உடல் நோய் மற்றும் மன நலன்
Physical illness and mental health
Below is a Tamil translation of our information resource on physical illness and mental health. You can also view our other Tamil translations.
நம்மில் பலருக்கு நம் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் தீவிரமான அல்லது வாழ்க்கையை மாற்றும் உடல் நோய் வரும். நோய் மற்றும் அதற்கான சிகிச்சை இரண்டும், நாம் நினைக்கும் மற்றும் உணரும் விதத்தை பாதிக்கலாம். இந்தத் தகவல், உடல் நோயால் மன நலன் பாதிக்கப் படுகிறவர்களுக்கும், அவர்களைப் பராமரிப்பவர்களுக்கும் ஆகும்.
உடல் நோயால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
உடல் நோய் இருப்பது அல்லது வருவது உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் பாதிக்கலாம். அது உங்கள் வாழ்க்கையின் நடைமுறைப் பகுதிகளைப் பாதிக்கலாம், எடுத்துக்காட்டாக:
- வேலை - நீங்கள் வேலை செய்வதை நிறுத்த, குறைவாக வேலை செய்ய, அல்லது, வேலையை மாற்ற வேண்டியிருப்பதைக் காணலாம்.
- அன்றாடச் செயல்பாடுகள் - நீங்கள் விரும்பிச் செய்யும் வேலைகளில் பங்கேற்பதற்கு இப்போது சிரமப்படலாம், அல்லது, நீங்கள் விரும்பும் அளவுக்கு உங்களால் நண்பர்கள், உறவினர்களைச் சந்திக்க இயலாமலிருக்கலாம். நீங்கள் முன்பு தானாகவே செய்துகொண்டிருந்த வேலைகளைச் செய்வதற்கு இப்போது உங்களுக்கு நண்பர்கள், உறவினர்கள், அல்லது ஒரு தொழில்முறைச் சேவையின் உதவி தேவைப்படலாம்.
- நிதிசார்ந்த - உடல் நோய் இருப்பது, வெவ்வேறு காரணங்களால் உங்கள் நிதி நிலையைப் பாதிக்கலாம். எடுத்துக்காட்டாக, மருத்துவச் சந்திப்புகளுக்குப் பயணம் செய்கிற செலவு, அல்லது நீங்களோ, உங்களை ஆதரிப்பவர்களோ முன்பைவிடக் குறைவாக வேலை செய்வது.
- மருத்துவமனையில் நேரம் செலவிடுதல் - நீங்கள் சில குறிப்பிட்ட சிகிச்சைகள் அல்லது அறுவைச் சிகிச்சைகளை மருத்துவமனையில் செய்ய வேண்டியிருக்கலாம். இது, வீட்டிலிருந்தும் மற்றும் உங்களுடைய வழக்கமான ஆதரவு வலைப்பின்னல்களிலிருந்தும் விலகி, வேறு இடத்தில் நேரத்தைச் செலவிடுவதைக் குறிக்கும்.
உடல் ரீதியான நோயைக் கொண்டிருப்பது நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள் மற்றும் உணர்கிறீர்கள் என்பதில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்:
- மன அழுத்தம் - ஒரு உடல் நோயைக் கொண்டிருப்பது, இயல்பாக உங்களை எதிர்காலத்தைப்பற்றிக் கவலை கொள்ளச் செய்யலாம், மற்றும் நிகழ்காலத்தைப் பற்றிய மன அழுத்தத்தை உணரலாம். சில விஷயங்களைப் பற்றி நீங்கள் குறிப்பாக கவலைப்படலாம். எடுத்துக்காட்டாக, ஒரு முக்கியமான பரிசோதனையின் முடிவு, அல்லது, நீங்கள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருந்தால் குழந்தைப் பராமரிப்புக்கு ஏற்பாடு செய்வது.
- தன்னுணர்வு - உடல் நோய்கள் உங்கள் உடல் மற்றும் உங்கள் வாழ்க்கை உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்கிற உணர்வை உண்டாக்கலாம். பொதுவாக, உடல்நோய்வாய்ப் படுவதை உங்களால் கட்டுப்படுத்த இயலாது. இது வருத்தமாகவும் வெறுப்பாகவும் இருக்கலாம்.
