளை, அது சிகிச்சையளிக்கும் நோய்கள் நினைவாற்றலில் ஏற்படுத்தும் விளைவுகளிலிருந்து பிரித்துப் பார்ப்பது கடினம்.

பெரும்பாலான மக்களில், கடைசிச் சிகிச்சைக்குப் பிறகு இரண்டு மாதங்களுக்குள் நினைவாற்றல் குறைபாடுகள் நீங்கும், மேலும் அவை எந்தப் பிரச்சினைகளையும் அல்லது துன்பத்தையும் ஏற்படுத்தாது.

அனைத்து மருத்துவ நடைமுறைகளும் ஆபத்தைக் கொண்டுள்ளன. உணர்விழப்பு மருந்து கொடுப்பது பாதுகாப்பற்றது என்று உணர்விழப்பு வல்லுனர் கருதினால், நீங்கள் மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) செய்துகொள்ள முடியாது.

மனச்சோர்வினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (CBT) செய்துகொண்டால், அவர்கள் இறக்கும் வாய்ப்பு மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) செய்துகொள்ளாதவர்களைவிடக் குறைவு. இதற்குக் காரணம், மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) மக்கள் குணமடைய உதவுவதாக இருக்கலாம், அல்லது மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) கொடுக்கப்பட்டவர்களுக்கு நெருக்கமான மருத்துவக் கவனிப்பு கிடைப்பதாக இருக்கலாம்.

மிகவும் அரிதாக, மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) நீண்டகால வலிப்புத்தாக்கத்தைத் தூண்டலாம். இதற்கு அங்குள்ள மருத்துவப் பணியாளர்கள் உடனடியாகச் சிகிச்சை அளிப்பார்கள்.

நீண்ட காலப் பக்க விளைவுகள்

நீண்ட காலப் பக்க விளைவுகளின் அளவு சர்ச்சைக்குரியது.

தீவிரமான அறிவியல் ஆராய்ச்சிகள் மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) செய்து கொண்ட நோயாளிகளுக்கு மூளைப் பாதிப்பு ஏற்பட்டதற்கான எந்த ஆதாரத்தையும் கண்டறியவில்லை. மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சைக்குப்பிறகு (ECT) கால்-கை வலிப்பு, பக்கவாதம் அல்லது டிமென்ஷியா ஏற்படும் அபாயம் அதிகரிப்பதில்லை.

மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சையின் (ECT) மிகத் தீவிரமான நீண்ட காலப் பக்க விளைவு என்னவென்றால், உங்கள் கடந்த கால நிகழ்வுகளை நீங்கள் மறந்துவிடக்கூடும். ஒரு சிறிய எண்ணிக்கையிலான நோயாளிகள், மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) பெறுவதற்கு முன்பு தங்கள் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் குறித்து தங்கள் நினைவில் இடைவெளிகள் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். இது மனச்சோர்வின் போது அல்லது அதற்குச் சற்று முன்பு நடந்த நிகழ்வுகளின் நினைவுகளைப் பாதிக்கும். சில நேரங்களில் இந்த நினைவுகள் முழுமையாகவோ பகுதியாகவோ திரும்பும், ஆனால் சில நேரங்களில் இந்த இடைவெளிகள் நிரந்தரமாக இருக்கலாம். சமீபத்திய ஆராய்ச்சி, ஒருதரப்பு மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சையைப் (ECT) பெற்றவர்களில் 7% பேர் மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சைக்குப்பிறகு (ECT) 12 மாதங்கள் கழித்தும் தங்களுக்குத் தொடர்ந்த நினைவாற்றல் இழப்பு இருப்பதாகக் குறிப்பிடுவதாகக் கூறுகிறது.

உங்களுக்கு மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) கொடுக்கப்படாவிட்டால் என்ன நடக்கும்?

மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சையால் (ECT) ஏற்படும் பக்கவிளைவுகளின் அபாயத்தையும், மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) இல்லாமல் இருப்பதற்கான அபாயத்தையும் நீங்களும் உங்கள் மருத்துவரும் சமநிலைப்படுத்த வேண்டும். மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) இல்லாமல் இருப்பது உங்களுக்குப் பின்வருவன ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதைக் குறிக்கலாம்:

  • நீடித்த மற்றும் செயலிழக்கச் செய்யும் மன நல நிலை
  • சாப்பிடாமலோ குடிக்காமலோ இருப்பதால் கடுமையான உடல் நோய் (மற்றும் மரணம் கூட)
  • தற்கொலையால் இறப்பதற்கான கூடுதல் ஆபத்து.

வாகனம் ஓட்டுதல் மற்றும் மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT)

நீங்கள் மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) தேவைப்படும் அளவுக்குக் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தால், நீங்கள் வாகனம் ஓட்டக்கூடாது. மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சைத் (ECT) தொடரின் போது வாகனம் ஓட்டக்கூடாது என்று DVLA அறிவுறுத்துகிறது. நீங்கள் சிகிச்சைத் தொடரை முடித்த பிறகு, மீண்டும் வாகனம் ஓட்டத் தொடங்குவதற்குச் சில நாட்கள் ஆகலாம். உங்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் DVLA இந்த முடிவை எடுக்கும்.

