நினைவுப் பிரச்சனைகளும் டிமென்சியா-வும்

Memory problems and dementia

Below is a Tamil translation of our information resource on memory problems and dementia. You can also view our other Tamil translations.

நம்மில் பலருக்கு வயதாக ஆக, நினைவாற்றல் குறைகிறது, பலவற்றை மறக்கத் தொடங்குகிறோம்.

ஒருவேளை, இது டிமென்சியா அல்லது அல்சைமர்'ஸ் நோயின் தொடக்க அடையாளமாக இருக்குமோ என்று சிலர் கவலைப்படுகிறார்கள்.

ஆனால், இதற்கு வேறு பல காரணங்கள் உள்ளன. டிமென்சியா என்கிற, இன்னும் தீவிரமான பிரச்சனை சிலருக்குதான் வரும். இந்த இணையத் தளம், மோசமான நினைவாற்றலுக்கான சில காரணங்களை (டிமென்சியாஸ் உள்பட) விளக்குகிறது, ஒருவேளை, நீங்கள் உங்களுடைய சொந்த நினைவாற்றலைப்பற்றி அல்லது இன்னொருவருடைய நினைவாற்றலைப்பற்றிக் கவலைப்படுகிறீர்கள் என்றால், அதற்கான உதவியை எப்படிப் பெறலாம் என்று புரியவைக்கிறது.

நம் நினைவாற்றல் அழுத்தம், மனச் சோர்வு, துயரம் போன்ற பல காரணங்களால் பாதிக்கப்படலாம். அத்துடன், வைட்டமின் பற்றாக்குறை அல்லது நோய்த்தொற்று போன்ற உடல் சார்ந்த நோய்கள்கூட நினைவாற்றலைப் பாதிக்கலாம்.1

கீழுள்ள பகுதியில், அல்ரைமர்'ஸ் நோய் மற்றும் மிதமான அறிவாற்றல் குறைபாடு (MCI) உள்ளிட்ட வெவ்வேறு வடிவங்களில் வருகிற இரண்டு குறிப்பிட்ட நினைவாற்றல் பிரச்சனைகளைப்பற்றிப் பேசுவோம்.

டிமென்சியா என்றால் என்ன?

டிமென்சியா என்பது, நினைவாற்றலைப் பாதிக்கிற சில சூழ்நிலைகளின் குழு ஒன்றை விவரிக்கப் பயன்படுத்தப்படும் பொதுவான சொல் ஆகும்.

  • நீங்கள் விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ளச் சிரமப்படுகிறீர்கள், உங்களுடைய சிந்தனை தொடர்பாக வேறு பிரச்சனைகள் உண்டாகின்றன. இதனால், உங்களுடைய அன்றாட வாழ்க்கையைச் சமாளிப்பது உங்களுக்கு இன்னும் கடினமாகிறது.
  • இந்தப் பிரச்சனைகள் தொடர்ந்து மோசமாகின்றன, அதாவது, “வளர்கின்றன". இவை வயதாவதின் இயல்பான ஒரு பகுதியாக இல்லை.2

டிமென்சியா பல வகைப்படும். இவை அனைத்திலும் நினைவாற்றல் இழப்பு காணப்படுகிறது. ஆனால், இவற்றுக்கு வேறு அறிகுறிகளும் இருக்கலாம். இவை காரணத்தைப் பொறுத்து மாறுகின்றன. பொதுவாக, டிமென்சியா நினைவாற்றல் பிரச்சனைகளுடன் தொடங்குகிறது. ஆனால், டிமென்சியா வந்த ஒருவருக்கு இவையும் கடினமாக இருக்கலாம்:

  • அன்றாடச் செயல்பாடுகளைத் திட்டமிட்டு நிறைவேற்றுவது
  • பிறருடன் தகவல் தொடர்பு.

இவர்களுடைய மனநிலை, தீர்மானங்களை எடுக்கும் திறனிலும் மாற்றங்கள் இருக்கலாம், அல்லது, இவர்களுடைய ஆளுமையில் நீங்கள் மாற்றங்களைக் காணலாம்.

டிமென்சியா ‘வளரக்கூடியது' என்பதால், டிமென்சியா கொண்ட ஒருவர் நாளாக ஆகப் பிறருடைய உதவியைக் கூடுதலாகச் சார்ந்திருப்பார்.

டிமென்சியா எந்த அளவு பொதுவானது?

இப்போது UKயில் 850,000 க்கும் மேற்பட்ட மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்3. வயது கூடக் கூட, இது மேலும் பொதுவாகிறது. அதனால்:

  • 65 வயதில், ஒவ்வொரு 100 பேரிலும் சுமார் 2 பேருக்கு டிமென்சியா இருக்கும்.
  • 85 வயதை நெருங்கும்போது, ஒவ்வொரு 5 பேரிலும் சுமார் 1 நபருக்கு ஏதோ ஓர் அளவில் டிமென்சியா இருக்கும்.4 

சில நேரங்களில், இதைவிடக் குறைந்த வயதுள்ள இளையவர்களையும் டிமென்சியா பாதிக்கலாம். சில நேரங்களில், அது ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் பாதிக்கலாம். ஆனால், இவையெல்லாம் பொதுவாகக் காணப்படுவதில்லை.

மிதமான அறிவாற்றல் குறைபாடு என்றால் என்ன?

மிதமான அறிவாற்றல் குறைபாடு (MCI) என்பது தீவிரம் குறைந்த ஒரு நினைவாற்றல் பிரச்சனையாகும். இது உங்களுடைய அன்றாட வாழ்க்கையைப் பெரிய அளவில் பாதிப்பதில்லை, டிமென்சியா என்று அழைக்கப்படும் அளவு தீவிரமாக இருப்பதில்லை. உங்களுக்கு இந்தப் பிரச்சனை வந்தால், நீங்கள் இவற்றைக் கவனிக்கலாம்:

  • மக்களுடைய பெயர்கள், இடங்கள், கடவுச்சொற்களை மறக்கக்கூடும்
  • பொருட்களைத் தவறான இடங்களில் வைத்துவிட்டுத் தேடக்கூடும்
  • நீங்கள் திட்டமிட்ட விஷயங்களைச் செய்ய மறக்கக்கூடும்.

அநேகமாக, 65 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு 10 பேரிலும் ஒருவருக்கு MCI இருக்கலாம். இவர்களில் பத்தில் ஒருவருக்கு ஏதாவது ஓர் ஆண்டில் டிமென்சியா வரும்.5 யாருக்கு டிமென்சியா வரும், யாருக்கு வராது என்று நம்மால் இப்போது ஊகிக்க இயலாது. 

டிமென்சியாவின் வகைகள் என்னென்ன?

மிகப் பொதுவான டிமென்சியா வகைகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன. ஆனால், சில நேரங்களில் சிலருக்கு இந்தக் குறைபாடுகளில் ஒன்றுக்கு மேற்பட்டவையும் வரலாம். அது ‘கலவை டிமென்சியா’ என்று அழைக்கப்படுகிறது. 

அல்சைமர்'ஸ் நோய்

எய்லீனுக்கு வயது 82. அவர் செயலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். எய்லீன் தன் 90 வயதுக் கணவருடன் வசிக்கிறார், வலுவிழந்த நிலையில் உள்ள அவரைக் கவனித்துக்கொள்கிறார். இவர் உடலளவில் நல்ல வலிமையைக் கொண்டவர், எந்த மருந்தும் சாப்பிடுவதில்லை. 
முந்தைய 2 ஆண்டுகளாக, எய்லீன் தன்னுடைய சாவியை எங்கு வைத்தோம் என்பதை மறந்துவிடுகிறார், தன் கணவருக்குச் சரியான நேரத்தில் அவருடைய மருந்துகளைக் கொடுக்க மறந்துவிடுகிறார் என்பதையும் எய்லீனின் மகள்கள் கவனித்துள்ளார்கள். எய்லீன் எப்போதும் மிக நன்றாகக் கார் ஓட்டுகிறவர். ஆனால், இப்போது அவருடைய காரில் ஒரு நசுங்கலும் பக்கங்களில் சில கீறல்களும் உள்ளன. அவை எப்போது, ஏன் ஏற்பட்டன என்று எய்லீனால் விளக்க இயலவில்லை. அத்துடன், அவரால் புதிய ரிமோட்டைப் பயன்படுத்தி TV ஐ இயக்க இயலவில்லை. தொடக்கத்தில், அவருக்கு வயதாகிறது, கணவரைக் கவனித்துக்கொள்ளும் கடமை அவருக்கு அழுத்தத்தைத் தந்துள்ளது, அதனால்தான் இந்தப் பிரச்சனைகள் வருகின்றன என்று அவர்கள் நினைத்தார்கள்.
தனக்கு நினைவாற்றல் பிரச்சனை ஏதும் இருப்பதாக எய்லீன் நினைக்கவில்லை. தன்னுடைய நினைவாற்றலைப்பற்றிக் கவலைப்படுவதாகத் தன் மகள்கள் தன்னிடம் சொல்லும்போது, அவர் எரிச்சலடைகிறார், வருந்துகிறார். மிகுந்த வற்புறுத்தலுக்குப்பின், அவர் அவர்களுடன் சென்று தன்னுடைய GPஐச் சந்திக்க ஒப்புக்கொண்டார். இந்த GP சில எளிய நினைவாற்றல் பரிசோதனைகளைச் செய்கிறார். பிறகு, எய்லீனை ஒரு சிறப்பு நினைவாற்றல் சேவைக்குப் பரிந்துரைக்கிறார்.  