- உறவுகள் - உடல் நோய் இருப்பதனால், தனிமையாகவும், நண்பர்கள், மற்றும் குடும்பத்தினரிடமிருந்து தனிமைப்படுத்தப் பட்டிருப்பது போல் கூட உணரலாம். நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை அவர்களிடம் சொன்னால் அவர்கள் கவலைப்படுவார்கள் என்ற எண்ணத்தில், நீங்கள் அதைப் பகிர்ந்துகொள்ள விரும்பாமல் இருக்கலாம். அல்லது, நீங்கள் அனுபவிப்பதை நீங்கள் பகிர்ந்துகொள்ள விரும்பலாம், ஆனால், அது அவர்களுக்குப் புரியாது என்பதுபோல் நீங்கள் உணரலாம்.
- உலகைப் புரிந்துகொள்ளுதல் - நோய்வாய்ப்படுவது என்பது, உங்களைச் சுற்றியுள்ள உலகையும், எது சரி, எது முறை என்பது பற்றிய உங்களுடைய புரிந்துகொள்ளலையும் கேள்வி கேட்கும்படி செய்யலாம். சிலர் இது தங்கள் ஆன்மிக அல்லது மத நம்பிக்கைகளைப் பாதிப்பதாகவும் பார்க்கிறார்கள்.
உங்கள் உடல் நோயானது உங்கள் மன நலனின் மேல் ஓர் எதிர்மறையான விளைவைக் கொண்டிருந்தால், உதவி கிடைக்கும். உங்கள் உடல் நலப் பராமரிப்பை வழங்கும் நபர்கள் உங்களுக்கு மன நலன் தொடர்பான உதவி தேவையா என்பதை அறிந்துகொள்ள விரும்புவார்கள். இதில் உதவக்கூடிய மற்ற தொழில் வல்லுனர்கள் அல்லது நிறுவனங்களுக்கு அவர்களால் உங்களைப் பரிந்துரைக்க இயலும்.
என்னுடைய உடல் நோய் என் மன நலனைப் பாதிக்கிறது என்பதை நான் எப்படி சொல்ல முடியும்?
உடல் நோயானது உங்கள் மன நலனை, நீங்கள் யார், உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்து வெவ்வேறு வகைகளில் பாதிக்கலாம். இங்கு நாங்கள் ஒவ்வொரு மன நலச் சிக்கலைப்பற்றியும் விவரிக்கப் போவதில்லை. ஆனால், நீங்கள் கவனிக்கவேண்டிய சில அறிகுறிகள் கீழே உள்ளன.
பதற்றம்
நீங்கள் பதற்றம் அனுபவிக்கிறீர்கள் என்றால்:
- நீங்கள் எப்போதும் ஏதாவது ஒரு விஷயத்தைப்பற்றி அல்லது பல விஷயங்களைப்பற்றிக் கவலையாக உணர்கிறீர்கள்.
- நீங்கள் ஓய்வெடுக்க முடியவில்லை என்று உணர்கிறீர்கள்
- உங்கள் இதயம் எவ்வளவு விரைவாகத் துடிக்கிறது, நீங்கள் எப்படி மூச்சுவிடுகிறீர்கள், உங்கள் உணவு எப்படிச் செரிக்கிறது போன்றவற்றில் நீங்கள் மாற்றங்களைக் கவனிப்பீர்கள்.
- பதற்றத்தின் அறிகுறிகளைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள, எங்கள் பதற்ற வளங்களைப் படியுங்கள்.
மனச் சோர்வு
உங்களுக்கு மனச்சோர்வு வருகிறது என்றால்:
- நீங்கள் பெரும்பாலான நேரங்களில் அல்லது எப்போதும் மிகவும் வருத்தமாக உணர்வீர்கள்
- நீங்கள் களைப்பாக உணர்வீர்கள், இருப்பு கொள்ளாமல் இருப்பீர்கள், உங்கள் தூக்கம், உணவு அல்லது பாலுறவு ஆர்வத்தில் மாற்றங்களைக் கவனிப்பீர்கள்
- நீங்கள் மற்றவர்களுடன் உரையாடவேண்டும் என்பதுபோல் உணரமாட்டீர்கள்.
மனச்சோர்வின் அறிகுறிகளைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள, எங்கள் மனச்சோர்வு வளங்களைப் படியுங்கள்.
சரிசெய்துகொள்ளல் குறைபாடு
உங்களுக்கு ஓர் உடல் நோய் வந்துள்ளது அல்லது காயம் ஏற்பட்டுள்ளது என்றால் நீங்கள் கவலைப்படுவது, துன்பப்படுவது அல்லது வருத்தப்படுவது இயல்புதான். கடினமான சூழல்கள் அல்லது உறுதியற்ற நிலைக்கு இப்படித்தான் எதிர்வினையாற்றவேண்டும் என்கிற ‘இயல்பான' வழிகள் ஏதும் இல்லை.
