பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு (OCD)

Obsessive-compulsive disorder (OCD)

Below is a Tamil translation of our information resource on obsessive-compulsive disorder (OCD). You can also view our other Tamil translations.

"அவர் ஒரு பெருவிருப்பம் கொண்ட கால்பந்தாட்ட விசிறி."
“அவள் காலணிகளின் மீது பெருவிருப்பம் கொண்டவர்."
"அவர் ஒரு கட்டாயப் பொய்யர்."

ஏதோ ஒன்றைப்பற்றிக் காரணமில்லாமல் நிறையச் சிந்திக்கிற, அல்லது, அதைத் திரும்பத் திரும்பச் செய்கிற மக்களைப் பற்றிப் பேசும்போது நாம் இந்தச் சொற்றொடர்களைப் பயன்படுத்துகிறோம். இது பொதுவாக ஒரு பிரச்சனை அல்ல, மற்றும்  சில வேலைகளில், உதவியாகக் கூட இருக்கும்.

இருப்பினும், சிலர் மனத்தில் துன்பம் தரும் எண்ணங்கள் திரும்பத் திரும்ப வருகின்றன, அல்லது, ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் செய்யவேண்டும் என்கிற துடிப்பு வருகிறது. இது உங்கள் வாழ்க்கையின்மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பிக்கலாம், விஷயங்களை அனுபவிக்க இயலாதபடி உங்களைத் தடுக்கலாம், மற்றும், நீங்கள் செய்யவேண்டிய விஷயங்களை செய்யாதபடி கூட உங்களைத் தடுக்கலாம்.

அதனால், ஒருவேளை:

  • உங்கள் மனதில் பயங்கரமான எண்ணங்கள் வருகின்றன, அவற்றைத் தடுக்க நீங்கள் போராடினாலும்

அல்லது

  • நீங்கள் பொருட்களைத் தொட வேண்டும் அல்லது எண்ண வேண்டும் அல்லது துவைத்தல் போன்ற அதே செயலை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும்

உங்களுக்குப் பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு (OCD) இருக்கலாம்.

இந்தச் சிற்றேடு, பெருவிருப்பங்கள் அல்லது நிர்பந்தங்களினால் தொல்லைகளை எதிர்கொள்ளுகிற எந்த ஒரு நபருக்குமானது. குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மற்றும் --பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு (OCD) பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும் என்று விரும்புகிற எவருக்கும் இது உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.

பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு (OCD) இருந்தால் எப்படி இருக்கும், அதைக் கையாள்வதற்குக் கிடைக்கும் சில உதவிகள், அவை எவ்வளவு நன்றாக வேலை செய்கின்றன, நீங்கள் உங்களுக்கே உதவிக்கொள்வது எப்படி, மனச்சோர்வில் உள்ள இன்னொருவருக்கு உதவுவது எப்படி என்றெல்லாம் இது விளக்குகிறது. பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு (OCD) பற்றி நமக்குத் தெரியாத சில விஷயங்களையும் இது குறிப்பிடுகிறது. இந்தச் சிற்றேட்டின் முடிவில், மேலும் தகவல்களைக் கண்டறிவதற்கான பிற இடங்களின் பட்டியல் ஒன்றும், இந்தச் சிற்றேடு எந்த ஆராய்ச்சியின் அடிப்படையிலானது என்பதற்கான சான்றாதாரங்களும் வழங்கப்பட்டுள்ளன.

பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு (OCD) இருந்தால் எப்படி இருக்கும்?

பெருவிருப்பக் கட்டாயக் குறைபாட்டின் (OCD) கூறுகள்

பெருவிருப்பக் கட்டாயக் குறைபாட்டில் (OCD) மூன்று முக்கியப் பகுதிகள் உள்ளன.

  • பெருவிருப்பங்கள் -- உங்களைப் பதற்றப்படுத்தும் எண்ணங்கள்
  • உணர்வுகள் - நீங்கள் உணரும் பதற்றம்
  • தூண்டுதல்கள் - உங்கள் பதற்றத்தைக் குறைப்பதற்கு நீங்கள் செய்யும் செயல்கள்

இவற்றை நாம் இன்னும் விளக்கமாகப் பார்ப்போம்.

பெருவிருப்பங்கள் -- உங்களைப் பதற்றப்படுத்தும் எண்ணங்கள்

"என் குழந்தை மகளுக்கு தீங்கு விளைவிப்பேன் என்று நான் அஞ்சுகிறேன். நான் அவ்வாறு செய்ய விரும்பவில்லை என்று எனக்குத் தெரியும். ஆனால், என் தலைக்குள் மோசமான எண்ணங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. நான் கட்டுப்பாட்டை இழந்து அவளை ஒரு கத்தியால் குத்தும் காட்சி எனக்குத் தெரிகிறது. நான் இந்த எண்ணங்களை விரட்டவேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி, ஒரு வழிபாட்டைச் சொல்வதுதான். அதன்பிறகு, "நான் அவளை மிகவும் நேசிக்கிறேன் என்பது எனக்குத் தெரியும்" என்பதுபோன்ற ஒரு நல்ல எண்ணத்தை உண்டாக்கிக் கொள்வதுதான். பொதுவாக, அதன்பிறகு நான் சற்று நன்றாக உணர்கிறேன், அடுத்த முறை அந்த மோசமான காட்சிகள் என் தலையில் தோன்றும்வரை. என் வீட்டில் உள்ள கூரான பொருட்கள் மற்றும் கத்திகள் அனைத்தையும் நான் ஒளித்துவைத்துள்ளேன். நானே என்னுள் நினைக்கிறேன் "இப்படி யோசிக்க நீ ஒரு பயங்கரமான தாயாக இருக்க வேண்டும். எனக்குப் பைத்தியம் பிடிக்கிறது என்று நான் நினைக்கிறேன் ". -- டான்
  • எண்ணங்கள் – மகிழ்ச்சியற்ற, அதிர்ச்சியளிக்கிற அல்லது மதிப்புக்குறைவான ஒற்றைச் சொற்கள், சிறு சொற்றொடர்கள் அல்லது சந்தங்கள். நீங்கள் அவற்றைப் பற்றிச் சிந்திக்காமலிருக்க முயல்கிறீர்கள். ஆனால், அவை உங்களை விட்டுச் செல்வதில்லை. நீங்கள் (கிருமிகள், அழுக்கு அல்லது நோயால்) மாசுப்படுத்தப்படலாம் என்றோ, நீங்கள் கவனமாக இல்லாததால் யாராவது பாதிக்கப்படக்கூடும் என்றோ நீங்கள் கவலைப்படுகிறீர்கள்.
  • உங்கள் மனத்தில் காட்சிகள் – உங்கள் குடும்பத்தினர் இறந்துபோயிருப்பதுபோல, அல்லது, நீங்கள் உங்கள் இயல்புக்கு முற்றிலும் பொருந்தாத வன்முறை அல்லது பாலுறவுச் செயல் ஒன்றில் ஈடுபடுவதுபோல - ஒருவரைக் குத்துதல் அல்லது துஷ்பிரயோகம் செய்தல் அல்லது துரோகம் செய்தல். இத்தகைய எண்ணங்கள் பாதிக்கப்பட்டவருக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும், தொழில் வல்லுநர்களுக்கும் கூட மிகவும் ஆபத்தானவை. ஆனால், தாங்கள் இந்த எண்ணங்களைச் செயல்படுத்திவிடுவோமோ என்று பெருவிருப்பம் கொண்டவர்கள் அஞ்சினாலும், அவர்கள் இவற்றைச் செயல்படுத்துவதில்லை என்று நமக்குத் தெரியும். பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு (OCD) கொண்ட ஒருவர் பிறருக்குத் தீங்கு செய்வதற்கான ஆபத்து, சமூகத்தின் மற்ற உறுப்பினர்களைவிடக் கூடுதலாக இல்லை. எனினும், உங்களுக்கு அத்தகைய எண்ணங்கள் இருந்தால், பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு (OCD) கொண்டோருக்குச் சிகிச்சை அளிப்பதில் சிறப்பு அனுபவம் கொண்ட மன நலத் தொழில்வல்லுனர் ஒருவரைச் சந்திப்பது நல்லது.
  • ஐயங்கள் – நீங்கள் யாருக்காவது விபத்து அல்லது துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடுமோ என்று மணிக்கணக்கில் யோசிக்கிறீர்கள். நீங்கள் உங்கள் காரில் யாரையோ இடித்துத் தள்ளிவிட்டீர்கள் என்றோ, அல்லது உங்கள் கதவுகள் மற்றும் சாளரங்களை மூட மறந்துவிட்டீர்கள் என்றோ கவலை கொள்ளக்கூடும்.
  • திரும்பத் திரும்பச் சிந்தித்தல் – இதைச் செய்யலாமா அல்லது அதைச் செய்யலாமா என்று நீங்கள் உங்களுடனே தொடர்ந்து வாதாடுகிறீர்கள். அதனால், உங்களால் எளிய தீர்மானங்களைக் கூட எடுக்க இயலுவதில்லை.
  • எதையும் மிகச் சிறப்பாகச் செய்யும் விருப்பம் – விஷயங்கள் சரியான வரிசையில் இல்லாவிட்டால், சீரானதாக இல்லாவிட்டால் அல்லது சரியான இடத்தில் இல்லாவிட்டால், மற்றவர்களுக்கு இல்லாத வகையில் நீங்கள் கவலைப்படுகிறீர்கள். எடுத்துக்காட்டாக, புத்தக அடுக்கில் உள்ள புத்தகங்கள் சரியான வரிசையில் இல்லை என்னும் பக்ஷத்தில்.