டிமென்சியா வந்த 10 பேரில் 6 பேருக்கு அது அல்சைமர்'ஸ் வகையில் அமைகிறது.6 இது பொதுவாக நினைவாற்றல் பிரச்சனைகளாகத் தொடங்குகிறது. பின்னர், நாளாக ஆக மோசமடைகிறது. பல நேரங்களில், சமீபத்தில் நடந்த விஷயங்களைத் தங்களால் நினைவுக்குக் கொண்டுவர இயலவில்லை என்றும், ஆனால், பல ஆண்டுகளுக்குமுன் நடந்த விஷயங்கள் இன்னும் நினைவில் இருக்கின்றன என்றும் மக்கள் உணர்வார்கள்.

குறிப்பாக, சில சொற்களை நினைவுக்குக் கொண்டுவருவதும், பொருட்களின் பெயர்கள் என்ன என்பதை நினைவுக்குக் கொண்டுவருவதும் தங்களுக்குச் சிரமமாக உள்ளதை அவர்கள் காண்பார்கள். சில நேரங்களில், அவர்களுக்குத் தங்களுடைய நினைவாற்றல் பிரச்சனைகள் தெரிந்திருக்காது. ஆனால், மற்றவர்கள் அவற்றைக் கவனிப்பார்கள். டிமென்சியா கொண்ட ஒருவருக்கு இவற்றிலும் சிரமங்கள் இருக்கலாம்:

  • புதியவற்றைக் கற்பது
  • சமீபத்திய நிகழ்வுகள், சந்திப்புகள் அல்லது தொலைபேசிச் செய்திகளை நினைவுகூர்வது
  • மக்களுடைய பெயர்கள் அல்லது இடங்களை நினைவுகூர்வது
  • மற்ற மக்களைப் புரிந்துகொள்வது, அல்லது, அவர்களுடன் தகவல் தொடர்பை நிகழ்த்துவது
  • தாங்கள் பொருட்களை எங்கு வைத்தோம் என்பதை நினைவுகூர்வது. இது அவர்களுக்கு மிகவும் வருத்தத்தைத் தரலாம். யாரோ தங்கள் வீட்டுக்கு வந்து பொருட்களை எடுத்துச் சென்றுவிட்டதுபோல் அவர்கள் உணரலாம்
  • தங்களிடம் ஏதோ சரியில்லை என்பதைப் புரிந்துகொள்வது. இவர்களுக்கு யாராவது உதவ முயன்றால், இவர்கள் எரிச்சலடையலாம்.

இந்தச் சிரமங்கள் எல்லாம் சேர்ந்து, எளிமையான அன்றாடச் செயல்பாடுகளைச் சமாளிப்பதைக்கூட மேலும் கடினமாக்கலாம். 

பல நேரங்களில், அல்சைமர்'ஸ் உள்ள ஒருவரை அறிந்த மக்கள் அவர்களுடைய ஆளுமையில் சில நுட்பமான மாற்றங்களைக் கவனிப்பார்கள்.  அவர்களுக்கு இந்தப் பிரச்சனை வருவதற்குமுன் அவர்கள் நடந்துகொண்டதுபோல், எதிர்வினையாற்றியதுபோல் இல்லாமல், இப்போது அவர்கள் வேறுவிதமாக நடந்துகொள்வார்கள். 

அல்சைமர்'ஸ் வந்தவர்களுடைய மூளையில், அமிலாய்ட், டௌ என்று அழைக்கப்படும் புரதங்கள் ‘பிளேக்ஸ்' (தகடுகள்) மற்றும் ‘டாங்கிள்ஸ்' (சிக்கல்கள்) என்று அழைக்கப்படும் படிவுகளை உருவாக்கத் தொடங்குகின்றன. இந்தப் பகுதிகளில் மூளை சேதமடைகிறது. இது மூளையில் உள்ள, ஒரு செல்லுக்கும் இன்னொரு செல்லுக்கும் இடையில் செய்திகளைப் பரிமாற்றுகிற வேதிப் பொருட்களை, குறிப்பாக அசிட்டில்கோலைன் என்ற வேதி பொருளைப் பாதிக்கிறது.7

இரத்தக்குழாய் சார்ந்த டிமென்சியா

ஜானுக்கு வயது 78. இவர் ஓய்வு பெற்ற பொறியாளர். இவருக்கு உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் உயர் கொலஸ்ட்ரால் நிலைகள் உள்ளன. இவருக்கு இரண்டு முறை இதய அதிர்ச்சி வந்துள்ளது. அதன்பிறகு, 18 மாதங்களுக்குமுன் இவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி (இரத்தக்குழாய் அடைப்புகளைத் திறக்கும் செயல்முறை) செய்யப்பட்டது. ஆனால், இப்போதும் இவருக்கு அவ்வப்போது நெஞ்சு வலி வருகிறது.
இவருக்கு முதல் இதய அதிர்ச்சி வந்தபிறகு, இவருடைய நினைவாற்றல் சற்று பாதிக்கப்பட்டது. அதன்பிறகு, அது மீண்டும் மேம்படுவதாகத் தோன்றியது. ஆனால், இரண்டாவது இதய அதிர்ச்சிக்குப்பிறகு, இவர் பல விஷயங்களை மறந்துவிடுகிறார் என்பதையும், முன்புபோல் இவரால் கவனம் செலுத்த இயலுவதில்லை என்பதையும் அவருடைய மனைவியும் மகனும் கவனிக்கிறார்கள். இவருடைய மனநிலை ஏறி, இறங்கிக் காணப்படுகிறது. இவர் எளிதில் எரிச்சலடையலாம், சினம் கொள்ளலாம். ஆனால், மற்ற நேரங்களில் இவர் எந்தக் காரணமும் இல்லாமல் கண்ணீர் விட்டு அழுகிறார். இவர் இயல்பாக வாழச் சிரமப்படுகிறார். இவர் ஓரிரு முறை தன்னையும் அறியாமல் சிறுநீர் கழித்துவிட்டார். அது இவருக்கு மிகவும் சங்கடத்தை உண்டாக்கியது. சமீபத்தில் இவருக்கு வந்த நினைவாற்றல் பிரச்சனைகள் இவருடைய GPக்குத் தெரியவந்தபோது, இவருக்கு ஓர் MRI மூளை ஸ்கேன் செய்யப்பட்டது. அதில் பல சிறு பக்கவாதங்களின் அடையாளங்கள் தெரிந்தன. 

இதற்குக் காரணம், சேதமடைந்த இரத்தக்குழாய்களால் மூளைக்கு இரத்த வழங்கல் குறைவது. இதன் பொருள், மூளையின் சில பகுதிகளுக்குப் போதுமான ஆக்சிஜனும் ஊட்டச்சத்துகளும் கிடைப்பதில்லை. அதனால், மூளையின் செல்கள் இறந்துபோகின்றன.

இரத்தக்குழாய் சார்ந்த டிமென்சியா-வில் இவை இடம்பெறுகின்றன:

  • பக்கவாதம் தொடர்பானவை: இங்கு மூளைக்குச் செல்லும் இரத்தக்குழாய் ஒன்று திடீரென்று அடைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு இரத்தக் கட்டி அந்தக் குழாயை அடைக்கலாம்
  • சப்கார்டிகல் டிமென்சியா: இந்த டிமென்சியா வகை மூளையின் கீழ்ப் பகுதியைப் பாதிக்கிறது. இந்தப் பகுதிக்கு மிகச் சிறிய இரத்தக்குழாய்களில் வரும் இரத்த ஓட்டம் குறைந்துபோகும்போது இது ஏற்படுகிறது.

இரத்தக்குழாய்களில் அடைப்பை உண்டாக்கக்கூடிய நிலைகளில் ஒன்று உங்களுக்கு இருந்தால், உங்களுக்கு இரத்தக்குழாய் சார்ந்த டிமென்சியா வரும் வாய்ப்பு கூடுதலாகிறது. எடுத்துக்காட்டாக, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, உயர் கொலஸ்ட்ரால், அவற்றுடன் புகை பிடிக்கும் பழக்கம்.8

இரத்தக் குழாய் சார்ந்த டிமென்சியா எப்படி வளரும் என்று ஊகிப்பது கடினம். ஏனெனில், மூளையயின் எந்தப் பகுதி பாதிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்துப் பிரச்சனைகள் அமையும். இவை இவ்விதமாக இருக்கலாம்:

  • நினைவாற்றல் இழப்பு, கவனம் செலுத்துவதில் சிரமம்
  • மொழிச் சிரமங்கள், அல்சைமர்'ஸில் உள்ளதுபோல
  • மனநிலை மாற்றங்கள் அல்லது மனச்சோர்வு
  • உடல் சார்ந்த பிர்ச்சனைகள், எடுத்துக்காட்டாக, நடக்கச் சிரமப்படுதல், அல்லது, சிறுநீர், மலம் கழிப்பதில் கட்டுப்பாடின்மை.