எனினும், அழுத்தமான ஒரு நிகழ்வு அல்லது பல நிகழ்வுகளுக்கு ஏற்ப உங்களைச் ‘சரிசெய்துகொள்ள' இயலாமல் நீங்கள் தடுமாறுகிறீர்கள் என்றால், ‘சரிசெய்துகொள்ளல் குறைபாடு' என்று அழைக்கப்படும் சிக்கல் உங்களுக்கு இருக்கலாம்.
உங்களுக்குச் சரிசெய்துகொள்ளல் குறைபாடு இருந்தால்:
- உங்களால் உங்கள் உடல் நோயைப்பற்றியோ, அது உங்களுக்கு எதைக் குறிக்கிறது என்பதைப் பற்றியோ சிந்திப்பதை நிறுத்த இயலாது
- உங்கள் உடல் நோயைப்பற்றிச் சிந்திக்கும்போது மிகவும் கவலைப்படுவீர்கள் அல்லது துன்பப்படுவீர்கள்
- நிலைமையைச் சமாளிக்க அல்லது செயல்பட போராடுவது வாழ்க்கையின் வெவ்வேறு பகுதிகளில் எதிர்மறை விளைவைக் கொண்டிருக்கும்.
உங்களுக்குச் சரிசெய்துகொள்ளல் குறைபாடு உள்ளது என்றால், பொதுவாக, உங்களுக்கு ஒரு நோய் வந்திருப்பது கண்டறியப்பட்ட நாளிலிருந்து, அல்லது, நீங்கள் ஒரு காயத்திற்கு உட்பட்ட நாளிலிருந்து ஒரு மாதத்துக்குள் அது தெளிவாகிவிடும்.
அதிர்ச்சிக்குப் பிந்தைய மனஅழுத்தக் குறைபாடு (PTSD)
உடல் நோய் வந்தவர்கள், அல்லது, காயம் ஏற்பட்டவர்களில் சிலருக்கு அதிர்ச்சிக்குப் பிந்தைய மனஅழுத்தக் குறைபாடு (PTSD) வருகிறது. ஒரு நிகழ்ச்சி அல்லது சில தொடர் நிகழ்ச்சிகளுக்கு ஒருவர் ஓர் உளவியல் எதிர்வினையை ஏற்படுத்திக் கொள்ளும்போது PTSD நிகழ்கிறது.
PTSD-ஐ உண்டாக்கக்கூடிய சில அனுபவங்கள் பின்வருவன:
- தீவிர உடல் நோய் உள்ளதாகக் கண்டறியப்படுதல்
- தீவிர சிகிச்சையில் இருப்பது
- ஒரு சிக்கலான குழந்தைப் பிறப்பு அனுபவம்
- ஒரு தீவிர விபத்திற்கு உட்படுதல்.
உங்களுக்கு PTSD உள்ளது என்றால், பின்வரும் அறிகுறிகளில் சிலவற்றை நீங்கள் அனுபவிக்கலாம்:
- அந்த நிகழ்ச்சியைப்பற்றிய தேவையில்லாத, துன்பத்தைத் தருகிற நினைவுகள் அல்லது கனவுகள்
- அந்த நிகழ்ச்சி மீண்டும் நடப்பதுபோல் உணர்தல்
- அந்த நிகழ்ச்சியை நினைவுக்குக் கொண்டு வருவதற்குச் சிரமப்படுதல், அல்லது, அதைப்பற்றிச் சிந்திப்பதைத் தவிர்த்துவிடுதல்
- நண்பர்கள், உறவினர்களிடமிருந்து விலகியிருத்தல்
- உங்களைப்பற்றி, பிறரைப்பற்றி அல்லது உலகத்தைப்பற்றி எதிர்மறையாக உணர்தல்
- முன்பு விரும்பிச் செய்த செயல்களை இப்போது விரும்பாமலிருத்தல், மகிழ்ச்சியை அல்லது மன நிறைவை உணர இயலாமல் தடுமாறுதல்
- பரபரப்பாக இருத்தல், கவனம் செலுத்த அல்லது தூங்கச் சிரமப்படுதல்
- மற்றவர்களிடம் ஆக்ரோஷமாக நடந்துகொள்ளுதல்
- ஆபத்தான அல்லது பொறுப்பற்ற விஷயங்களைச் செய்தல்.