உங்களை நன்றாக வைத்திருக்க உதவும் தொடர்ச்சி அல்லது பராமரிப்பு மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) இருந்தால், நீங்கள் வழக்கமாக வாகனம் ஓட்டுவதைத் தொடரலாம். இருப்பினும், ஒவ்வொரு மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சைக்குப்பிறகும் (ECT) குறைந்தது 48 மணிநேரங்களுக்கு நீங்கள் வாகனம் ஓட்டவோ, மிதிவண்டி ஓட்டவோ, கனரக இயந்திரங்களை இயக்கவோ கூடாது.

மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) பற்றித் தீர்மானித்தல்

மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) செய்து கொள்ளச் சம்மதம் தெரிவித்தல்

மருத்துவம் அல்லது அறுவைச் சிகிச்சையில் உள்ள எந்தவொரு குறிப்பிடக்கூடிய சிகிச்சையையும் போலவே, மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) செய்து கொள்ள உங்கள் சம்மதம் அல்லது அனுமதி கேட்கப்படும். மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT), அதைச் செய்வதற்கான காரணங்கள் மற்றும் சாத்தியமான நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் உங்களுக்கு விளக்கப்படும்.

நீங்கள் தொடர முடிவு செய்தால், கையொப்பமிட உங்களுக்கு ஓர் ஒப்புதல் படிவம் வழங்கப்படும். இது மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) உங்களுக்கு விளக்கப்பட்டது, என்ன நடக்கப் போகிறது என்பதை நீங்கள் புரிந்துகொண்டீர்கள், அதைப் பெறுவதற்கு நீங்கள் உங்கள் ஒப்புதலை அளித்தீர்கள் என்பதற்கான பதிவு. அவசரநிலை இல்லாவிட்டால், இதைப் பற்றிச் சிந்திக்கவும், உங்கள் உறவினர்கள், நண்பர்கள் அல்லது ஆலோசகர்களுடன் விவாதிக்கவும் உங்களுக்குக் குறைந்தது 24 மணிநேரம் வழங்கப்படும்.

எந்த நேரத்திலும், முதல் சிகிச்சைக்கு சற்று முன்பு கூட நீங்கள் உங்கள் ஒப்புதலைத் திரும்பப் பெறலாம். சிகிச்சைக்கு ஒப்புதல் அளிப்பது குறித்த உங்கள் உரிமைகளை விளக்கும் தகவல்கள் உங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சைக்கு (ECT) ஒப்புதல் அளிப்பது பற்றிய கூடுதல் தகவல்கள்பராமரிப்புத் தர ஆணையத்தின் (CQC) வலைத்தளத்தில் (PDF) கிடைக்கின்றன.

மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) பெறுவதுபற்றிய உங்கள் விருப்பங்களை நீங்கள் முன்கூட்டியே தெரியப்படுத்த இயலுமா?

உங்களுக்கு மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) பற்றி ஆதரவாகவோ எதிராகவோ ஏதேனும் உணர்வுகள் இருந்தால், உங்களைப் பராமரிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் நீங்கள் தெரிவிக்க வேண்டும். நீங்கள் உங்களுக்கு ஆதரவளிக்க அல்லது உங்களுக்காகப் பேச விரும்பும் நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது வேறு யாரிடமாவது இதைச் சொல்ல வேண்டும். மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) உங்களுக்குச் சிறந்ததா இல்லையா என்பதைப் பற்றி மருத்துவர்கள் சிந்திக்கும்போது இந்தக் கருத்துக்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

நீங்கள் நலமாக இருக்கும்போது, ​​மீண்டும் நோய்வாய்ப்பட்டால் மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) வேண்டாம் என்று உறுதியாக இருந்தால், உங்கள் விருப்பங்களை ஓர் அறிக்கையாக எழுதலாம். இதை இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் வேல்ஸில் 'முன்கூட்டிய தீர்மானம்' அல்லது ஸ்காட்லாந்தில் 'முன்கூட்டிய அறிக்கை' என்று அழைக்கலாம். மிகவும் குறிப்பிட்ட சூழ்நிலைகளைத் தவிர மற்ற நேரங்களில் இந்த விருப்பங்களைப் பின்பற்ற வேண்டும். இது ஒரு சிக்கலான தலைப்பு மற்றும் இந்தத் தகவல் நூலின் எல்லைக்கு அப்பாற்பட்டது.

ஏற்கனவே மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சையை (ECT) வெற்றிகரமாகச் செய்துகொண்டு பலன் பெற்ற சிலர் இது தங்களுக்கு மிகவும் உதவியாக இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். அவர்கள் தாங்கள் மீண்டும் நோய்வாய்ப்பட்டால், அப்போது தாங்கள் மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) வேண்டாம் என்று சொன்னாலும் அதைச் செய்து கொள்ள விரும்புவதாக முன்கூட்டியே பதிவு செய்துள்ளனர்.

உங்கள் அனுமதி இல்லாமல் மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) உங்களுக்கு வழங்கப்படலாமா?