லிவி பாடீஸுடன் கூடிய டிமென்ஸியா / பார்கின்சன்'ஸ் நோய் டிமென்சியா 

டெர்ரிக்கு 66 வயது. இவர் ஓர் ஓய்வு பெற்ற ஆசிரியர், தனியாக வசிப்பவர். 6 மாதங்களுக்குமுன் இவர் ஓய்வு பெற்றார். அப்போதிலிருந்து இவர் மிகவும் சோர்வாக உணர்கிறார், தன்னுடைய சிந்தனை மெதுவாகிவிட்டது என்று உணர்கிறார். 
கடந்த சில மாதங்களாக, இவருடைய வலக் கையில் ஒரு நடுக்கம் உருவாகிவருவதை இவர் கவனித்துள்ளார். நேற்று, இவர் தெருவில் செல்லும்போது விழுந்துவிட்டார். இவர் தன்னிடம் தடுமாற்றத்தைக் காண்கிறார். இது இவருக்கு வருத்தத்தைத் தருகிறது. ஏனெனில், இவர் எப்போதும் தன்னைச் சுறுசுறுப்பானவராகவும் உடற்தகுதி கொண்டவராகவும்தான் கண்டுவந்துள்ளார். ஒருமுறை, இவர் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும்போது கவனம் சிதறிவிட்டது. அதனால் ஏற்பட்டிருக்கக்கூடிய விபத்திலிருந்து இவர் எப்படியோ பிழைத்துவிட்டார். இந்த நிகழ்வைக் கேள்விப்பட்ட இவருடைய மகள் கேத் கவலை கொள்கிறார். இவரைக் கேட்டால், எனக்குத் தூக்கம் போதவில்லை என்கிறார். காலையில் தன்னுடைய படுக்கை மிகவும் கலைந்து கிடப்பதைச் சுட்டிக்காட்டி இவர் இவ்வாறு சொல்கிறார். சில நேரங்களில் இவரிடம் காயங்கள் காணப்படுகின்றன.
கடந்த சில வாரங்களாக, மாலை நேரங்களில் தன்னுடைய அறையின் மூலையில் ஒரு குழந்தை அமைதியாக விளையாடுவதை இவர் காணத் தொடங்கியுள்ளார். ஒரு நாள் இரவு, இவர் அந்தக் குழந்தையை அழைத்து, ‘ஏதாவது சாப்பிடு' என்று சொல்லியிருக்கிறார். ஆனால், இவருடைய மகளுக்கு அந்தக் குழந்தை தெரியவில்லை. நாட்களை நினைவில் வைத்துக்கொள்வது, வீட்டில் தன்னுடைய வேலைகளைத் திட்டமிடுவது ஆகியவற்றில் அவர் மோசமடைந்துவருவதாக கேத் உணர்கிறார்.
இவருடைய GP இதைப்பற்றிக் கவலை கொள்கிறார், இவரை ஒரு நினைவாற்றல் மருந்தகத்துக்குப் பரிந்துரைக்கிறார். அங்கு இவருக்கு ஒரு மூளை ஸ்கேன் செய்யப்படுகிறது, லிவி பாடீஸுடன் கூடிய டிமென்சியா இவருக்கு இருப்பது கண்டறியப்படுகிறது.

இது, மூளையில் புரதப் படிவுகள் (லிவி பாடீஸ்) உருவாவதால் ஏற்படுகிறது.9 பார்கின்சன்'ஸ் நோயின் அறிகுறிகள் உண்டகின்றன. ஆனால், பல நேரங்களில் இவை நோயின் பிற்பகுதியில்தான் தோன்றுகின்றன. இந்த அறிகுறிகளில் சில:

  • நினைவாற்றல் பிரச்சனைகள் மற்றும் செயல்களைத் திட்டமிடுவதில் சிரமம்
  • நாள்முழுவதும் வெவ்வேறுவிதமாகத் தொடரும் குழப்பம்
  • மக்கள் அல்லது விலங்குகளைத் தெளிவாகக் காணும் மாயத் தோற்றங்கள்
  • தூக்கப் பிரச்சனைகள், கனவு காணும்போது நிறைய நகர்தல்
  • கைகள் நடுங்குதல், தசை இறுகுதல், விழுதல் அல்லது நடக்கும்போது சிரமம் போன்ற பார்கின்சன்'ஸ் அம்சங்கள்.

முன்-டெம்போரல் டிமென்சியா

இந்த வகை டிமென்சியா பொதுவாக வயது குறைந்தவர்களிடம் காணப்படுகிறது. இது மூளையின் மற்ற பகுதிகளைவிட, முன்பகுதியைக் கூடுதலாகப் பாதிக்கிறது.  பல நேரங்களில் இது 50கள் மற்றும் 60களில் இருக்கிற மக்களிடம் தொடங்குகிறது.11 

இது ஆளுமை மற்றும் நடவடிக்கை மாற்றங்களை உண்டாக்கலாம், பேச்சில் பிரச்சனைகளைக் கொண்டுவரலாம். நினைவாற்றலானது நெடுநாட்களுக்குப் பாதிக்கப்படாமல் இருக்கலாம். இதில் 3 முதன்மையான வகைகள் உள்ளன:

  • நடவடிக்கை சார்ந்தவை: பொதுவாக மிகவும் பணிவாகவும் முறையாகவும் நடந்துகொள்கிற ஒருவர் திடீரென்று எரிச்சலூட்டும்வகையில் அல்லது முரட்டுத்தனமாக நடந்துகொள்ளத் தொடங்கலாம், அல்லது, திடீரென்று தங்கள் தோற்றத்தைக் கவனித்துக்கொள்வதில் அக்கறையை இழக்கலாம்
  • பொருள் சார்ந்தது: இதில் முதன்மை அறிகுறி என்னவென்றால், மொழியைப் புரிந்துகொள்ளுதல் மற்றும் தகவல்களை நினைவில் கொள்ளுதல் ஆகியவற்றில் பிரச்சனைகள் வருவது
  • வளர்கின்ற, சரளமற்ற அஃபாசியா: பேச்சு மற்றும் சொற்களை வெளிக்கொண்டுவருவதில் சிரமம்.

லிம்பிக்-முதன்மை வயது தொடர்பான TDP-43 என்செஃபாலோபதி (LATE)

சமீபத்தில், பிணப் பரிசோதனை செய்யப்பட்ட மூளைத் திசுக்களின் மாதிரிகளை ஆராய்ந்து பார்த்தபோது, ஒரு புதிய டிமென்சியா அடையாளம் காணப்பட்டுள்ளது. இது முதியவர்களிடமும் பொதுவாகக் காணப்படுகிறது, மேலுள்ள மற்ற குறைபாடுகளுடன் சேர்ந்து காணப்படுகிறது. LATEஐக் கண்டறிவது எப்படி என்று இன்னும் தெரியவரவில்லை.10

இன்னும் அரிய காரணங்கள்

டிமென்சியாவுக்கு வேறு பல காரணங்களும் உள்ளன. அவற்றி சில:

  • கார்டிகோபாசல் அழிவு
  • கிரெயுட்ஜ்ஃபெல்ட்ட்-ஜேக்கப் நோய்
  • HIV தொடர்பான அறிவாற்றல் குறைபாடு
  • ஹன்ட்டிங்டன் நோய்
  • தண்டுவட மரப்பு நோய்
  • கொர்சகாஃப் நோய்க்குறி
  • வழக்கமான அழுத்த ஹைட்ரோசெஃபாலஸ்
  • போஸ்டீரியர் கார்டிகல் அட்ராஃபி
  • வளரும் சுப்ராநியூக்ளியர் பால்சி.

டிமென்சியா எப்படிக் கண்டறியப்படுகிறது?

மருத்துவர்கள் ஒருவருக்கு இருக்கிற அறிகுறிகளின் பாணியை அடையாளம் கண்டு, அந்த நபர் அன்றாடச் செயல்பாடுகளைச் சமாளிப்பதை இந்த அறிகுறிகள் எப்படிப் பாதிக்கின்றன என்பதைக் கண்டறிந்து, அதன்மூலம் டிமென்சியாவை அடையாளம் காண்பார்கள்.

அதனால், இதில் முதல் படிநிலை, அந்த நபரை அறிந்துகொள்வதற்கான ஒரு நேர்காணல்தான். அவருடைய சிந்தனை மற்றும் நினைவாற்றலைப் பரிசோதிப்பதற்கு வினாத்தாள்கள் பயன்படுத்தப்படு. இது ‘அறிவாற்றல் பரிசோதனை’ என்று அழைக்கப்படுகிறது. அவருக்கு உடல் பரிசோதனையும் செய்யப்படும். கையைத் தொட்டுத் தட்டுதல் போன்ற எளிய, உடல் சார்ந்த வேலைகளைக் கொண்ட சில பரிசோதனைகளும் செய்யப்படும். அவருடைய வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று விளக்கக்கூடிய உறவினர் ஒருவருடன் மதிப்பிடுபவர் பேச இயலுமானால் அது இன்னும் உதவியாக இருக்கும்.

இந்த முதல் சந்திப்பு, பிரச்சனைப் பகுதிகளை அடையாளம் காண உதவும். பல நேரங்களில், எந்த வகை டிமென்சியா வந்திருக்கக்கூடும் என்பதற்கான துப்புகள் இங்கு கிடைக்கும். இந்த அறிகுறிகளுக்கான மற்ற காரணங்களைச் சரிபார்ப்பதற்கு இரத்தப் பரிசோதனைகளும் ஸ்கேன்களும் பயன்படுத்தப்படலாம். ஸ்கேன்கள் (CT/MRI மூளை ஸ்கேன்கள்) டிமென்சியாவின் வகையை அடையாளம் காண உதவலாம், இது எந்த ஒரு குணப்படுத்தலுக்கும் வழிகாட்டியாக அமையலாம்.12

இப்போதெல்லாம், நோயை முன்கூட்டியே கண்டறிய உதவுவதற்கென நோயாளியை ஒரு சிறப்பு ‘நினைவாற்றல் மருந்தகத்துக்கு'ப் பரிந்துரைக்கிறார்கள். டிமென்சியா கொண்ட நபர் பொதுவாகப் பல தொழில் வல்லுநர்களைச் சந்திப்பார்: உளவியல் மருத்துவர்கள், முதியோர் நல வல்லுநர்கள், உளவியலாளர்கள், தொழில் சார்ந்த குணப்படுத்துவோர் மற்றும் செவிலியர்கள்.