உணர்வுகள் -- நீங்கள் உணரும் பதற்றம்

"எதுவும் தவறாகிவிடக்கூடாது என்பதைச் சரிபார்ப்பதிலேயே என்னுடைய முழு நாளும் செல்கிறது. காலையில் வீட்டிலிருந்து வெளியில் வருவதற்கு எனக்கு ஒரு மணி நேரம் ஆகிறது, ஏனென்றால் நான் குக்கர் போன்ற அனைத்து மின் சாதனங்களையும் அணைத்துவிட்டேனா, எல்லாச் சாளரங்களையும் மூடிவிட்டேனா என்று எனக்கு உறுதியாகத் தெரிவதே இல்லை. அதன்பிறகு, எரிவாயு அடுப்பு அணைக்கப்பட்டிருக்கிறதா என்று நான் ஐந்து முறை சரிபார்க்கிறேன். ஆனால், அது சரியாகத் தோன்றாவிட்டால், நான் அனைத்தையும் இன்னொருமுறை செய்யவேண்டும். அதன்பிறகு, இவை அனைத்தையும் எனக்காக இன்னொருமுறை சரிபார்க்கும்படி நான் என் துணைவரிடமும் சொல்கிறேன். பணியிடத்தில் நான் எப்போதும் மற்றவர்களைவிடப் பின்தங்கியிருக்கிறேன். ஏனெனில், ஒருவேளை நான் ஏதாவது தவறு செய்துவிட்டேனோ என்று நான் அனைத்தையும் திரும்பத் திரும்பப் பல முறை சரிபார்க்கிறேன். ஒருவேளை நான் அவற்றைச் சரிபார்க்காவிட்டால், எனக்கு மிகவும் கவலை வருகிறது. என்னால் அதைத் தாங்கிக்கொள்ள இயலுவதில்லை. இது கேலிக்கிடமானது என்று எனக்குத் தெரியும். ஆனால், ஏதாவது மோசமாக நடந்துவிட்டால் அது என் தவறுதான் என்று எனக்குத் தோன்றுகிறது." -- ஜான்
  • நீங்கள் பதட்டமாக, கவலையாக, பயமாக, குற்ற உணர்வாக, வெறுப்பாக அல்லது மனச்சோர்வாக உணர்கிறீர்கள்.
  • உங்களுடைய பெருவிருப்ப நடைமுறை அல்லது சடங்கைச் செய்தால் நீங்கள் நல்லபடி உணர்கிறீர்கள். ஆனால், அது நெடுநேரம் நீடிப்பதில்லை.

நிர்பந்தங்கள்-- உங்கள் பதற்றத்தைக் குறைப்பதற்கு நீங்கள் செய்யும் செயல்கள்

"மற்றவர்களிடமிருந்து எனக்கு ஏதாவது வந்துவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன். நான் கிருமிகள் பரவுவதைத் தடுப்பதற்கென என்னுடைய வீட்டிலுள்ள அனைத்துப் பரப்புகளையும் பல மணிநேரம் தூய்மைப்படுத்துகிறேன், ஒவ்வொரு நாளும் பல முறை என் கைகளைக் கழுவுகிறேன். இயன்றால், நான் வீட்டை விட்டு வெளியில் செல்லாமலிருக்க முயல்கிறேன். என் கணவரும் குழந்தைகளும் வீடு திரும்பியதும், அவர்கள் எங்கெல்லாம் சென்றார்கள் என்று நான் விளக்கமாகக் கேட்கிறேன், ஒருவேளை, அவர்கள் மருத்துவமனை போன்ற ஆபத்தான இடத்துக்குச் சென்றிருப்பார்களானால் என்பதினால். அவர்கள் எல்லா உடைகளையும் கழற்றிவிட்டு, நன்றாகக் குளித்துவிட்டு வரவேண்டும் என்று நான் சொல்கிறேன். இந்த அச்சங்களெல்லாம் முட்டாள்தனமானவை என்பது என் மனத்தின் ஒரு பகுதிக்குத் தெரிகிறது. என் குடும்பத்தினர் இதை எண்ணி எரிச்சலடைகிறார்கள். ஆனால், இது நெடுநாட்களாக நடைபெறுவதால், இப்போது என்னால் இதை நிறுத்தமுடியவில்லை." - லிஜ்
  • பெருவிருப்ப எண்ணங்களைத் திருத்துதல் – எண்ணுதல், வழிபடுதல் அல்லது ஒரு சிறப்புச் சொல்லைத் திரும்பத் திரும்பச் சொல்லுதல் போன்ற மாற்று ‘நடுநிலைப்படுத்தும்' எண்ணங்களை நீங்கள் நினைக்கிறீர்கள். இவை மோசமான செயல்கள் நடக்காதபடி தடுப்பதாக உணர்வு உண்டாகிறது. உங்களைத் தொந்தரவு செய்கிற மகிழ்ச்சியற்ற எண்ணங்கள் அல்லது காட்சிகளை விரட்டுவதற்கான ஒரு வழியாகவும் இது இருக்கலாம்.
  • சடங்குகள் – நீங்கள் அடிக்கடி உங்கள் கைகளைக் கழுவுகிறீர்கள், செயல்களை மிகவும் மெதுவாகவும் கவனமாகவும் செய்கிறீர்கள்,அநேகமாக பொருட்கள் அல்லது செயல்களை ஒரு குறிப்பிட்ட வகையில் ஒழுங்குபடுத்துகிறீர்கள். இது அதிக நேரம் எடுப்பதால், எங்கும் செல்ல அல்லது பயனுள்ள எதையும் செய்ய பல ஆண்டுகள் ஆகும்.
  • சரிபார்த்தல் – உங்கள் உடலில் மாசு படிந்திருக்கிறதா, உபகரணங்கள் அணைக்கப்பட்டுள்ளனவா, வீடு பூட்டப்பட்டுள்ளதா, அல்லது நீங்கள் பயணம் செய்யும் வழி பாதுகாப்பானதா என்றெல்லாம் சரிபார்க்கிறீர்கள்.
  • தவிர்த்தல் – கவலை தரும் எண்ணங்களை நினைவூட்டும் எதையும் தவிர்க்கிறீர்கள். நீங்கள் குறிப்பிட்ட பொருட்களைத் தொடுவதை, சில இடங்களுக்குச் செல்வதை, ஆபத்துக்குத் துணிவதை அல்லது பொறுப்பு ஏற்றுக்கொள்வதைத் தவிர்க்கிறீர்கள். எடுத்துக்காட்டாக, சமையலறையில் கூரான கத்திகள் உள்ளன என்பதால், நீங்கள் சமையலறைக்குச் செல்வதைத் தவிர்க்கக்கூடும்.
  • பதுக்கிவைத்தல் – பயனற்ற, தேய்ந்துபோன உடைமைகளைச் சேர்த்துவைக்கிறீர்கள். உங்களால் எதையும் வேண்டாம் என்று தூக்கி எறிய முடியாது.
  • மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தல் – எல்லாம் சரியாக இருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லும்படி நீங்கள் மற்றவர்களிடம் திரும்பத் திரும்பக் கேட்கிறீர்கள்.

பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு (OCD) எவ்வளவு பொதுவானது?

50 பேரில் சுமார் 1 நபர் தன்னுடைய வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் பெருவிருப்பக் கட்டாயக் குறைபாட்டால் (OCD) துன்பப்படுகிறார். இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாகப் பொருந்துகிறது. இதன் பொருள், U.K.-வில் .ல் 1 மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு இந்த நிலை உள்ளது.

பிரபல பாதிக்கப்பட்டவர்களில் உயிரியலாளர் சார்லஸ் டார்வின், முன்னோடி செவிலியர் புளோரன்ஸ் நைட்டிங்கேல், நடிகை கேமரூன் டயஸ் மற்றும் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் ஆகியோர் அடங்குவர்.

நீங்கள் ‘நிர்பந்தமாக' சூதாடினால், சாப்பிட்டால், அல்லது குடித்தால் உங்களுக்கு பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு (OCD) இருக்குமா?

இல்லை. 'நிர்பந்தம்' மற்றும் 'பெருவிருப்பம்' என்ற சொற்கள் சில நேரங்களில் சூதாடுபவர்கள், மது அருந்துபவர்கள், ஷாப்பிங் செய்பவர், தெரு மருந்துகளைப் பயன்படுத்துபவர்கள் - அல்லது அதிக உடற்பயிற்சி செய்பவர்களை விவரிக்க சிலசமயம் பயன்படுத்தப்படுகின்றன.

இருந்தாலும், இந்த நடவடிக்கைகள் மகிழ்ச்சி தரக்கூடியவைகளாக இருக்கலாம். பெருவிருப்பக் கட்டாயக் குறைபாட்டில் (OCD) வரும் கட்டாயங்கள் ஒருபோதும் மகிழ்ச்சி தருவதில்லை - அவை எப்போதும் மகிழ்ச்சியற்ற தேவை அல்லது சுமையைப் போன்று உணரப்படுகின்றன.

பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு (OCD) எந்த அளவுக்கு மோசமாகலாம்?

இது நிறைய மாறுபடும், ஆனால் நீங்கள் தொடர்ந்து பெருவிருப்பக் கட்டாயக் குறைபாட்டைச் (OCD) சமாளிக்க வேண்டியதில்லை என்றால், வேலை, உறவுகள் மற்றும் குடும்ப வாழ்க்கை அனைத்தும் அதிக உற்பத்தித்திறன்  மற்றும் திருப்திகரமாக இருக்கும்.

தீவிரப் பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு (OCD) கொண்டவர்களால் வழக்கமான வேலைகளைச் செய்யவோ, குடும்ப வாழ்க்கையில் பங்கேற்கவோ இயலாது -- அவர்கள் தங்கள் குடும்பத்துடன் நன்கு பழகக்கூட இயலாது.

குறிப்பாக, உங்கள் சடங்குகளில் அவர்களை ஈடுபடுத்த முயற்சித்தால் உங்கள் குடும்பத்தினர் வருத்தப்படலாம்.

பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு (OCD) கொண்டவர்கள் கட்டுப்பாட்டை இழப்பார்களா?