ஒருவருக்கு மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) செய்து கொள்ளலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் 'திறன்' இருந்தால், அவர்களின் முழுமையான தகவலறிந்த ஒப்புதல் இல்லாமல் அதை அவர்களுக்கு வழங்க முடியாது.

சிலருடைய நிலை மிகவும் மோசமாகிவிடுவதால், அவர்களுக்கு மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) பற்றி முடிவெடுக்கும் 'திறன் குறைவு' என்று கூறப்படுகிறது. இதன் பொருள் அவர்களால் சிகிச்சையின் தன்மை, நோக்கம் அல்லது விளைவுகளைச் சரியாகப் புரிந்து கொள்ளவோ, இந்தத் தகவல்களை நினைவில் கொள்ளவோ , மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சையால் (ECT) ஏற்படும் நன்மை, தீமைகளை எடைபோடவோ முடியாது.

இந்தச் சூழ்நிலையில் மக்களுக்கு மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) அளிப்பது குறித்து மருத்துவர்கள் முடிவெடுக்க அனுமதிக்கும் சட்டங்கள் UKவில் உள்ளன. மிகவும் அவசியமானால் மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இவை சட்டப்பூர்வப் பாதுகாப்புகளுடன் வருகின்றன.

மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) பெறும் சுமார் பாதிப் பேருக்கு இதுதான் நிலைமை. இந்த வழியில் மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) செய்துகொள்கிறவர்கள் ஒப்புதல் அளிக்க முடிந்தவர்களைப் போலவே சிறப்பாகச் செயல்படுகிறார்கள்.

ஒருவர் குணமடைந்து 'திறனை மீண்டும் பெறும்போது' அவர்களின் சம்மதத்தை மீண்டும் பெற வேண்டும்.

ஒப்புதல் மற்றும் மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) பற்றிய கூடுதல் தகவல்களைCQC வலைத்தளத்தில் (PDF) காணலாம்.

உங்கள் மருத்துவமனையில் மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சையின் (ECT) தரம் எவ்வாறு மதிப்பிடப்படுகிறது?

ECT Accreditation Service (ECTAS)என்பது இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் உள்ள மன நலச் சேவைகளின் தன்னார்வ வலையமைப்பாகும், இது மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சையில் (ECT) சிறந்த நடைமுறையை ஊக்குவிக்கிறது. மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) மருத்துவமனைகள் பாதுகாப்பு மற்றும் சட்டச் சிக்கல்கள் போன்ற ஒப்புக்கொள்ளப்பட்ட தரநிலைகளைப் பூர்த்தி செய்ய உதவுவதன் மூலம் பராமரிப்பின் தரத்தை மேம்படுத்த இந்த வலைப்பின்னல் உதவுகிறது.

Scottish ECT Accreditation Network (SEAN)இதேபோன்ற செயல்பாட்டைச் செய்கிறது. இது ஸ்காட்லாந்தில் உள்ள ஒவ்வொரு மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சைச் (ECT) சேவையையும் உள்ளடக்கியது.

ECTAS மற்றும் SEAN ஆகியவை மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சைச் (ECT) சேவைகளின் சட்டப்பூர்வ ஒழுங்குமுறை நிறுவனங்கள் இல்லை. இது இங்கிலாந்தில் Care Quality Commission, வேல்ஸில் The Healthcare Inspectorate Wales, ஸ்காட்லாந்தில் Healthcare Improvement Scotland மற்றும் வடக்கு அயர்லாந்தில் Regulation and Quality Improvement Authority ஆகியவற்றின் பொறுப்பாகும்.

மேலும் தகவல்களை நான் எங்கே பெறுவது?

கீழே உள்ள இணைப்புகள் மூலம் கூடுதல் தகவல்களை நீங்கள் அறியலாம்:

மேலும் படிக்க

National Institute for Health and Care Excellence (NICE)

ஒப்புகைகள்

இந்தத் தகவல்கள் உளவியலாளர்களுக்கான ராயல் கல்லூரியின் (Royal College of Psychiatrists) பொது ஊடாடல் ஆசிரியர் வாரியத்தால் (PEEB) உருவாக்கப்பட்டவை. இதை எழுதும்போது கிடைத்த மிகச் சிறந்த சான்றுகளை இது பிரதிபலிக்கிறது.

நிபுணர் மதிப்பாய்வு மற்றும் பங்களிப்பாளர்கள்

  • மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (ECT) மற்றும் தொடர்புடைய சிகிச்சைகளுக்கான குழு
  • Electroconvulsive Therapy Accreditation Service (ECTAS)
  • Scottish ECT Accreditation Network (SEAN)
  • பேராசிரியர் வெண்டி பர்ன், PEEB இன் உடனடி முன்னாள் தலைவர் மற்றும் தலைமைப் பொறுப்பு வகிப்பவர்.

இந்தத் தகவல்கள் மார்ச் 2022 இல் திருத்தப்பட்டன.

This translation was produced by CLEAR Global (Dec 2025)

Read more to receive further information regarding a career in psychiatry