டிமென்சியா ஆபத்து யாருக்குக் கூடுதலாக உள்ளது?

நம்மில் யாருக்கு வேண்டுமானாலும் டிமென்சியா வரலாம். ஆனால், அது வயதாவதன் இயற்கையான அல்லது தவிர்க்கமுடியாத விளைவு இல்லை. சில மருத்துவச் சூழ்நிலைகளால் இது வருகிற வாய்ப்பு கூடுதலாகலாம்13.

இவற்றில் சில:

  • பார்க்கின்சன்'ஸ் நோய்
  • பக்கவாதம் மற்றும் இதய நோய்
  • உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் கொலஸ்ட்ரால் நிலைகள்
  • வகை 2 நீரிழிவுல் மெல்லிடஸ்.

இந்த ஆபத்துக் காரணிகளுக்கு, குறிப்பாக, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவுக்குச் சிகிச்சை அளித்துக் கையாள முயல்வது முதன்மையானதாகும். வாழ்க்கையின் நடு ஆண்டுகளில் கேட்டல் திறன் இழப்பு, உடல் பருமன், சமூகத்தில் தனிமைப்படுத்தப்படுதல் மற்றும் மனச்சோர்வு போன்ற பிரச்சனைகள் வந்தால், அவற்றை நன்கு கையாள்வதும் இதில் உதவலாம்.14

பல வகை டிமென்சியாக்களின் ஆபத்தை மிகுதியாக்கும் வாழ்க்கைமுறைக் காரணிகளில்15 சில:

  • புகை பிடித்தல்
  • பாதுகாப்பான வரம்பைத் தாண்டி மது அருந்துதல், அதாவது, வாரத்துக்கு 14 அலகுகளுக்கு மேல்
  • மோசமான உணவுப் பழக்கம்
  • உடல் சார்ந்த செயல்பாடுகள் இல்லாமல் இருத்தல்
  • எடை அதிகமாக இருத்தல்
  • திரும்பத் திரும்பத் தலையில் அடிபடுதல். எடுத்துக்காட்டாக, குத்துச்சண்டை போடுவோரிடம் இதைக் காணலாம்.

புகை பிடித்தலை நிறுத்துவது, மது அருந்துவதைக் குறைப்பது, உடற்பயிற்சியை மிகுதியாக்குவது, ஒரு நலமான, சமநிலையான உணவுப் பழக்கத்தைப் (குறிப்பாக, மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ளோர் உண்பதைப்போன்ற உணவுப் பழக்கம் பரிந்துரைக்கப்படுகிறது) பின்பற்றுவது ஆகியவை டிமென்சியாவின் ஆபத்தைக் குறைக்கலாம் என்கிறது உலக சுகாதார நிறுவனம். குறிப்பாக, இவை உங்களுடைய 40கள் மற்றும் 50களில் மேற்கொள்ளப்பட்டால் நல்ல பலன் இருக்குமாம்.16

மரபணுக்களும் டிமென்சியாவில் ஒரு பங்காற்றுகின்றன. 65 வயதுக்குப்பின் வருகிற அல்சைமர்'ஸ் நோய் பொதுவாக மரபணுக் குறைபாட்டால் உண்டாவதில்லை. ஆனால், அந்த ஆபத்தைச் சிறிய அளவில் கூட்டுகிற அல்லது குறைக்கிற பல மரபணுக்கள் கண்டறியப்பட்டுள்ளன.17 உங்கள் உறவினர் ஒருவருக்கு டிமென்சியா இருந்தால் அது உங்களுக்கும் வரும் என்று பொருள் ஆகாது. இந்த விஷயத்தில் உங்களுடைய தனிப்பட்ட ஆபத்தை ஊகிக்கக்கூடிய பரிசோதனை எதுவும் (இதுவரை) கண்டறியப்படவில்லை.

சில குடும்பங்களில் ‘டிமென்சியா முன்கூட்டியே வருவது' இன்னும் பொதுவாகக் காணப்படுகிறது. அதனால், வலுவான மரபணுக் காரணம் ஒன்று இருப்பதாகத் தோன்றுகிறது. அத்துடன், டௌன்'ஸ் நோய்க்குறி உள்ள மக்களுக்கு டிமென்சியா முன்கூட்டியே வரும் வாய்ப்பு கூடுதலாக உள்ளது.17 ஒருவேளை, உங்கள் குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு 65 வயதுக்கு முன்னாலேயே டிமென்சியா வந்திருந்தால், மருத்துவ மரபியல் வல்லுநர் ஒருவரிடம் அறிவுரை பெறுவது நல்லது.

டிமென்சியாவைக் குணப்படுத்த இயலுமா?

இது நோய் கண்டறிதல் மற்றும் உங்கள் சூழல்களைப் பொறுத்தது.  இந்தச் சூழ்நிலைகளை முழுமையாகக் குணப்படுத்தும் வழிமுறை எதுவும் இதுவரை இல்லை. நீங்களோ உங்கள் உறவினரோ எவ்வளவு காலம் இயலுமோ அவ்வளவு காலத்துக்கு இயன்றவரை சுதந்தரமாகவும் நடமாடிக்கொண்டும் இருக்க உதவுவதற்கெனச் சில தெரிவுகள் உள்ளன. 

  • அசிடைல்கோலைன்ஸ்டெராசெ தடுப்பான்கள் (டோனெபெஜில், ஜலன்டமைன் மற்றும் ரிவஸ்டிக்மைன்) எனப்படும் வகையைச் சேர்ந்த மருந்துகளும் மெமன்டைன் என்று அழைக்கப்படும் இன்னொரு மருந்தும் அல்சைமர்'ஸ் டிமென்சியா-வின் சில அறிகுறிகளைக் குணப்படுத்தலாம், மக்கள் தங்களுடைய சுதந்தரத்தை இயன்றவரை நெடுநாட்கள் பராமரிக்க அவர்களுக்கு உதவலாம்.18 இந்த மருந்துகள் லீவி பாடி டிமென்சியாவிலும் உதவுகின்றன, குறிப்பாக, மாயத் தோற்றப் பிரச்சனை உள்ளவர்களுக்கு.19 அல்சைமர்'ஸ் நோய்க்கான மருந்து சார்ந்த குணப்படுத்தல்கள் என்ற எங்கள் பக்கத்தைப் பாருங்கள்.
  • இரத்தக் குழாய் சார்ந்த டிமென்சியாவைப் பொறுத்தவரை, உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம், கூடுதலான கொலஸ்ட்ரால் அல்லது நீரிழிவு இருந்தால், நீங்கள் மருந்து எடுத்துக்கொள்ளவேண்டும் என்று உங்கள் GP பரிந்துரைக்கலாம். புகை பிடிப்பதை நிறுத்தி, நல்ல உணவை உண்டு, தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வதும் உதவும்.
  • பொதுவாக டிமென்சியா ஆபத்தைக் குறைப்பதற்கு வைட்டமின்கள் B மற்றும் E, கொழுப்பு அமிலங்கள் (மீன் எண்ணெய்கள் உள்பட) மற்றும் சிக்கலான உணவுப் பழக்கத் துணைப் பொருட்கள் பரிந்துரைக்கப்படுவதில்லை20, ஆனால், உங்களுக்கு ஏதேனும் வைட்டமின் பற்றாக்குறைகள் இருந்தால், அவற்றைக் குணப்படுத்தவேண்டும் என்று உங்கள் GP பரிந்துரைக்கலாம். சில நிரப்பு முறை மருந்துகள் பரிந்துரைக்கப்படும் மருந்துகளுடன் ஊடாடலாம். அதனால், நீங்கள் இவற்றில் எதையேனும் கருத்தில் கொள்கிறீர்கள் என்றால், அதுபற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுவது நல்லது.
  • குழு அறிவாற்றல் தூண்டல் எனப்படும் உளவியல் குணப்படுத்தல், குழு விளையாட்டுகளைப் பயன்படுத்திச் சிந்திக்கும் திறன்களைத் தூண்டுகிறது. இது நினைவாற்றலையும் மக்களுடைய வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதில் உதவக்கூடும்.21
  • நினைவூட்டல் குணப்படுத்தல் என்பது, பழைய செயல்பாடுகள், நிகழ்வுகள் மற்றும் அனுபவங்களை இன்னொரு நபர் அல்லது மக்கள் குழுவுடன் விவாதிப்பதாகும். இது புரிந்துகொள்ளல் மற்றும் அறிவு (அறிவாற்றல்) ஆகிய இரண்டிலும் உதவலாம், கவனித்துக்கொள்வோருடைய பளுவைக் குறைக்க உதவலாம்.22 
  • டிமென்சியா வளரும் வேகம் மிகவும் மாறுபடக்கூடியது. சிலர் தங்களுக்கு டிமென்சியா வந்திருப்பது கண்டறியப்பட்டபிறகு பல ஆண்டுகளுக்குச் சுறுசுறுப்பான, ஆக்கப்பூர்வமான, பொருளுள்ள வாழ்க்கைகளை வாழலாம். 

எனக்கு டிமென்சியா உள்ளது. நான் பிறருக்கு எப்படி உதவலாம்?