இல்லை. பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு (OCD) கொண்டவர்கள் கட்டுப்பாட்டை இழப்பதில்லை. இருப்பினும், அவர்கள் பல நேரங்களில் இதைப்பற்றி அதிகக் கவலை கொள்கிறார்கள். ‘எனக்குப் பைத்தியம் பிடிக்கிறதா?’ அல்லது ‘நான் பைத்தியமாகிறேனா?’ என்றுகூட அவர்கள் கேட்கலாம். பல நேரங்களில், தாங்கள் எப்படி இருக்கிறோம் என்பதை எண்ணி இவர்கள் வெட்கமாக உணர்வார்கள், அது இவர்களுடைய பிழை இல்லை என்றாலும், அதை மறைக்க முயல்வார்கள்.

நீங்கள் கட்டுப்பாட்டை இழந்துவிடுவீர்கள் என்று நீங்கள் கவலைப்படலாம். ஆனால், இது மிகவும் அரிதானது என்பது நமக்குத் தெரியும்.

பெருவிருப்பக் கட்டாயக் குறைபாட்டிற்கு (OCD) ஒத்த நிலைகள் எவை?

பெருவிருப்பக் கட்டாயக் குறைபாட்டுடன் (OCD) சேர்ந்து வரக்கூடிய, அல்லது மற்ற ஒற்றுமைகளைக் கொண்ட வேறு பல நிலைகள் உள்ளன.

  • உடல் அழகின்மை என நினைக்கும் குறைபாடு அல்லது ‘கற்பனை செய்துகொள்ளப்படும் அழகின்மையால் வரும் துன்பம்'. உங்கள் முகத்தில் அல்லது உடலில் ஒரு பகுதி தவறான வடிவத்தில் உள்ளது என்று நீங்கள் நம்புகிறீர்கள், அதைச் சரிபார்ப்பதற்குக் கண்ணாடியின்முன் பல மணிநேரங்களைச் செலவிடுகிறீர்கள், அதை மறைக்க முயல்கிறீர்கள். நீங்கள் வெளியில் செல்வதையேகூட நிறுத்திவிடலாம்.
  • டிரைசோடில்லோமேனியா - உங்கள் முடி அல்லது கண்ணிமைகளைப் பிடுங்க நினைக்கும் துடிப்பு.
  • நலம் சார்ந்த பதற்றம் (ஹைப்போசான்ட்ரியாசிஸ்) -- புற்றுநோய் போன்ற ஒரு தீவிர உடல் நோய் வந்துவிடுமோ என்கிற ஓர் அச்சம்.
  • பல நேரங்களில், டூரெட்டெஸ் நோய்க்குறி (ஒருவர் திடீரென்று கத்துதல் அல்லது கட்டுப்பாட்டை இழந்து வெட்டி இழுத்தல்) கொண்ட மகளுக்கு பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடும் (OCD) உள்ளது.
  • அஸ்பெர்ஜெர்'ஸ் நோய்க்குறி போன்ற ஆட்டிசத்தின் சில வடிவங்களைக் கொண்ட குழந்தைகள் மற்றும் வயதுவந்தவர்களுக்கு பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு (OCD) இருப்பதாகத் தோன்றலாம். ஏனெனில், விஷயங்கள் ஒரேமாதிரி இருக்கவேண்டும் என்று இவர்கள் விரும்புவார்கள். மேலும், இவர்கள் ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் செய்ய விரும்பக்கூடும்.

பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு (OCD) எப்போது தொடங்குகிறது?

பல குழந்தைகளுக்கு மிதமான நிர்பந்தங்கள் உள்ளன. இவர்கள் தங்களுடைய பொம்மைகளை மிகத் துல்லியமாக ஒழுங்கமைக்கலாம், அல்லது, நடைபாதையில் உள்ள விரிசல்களில் கால் வைப்பதைத் தவிர்க்கலாம். பொதுவாக, இவர்கள் வளர வளர இது சரியாகிவிடும்.

வயதுவந்தவர்களுக்கு வருகிற பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு (OCD) பொதுவாகப் பதின்பருவத்தில் அல்லது இருபதுகளின் முற்பகுதியில் தொடங்குகிறது. அறிகுறிகள் காலப்போக்கில் வந்து போகலாம், ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் பல ஆண்டுகள் பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு (OCD) இருக்கும் வரை உதவியை நாட மாட்டார்கள்.

இதற்கு உதவியை நாடாவிட்டால் அல்லது சிகிச்சை அளிக்காவிட்டால் என்ன ஆகும்?

பெருவிருப்பக் கட்டாயக் குறைபாட்டின் (OCD) அறிகுறிகள் சிறிது காலத்திற்கு மேம்படலாம் அல்லது நின்றுவிடலாம், ஆனால், பல நேரங்களில் அவை திரும்ப வருகின்றன. சிலர் மெதுவாக மோசமடைவார்கள், மற்றவர்களுக்கு மன அழுத்தம் அல்லது மனச்சோர்வு இருக்கும்போது அறிகுறிகள் மோசமடைகின்றன.

பொதுவாக, சிகிச்சையளித்தல் உதவுகிறது.

பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு (OCD) எதனால் வருகிறது?

பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு (OCD) உருவாகிறதா என்பதைப் பாதிக்கும் பல காரணிகள் உள்ளன.

  • மரபணுக்கள் – பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு (OCD) என்பது ஒரு சிக்கலான குறைபாடாகும். ஒருவருக்கு பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு (OCD) வருகிறதா, இல்லையா என்பதைப் பல்வேறு மரபணு சார்ந்த ஆபத்துக் காரணிகள் தீர்மானிப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. உறவினர்களில் ஒருவருக்குப் பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு (OCD) வந்துள்ளது என்றால், அவருக்கும் அந்தக் குறைபாடு வருகிற வாய்ப்பு மற்றவர்களைவிடக் கூடுதலாகிறது.
  • மன அழுத்தம் – மன அழுத்தமுள்ள வாழ்க்கை நிகழ்வுகளை எதிர்கொள்கிற மூன்று நபர்களில் ஒருவர் அல்லது இருவருக்குப் பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு (OCD) வருகிறது.
  • வாழ்க்கை மாற்றங்கள் – ஒருவர் திடீரென்று நிறையப் பொறுப்புகளை ஏற்கவேண்டியிருந்தால், அது அவருக்குப் பெருவிருப்பக் கட்டாயக் குறைபாட்டைக் (OCD) கொண்டுவரலாம் -- எடுத்துக்காட்டாக, பருவமடைதல், குழந்தை பிறத்தல் அல்லது ஒரு புதிய வேலை.
  • மூளை மாற்றங்கள் – இது பெருவிருப்பக் கட்டாயக் குறைபாட்டின் (OCD) காரணமா, அல்லது, விளைவா என்று நமக்குத் தெரியவில்லை. ஆனால், ஒரு குறுகிய காலத்துக்குமேல் உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால், மூளையில் செரொடோனின் (5HT என்றும் அறியப்படுகிறது) என்று அழைக்கப்படும் வேதிப்பொருள் வேலை செய்யும் விதத்தில் மாற்றங்கள் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நினைக்கிறார்கள்.
  • ஆளுமை – நீங்கள் உயர் தரங்களைக் கொண்ட ஒரு சுத்தமான, நுணுக்கமான, முறையான நபராக இருந்தால், உங்களுக்கு பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு (OCD) வருகிற வாய்ப்பு கூடுதலாகும். இந்தப் பண்புகள் பொதுவாக உதவக்கூடியவை. ஆனால், இவை மிகவும் தீவிரமாகிவிட்டால், பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடாக (OCD) மாறக்கூடும்.
  • சிந்திக்கும் வழிகள் – கிட்டத்தட்ட நம் அனைவரின் மனதிலும் சில சமயங்களில் மனத்தில் துன்பம் தரும் எண்ணங்கள் அல்லது காட்சிகள் வருகின்றன -- எடுத்துக்காட்டாக, “ஒருவேளை, நான் அந்தக் காருக்கு முன்னால் சென்றால் என்ன ஆகும்?” அல்லது “நான் என் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கக்கூடும், நம்மில் பெரும்பாலோர் இந்த யோசனைகளை விரைவாக நிராகரித்துவிட்டு நம் வாழ்க்கையைத் தொடருகிறோம். ஆனால், உங்களிடம் குறிப்பாக உயர்ந்த ஒழுக்கம் மற்றும் பொறுப்பு இருந்தால், இந்த எண்ணங்களைக் கொண்டிருப்பது கூட பயங்கரமானது என்று நீங்கள் உணரலாம். எனவே, அந்த எண்ணங்கள் திரும்ப வருமோ என்று இவர்கள் கண்காணிக்கக்கூடும். அதனால், அந்த எண்ணங்கள் திரும்ப வருகிற வாய்ப்பு மிகுதியாகக்கூடும்.

உதவி பெறுதல்

எனக்கு நானே உதவிக்கொள்வது எப்படி?

பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு (OCD) கொண்ட ஒருவர் தனக்குத் தானே உதவிக்கொள்வதற்கான சில வழிகள், இதோ. இவை பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு (OCD) கொண்ட மற்ற நபர்களுக்கு உதவியுள்ளன.