PTSDபற்றி மேலும் தெரிந்துகொள்ள, நீங்கள்இங்கு வாருங்கள்.
உங்கள் உடல்நலம் சரியாக இல்லை என்பதை உணர்தல்
நீங்கள் ஏதேனும் மனநோயை அனுபவித்தால், உங்களைச் சுற்றியுள்ளவர்கள் கவனிக்கக்கூடும்:
- நீங்கள் வழக்கத்தைவிட, வேறுவிதமாக நடந்து கொள்கிறீர்கள்
- உங்கள் உடல் நோய்க்கான சிகிச்சைகள் அல்லது மருந்துகளை எடுத்துக்கொள்ள நீங்கள் விரும்பவில்லை
- நீங்கள் மருத்துவச் சந்திப்புகளை தவற விடுகிறீர்கள்.
மேலுள்ள சில அறிகுறிகளோடு, நீங்கள் இவற்றையும் கவனிக்கலாம்,நீங்கள் :
- களைப்பாக உணர்கிறீர்கள்
- தூங்குவதற்குச் சிரமப்படுகிறீர்கள்
- பசியை இழக்கிறீர்கள்.
இந்த விஷயங்களில் சில உடல் நோயால் அல்லது மருத்துவச் சிகிச்சைகளாலும் நிகழலாம். இதனால், நீங்கள் அனுபவிக்கும் நிகழ்வுகள் ‘இயல்பானவை’யா இல்லையா என்று நீங்களோ உங்களைப் பராமரிப்பவர்களோ கண்டறிவது கடினமாகலாம்.
நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதுபற்றி உங்கள் மருத்துவரிடம் அல்லது நீங்கள் நம்பும் ஒருவரிடம் பேசுங்கள். நீங்கள் எதிர்கொள்ளும் மாற்றங்கள் உங்கள் உடல் நோயுடன் தொடர்புடையவையா, அல்லது, உங்கள் மன நலனுடன் தொடர்புடையவையா என்று கண்டறிவதற்கு அவர்கள் உங்களுக்கு உதவ முடியும்.
நீங்கள் மற்ற மன நலச் சிக்கல்களைப்பற்றி மேலும் படிக்க இங்கு வாருங்கள்.
எனக்கு உடல் நோய் இருந்தால் மனநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதா?
உடல் நோய் கொண்ட எல்ல்ோருமே மனநலச் சிக்கல்களை எதிர்கொள்வதில்லை. எனினும், நீண்ட நாள் உடல் நோய்களைக் கொண்டவர்களுடைய மன நலன் சற்றுக் குறைவான அளவில் இருக்கக்கூடும். மன நல நிலைகளுக்கும் சில குறிப்பிட்ட உடல் நோய்களுக்கும் இடையிலான ஒரு தொடர்பை ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. எடுத்துக்காட்டாக:
- புற்றுநோய்
- நீரிழிவு
- ஆஸ்துமா
- உயர் இரத்த அழுத்தம்
- கால்-கை வலிப்பு.
எனினும், இந்த உடல் நோய்கள் மட்டும்தான் உங்கள் மன நலனைப் பாதிக்கும் என்பதில்லை.
நல்ல உடல் நலம் கொண்டவர்களை விட, தொடர்ந்த உடல் நோய் நிலைகளைக் கொண்டவர்களுக்கு மனச்சோர்வு வரும் வாய்ப்பு 2 முதல் 3 மடங்கு கூடுதலாகும்.
உடல் மற்றும் மன நலன் ஆகியவை எப்படி தொடர்பு பட்டிருக்கின்றன?
உடல் மற்றும் மன நல நோய்கள் எப்படி தொடர்பு பட்டிருக்கின்றன என்பது ஒருபோதும் தெளிவாகத் தெரியவில்லை.
நீங்கள் யார், உங்களுக்கு வந்திருக்கும் உடல் அல்லது மனநல நிலை என்ன என்பதைப் பொறுத்து:
- உடல் நோயானது உங்களுக்கு ஒரு மனநல நிலை வருவதற்கு வழிவகுக்கலாம்
- உங்கள் உடல் நோய் உங்கள் மன நல நிலையுடன் தொடர்புடையதாக இருக்கலாம்
- உங்கள் உடல் நோய் மற்றும் மன நல நிலை ஆகியவற்றுக் கிடையில் தொடர்பு இல்லாமல் இருக்கலாம், ஆனால், அவை ஒரே நேரத்தில் நிகழலாம்.