டிமென்சியாவின் காரணங்கள், அதைக் குணப்படுத்துவது எப்படி என்பவைபற்றி UKயிலும் உலகெங்கிலும் பல ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. தற்போது UKல் மூன்று மிகப் பெரிய ஆராய்ச்சி வலைப்பின்னல்கள் இயங்கிவருகின்றன23:

  • இங்கிலாந்து  - டிமென்சியாஸ் & நரம்பழிவு நோய்கள் ஆராய்ச்சி வலைப்பின்னல் (DeNDRoN
  • ஸ்காட்லாந்து - ஸ்காட்டிஷ் டிமென்சியா மருத்துவ ஆராய்ச்சி வலைப்பின்னல் (SDCRN) - இந்த இணையத் தளம் இப்போது கட்டமைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
  • வேல்ஸ் - வேல்ஸ் டிமென்சியாஸ் மற்றும் நரம்பழிவு நோய்கள் ஆராய்ச்சி வலைப்பின்னல் (NEURODEM Cymru)

UKல் ஒரு நோயாளியாக அல்லது கவனித்துக்கொள்பவராக உங்கள் ஆர்வத்தைப் பதிவு செய்ய முதன்மையான வழி, Join Dementia Research. நீங்கள் இன்னொருவர் சார்பாகவும் இதில் சேரலாம். ஆனால், அதற்கு அவர்களுடைய ஒப்புதலைப் பெறவேண்டும்.

இந்தச் சேவை ஆர்வமுள்ள தன்னார்வலர்களையும் ஆய்வாளர்களையும் இணைத்துவைக்கிறது. இதை அல்சைமர் ஸ்காட்லாந்து, அல்சைமர் ஆய்வு UK மற்றும் அல்சைமர்'ஸ் கழகத்துடன் இணைந்து நல ஆராய்ச்சிக்கான தேசியக் கல்விக் கழகம் (NIHR) உருவாக்கியுள்ளது.

அத்துடன், உங்களுடைய உள்ளூரில் என்ன ஆய்வு நடைபெறுகிறது என்பதுபற்றி நீங்கள் உங்களுடைய GP அல்லது உள்ளூர் மன நலக் குழுவிடம் கேட்கலாம்.

எனக்கு நானே உதவிக்கொள்வது எப்படி?

சில எதார்த்தமான உதவிக்குறிப்புகள்

  • சந்திப்புகளை நினைவில் கொள்வதற்கு ஒரு நாட்குறிப்பைப் பயன்படுத்துங்கள்.
  • நீங்கள் செய்யவேண்டிய விஷயங்களைப் பட்டியல் போடுங்கள். அவற்றை ஒவ்வொன்றாகச் செய்துவிட்டு, அந்தப் பட்டியலிலிருந்து அடித்துவிடுங்கள்!
  • படித்தல் அல்லது புதிர்களை விடுவித்தல், புதிய விஷயங்களைக் கற்றல் மற்றும் உங்கள் வாழ்க்கையில் ஒரு நோக்க உணர்வைப் பராமரித்தல் ஆகியவற்றின்மூலம் உங்கள் மனத்தைச் சுறுசுறுப்பாக வைத்திருங்கள்.
  • பங்குபெறுங்கள் மற்றும் இணைந்திருங்கள் : உங்கள் ஊரில் நினைவாற்றல் குழுக்கள் உள்ளனவா என்று பாருங்கள், அல்லது, நீங்கள் விரும்பும் மற்ற சமூகச் செயல்பாடுகளில் பங்கெடுங்கள்.
  • நலம் தரும் உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள் (உங்கள் வயது எதுவானாலும் இது உங்களுக்கு உதவும்).
  • அன்றாட வேலைகளைச் செய்வதில் உங்களுக்குத் தடுமாற்றம் இருந்தால், உதவியை நாடுங்கள். அல்லது, அன்றாட வேலைகளைச் செய்வதில் உங்களுக்குச் சிரமம் உள்ளதாக மற்றவர்கள் உணர்ந்தால், வல்லுநர்களிடம் அறிவுரை பெறுங்கள். நீங்கள் இயன்றவரை சுதந்தரமாக வாழ்வதற்கு உறவினர்களும் நண்பர்களும் சேவை நிறுவனங்களும் பல வழிகளில் உங்களுக்கு உதவலாம்.

திட்டமிடுதல்

உங்களுடைய பணத்தைக் கையாளுதல் போன்ற உங்கள் வாழ்க்கையின் முக்கியமான பகுதிகளைப்பற்றிய தீர்மானங்கள், அல்லது, மருத்துவத் தீர்மானங்களை எடுப்பது உங்களுக்குக் கடினமாக இருக்கிற ஒரு சூழ்நிலை வரலாம். அதுபோன்ற தீர்மானங்களை உங்கள் சார்பாக எடுக்கும் உரிமையை உங்கள் நம்பிக்கைக்குரிய உறவினர், நண்பர் அல்லது வழக்கறிஞரிடம் நீங்கள் கொடுக்கலாம். ஒருவேளை உங்களுடைய சிந்தனை டிமென்சியாவால் பாதிக்கப்படுவதற்குமுன்னால் நீங்கள் அந்தத் தீர்மானத்தை எடுத்திருந்தால் நீங்கள் எதை விரும்பியிருப்பீர்கள் என்பதன் அடிப்படையில் அவர்கள் அந்தத் தீர்மானத்தை எடுக்கலாம்.

இது நீடிக்கும் அதிகார ஆவணம் (LPA) என்று அழைக்கப்படுகிறது.24 LPAக்கு ஏற்பாடு செய்வதற்கு ஒரு வழக்கறிஞர் உங்களுக்கு உதவலாம். 2 வகை LPAக்கள் உள்ளன: ஒன்று, ‘சொத்து மற்றும் நிதி விவகார’ங்களைக் கையாள்வதற்கானது, இன்னொன்று, ‘நலம் மற்றும் நலவாழ்வு' தொடர்பான விவகாரங்களுக்கானது.

  • சொத்து மற்றும் நிதி விவகாரங்கள் LPA: வங்கிச் சேவை மற்றும் முதலீடுகள், சொத்து விற்பனை, வரி மற்றும் பலன்கள் போன்ற விஷயங்களைப்பற்றித் தீர்மானங்களை எடுப்பதற்கு வழக்கறிஞர்களை நியமிக்கலாம்.
  • நலம் மற்றும் நலவாழ்வு LPAக்கள்: மருத்துவக் குணப்படுத்தல், அன்றாடப் பராமரிப்பு மற்றும் வசிக்கும் இடம் போன்ற விஷயங்களைப்பற்றித் தீர்மானங்களை எடுப்பதற்கு வழக்கறிஞர்களை நியமிக்கலாம்.

அனைத்து LPAக்களையும் பயன்படுத்துவதற்குமுன்னால் அவற்றைப் பொதுப் பாதுகாவலர் அலுவலகத்தில் பதிவுசெய்யவேண்டும்.

தாங்கும் அதிகார ஆவணம் (EPA) தொடர்பாக ஒரு குறிப்பு: இப்போது EPAக்குப் பதில் LPA பயன்படுத்தப்படுகிறது. எனினும், 1 அக்டோபர் 2007க்கு முன் செயல்படுத்தப்பட்ட, செல்லுபடியாகிற ஓர் EPA தொடர்ந்து செல்லுபடியாகும், அது இன்னும் பதிவுசெய்யப்பட்டிருக்காவிட்டாலும்கூட.

முன்கூட்டிய தீர்மானங்கள்: ஒருவேளை, நீங்கள் மருத்துவக் குணப்படுத்தல்களைப்பற்றிய தீர்மானங்களை எடுக்கும் திறனை இழந்தால், வருங்காலத்தில் சில குறிப்பிட்ட மருத்துவச் சிகிச்சைகளை மறுக்கின்ற உங்கள் தீர்மானத்தைப் பதிவுசெய்துவைக்கலாம். உங்களுக்குப் பராமரிப்பை வழங்கும் தொழில் வல்லுநர்கள் இவற்றை மதிப்பார்கள்.25 இதை LPAவுடன் சேர்த்துச் செய்யலாம், அல்லது, தனியாகவும் செய்யலாம்.

‘இதுதான் நான்'

ஒருவருக்கு நினைவாற்றல் பிரச்சனைகள் இருந்தால், அவர்களைப்பற்றிய முக்கியத் தகவல்களைத் தொழில் வல்லுநர்கள் எளிதில் பார்ப்பதற்கு ஒரு வழி தேவைப்படுகிறது. 

இந்த நோக்கத்துக்கென, ‘இதுதான் நான்' என்கிற ஓர் ஆவணத்தை நிறைவுசெய்யலாம். இதில் ஒருவருடைய மருத்துவ வரலாறு, அவருடைய வாழ்க்கை மற்றும் விருப்பங்களைப்பற்றிப் பல பயனுள்ள தகவல்கள் உள்ளன. மருத்துவச் சந்திப்புகள் அல்லது மருத்துவமனை அனுமதிகளுக்கு அதை எடுத்துச்செல்லலாம், இது Alzheimers.org இணையத் தளத்தில் கிடைக்கிறது. 