  • நினைவிருக்கட்டும் - இது உங்கள் பிழை இல்லை, மற்றும் நீங்கள் ‘பைத்தியம்’ ஆகவில்லை.
  • உங்கள் சிக்கலான எண்ணங்களுக்கு உங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். இது விநோதமாகத் தோன்றலாம். ஆனால், அவற்றை இன்னும் நன்றாகக் கட்டுப்படுத்துவதற்கு இது ஒரு வழி. நீங்கள் அவற்றைப் பதிவு செய்து திரும்பக் கேட்கலாம், அல்லது, அவற்றை எழுதிவைத்துத் திரும்பப் படிக்கலாம். இதை நீங்கள் நாள்தோறும் சுமார் அரை மணிநேரத்துக்குத் தொடர்ந்து செய்யவேண்டும். உங்கள் பதற்றம் குறையும்வரை நீங்கள் இதைத் தொடரவேண்டும்.
  • கட்டாய நடத்தையை எதிர்க்கவும், ஆனால் பெருவிருப்ப எண்ணத்தை அல்ல.
  • உங்கள் பதற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மது அல்லது தெருவில் கிடைக்கும் போதை மருந்துகளைப் பயன்படுத்தாதீர்கள்.
  • ஒருவேளை, உங்கள் எண்ணங்களில் உங்கள் நம்பிக்கை அல்லது மதம் பற்றிய கவலைகளும் வருகின்றன என்றால், இது ஒரு பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடா (OCD) என்பதைத் தெரிந்துகொள்வதற்கு நீங்கள் ஒரு மதத் தலைவருடன் பேசுவது சில நேரங்களில் உதவலாம்.
  • இந்தச் சிற்றேட்டின் முடிவில் பட்டியலிடப்பட்டுள்ள ஆதரவுக் குழுக்கள் அல்லது இணையத் தளங்களில் ஒன்றுடன் தொடர்புகொள்ளுங்கள்.
  • ஒரு தன்னுதவிப் புத்தகத்தைப் படியுங்கள். இந்தச் சிற்றேட்டின் முடிவில் அப்படிப்பட்ட சில புத்தகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அவ்வளவாக உதவாத நடவடிக்கைகள்

வியப்பான உண்மை என்னவென்றால், நீங்கள் உங்களுக்கு உதவிக்கொள்கிற சில வழிகள் இதை மேலும் தொடரச்செய்யக்கூடும்:

  • மகிழ்ச்சியற்ற எண்ணங்களை மனத்திலிருந்து தள்ள முயலுதல் - இது பொதுவாக அந்த எண்ணங்களை மறுபடி கொண்டுவரத்தான் செய்யும். எடுத்துக்காட்டாக, அடுத்த ஒரு நிமிடத்துக்கு இளஞ்சிவப்பு யானையைப்பற்றி நினைக்காமலிருக்க முயலுங்கள். அப்படிச் செய்தால், அநேகமாக உங்களால் வேறு எதைப்பற்றியும் நினைக்க இயலாது.
  • ‘பாதுகாப்பான' அல்லது ‘திருத்துகிற' எண்ணங்களை நினைத்தல். எடுத்துக்காட்டாக, தொந்தரவு செய்யும் ஓர் எண்ணத்தைச் சரி செய்வதற்காக நீங்கள் இன்னோர் எண்ணத்தில் (எடுத்துக்காட்டாக, பத்து வரை எண்ணுதல்) அல்லது காட்சியில் (எடுத்துக்காட்டாக, ஒருவர் உயிருடன் நலமாக இருப்பதைப் பார்த்தல்) நேரம் செலவிடலாம்.
  • சடங்குகள், சரிபார்த்தல், தவிர்த்தல் மற்றும் திரும்பத் திரும்ப உறுதிப்படுத்தலை நாடுதல் ஆகிய அனைத்தும் சிறிது காலத்துக்கு உங்களுடைய பதற்றத்தைக் குறைக்கும் -- குறிப்பாக, மோசமான ஒன்று நடந்துவிடாதபடி இது தடுக்கலாம் என்று நீங்கள் உணரும்போது. ஆனால், நீங்கள் இவற்றை ஒவ்வொருமுறை செய்யும்போதும், கெட்ட விஷயங்கள் நடக்காதபடி இவை தடுக்கின்றன என்கிற உங்கள் நம்பிக்கையை நீங்கள் உறுதிப்படுத்துகிறீர்கள். அதனால், அவற்றைச் செய்யவேண்டும் என்ற கூடுதல் அழுத்தத்தை நீங்கள் உணர்கிறீர்கள்... இந்தக் கதை இப்படியே தொடர்கிறது.

நான் எவ்விதமான உதவியைப் பெறலாம்?

பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு (OCD) கொண்டவர்களுக்கு உதவக்கூடிய பல்வேறு சிகிச்சைகள், மற்ற உதவி வகைகள் உள்ளன.

அறிவாற்றல் பழகுமுறைச் சிகிச்சை (CBT)

நீங்கள் சிந்திக்கிற, செயல்படுகிற வகையை மாற்றுவதற்கு இந்தச் சிகிச்சை உதவுகிறது, அதனால் நீங்கள் முன்பைவிட நன்றாக உணரலாம், மற்றும் உங்கள் வாழ்க்கையை நல்லமுறையில் தொடரலாம்.

பெருவிருப்பக் கட்டாயக் குறைபாட்டைக் (OCD) குணப்படுத்துவதற்கு இரண்டு வகை அறிவாற்றல் பழகுமுறைச் சிகிச்சைகள் (CBT) பயன்படுத்தப்படுகின்றன: வெளிப்படுத்தல் மற்றும் எதிர்வினையைத் தடுத்தல் (ERP) மற்றும் அறிவாற்றல் சிகிச்சை (CT).

வெளிப்படுத்தல் மற்றும் எதிர்வினையைத் தடுத்தல் (ERP)

இது கட்டாய நடத்தைகள் மற்றும் பதற்றங்களும் ஒன்றை ஒன்று வலுப்படுத்துவதைத் தடுப்பதற்கான ஒரு வழியாகும். நீங்கள் மன அழுத்தம் தரும் சூழ்நிலையொன்றில் நெடுநேரம் இருந்தால், நீங்கள் படிப்படியாக அதற்குப் பழகிவிடுவீர்கள் என்பதும், உங்கள் பதற்றம் விலகிவிடும் என்பதும் நமக்குத் தெரியும். எனவே, நீங்கள் பயப்படும் சூழ்நிலையை (வெளிப்பாடு) படிப்படியாக எதிர்கொள்கிறீர்கள், ஆனால் உங்கள் வழக்கமான கட்டாய சடங்குகள், சரிபார்த்தல் அல்லது சுத்தம் (எதிர் வினை தடுப்பு) செய்வதிலிருந்து உங்களைத் தடுத்துக்கொண்டு, உங்கள் பதற்றம் நீங்கும் வரை காத்திருக்கவும்.

பொதுவாக, இதைச் சிறிய படிநிலைகளில் செய்வது சிறந்தது:

  • தற்போது நீங்கள் அஞ்சுகின்ற அல்லது தவிர்க்கின்ற அனைத்து விஷயங்களையும் ஒரு பட்டியலிடுங்கள்;
  • பட்டியலில், நீங்கள் மிகக் குறைவாக அஞ்சுகின்ற சூழ்நிலைகள் அல்லது எண்ணங்கள் கீழே இருக்கும் படியும் மிகவும் அஞ்சுகின்ற சூழ்நிலைகள் அல்லது எண்ணங்கள் மேலே இருக்கும்படியும் வரிசைப்படுத்துங்கள்;
  • அதன்பிறகு, பட்டியலின் கீழ்ப்பகுதியில் தொடங்கிப் படிப்படியாக மேலே செல்லுங்கள். ஒரு நேரத்தில் ஒரு சூழ்நிலை அல்லது எண்ணத்தை மட்டும் கையாளுங்கள். முந்தைய சூழ்நிலை அல்லது எண்ணத்தை கடக்கும்வரை அடுத்ததற்குச் செல்லவேண்டாம்.

நீங்கள் இதை அடிக்கடி செய்து பழகினால், ஒவ்வொரு நாளும் பல முறை செய்தால், குறைந்தது ஒரு வாரத்துக்கு அல்லது இரு வாரங்களுக்குச் செய்தால் இது மிக நன்றாக வேலை செய்யும். ஒவ்வொருமுறையும், பதற்றம் அதன் மிக மோசமான நிலையிலிருந்து பாதிக்கும் குறைவாக ஆகும்வரை இதைத் தொடரவேண்டும் -- இதற்குத் தொடக்கத்தில் 10 முதல் 90 நிமிடங்கள் வரை ஆகலாம். 5 நிமிடங்களுக்கு ஒருமுறை, நீங்கள் எவ்வளவு பதற்றமாக உள்ளீர்கள் என்பதை மதிப்பிட்டு எழுதி வைப்பது உதவியாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக, 0 என்பது “சிறிதும் அச்சமில்லை” என்றும் 10 என்பது “மிகவும் அச்சமாக உள்ளது" என்றும் எடுத்துக்கொள்ளலாம். உங்கள் பதற்றம் எவ்வாறு உயர்கிறது, பின்னர் குறைகிறது என்பதை நீங்கள் காண்பீர்கள்.

சில படிநிலைகளை நீங்கள் உங்கள் சிகிச்சையாளருடன் செய்யலாம். ஆனால், பெரும்பாலான நேரங்களில் நீங்கள் இதைத் தனியாகத்தான் செய்வீர்கள், நீங்கள் வசதியாக உணர்கிற ஒரு வேகத்தில். நீங்கள் உங்களுடைய பதற்றத்தை முழுவதுமாக நீக்க வேண்டியதில்லை, அதை இன்னும் நன்றாகக் கையாளும் அளவுக்குக் குறைத்தால் போதும் என்பதையும் நினைவில் கொள்வது முக்கியம். நினைவில் கொள்ளுங்கள், உங்கள் பதற்றம்:

  • விரும்பத்தகாதது, ஆனால், அது உங்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படுத்தாது.
  • இறுதியில் அகன்றுவிடும்.
  • தொடர்ந்த பயிற்சியின் மூலம் எளிதாக எதிர்கொள்ளக் கூடியது.