ஒருவருடைய மன நலன் மோசமாக வளர்வதற்கு சில விஷயங்கள் நேரடியாகப் பங்களிக்கின்றன. எடுத்துக்காட்டாக:
- மன அழுத்தம் – உடல் நோய் வருவது ஒருவருக்கு மிகுந்த மன அழுத்தத்தை உண்டாக்கலாம், அந்த அழுத்தம் அவருடைய மன நலனை எதிர்மறையாகப் பாதிக்கலாம்.
- மருந்துச் சிகிச்சைகள் – சில மருந்துச் சிகிச்சைகள் உங்கள் மூளை செயல்படும் விதத்தைப் பாதிக்கக்கூடும். எடுத்துக்காட்டாக, ஸ்டீராய்ட்களைப் பயன்படுத்தினால் மனநிலை மாற்றங்கள் மற்றும் மனநோய் அறிகுறிகளும் வருகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. மனநோய் அறிகுறிகள் பின்வருமாறு:
- உண்மையில்லாதவற்றை நம்புதல்
- தெளிவாகச் சிந்திக்க இயலாமல் தடுமாறுதல்
- இல்லாதவற்றை இருப்பதுபோல் உணர்தல்.
- உடல் நோய்கள் – சில உடல் நோய்கள் மூளை இயங்கும் விதத்தைப் பாதிக்கின்றன. எடுத்துக்காட்டாக, தைராய்டு செயல்பாடு குறைவாக உள்ள மக்களுக்கு (ஹைப்போதைராய்டிசம்) மனச்சோர்வு அல்லது பதற்றம் வரும் வாய்ப்பு கூடுதலாகும்.
எனக்கு எப்போது மனநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம்?
உங்களுக்கு உடல் நோய் இருந்தால், பின்வரும் சூழ்நிலைகளில் உங்களுக்கு மோசமான மன நலன் இருப்பதற்கான வாய்ப்புகள் கூடுகின்றன:
- உங்களுக்கு இதற்குமுன் மன நலன் தொடர்பான சிக்கல் இருந்துள்ளது, அல்லது, இதற்குமுன் உங்களுக்கு மன நல நிலை இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது
- நீங்கள் உங்களுடைய நோயைப்பற்றிப் பேசக்கூடிய உறவினர்கள் அல்லது நண்பர்கள் யாரும் இல்லை
- அதே நேரத்தில் உங்களுடைய வாழ்க்கையில் மற்ற சிக்கல்கள் அல்லது அழுத்தத்தைத் தரும் நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. எடுத்துக்காட்டாக, வேலையை இழத்தல், ஒரு மணமுறிவு, அல்லது, அன்புக்குரிய ஒருவருடைய மரணம். சில நேரங்களில், எதிர்பாராமல் வருகிற அல்லது, அழுத்தத்தைத் தருகிற நேர்மறையான வாழ்க்கை மாற்றங்கள் கூட உங்களுடைய மன நலனை எதிர்மறையாகப் பாதிக்கலாம்.
- உங்களுடைய உடல் நோய் உங்களுக்கு நிறைய வலியை ஏற்படுத்துகிறது
- உங்களுக்குத் தீவிரமான, அல்லது, உயிருக்கு ஆபத்தான நோய் உள்ளது
- நீங்கள் உங்களைக் கவனித்துக் கொள்ளாதபடி உங்களுடைய நோய் உங்களைத் தடுக்கிறது.
உங்களுக்கு மோசமான மன நலன் இருக்கிற வாய்ப்புகள் மிகுதியாக உள்ள நேரங்கள் இவை:
- உங்களுக்கு உங்களுடைய நோயைப்பற்றி முதன்முறை சொல்லப்படும்போது
- ஒரு பெரிய அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பிறகு, அல்லது, உங்களுக்கு சிகிச்சையினால் விரும்பத்தகாத பக்க விளைவுகள் ஏற்பட்டால்
- நீங்கள் நன்றாகிக் கொண்டிருக்கிறீர்கள் என்று தோன்றிய பின் அந்த நோய் மீண்டும் திரும்பி வந்தால். எடுத்துக்காட்டு: புற்றுநோய் திரும்ப வருதல் அல்லது இரண்டாவது மாரடைப்பு ஏற்படுதல்
- உங்கள் நோய் சிகிச்சைக்கு பலன் அளிப்பதை நிறுத்தினால்.