வண்டி ஓட்டுதல்

ஒருவருக்கு டிமென்சியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்பதால் அவர் வண்டி ஓட்டுதலை நிறுத்தவேண்டியதில்லை. ஆனால், டிமென்சியா வளர வளர, வண்டி ஓட்டும் திறன்கள் குறையும். உங்களுடைய பார்வை, இடஞ்சார்ந்த விழிப்புணர்வில் மாற்றங்கள், கவனம் குறைதல் அல்லது தீர்மானித்தல் மற்றும் தீர்மானம் எடுத்தல் திறன்கள் பாதிக்கப்படுதல் ஆகியவற்றால் இது ஏற்படலாம். தங்களுடைய இந்தத் திறன்கள் குறைந்துகொண்டிருக்கின்றன என்பது மக்களுக்குத் தெரியாமலிருக்கலாம்.26

  • ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் ஒருவருக்கு டிமென்சியா வந்திருப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் தங்களுடைய பொருத்தமான உரிமம் வழங்கல் அலுவலகத்தை (ஓட்டுநர் மற்றும் வண்டி உரிமம் வழங்கல் அமைப்பு (DVLA) அல்லது, வடக்கு அயர்லாந்தில் ஓட்டுநர் மற்றும் வண்டி அமைப்பு (DVA)) உடனடியாகத் தொடர்புகொண்டு இதுபற்றித் தெரிவிக்கவேண்டும் என்று UK சட்டம் தெரிவிக்கிறது.27
  • டிமென்சியா கொண்ட ஒரு நபருடைய வண்டி ஓட்டும் திறனைப்பற்றி அவருடைய மருத்துவருக்குக் கவலை ஏற்பட்டால், அந்த நபர் உரிமம் வழங்கும் அமைப்புக்கு இதுபற்றித் தெரிவித்திருக்காவிட்டால், உரிமம் வழங்கும் அமைப்புக்கு இதைப்பற்றித் தெரிவிப்பது அந்த மருத்துவருடைய கடமையாகும்.28
  • டிமென்சியா உங்களுடைய ஓட்டும் திறனைப் பாதிப்பதுபற்றி உங்கள் மருத்துவருக்குக் கவலை ஏற்பட்டால், நீங்கள் வண்டி ஓட்டுதலை உடனடியாக நிறுத்தவேண்டும், அல்லது, DVLA/DVA விசாரணை முடிவுகள் வரும்வரையாவது வண்டி ஓட்டுதலை நிறுத்திவைக்கவேண்டும் என்று அவர் சொல்லலாம்.
  • ஓட்டுநர் தன்னுடைய காப்பீட்டுப் பாலிசி செல்லுபடியாவதை உறுதிசெய்வதற்கு, அவர் தன்னுடைய காப்பீட்டு நிறுவனத்திடமும் இதைப்பற்றித் தெரிவிக்கவேண்டும்.
  • உங்களுடைய வண்டி ஓட்டும் திறனில் டிமென்சியா என்னமாதிரியான தாக்கத்தைக் கொண்டுள்ளது என்பதைத் தெளிவுபடுத்துவதற்கு ஓர் ஓட்டுதல் மதிப்பீடு உதவலாம். உரிமம் வழங்கல் அமைப்பினர் நீங்கள் தொடர்ந்து வண்டி ஓட்டலாமா, கூடாதா என்று தீர்மானிப்பதற்கு இந்தத் தகவல் உதவலாம். இந்த மதிப்பீட்டுக்கு, உங்களிடம் செல்லுபடியாகக்கூடிய ஓட்டுநர் உரிமம் ஒன்று இருக்கவேண்டும். உரிமம் வழங்கல் அமைப்பின் தீர்மானத்துக்குக் காத்திருக்கும்போது நீங்கள் அதைச் செய்யலாம்.
  • பலர் வண்டி ஓட்டுவதைத் தாங்களாகவே நிறுத்திவிடுகிறார்கள், தங்கள் உரிமத்தை DVLA/DVAக்குத் திருப்பி அனுப்புகிறார்கள். இதன் பெயர் ‘தன்னார்வத்துடன் திருப்பிக் கொடுத்தல்’.

மனச்சோர்வு மற்றும் பதற்றம்

பொதுவாக, டிமென்சியா உள்ள மக்களிடம் மனச்சோர்வும் பதற்றமும் காணப்படுகின்றன. அதே நேரம், மனச்சோர்வு டிமென்சியாவைப்போல் தோன்றுவதும் சாத்தியம்தான்.29 டிமென்சியாவைப்போல் இதுவும் ஒருவர் தன்னைக் கவனித்துக்கொள்ளும் திறனைப் பாதிக்கக்கூடும். 

இதன் பெயர் ‘போலி-டிமென்சியா’. இதை அடையாளம் கண்டு குணப்படுத்துவது முதன்மையானதாகும். உங்களுக்கோ உங்களுடைய உறவினர் ஒருவருக்கோ மனச்சோர்வு இருக்கலாம் என்று நீங்கள் கவலை கொண்டால், இயன்றவரை உடனடியாக உங்கள் GPஐச் சந்தித்து அறிவுரை பெறுங்கள். மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகள் மற்றும் பேசுதல் சிகிச்சை மூலம் மனச்சோர்வைக் குணப்படுத்தலாம்.30 

உதவி மற்றும் ஆதரவைப் பெறுதல்

நிறைவாக, உங்களுடைய அல்லது இன்னொருவருடைய நினைவாற்றலைப்பற்றி நீங்கள் கவலை கொள்கிறீர்கள் என்றால், உங்கள் GPஐச் சந்தித்துப் பேசுங்கள். அவர் ஓர் உடற்பரிசோதனையையும் உங்கள் நினைவாற்றலைச் சரிபார்ப்பதற்குச் சில எளிய பரிசோதனைகளையும் நடத்துவார், இரத்தப் பரிசோதனை செய்யச்சொல்வார். தேவைப்பட்டால், உங்கள் மருத்துவர் உங்களை ஒரு சிறப்பு வல்லுநர் குழுவிடமோ உளவியலாளரிடமோ அல்லது ஒரு சிறப்பு மருத்துவரிடமோ அனுப்பலாம்.

அத்துடன், டிமென்சியாவின் எந்த நிலையிலும் தகவல்கள், ஆதரவை வழங்கக்கூடிய பிற அமைப்புகளைக் கீழே காணலாம். வழக்கமான வேலைகள், அன்றாடப் பராமரிப்பு அல்லது பலன்கள் தொடர்பாக உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், நீங்கள் உங்களுடைய உள்ளூர் அலுவல் அமைப்பைத் தொடர்புகொண்டு சமூகப் பராமரிப்பு மற்றும் கவனித்துக்கொள்வோரை ஆதரிக்கும் சேவைகளைப்பற்றிய அறிவுரைகளைப் பெறலாம்.

தகவலுக்கான மற்ற வளங்கள் மற்றும் உதவுகின்ற அமைப்புகள்

NHS Choices

உள்ளூர்ச் சேவைகள் மற்றும் டிமென்சியா பற்றிய தகவல்களுக்கான இணைப்புகள்.

அல்சைமர்'ஸ் கழகம்

அறிவுறுத்தல் மற்றும் ஆதரவுக்கான தேசிய உதவித் தொலைபேசி எண்: 0300 222 11 22.

மின்னஞ்சல்: helpline@alzheimers.org.uk

தேசிய டிமென்சியா உதவித் தொலைபேசி எண், டிமென்சியாவால் பாதிக்கப்பட்ட எவருக்கும் தகவல்களை, அறிவுறுத்தல்களை, ஆதரவை வழங்குகிறது. அவர்கள் இதைக் கவனித்தல், வழிகாட்டுதல் மற்றும் முறையான திசையில் அனுப்பிவைத்தல் ஆகியவற்றின் வழியாகச் செய்கிறார்கள்.

Age UK

அனைவருக்கும் வாழ்க்கை மேம்பாட்டுச் சேவைகள் மற்றும் முதன்மையான ஆதரவை வழங்குவதன்மூலம் அவர்களுடைய வாழ்க்கையின் பிற்பகுதியை மேம்படுத்துவதற்கு Age UK குழுமம் பணியாற்றுகிறது. Age UKஐ அழையுங்கள்: 0800 169 8787; மின்னஞ்சல்: contact@ageuk.org.uk

Carers UK

அறிவுரைத் தொலைபேசி எண்: 0808 808 7777. நண்பர்கள் அல்லது உறவினர்களுக்குப் பணம் பெறாத பராமரிப்பை வழங்கும் கவனித்துக்கொள்வோரை Carers UK ஆதரிக்கிறது.

குடிமக்கள் அறிவுறுத்தல் அமைப்பு

குடிமக்கள் அறிவுறுத்தல் அமைப்பானது இலவசமான, ரகசியமான மற்றும் சுதந்தரமான அறிவுரையை வழங்குகிறது. பலன்கள், நிதித் திட்டமிடல் அல்லது பராமரிப்பை ஏற்பாடு செய்தல் போன்றவற்றில் உதவி பெற, உங்கள் உள்ளூர் அலுவலகத்தைத் தொடர்புகொள்ளுங்கள்.

லிவி பாடி கழகம்

லிவி பாடீஸ் உடனான டிமென்சியாபற்றிய ஆய்வுகளுக்கு நிதியளிக்கிற, இந்த நோயைப்பற்றியும் அதன் தாக்கத்தைப்பற்றியும் புரிந்துகொள்ளவேண்டிய குடும்பங்கள் மற்றும் கவனித்துக்கொள்வோருக்கு உதவும் ஆதரவு மற்றும் தகவல்களை வழங்குகிற ஒரு தொண்டு நிறுவனம்.

சட்டக் கழகம்

அதிகார ஆவணத்தை உருவாக்குவது அல்லது தீர்மானங்களை முன்கூட்டியே எடுப்பது தொடர்பான சட்டப் பிரச்சனைகளைப்பற்றிய பல பயனுள்ள தகவல்களைச் சட்டக் கழகம் வழங்குகிறது. இதுபோன்ற விஷயங்களில் உதவக்கூடிய ஓரு வழக்கறிஞரைக் கண்டுபிடிக்கவும் இது உதவும்.