ERP-ஐ முயன்று பார்ப்பதற்கு இரண்டு முக்கிய வழிகள் உள்ளன:

  • வழிகாட்டப்பட்ட சுய-உதவி – ஒரு புத்தகம் அல்லது DVDல் உள்ள வழிகாட்டுதல்களை நீங்கள் பின்பற்றலாம், அல்லது, ஒரு கணினி, தொடுதிரைக் கணினி அல்லது  திறன்பேசிச் செயலியிலுள்ள ஒரு  மென்பொருள் நிரலைப் பயன்படுத்தலாம். அவ்வப்போது நீங்கள் ஒரு தொழில் வல்லுனரின் தொடர்பில் இருந்து அறிவுரை மற்றும் ஆதரவையும் பெறுவீர்கள். உங்கள் பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு (OCD) மிதமானதாக இருந்தால், உங்களுக்கு நீங்களே உதவிக் கொள்ளக்கூடிய வழிகளை முயன்றுபார்க்கும் தன்னம்பிக்கை உங்களுக்கு இருந்தால் இந்த அணுகுமுறை உங்களுக்குப் பொருந்தலாம்.
  • தனியாக அல்லது ஒரு குழுவில், நேரடி தொடர்ச்சியான தொழில் வல்லுனர் தொடர்பு – இது நேருக்கு நேர், தொலைபேசியில் அல்லது காணொளி இணைப்பின்மூலம் நடைபெறலாம். பொதுவாக, தொடக்கத்தில் வாரம் ஒருமுறை அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை இது நடைபெறுகிறது, மற்றும் ஒவ்வொரு நிகழ்வும் 45 முதல் 60 நிமிடங்கள் எடுக்கக்கூடும். தொடக்கத்தில் பத்து மணி நேரம் வரையிலான தொடர்புகள் பரிந்துரைக்கப்படுகின்றன, ஆனால், உங்களுக்குக் கூடுதல் நிகழ்வுகள் தேவைப்படலாம்.

ஓர் எடுத்துக்காட்டு, இதோ:

ஜான், ஒவ்வொரு நாளும் சரியான நேரத்தில் வீட்டிலிருந்து கிளம்பி வேலைக்குச் செல்ல இயலவில்லை. ஏனெனில், அவர் வீட்டில் பல விஷயங்களைச் சரிபார்க்க வேண்டியிருந்தது. தான் சில குறிப்பிட்ட விஷயங்களைத் தலா ஐந்து முறை சரிபார்க்காவிட்டால், தன் வீடு எரிந்துவிடக்கூடும் என்றோ, திருடப்படக்கூடும் என்றோ அவர் கவலைப்பட்டார். சமாளிக்க எளிதான விஷயங்களில் தொடங்கி, அவர் எதைச் சரிபார்க்கிறார் என்று ஒரு பட்டியலைத் தயாரித்தார். அது இப்படி இருந்தது:

  1. குக்கர் (மிகக் குறைந்து அஞ்சப்படுவது)
  2. கெண்டி
  3. எரிவாயு நெருப்பு
  4. சாளரங்கள்
  5. கதவுகள் (மிகக் கூடுதலான அச்சம்)

அவருடைய முதல் படிநிலை, குக்கரைக் கவனிப்பது, ஏனெனில், இதுதான் அவருக்கு மிகக் குறைந்த அச்சத்தைத் தந்தது. குக்கர் அணைந்திருக்கிறதா என்பதைப் பல முறை சரிபார்ப்பதற்குப் பதிலாக, அவர் அதை ஒரே ஒருமுறை மட்டும் சரிபார்த்தார் (வெளிப்படுத்தல்). முதலில், அவர் மிகவும் பதற்றமாக உணர்ந்தார். மீண்டும் சென்று சரிபார்க்கவேண்டும் என்ற எண்ணம் வரும்போது, அவர் தன்னைத் தடுத்துக்கொண்டார். தனக்காக எல்லாவற்றையும் சரிபார்க்கவேண்டும் என்று தன் மனைவியைக் கேட்பதில்லை என்றும், வீடு பாதுகாப்பாக இருக்கிறதா என்று மீண்டும் உறுதிப்படுத்தும்படி அவரைக் கேட்பதில்லை என்றும் அவர் ஒப்புக்கொண்டார் (எதிர்வினையைத் தடுத்தல்). அடுத்த இரண்டு வாரங்களில், அவருடைய அச்ச உணர்வு படிப்படியாகக் குறைந்தது.

அதன்பிறகு, அவர் இரண்டாவது படிநிலைக்கு (கெண்டி) நகர்ந்தார், அங்கிருந்து படிப்படியாக முன்னேறினார். சிறிது காலத்துக்குப்பிறகு, தன்னுடைய சரிபார்க்கும் சடங்குகள் எவற்றையும் செய்யாமலே அவரால் வீட்டிலிருந்து கிளம்ப முடிந்தது. இப்போது அவர் சரியான நேரத்துக்கு வேலைக்குச் செல்ல முடிகிறது.

செயல்திறன்

ERP-ஐ நிறைவு செய்கிற 4 நபர்களில் தோராயமாக 3 பேர் நிறைய பலன் பெறுகிறார்கள். குணமடைந்தவர்களில், 5 பேரில் 1நபருக்கு எதிர்காலத்தில் அறிகுறிகள் உருவாகும், மற்றும் கூடுதல் சிகிச்சை தேவைப்படும். ஆனால், 4 பேரில் சுமார் 1 நபர் ERP-ஐ முயல மறுக்கிறார்கள், அல்லது, அதை நிறைவுசெய்வதில்லை. அவர்கள் மிகவும் அஞ்சக்கூடும், அல்லது, இதைச் செய்ய இயலாதபடி மிகவும் திகைப்பாக உணரக்கூடும்.

அறிவாற்றல் சிகிச்சை (CT)

அறிவாற்றல் சிகிச்சை என்பது, எண்ணங்களைத் தவிர்ப்பதற்குப் பதிலாக, அந்த எண்ணங்களுக்கான உங்கள் எதிர்வினையை மாற்றுவதற்கு உங்களுக்கு உதவுகின்ற ஓர் உளவியல் சிகிச்சையாகும். உங்களுக்குக் கவலை அளிக்கிற பெருவிருப்ப எண்ணங்கள் வருகின்றன, ஆனால், இன்னும் நன்றாக உணர்வதற்கு எந்தச் சடங்குகளையோ அல்லது செயல்களையோ நீங்கள் பின்பற்றவில்லை என்றால், இது உதவக்கூடும். இதை வெளிப்படுத்தல் சிகிச்சையுடன் (ERP) இணைத்துப் பெருவிருப்பக் கட்டாயக் குறைபாட்டைச் (OCD) சரியாக்கப் பயன்படுத்தலாம்.

அறிவாற்றல் சிகிச்சை பின்வறுமாறு உங்களுக்கு உதவுகிறது:

எண்ணங்களை எதிர்த்துப் போராடுவதை நிறுத்துங்கள்

நம் அனைவருக்கும் சில நேரங்களில் விநோதமான எண்ணங்கள் வருகின்றன. ஆனால், அவை அவ்வளவே தான். அதனால், நீங்கள் கெட்ட நபர் என்றோ கெட்ட விஷயங்கள் நடக்கப்போகின்றன என்றோ பொருள் இல்லை -- அந்த எண்ணங்களை நீக்க முயல்வது பயனளிக்காது. அறிவாற்றல் சிகிச்சையானது, நீங்கள் இத்தகைய எண்ணங்களைக் கொண்டிருக்கும் போது, ​​நீங்கள் நன்றாகவும், நிம்மதியாகவும் உணர உதவும். நீங்கள் அவற்றை லேசான ஆர்வத்துடனும், வேடிக்கையாகவும் நடத்தப் பழகிக் கொள்ளலாம். இன்னும் விரும்பத்தகாத எண்ணங்கள் ஏற்பட்டால், அவற்றை எதிர்க்காமல் இருக்கவும், அவை நடக்க அனுமதிக்கவும், அதே வழியில் அவற்றைப் பற்றி சிந்திக்கவும் கற்றுக்கொள்கிறீர்கள். பல சமயங்களில், நீங்கள் அவற்றை அகற்ற முயற்சிப்பதை நிறுத்தும்போது அத்தகைய எண்ணங்கள் பெரும்பாலும் மங்கிவிடும்.

உங்கள் எண்ணங்களுக்கான உங்கள் எதிர்வினையை மாற்றவும்

‘இப்படி நினைப்பதால் நான் கெட்டவன்’ என்பது போன்ற வருத்தமளிக்கும்  'எண்ணங்களைப் பற்றிய எண்ணங்கள்' உங்களுக்கு இருக்கும்போது நீங்கள் கவனிக்க கற்றுக்கொள்கிறீர்கள். இதுபோன்ற உதவாத சிந்தனைகளை எழுதுவதற்கு நீங்கள் ஒரு நாட்குறிப்பை வைத்துக்கொள்ளலாம். அதன்பிறகு உங்களையே இந்தக் கேள்விகளைக் கேட்பதன் மூலம் அந்தச் சிந்தனைகளை எதிர்த்துச் சவால் விடலாம்:

  • இந்த எண்ணம் உண்மை -அல்லது பொய்- என்பதற்கான ஆதாரம் என்ன?
  • இந்த எண்ணம் எவ்வளவு பயனுள்ளது? இதை வேறு எந்தவிதமாகப் பார்க்கலாம்?
  • இதனால் விளையக்கூடிய மிக மோசமான/மிகச் சிறந்த/மிகவும் எதார்த்தமான முடிவுகள் என்ன?
  • என் பிரச்சினைகளைக் கொண்ட ஒரு நண்பருக்கு நான் எவ்வாறு ஆலோசனை கூறுவேன்? அவர்களுக்கு நான் அளிக்கும் அறிவுரையும், எனக்கு நானே கூறும் அறிவுரையும் வேறுபட்டால், அது ஏன்?