பாதுகாப்பு நீதிமன்றத்துக்கு விண்ணப்பம் போடுதல்

தன்னுடைய தனிப்பட்ட நலன், நிதி அல்லது நலவாழ்வுபற்றிய தீர்மானங்களை எடுக்கச் சிரமப்படும் ஒருவரை நீங்கள் அறிந்துள்ளீர்கள், அல்லது, அவரைக் கவனித்துக்கொண்டுள்ளீர்கள் என்றால், அவர் சார்பாக நீங்களோ இன்னொருவரோ தீர்மானங்களை எடுப்பதற்கென நீங்கள் பாதுகாப்பு நீதிமன்றத்துக்கு விண்ணப்பம் செய்யவேண்டியிருக்கும்.

பொதுப் பாதுகாவலர் அலுவலகம்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்முழுவதும் பரந்து விரிந்த பொறுப்புகளைக் கொண்டுள்ள ஓர் அமைப்பு. (ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்துக்கு வேறு ஏற்பாடுகள் உள்ளன). இது, தாங்கும் அதிகார ஆவணம் (EPA) மற்றும் நீடிக்கும் அதிகார ஆவணத்தைப் (LPA) பதிவுசெய்தல் மற்றும் பாதுகாப்பு நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் உதவியாளர்களை மேற்பார்வையிடுவதில் பொதுப் பாதுகாவலருக்கு உதவுகிறது.

மேலும் படிக்க

படித்தல் கழகம்

நன்கு படித்தலுக்கான புத்தகங்களைப் பரிந்துரைக்கும் இந்தத் திட்டம் டிமென்சியா கொண்ட மக்களையும் அவர்களைக் கவனித்துக்கொள்வோரையும் ஆதரிக்கிறது. இந்தப் புத்தகங்களை நல வல்லுநர்களும், டிமென்சியாவுடன் வாழ்ந்த அனுபவம் கொண்ட மக்களும் பரிந்துரைத்துள்ளார்கள்.

இந்தப் புத்தகங்களை நலத் தொழில் வல்லுநர்கள் பரிந்துரைக்கலாம், அல்லது, மக்களே அவற்றை விரும்பித் தேர்ந்தெடுக்கலாம், தங்களுடைய உள்ளூர் நூலகத்தில் இவற்றை இலவசமாகப் பெற்றுப் படிக்கலாம்.

இந்தப் புத்தகப் பட்டியலில் உள்ள தலைப்புகள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன: தகவல் மற்றும் அறிவுரை; டிமென்சியாவுடன் நன்கு வாழ்தல்; உறவினர்கள் மற்றும் கவனித்துக்கொள்வோருக்கான ஆதரவு மற்றும் தனிப்பட்ட கதைகள்.

  • அல்சைமர்'ஸ் மற்றும் பிற டிமென்சியாக்கள்: உங்கள் விரல் நுனியில் விடைகள். கேய்டன், கிரஹாம் & வார்னர். கிளாஸ் பதிப்பக (லண்டன்) நிறுவனம். 3ம் பதிப்பு. 2008.
  • உங்கள் நினைவாற்றல்: ஒரு பயனாளர் கையேடு. பாட்டெலெ. கார்ல்டன் புத்தகங்கள் (லண்டன்). மேம்படுத்தப்பட்ட பதிப்பு. 2004.
  • டிமென்சியாவுடன் நடனமாடுதல்: நான் டிமென்சியாவுடன் நேர்விதமாக வாழ்ந்த கதை. பிரைடென். ஜெஸ்ஸிகா கிங்க்ஸ்லெ பதிப்பாளர்கள் (லண்டன் & ஃபிலடெல்ஃபியா). 2005.