பொறுப்பு மற்றும் குற்றம் சாட்டுதலைக் கையாளுங்கள்

நீங்கள் நம்பத்தகாத மற்றும் சுய விமர்சன எண்ணங்களை சமாளிக்கிறீர்கள் இவற்றில் பின்வருவன அடங்கும்:

  • உங்கள் எண்ணங்களுக்கு மிகக் கூடுதலான முக்கியத்துவம் அளிப்பது (அவை ‘வெறும்' எண்ணங்கள்தான்);
  • மோசமான ஒரு விஷயம் நடப்பதற்கான வாய்ப்பை மிகுதியாக மதிப்பிடுவது;
  • மோசமான விஷயங்கள் நடப்பதற்குப் பொறுப்பேற்றுக்கொள்வது, அவை உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும்;
  • உங்கள் அன்புக்குரியவர்களின் வாழ்க்கைகளில் வரும் அனைத்து ஆபத்துகளையும் நீக்க முயல்வது.

உதவாத நம்பிக்கைகளைப் பரிசோதித்துப் பாருங்கள்

பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு (OCD) கொண்டவர்களுடைய பொதுவான ஓர் அச்சம், ‘அதைப்பற்றி நினைத்தால் அது நடந்துவிடும்' என்பது. ஒரு கட்டடத்தின் சாளரத்திலிருந்து வெளியில் பார்க்க முயலுங்கள், அது உடைந்து  கீழே விழுவதைப்பற்றிச் சிந்தியுங்கள். உங்கள் மனத்தில் மிகவும் வலுவான ஒரு காட்சியை உண்டாக்குங்கள். என்ன நடக்கிறது? மற்றொரு வருத்தமளிக்கும் நம்பிக்கை என்னவென்றால், 'எண்ணங்களைக் கொண்டிருப்பது அவற்றைச் செயல்படுத்துவதைப் போல மோசமானது'. உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார், மேலும் அவருக்கு ஷாப்பிங் செய்ய வேண்டும் என்று கற்பனை செய்து பாருங்கள். அதைச் செய்வது பற்றி யோசியுங்கள். அது உங்களை ஒரு நல்ல மனிதராக்குகிறதா? உண்மையில் இல்லை. உதவியாக இருக்கவேண்டுமென்றால், நீங்கள் செயலைச் செய்யவேண்டும். ‘மோசமான' எண்ணங்களுக்கும் இது பொருந்தும். பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு (OCD) கொண்ட ஒருவர் தன்னுடைய பெருவிருப்ப எண்ணங்களைச் செயல்படுத்துவதில்லை என்பதை உங்களுக்கு நீங்களே நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.

உங்கள் யோசனைகளில் எதை மாற்ற விரும்புகிறீர்கள் என்பதை தீர்மானிக்க ஒரு அறிவாற்றல் சிகிச்சையாளர் உங்களுக்கு உதவுவார், மேலும் யதார்த்தமான, சீரான மற்றும் உதவியாக இருக்கும் புதிய யோசனைகளை உருவாக்க உங்களுக்கு உதவுவார்.

சிகிச்சையாளருடனான பெரும்பாலான சந்திப்புகள் உங்கள் உள்ளூர்ப் பொதுப் பின்பற்றுநர் (GP) அலுவலகத்தில், மருந்தகத்தில், அல்லது, சில நேரங்களில் ஒரு மருத்துவமனையில் நடைபெறும். ஒருவேளை, உங்களால் உங்கள் வீட்டிலிருந்து வெளியேற இயலாது என்றால், தொலைபேசி வழியாக, அல்லது உங்கள் வீட்டிலேயேகூட அறிவாற்றல் சிகிச்சையைப் (CT) பெறலாம்.

மன அழுத்த எதிர்ப்பு மருந்து வழங்கல்

SSRI (தேர்ந்தெடுக்கப்பட்ட செரடோனின் மறு எடுத்துக்கொள்ளல் தடுப்பான்) மன அழுத்தத்திற்கு எதிரான மருந்துகள் பெருவிருப்பங்களையும் கட்டாயங்களையும் குறைக்க உதவலாம். மன அழுத்தத்தில் இல்லாதவர்களுக்கும் இவை உதவக்கூடும். இதற்குச் சில எடுத்துக்காட்டுகள், செர்ட்ராலைன், ஃப்ளுவோக்சிடைன், பரோக்சிடைன், எஸ்சிடாலொப்ராம் மற்றும் ஃப்ளுவோக்சமைன்.

இவை பொதுவாகப் பாதுகாப்பானவை. ஆனால், முதல் சில நாட்களில் நிலைகொள்ளாமலிருத்தல், தலைவலி, உலர்ந்த வாய், உடல்நலக் குறைவு போன்ற பக்க விளைவுகளை இவை உண்டாக்கலாம். மிதமானது முதல் தீவிரமானதுவரையிலான பெருவிருப்பக் கட்டாயக் குறைபாட்டைக் (OCD) குணப்படுத்துவதற்கு SSRI (தேர்ந்தெடுக்கப்பட்ட செரடோனின் மறு எடுத்துக்கொள்ளல் தடுப்பான்)-ஐ தனியாகவோ, CBT (அறிவாற்றல் பழகுமுறைச் சிகிச்சை) உடனோ பயன்படுத்தலாம். பொதுவாக, பெருவிருப்பக் கட்டாயக் குறைபாட்டுக்குக் (OCD) கூடுதல் மருந்தளவுகள் இன்னும் நன்றாக வேலை செய்கின்றன.

ஒரு குறிப்பிட்ட SSRI உடனான சிகிச்சை 3 மாதங்களுக்குப் பிறகும் சிறிதும் பலனளிக்கவில்லை என்றால், அடுத்த படிநிலையாக இன்னொரு SSRI அல்லது கிளோமிப்ராமைன் என்ற மருந்துக்கு மாறலாம். ஒரு மருந்து பலனளிக்கிறது என்றால், அதைக் குறைந்தது 12 மாதங்களுக்குத் தொடர்வது மிகவும் நல்லது. இந்த மருந்துகளுக்கு நீங்கள் அடிமையாகமாட்டீர்கள். ஆனால், இவற்றை நிறுத்துவதற்கு முன்னால், மெதுவாகப் பல வாரங்களுக்கு இவற்றைப் படிப்படியாகக் குறைக்கவேண்டும்.

செயல்திறன்

10 பேரில் சுமார் 6 பேர் மருந்துகளால் மேம்படுகிறார்கள். சராசரியாக, இவர்களுடைய அறிகுறிகள் சுமார் மூன்றில் ஒரு பங்கு குறைகின்றன. பெருவிருப்பத்துக்கு எதிரான மருந்துகள் எவ்வளவு காலத்துக்கு எடுக்கப்படுகின்றனவோ, அவ்வளவு காலத்துக்குப் பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு (OCD) மீண்டும் வராமல் தடுக்கின்றன, பல ஆண்டுகளுக்குப் பிறகும்கூட.  ஆனால், மருந்து வழங்களை  நிறுத்துகிறவர்களில் 3 பேரில் சுமார் 1 நபருக்கு, மருந்தை நிறுத்தியதிலிருந்து சில மாதங்களுக்குள் அறிகுறிகள் திரும்ப வருகின்றன.  மருந்துகளுடன் அறிவாற்றல் பழகுமுறைச் சிகிச்சையும் (CBT) சேர்த்து வழங்கப்பட்டால், இதற்கான வாய்ப்பு குறைகிறது.

எனக்கு ஏற்ற சிறந்த அணுகுமுறை எது? மருந்து எடுத்துகொள்ளுதலா அல்லது பேச்சுச் சிகிச்சையா?

வெளிப்படுத்தல் சிகிச்சையைத் (ERP) தொழில்முறை வல்லுனர் உதவியின்றி (லேசான நிகழ்வுகளில்) முயற்சி செய்யலாம், மேலும் இது பயனுள்ளதாக இருக்கும் மற்றும் பக்கவிளைவுகள் ஏதுமில்லை கவலையைத் தவிர.  ஆனால், இதற்கு நிறைய ஊக்கமும் கடின உழைப்பும் தேவை, மற்றும் சிறிது காலம் கூடுதல் பதற்றத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

அறிவாற்றல் பழகுமுறைச் சிகிச்சை (CBT) மற்றும் மருந்து வழங்கல் ஆகியவை அநேகமாகச் சம அளவு செயல்திறன் கொண்டவை. உங்களுக்கு மிதமான பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு மட்டும்தான் (OCD) இருக்கிறது என்றால், அறிவாற்றல் பழகுமுறைச் சிகிச்சை (CBT) மட்டும் உங்களுக்குச் செயல்திறந்னக இருக்கலாம்.

உங்களுக்கு மிதமான தீவிரமுடைய பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு (OCD) இருந்தால், நீங்கள் முதலில் அறிவாற்றல் பழகுமுறைச் சிகிச்சையைத் (CBT) தேர்ந்தெடுக்கலாம் (சிகிச்சை வழங்குபவருடன் 10 மணிநேரம்வரை தொடர்பில் இருத்தல்) அல்லது (12 வாரங்களுக்கு) மருந்து வழங்கலைத் தேர்ந்தெடுக்கலாம். அது உங்களை மேம்படுத்தவில்லை என்றால், நீங்கள் இரண்டு சிகிச்சைகளையும் முயன்று பார்க்கவேண்டும்.  நாட்டின் சில பகுதிகளில் தொழில் வல்லுனரைச் சந்திப்பதற்குப் பல மாதங்கள் காத்திருப்புப் பட்டியலில் இருக்க நேரிடலாம்.