பார்வைக் குறிப்புகள்

  1. பிரின்ஸ், M. மற்றும் பலர். (2014). ஊட்டச்சத்தும் டிமென்சியாவும்: கிடைக்கும் ஆய்வுகளை ஆராய்தல். அல்சைமர்'ஸ் நோய் பன்னாட்டு அமைப்பு. லண்டன். [இணையத்தில்] இங்கு கிடைக்கிறது: https://www.alz.co.uk/nutrition-report [அணுகப்பட்டது 4 ஜூலை. 2019].
  2. அல்சைமர்'ஸ் கழகம். (2019). வழக்கமான வயதாதல் Vs டிமென்சியா. [இணையத்தில்] இங்கு கிடைக்கிறது: https://www.alzheimers.org.uk/about-dementia/symptoms-and-diagnosis/how-dementia-progresses/normal-ageing-vs-dementia [அணுகப்பட்டது 4 ஜூலை. 2019].
  3. பிரின்ஸ், M மற்றும் பலர். (2014). டிமென்சியா UK: புதுப்பிக்கப்பட்ட இரண்டாம் பதிப்பு. அல்சைமர்'ஸ் கழகம். [இணையத்தில்] இங்கு கிடைக்கிறது: http://eprints.lse.ac.uk/59437/1/Dementia_UK_Second_edition_-_Overview.pdf [அணுகப்பட்டது 4 ஜூலை. 2019]. பக்கம் 16.
  4. அல்சைமர்'ஸ் ஆராய்ச்சி UK. (2018). UKல் வயதுவாரியான பரவல். [இணையத்தில்] இங்கு கிடைக்கிறது: https://www.dementiastatistics.org/statistics/prevalence-by-age-in-the-uk/ [அணுகப்பட்டது 4 ஜூலை. 2019].
  5. அல்சைமர்'ஸ் ஆராய்ச்சி UK. (2018). மிதமான அறிவாற்றல் குறைபாடு. [இணையத்தில்] இங்கு கிடைக்கிறது: https://www.alzheimersresearchuk.org/about-dementia/types-of-dementia/mild-cognitive-impairment/about/ [அணுகப்பட்டது 4 ஜூலை. 2019]. 
  6. அல்சைமர்'ஸ் ஆராய்ச்சி UK. (2018). டிமென்சியாவின் வெவ்வேறு வகைகள். [இணையத்தில்] இங்கு கிடைக்கிறது: https://www.dementiastatistics.org/statistics/different-types-of-dementia/ [அணுகப்பட்டது 4 ஜூலை. 2019].
  7. வயதாதலுக்கான தேசியக் கல்விக் கழகம். (2017). அல்சைமர்'ஸ் நோய் வந்தால் மூளைக்கு என்ன ஆகிறது? [இணையத்தில்] இங்கு கிடைக்கிறது: https://www.nia.nih.gov/health/what-happens-brain-alzheimers-disease [அணுகப்பட்டது 4 ஜூலை. 2019].
  8. பிரிட்டிஷ் இதய அறக்கட்டளை. (2019). இரத்தக் குழாய் சார்ந்த டிமென்சியா. [இணையத்தில்] இங்கு கிடைக்கிறது: https://www.bhf.org.uk/informationsupport/conditions/vascular-dementia [அணுகப்பட்டது 4 ஜூலை. 2019].
  9. தேசிய நலச் சேவை. (2016). அறிமுகம்: லிவி பாடீஸ் உடனான டிமென்சியா. [இணையத்தில்] இங்கு கிடைக்கிறது: https://www.nhs.uk/conditions/dementia-with-lewy-bodies/  [அணுகப்பட்டது 4 ஜூலை. 2019].
  10. நெல்சன், P. மற்றும் பலர். (2019). லிம்பிக்-முதன்மையான, வயது-தொடர்பான TDP-43 என்செஃபாலோபதி (LATE): ஒருமித்த கருத்துக்கெனப் பணியாற்றும் குழுவின் அறிக்கை. மூளை. தொகுதி142:6. பக்கம் 1503-1527. [இணையத்தில்] இங்கு கிடைக்கிறது: https://academic.oup.com/brain/article/142/6/1503/5481202 [அணுகப்பட்டது 4 ஜூலை. 2019].
  11. அல்சைமர்'ஸ் அமைப்பு. (2019). முன் டெம்போரல் டிமென்சியா. [இணையத்தில்] இங்கு கிடைக்கிறது: https://www.alz.org/alzheimers-dementia/what-is-dementia/types-of-dementia/frontotemporal-dementia [அணுகப்பட்டது 4 ஜூலை. 2019].
  12. நல மற்றும் பராமரிப்பு உன்னதத்துக்கான தேசியக் கல்விக் கழகம். (2018) டிமென்சியா: டிமென்சியாவுடன் வாழும் மக்கள் மற்றும் அவர்களைக் கவனித்துக்கொள்வோருக்கான மதிப்பிடல், மேலாண்மை மற்றும் ஆதரவு. நல்ல வழிகாட்டல் 97. [இணையத்தில்] இங்கு கிடைக்கிறது: https://www.nice.org.uk/guidance/ng97/chapter/Recommendations#diagnosis [அணுகப்பட்டது 4 ஜூலை. 2019]. தரநிலை 1.2.13.
  13. பிரின்ஸ், M. மற்றும் பலர். (2014). உலக அல்சைமர் அறிக்கை 2014. டிமென்சியா மற்றும் ஆபத்தைக் குறைத்தல். பாதுகாக்கிற மற்றும் மாற்றக்கூடிய ஆபத்துக் காரணிகளின் ஆய்வு. அல்சைமர்'ஸ் நோய் பன்னாட்டு அமைப்பு, லண்டன் UK. [இணையத்தில்] இங்கு கிடைக்கிறது: https://www.alz.co.uk/research/WorldAlzheimerReport2014.pdf (PDF) [அணுகப்பட்டது 4 ஜூலை. 2019]. பக்கம் 66-83.  
  14. பிரின்ஸ், M. மற்றும் பலர். (2014). உலக அல்சைமர் அறிக்கை 2014. டிமென்சியா மற்றும் ஆபத்தைக் குறைத்தல். பாதுகாக்கிற மற்றும் மாற்றக்கூடிய ஆபத்துக் காரணிகளின் ஆய்வு. அல்சைமர்'ஸ் நோய் பன்னாட்டு அமைப்பு, லண்டன் UK. [இணையத்தில்] இங்கு கிடைக்கிறது: https://www.alz.co.uk/research/WorldAlzheimerReport2014.pdf (PDF) [அணுகப்பட்டது 4 ஜூலை. 2019]. பக்கம் 26-39.  
  15. பிரின்ஸ், M. மற்றும் பலர். (2014). உலக அல்சைமர் அறிக்கை 2014. டிமென்சியா மற்றும் ஆபத்தைக் குறைத்தல். பாதுகாக்கிற மற்றும் மாற்றக்கூடிய ஆபத்துக் காரணிகளின் ஆய்வு. அல்சைமர்'ஸ் நோய் பன்னாட்டு அமைப்பு, லண்டன் UK. [இணையத்தில்] இங்கு கிடைக்கிறது: https://www.alz.co.uk/research/WorldAlzheimerReport2014.pdf (PDF) [அணுகப்பட்டது 4 ஜூலை. 2019]. பக்கம் 42-63.  
  16. பிரின்ஸ், M. மற்றும் பலர். (2014). உலக அல்சைமர் அறிக்கை 2014. டிமென்சியா மற்றும் ஆபத்தைக் குறைத்தல். பாதுகாக்கிற மற்றும் மாற்றக்கூடிய ஆபத்துக் காரணிகளின் ஆய்வு. அல்சைமர்'ஸ் நோய் பன்னாட்டு அமைப்பு, லண்டன் UK. [இணையத்தில்] இங்கு கிடைக்கிறது: https://www.alz.co.uk/research/WorldAlzheimerReport2014.pdf (PDF) [அணுகப்பட்டது 4 ஜூலை. 2019]. பக்கம் 61.  
  17. அல்சைமர்'ஸ் ஆராய்ச்சி UK. (2018). மரபணுக்கள் மற்றும் டிமென்சியா. [இணையத்தில்] இங்கு கிடைக்கிறது: https://www.alzheimersresearchuk.org/about-dementia/helpful-information/genes-and-dementia/ [அணுகப்பட்டது 4 ஜூலை. 2019].
  18. நைட், R. மற்றும் பலர். (2018). டிமென்சியாவின் அறிவாற்றல் அறிகுறிகளைக் குணப்படுத்துவதில் அசிடில்கோலைன்ஸ்டெராசெ தடுப்பான்கள் மற்றும் மெமன்டைனின் செயல்திறன்பற்றிய அமைப்பு சார்ந்த ஆராய்ச்சி மற்றும் தன்மேற்கோள் பகுப்பாய்வு. டிமென்சியா மற்றும் முதுமை சார்ந்த அறிவாற்றல் குறைபாடுகள், தொகுதி 45, எண் 3-4. பக்கம் 131-151. [இணையத்தில்] இங்கு கிடைக்கிறது: https://www.karger.com/Article/FullText/486546 [அணுகப்பட்டது 4 ஜூலை. 2019].
  19. நல மற்றும் பராமரிப்பு உன்னதத்துக்கான தேசியக் கல்விக் கழகம். (2018) டிமென்சியா: டிமென்சியாவுடன் வாழும் மக்கள் மற்றும் அவர்களைக் கவனித்துக்கொள்வோருக்கான மதிப்பிடல், மேலாண்மை மற்றும் ஆதரவு. நல்ல வழிகாட்டல் 97. [இணையத்தில்] இங்கு கிடைக்கிறது: https://www.nice.org.uk/guidance/ng97/chapter/Recommendations#pharmacological-interventions-for-dementia [அணுகப்பட்டது 4 ஜூலை. 2019]. தரநிலைகள் 1.5.10-1.5.13.
  20. உலகச் சுகாதார அமைப்பு. (2019). அறிவாற்றல் குறைதல் மற்றும் டிமென்சியாவின் ஆபத்தைக் குறைத்தல்: WHO வழிகாட்டுதல்கள். ஜெனோவா: உலக சுகாதார அமைப்பு. [இணையத்தில்] இங்கு கிடைக்கிறது:  https://apps.who.int/iris/bitstream/handle/10665/312180/9789241550543-eng.pdf?ua=1 (PDF) [அணுகப்பட்டது 4 ஜூலை. 2019]. பக்கம் 19.
  21. ஸ்பெக்டர், A. மற்றும் பலர். (2003). டிமென்சியா கொண்ட மக்களுக்குச் சான்று அடிப்படையிலான அறிவாற்றல் தூண்டல் குணப்படுத்தல் திட்டத்தின் செயல்திறன்: சீரற்றதாக்கப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட பரிசோதனை. பிரிட்டிஷ் உளவியல் மருத்துவ இதழ். தொகுதி 183 பக்கம் 248-254. [இணையத்தில்] இங்கு கிடைக்கிறது: http://www.cstdementia.com/media/document/spector-et-al-2003.pdf [அணுகப்பட்டது 4 ஜூலை. 2019].
  22. வுட்ஸ், B. மற்றும் பலர். (2018). டிமென்சியாவுக்கான நினைவூட்டல் குணப்படுத்தல். அமைப்பு அடிப்படையிலான ஆய்வுகளுக்கான கொச்ரானெ தரவுத்தளம் 2018, இதழ் 3. [இணையத்தில்] இங்கு கிடைக்கிறது: https://www.cochranelibrary.com/cdsr/doi/10.1002/14651858.CD001120.pub3/full [அணுகப்பட்டது 4 ஜூலை. 2019].
  23. டிமென்சியா ஆய்வில் இணையுங்கள். (2019). சேவையைப்பற்றி. [இணையத்தில்] இங்கு கிடைக்கிறது: https://www.joindementiaresearch.nihr.ac.uk/content/about [அணுகப்பட்டது 4 ஜூலை. 2019].
  24. பொதுக் காப்பாளர் அலுவலகம். (2019). ஒரு தாங்கும் அதிகார ஆவணத்தை உருவாக்குங்கள், பதிவு செய்யுங்கள் அல்லது முடியுங்கள். அரசு டிஜிட்டல் சேவை. [இணையத்தில்] இங்கு கிடைக்கிறது: https://www.gov.uk/power-of-attorney [அணுகப்பட்டது 4 ஜூலை. 2019].
  25. தேசிய நலச் சேவை. (2017). மேம்பட்ட தீர்மானம் (நன்கு வாழ்தல்); வாழ்வின் முடிவு நிலைப் பராமரிப்பு. [இணையத்தில்] இங்கு கிடைக்கிறது: https://www.nhs.uk/conditions/end-of-life-care/advance-decision-to-refuse-treatment/ [அணுகப்பட்டது 4 ஜூலை. 2019].
  26. அல்சைமர்'ஸ் கழகம். (2019). வண்டி ஓட்டுதலும் டிமென்சியாவும். [இணையத்தில்] இங்கு கிடைக்கிறது: https://www.alzheimers.org.uk/get-support/staying-independent/driving-and-dementia [அணுகப்பட்டது 4 ஜூலை. 2019].
  27. போக்குவரத்துத் துறை. (2019). டிமென்சியா மற்றும் வண்டி ஓட்டுதல். அரசு டிஜிட்டல் சேவை. [இணையத்தில்] இங்கு கிடைக்கிறது: https://www.gov.uk/dementia-and-driving [அணுகப்பட்டது 4 ஜூலை. 2019].
  28. பொது மருத்துவ அவை. (2019). நோயாளிகள் வண்டி ஓட்டத் தகுதியுள்ளவர்களா என்னும் தீர்மானம் மற்றும் கவலைகளை DVLA அல்லது DVAக்குப் புகாரளித்தல். [இணையத்தில்] இங்கு கிடைக்கிறது: https://www.gmc-uk.org/ethical-guidance/ethical-guidance-for-doctors/confidentiality---patients-fitness-to-drive-and-reporting-concerns-to-the-dvla-or-dva/patients-fitness-to-drive-and-reporting-concerns-to-the-dvla-or-dva [அணுகப்பட்டது 4 ஜூலை. 2019].
  29. தாகுர், M. (2007). போலி டிமென்சியா. நலம் மற்றும் வயதாதல்பற்றிய கலைக் களஞ்சியம்.  SAGE பதிப்பகம் Inc.  பக்கம் 477-8. [இணையத்தில்] இங்கு கிடைக்கிறது: http://go.galegroup.com/ps/i.do?p=GVRL&u=cuny_laguardia&id=GALE|CX2661000198&v=2.1&it=r&sid=GVRL&asid=3ad1e77f [அணுகப்பட்டது 4 ஜூலை. 2019].
  30. நல மற்றும் பராமரிப்பு உன்னதத்துக்கான தேசியக் கல்விக் கழகம். (2009) வயதுவந்தோரில் மனச்சோர்வு: அடையாளம் காணுதல் மற்றும் கையாளுதல். நல்ல மருத்துவ வழிகாட்டல் 90. [இணையத்தில்] இங்கு கிடைக்கிறது: https://www.nice.org.uk/guidance/cg90/chapter/1-Guidance#stepped-care [அணுகப்பட்டது 4 ஜூலை. 2019]. தரநிலை 1.2.

This translation was produced by CLEAR Global (Mar 2024)

Read more to receive further information regarding a career in psychiatry