உங்கள் பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு (OCD) தீவிரமானது என்றால், தொடக்கத்திலிருந்தே மருந்து வழங்கலையும் அறிவாற்றல் பழகுமுறைச் சிகிச்சையையும் (CBT) ஒன்றாக சேர்த்து முயல்வது சிறந்தது. உங்கள் பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு (OCD) மிதமானதைவிடக் கூடுதலான அளவில் இருந்தால், ERPன் பதற்றத்தையும் உங்கள் பெருவிருப்பக் கட்டாயக் குறைபாட்டையும் (OCD) உங்களால் சமாளிக்க இயலாது என்று உங்களுக்குத் தோன்றினால், மருந்துகளை மட்டும் உட்கொள்வது ஒரு விருப்பத்தேர்வு. இது 10 பேரில் சுமார் 6 பேருக்கு உதவுகிறது. ஆனால், வருங்காலத்தில் பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு (OCD) திரும்ப வருவதற்கான வாய்ப்புகள் கூடுகின்றன -- வெளிப்படுத்தல் சிகிச்சைகளைப் (ERP) பெறுவோருக்குச் சுமார் 5ல் 1 வாய்ப்பு என்றால், இவர்களுக்குச் சுமார் 3ல் 1 வாய்ப்பு. இதை ஓராண்டுக்கு எடுத்துக்கொள்ளவேண்டும். நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் அல்லது தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், பொதுவாக இதுதான் உங்கள் முதல் தேர்வாக இருக்கும்.

இந்தத் தெரிவுகளைப்பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுவது நல்லது. உங்களுக்குத் தேவைப்படும் கூடுதல் தகவல்களை அவர் உங்களுக்கு வழங்குவார். நீங்கள், நம்பிக்கையான நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களிடமும் இதைப்பற்றி கேட்க விரும்பலாம்.

ஒருவேளை, சிகிச்சை உதவாவிட்டால் என்ன செய்வது?

உங்கள் மருத்துவர் உங்களைச் சிறப்பு வல்லுனர் குழு ஒன்றிடம் அனுப்பி வைக்கக்கூடும். இந்தக் குழுவில் மன நல மருத்துவர்கள், உளவியலாளர்கள், செவிலியர்கள், சமூகப் பணியாளர்கள் மற்றும் தொழில் சார்ந்த சிகிச்சையளிப்போர் இருப்பார்கள். இவர்கள் உங்களுக்குப் பின்வரும் பரிந்துரைகளை வழங்கலாம்:

  • வெளிப்படுத்தல் சிகிச்சை அல்லது மருந்து வழங்கலுடன் அறிவாற்றல் சிகிச்சையைச் சேர்த்தல்;
  • ஒரே நேரத்தில், பெருவிருப்பத்துக்கு எதிரான இரண்டு மருந்துகளை எடுத்துக்கொள்ளுதல், எடுத்துக்காட்டாக, கிளோமிப்ராமைன் மற்றும் சிடாலொப்ராம்;
  • ஆன்ட்டிசைக்கோட்டிக் மருந்துகளைச் சேர்த்து எடுத்துக்கொள்ளுதல், எடுத்துக்காட்டாக, அரிபிப்ராஜோல் அல்லது ரிஸ்பெரிடோன்;
  • பிற நிலமைகளுக்கு சிகிச்சையளித்தல் (பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு(OCD) உள்ள 3 நபர்களில் சுமார் 1 நபருக்குப் பதற்றம், மனச்சோர்வு அல்லது மது தொடர்பான சிக்கல் அல்லது போதைப் பொருட்களைத் தவறாகப் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது);
  • உங்கள் குடும்பம் மற்றும் பராமரிப்பாளர்களுடன் பணியாற்றுங்கள், அவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் ஆலோசனை வழங்குவதற்கும்.

நீங்கள் தனியாக வசிக்கச் சிரமப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் இன்னும் சுதந்தரமாக ஆவதற்கு உங்களுக்கு உதவக்கூடிய நபர்களுடன் வசிக்கின்ற பொருத்தமான ஏற்பாடு ஒன்றைக் கண்டறியும்படியும் அவர்கள் பரிந்துரைக்கலாம்.

பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு (OCD) கொண்ட பெரும்பாலோருக்கு சிகிச்சையின் மூலம், நோக்கு நன்றாக இருக்கிறது. எனினும், உங்களுக்கு மிகத் தீவிரமான பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு (OCD) இருந்து, அது மேம்படாவிட்டால்:

  • இன்னும் தீவிரமான, அன்றாட உளவியல் சிகிச்சைத் திட்டம் (அறிவாற்றல் பழகுமுறைச் சிகிச்சை (CBT) மற்றும் EPR) தேவைப்படலாம். இந்தச் சிகிச்சையின்போது மருத்துவமனையில் தங்கவேண்டும்.
  • இப்போது ஆராயப்பட்டுவருகிற ஒரு புதிய அணுகுமுறை, அறிகுறிகளைத் தணிப்பதற்கென மின்சாரத் துடிப்புகளைப் பயன்படுத்தி ஆழமாக மூளைத் தூண்டுதலைச் செய்தல்.
  • வேறு எதுவும் உதவவில்லை என்றால் அரிதாக வழங்கப்படும் ஒரு சிகிச்சை, ‘அப்லேடிவ் நியூரோசர்ஜரி' எனப்படும் மூளை அறுவைச் சிகிச்சை. இது கடைசி முயற்சியாக மட்டும்தான் மேற்கொள்ளப்படும். ஏனெனில், இதற்குத் தீவிரமான பக்க விளைவுகள் இருக்கலாம்.

சிகிச்சைக்கென நான் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருக்குமா?

பெரும்பாலானோர் ஒரு பொதுப் பின்பற்றுநர் (GP) அறுவைச் சிகிச்சை நிலையம் அல்லது ஒரு மருத்துவமனையுடன் இணைக்கப்பட்ட ஒரு மருந்தகத்துக்குச் செல்வதன்மூலம் மேம்படுகிறார்கள். மன நலப் பிரிவில் சேர்வது  பின்வரும்  சூழ்நிலைகளில் தான் பரிந்துரைக்கப்படும். அவை:

  • உங்கள் அறிகுறிகள் மிகத் தீவிரமானவை, உங்களால் உங்களையே முறையாகப் பார்த்துக்கொள்ள இயலவில்லை, அல்லது, உங்களுக்குத் தற்கொலை பற்றிய எண்ணங்கள் வருகின்றன;
  • உங்களுக்கு உண்ணல் குறைபாடு, ஸ்கிசோஃப்ரெனியா, சைக்கோசிஸ், அல்லது தீவிர மனச்சோர்வு போன்ற பிற தீவிரமான மன நலச் சிக்கல்கள் உள்ளன;
  • நீங்கள் சிகிச்சைக்கென ஒரு மருந்தகத்துக்குச் செல்ல இயலாதபடி உங்கள் பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு (OCD) உங்களைத் தடுக்கிறது.

பெருவிருப்பக் கட்டாயக் குறைபாட்டிற்கு (OCD) எந்தச் சிகிச்சைகள் பலன் தருவதில்லை?

இந்த அணுகுமுறைகளில் சில, வேறு சூழ்நிலைகளில் வேலை செய்யலாம். ஆனால், இவை பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு (OCD) உள்ளவர்களுக்கு உதவுகின்றன என்பதற்கு வலுவான சான்று எதுவும் இல்லை:

  • அறிதுயில் நிலை, ஹோமியோபதி, அக்குபஞ்சர் மற்றும் மூலிகை மருந்துகள் போன்ற நிறைவு உண்டாக்குகிற அல்லது மாற்றுச் சிகிச்சைகள்-- இவை கவர்ச்சியாகத் தோன்றினாலும்.
  • மனஅழுத்தத்திற்கு எதிரான மற்ற வகை மருந்துகள், நீங்கள் பெருவிருப்பக் கட்டாயக் குறைபாட்டுடன் (OCD) மன அழுத்தத்தையும் கொண்டிருந்தாலன்றி.
  • இரண்டு வாரங்களுக்குமேல் தூக்க மாத்திரைகள், அமைதிப்படுத்திகள் (ஜோபிக்ளோன், டயாஜெபாம் மற்றும் பிற பென்ஜோடயாஜெபைன்கள்). இந்த மருந்துகள் உங்களை  அவற்றிற்கு அடிமையாக்கலாம்.
  • ஜோடி அல்லது திருமணச் சிகிச்சை - அவர்களுடைய உறவில் பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு (OCD) அல்லாத வேறு சிக்கல்கள் இருந்தாலன்றி. வாழ்க்கைத்துணை மற்றும் குடும்பத்தினரும் பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு (OCD) பற்றியும், அந்தச் சிக்கல் கொண்டவர்களுக்கு உதவுவது எப்படி என்பது பற்றி கண்டறிய முயல்வது உதவியாக இருக்கும்.
  • ஆலோசனை அளித்தல் மற்றும் உளவியல் பகுப்பாய்வு உளவியல் சிகிச்சை. மேலே விளக்கப்பட்டுள்ள, இன்னும் குறிப்பான சிகிச்சைகள் பெருவிருப்பக் கட்டாயக் குறைபாட்டு (OCD) அறிகுறிகளுக்கு இன்னும் நன்றாக வேலை செய்வதாகத் தோன்றுகிறது. ஆனால், பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு (OCD) கொண்ட சிலர், தங்கள் குழந்தைப்பருவம் மற்றும் முந்தைய அனுபவங்களைப்பற்றிப் பேசுவது நிச்சியமாக உதவுவதைக் காண்கிறார்கள்.

அறிவாற்றல் பழகுமுறைச் சிகிச்சையைத் (CBT) தொடங்குவதற்கு நெடுநாள் காத்திருக்கவேண்டி இருந்தால் என்ன செய்வது?

உங்கள் பொதுப் பின்பற்றுநர் (GP) உங்களை ‘உளவியல் சிகிச்சைகளுக்கான அணுகலை மேம்படுத்துதல்’ (IAPT) என்ற ஓர் உள்ளூர் சேவையிடமோ சிறப்பு வல்லுனர்களைக் கொண்ட மன நலக் குழுவிடமோ அனுப்பலாம்.

தற்சமயம், அறிவாற்றல் பழகுமுறைச் சிகிச்சையில் (CBT) பயிற்சி பெற்ற NHS தொழில் வல்லுனர்களுக்குப் பற்றாக்குறை உள்ளது. சில பகுதிகளில் நீங்கள் சிகிச்சையைத் தொடங்குவதற்குப் பல மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கலாம். பல நேரங்களில், தகுதி பெற்ற சிகிச்சையளிப்போர் பழகுமுறை மற்றும் அறிவாற்றல் உளவியல் சிகிச்சைகளுக்கான பிரிட்டிஷ் சங்கத்தில் பதிவு செய்துகொண்டிருப்பார்கள்.

‘எனக்கு நானே உதவிக்கொள்வது எப்படி?’ என்கிற பிரிவில் விவரிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் உங்களுக்கு உதவவில்லை என்றால், தேர்ந்தெடுக்கப்பட்ட செரடோனின் மறு எடுத்துக்கொள்ளல் தடுப்பான் (SSRI) மருந்து வழங்கலைத் தொடங்குவது பற்றி நீங்கள் உங்கள் பொதுப் பின்பற்றுநரைக் (GP) கேட்கலாம்.

எனது குடும்பத்தினரும் நண்பர்களும் என்ன உதவி வழங்க முடியும்?

குடும்பத்தினரும் நண்பர்களும் உங்களுக்கு உதவுவதற்கான, ஆதரவு அளிப்பதற்கான சில வழிகள், இதோ.

  • பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு (OCD) கொண்ட ஒருவருடைய நடவடிக்கைகள் மிகவும் எரிச்சலூட்டலாம் -- அவர்/அவள் வேண்டுமென்றே யாரையும் சிரமப்படுத்தவில்லை அல்லது விநோதமாக நடந்துகொள்ளவில்லை என்பதை நினைவில் கொள்ள முயலுங்கள்-- அவர்கள் தங்களால் முடிந்தவரை சிறப்பாக சமாளிக்கிறார்கள்.
  • தனக்கு உதவி தேவை என்பதை ஒருவர் ஒப்புக் கொள்வதற்கு சிறிது காலம் ஆகலாம். பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு (OCD) பற்றிப் படிக்கும்படியும், ஒரு தொழில்முறை வல்லுனரிடம் அதைப்பற்றிப் பேசும்படியும் அவர்களை ஊக்குவியுங்கள்.
  • பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு (OCD) பற்றி மேலும் கண்டறியுங்கள்.
  • உங்கள் உறவினருடைய கட்டாயப்படுத்தல்களுக்கு வேறுவிதமாக எதிர்வினை ஆற்றுவதன் மூலம் நீங்கள் வெளிப்படுத்தல் சிகிச்சைகளுக்கு உதவலாம்:
    • அச்சம் தரும் சூழல்களைக் கையாளும்படி அவர்களை ஊக்கப்படுத்தலாம்;
    • சடங்குகள் அல்லது சரிபார்த்தலில் பங்கேற்க மறுக்கலாம்;
    • விஷயங்கள் சரியாக உள்ளன என்று அவர்களுக்கு உறுதியளிக்க வேண்டாம்.
  • வன்முறையாக ஏதாவது செய்துவிடுவோமோ என்ற பெருவிருப்ப பயமுள்ள ஒருவர் உண்மையில் அதைச் செய்துவிடுவார் என்று கவலைப்படவேண்டாம். இது நடப்பதில்லை.
  • ஒரு சடங்கை நடத்துவதை உடல் ரீதியாக தடுக்க முயற்சி செய்யாமல் இருப்பது சிறந்தது.
  • அவர்களின் பொதுப் பின்பற்றுநர் (GP), மன நல மருத்துவர் அல்லது மற்ற தொழில்முறை வல்லுனர் ஒருவரைப் பார்க்க நீங்கள் அவர்களுடன் செல்ல முடியுமா என்று கேளுங்கள்.

வேறு என்ன ஆதரவு மற்றும் வளங்கள் உள்ளன?வளங்கள் என்னென்ன?

ஆதரவுக் குழுக்கள்

பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு செயல்பாடு
பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு (OCD), உடல் டிஸ்மார்ஃபிக் குறைபாடு, கட்டாயமாகத் தோலைப் பிய்த்தல் மற்றும் டிரிசோடில்லோமேனியா கொண்ட மக்களுக்கான தொண்டு.

உதவி மற்றும் தகவல் தொலைபேசி எண்: 0845 390 6232

மின்னஞ்சல்: support@ocdaction.org.uk.

OCD-UK
பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு (OCD) கொண்ட குழந்தைகள், மற்றும் பெரியவர்களுக்கான தேசிய ஆதரவுக் குழு.

ஆலோசனை தொலைபேசி எண்: 0845 120 3778

மின்னஞ்சல்support@ocduk.org.  

Anxiety UK
பீதி, அச்சக்கோளாறுகள், OCD மற்றும் தொடர்புடைய நிலைமைகள் உள்ளிட்ட பதற்றப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கான ஒரு அமைப்பு. துன்பப்படுவோர், அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் அவர்களைக் கவனித்துக்கொள்வோருக்கு ஆதரவளிக்கிறார்கள். . நேரலை அரட்டை, மின்னஞ்சல், தன்னுதவிப் புத்தகங்கள், CDகள், DVDகள் மற்றும் வளங்கள்.

உதவித் தொலைபேசி எண்: 0844 775774

மின்னஞ்சல்: support@anxietyuk.org.uk.

கூடுதல் தகவல்கள்

NHS Choices
நிலமைகள், சிகிச்சைகள், உள்ளூர்ச் சேவைகள் மற்றும் நலமான வாழ்க்கை பற்றி, தேசிய நலச் சேவை வழங்கும் தகவல்கள்.

பழகுமுறை சார்ந்த மற்றும் அறிவாற்றல் உளவியல் சிகிச்சைகளுக்கான பிரிட்டிஷ் அமைப்பு (BABCP)

NHS-க்குள்ளும் அதற்கு வெளியிலும் அறிவாற்றல் பழகுமுறைச் சிகிச்சையை (CBT) வழங்கும் தொழில்முறை வல்லுனர்களின் வெவ்வேறு குழுக்களுக்கான முக்கிய அமைப்பு. இது நல்ல செயல்பாட்டிற்கான தரநிலைகளைப் பராமரிக்கிறது, தகவல்கள், சிற்றேடுகளை வழங்குகிறது, NHS அல்லாத சிகிச்சைக்குத் தொடர்பு கொள்ளக்கூடிய உறுப்பினர்களின் பதிவேடு ஒன்றை வைத்திருக்கிறது. தொலைபேசி: 0161 054 304; மின்னஞ்சல்: babcp@babcp.com

கணினிமயமாக்கப்பட்ட அறிவாற்றல் பழகுமுறைச் சிகிச்சை (CBT)

பதற்றம், மனச்சோர்வு, அச்சங்கள், பீதி மற்றும் பெருவிருப்பக் கட்டாயக் குறைபாட்டுக்கான (OCD) தன்னுதவிக் கணினிப் பொதிகளுக்கு, அறிவாற்றல் பழகுமுறைச் சிகிச்சை (CBT) பற்றிய எங்கள் சிற்றேட்டை அல்லது பின்வரும் இணைப்புகளைப் பாருங்கள்: 

மேலும் படிக்க

Reading Well Books on Prescription

தன்னுதவிப் படித்தலைப் பயன்படுத்தி நீங்களே உங்கள் நலத்தைப் பராமரிப்பதற்கு இந்தத் திட்டம் உதவுகிறது. இந்தப் புத்தகப் பட்டியல், தொடர்புடைய சூழல்களோடு வாழும் மக்கள் மற்றும் உளவியலாளர்களுக்கான ராயல் கல்லூரி (Royal College of Psychiatrists) உள்ளிட்ட நலத் தொழில்முறை வல்லுனர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகும். இதைப் பொது நூலகங்கள் பரவலாக ஆதரிக்கின்றன.

NICE வழிகாட்டுதலைப் புரிந்துகொள்ளுதல்

பெருவிருப்பக் கட்டாயக் குறைபாடு (OCD) அல்லது உடல் டிஸ்மார்ஃபிக் குறைபாடு கொண்ட மக்கள், அவர்களுடைய குடும்பத்தினர், அவர்களைக் கவனித்துக்கொள்வோர் மற்றும் பொதுமக்களுக்கான தகவல்கள்.

புத்தகங்கள்

பெருவிருப்பக் கட்டாயக் குறைபாட்டிலிருந்து (OCD) விடுபடுங்கள்: அறிவாற்றல் பழகுமுறைச் சிகிச்சையின் மூலம் பெருவிருப்பக் கட்டாயக் குறைபாட்டை வெல்லுதல். எழுதியவர்கள்: ஃபியோனா சல்லாகோம்பெ, விக்டோரியா பிரியாம் ஓல்ட்ஃபீல்ட் மற்றும் பால் சல்கோவ்ஸ்கிஸ், வெர்மில்லியன்.

பெருவிருப்பங்கள் மற்றும் கட்டாயங்களைப் புரிந்துகொள்ளுதல்: ஒரு சுய உதவிக் கையேடு. எழுதியவர்: ஃபிரான்க் டால்லிஸ், ஷெல்டன் பிரஸ்.

பெருவிருப்பக் கட்டாயக் குறைபாட்டை (OCD) வெல்லுதல்: அறிவாற்றல் பழகுமுறை உத்திகளைப் பயன்படுத்தும் ஒரு தன்னுதவிப் புத்தகம். எழுதியவர்கள்: டேவிட் வியாலெ மற்றும் ராபர்ட் வில்சன், கான்ஸ்டபிள் மற்றும் ராபின்சன்.

தகவல் உதவி

RCPsych பொது ஊடாடல் ஆசிரியர் குழுவால் தயாரிக்கப்பட்டது

நிபுணர் விமர்சனம்: டாக்டர் பால் பிளென்கிரான்

இந்த வரிசையின் ஆசிரியர்: டாக்டர் ஃபில் டிம்ஸ்

இந்த வரிசையின் மேலாளர்: தாமஸ் கென்னடி

This translation was produced by CLEAR Global (Dec 2024)

Read more to receive further information regarding a career in psychiatry