நான் எப்போது உதவியை நாடவேண்டும்?
உடல் நோய் உள்ள ஒருவருக்குச் சிறிதளவு பதற்றமும் தளர்ந்த மனநிலையும் இருப்பது இயல்புதான். ஆனால், பின்வரும் சூழல்களில் நீங்கள் உதவியை நாடவேண்டும்:
- இதற்குமுன், மன நலன் தொடர்பான சிக்கல்கள் உங்களைத் தடுமாறச்செய்துள்ளன, அல்லது, உங்களுக்கு ஒரு மன நல நிலை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, மற்றும், இப்போது உங்கள் நிலை மீண்டும் மோசமாகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்
- நீங்கள் முன்பைவிட மோசமாக உணர்கிறீர்கள்
- காலப்போக்கில் , உங்கள் நிலை மேம்படுவதாகத் தெரியவில்லை
- உங்கள் உணர்வுகள் உங்கள் உறவுகளை, வேலையை, ஆர்வங்களை அல்லது அன்றாட வாழ்க்கையைப் பாதிப்பதை நீங்கள் காண்கிறீர்கள்
- வாழ்க்கை வாழத் தகுதியானது இல்லை என்றோ, நீங்கள் இல்லாவிட்டால் மற்றவர்கள் இன்னும் நன்றாக இருப்பார்கள் என்றோ நீங்கள் உணரத் தொடங்குகிறீர்கள்.
உதவியைப் பெறுவதா வேண்டாமா என்று என்னால் தீர்மானிக்க இயலவில்லை
உங்களுக்கு உடல் நோய் இருக்கும்போது உதவியை நாடுவது கடினமாக இருக்கலாம். பின்வரும் எண்ணங்கள் உண்மையாக இல்லாவிட்டாலும், அவை உங்களுக்கு வருவது இயல்பான எதிர்வினைதான்:
- “நான் என் உடல் நலத்தில் கவனம் செலுத்தவேண்டும். என் மன நலன் அவ்வளவு முக்கியமானது இல்லை.” – உங்கள் மன மற்றும் உடல் நலன் ஆகியவை ஒன்றோடொன்று தொடர்புடையவை. மனத்தளவில் நன்றாக இருப்பது உங்கள் உடல் நலத்தில் நேர்மறையான தாக்கத்தைக் கொண்டிருக்கும்.
- “எனக்கு கவனம் செலுத்த வேறு விஷயங்கள் இருக்கின்றன.” – நீங்கள் உங்கள் குடும்பம், நிதி, வீட்டு வசதி அல்லது வேலையில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்பதுபோல் நீங்கள் உணரலாம். ஆனால், நீங்கள் உங்கள் சொந்த மன நலனில் கவனம் செலுத்துவதற்கு நேரத்தை ஒதுக்காவிட்டால், உங்களுடைய நலன் அதிக மோசமாகி விடலாம். அப்போது, நீங்கள் முக்கியம் என்று நினைக்கிற இந்த விஷயங்களில் எதிலும் உங்களால் கவனம் செலுத்த இயலாது.
- “நிச்சயமாக நான் மனச்சோர்வடைந்துள்ளேன், நான் நோய்வாய்ப் பட்டிருக்கிறேன். அதற்காக உதவி பெறுவதில் எந்தப் பயனும் இல்லை.” – உங்கள் மன நலனில் சில சவால்கள் உள்ளன என்பது முற்றிலும் புரிந்துகொள்ளக் கூடியதுதான். எனினும், அதற்கு, உதவி பெறுவதற்கு நீங்கள் தகுதியற்றவர் என்ற பொருள் கிடையாது. எல்லோரும் மகிழ்ச்சியாகவும், ஆதரவாகவும், அக்கறையுடனும் உணர தகுதியானவர்கள்.
- “நான் நன்றி கெட்டவனாகத் தோன்ற விரும்பவில்லை, எனது உடல்நல பராமரிப்புக் குழு எனக்கு உதவ நிறையச் செய்கிறது.” - உங்கள் மருத்துவர்கள் உங்கள் மன நலன் மற்றும் உங்கள் உடல் நலன் பற்றி கேட்க விரும்புவார்கள். இது உங்களை நன்றாகக் கவனித்துக் கொள்வதன் ஒரு பகுதியாகும். நீங்கள் உதவி கேட்டால் நீங்கள் நன்றி மறந்து நடந்துகொள்கிறீர்கள் என்று அவர்கள் எண்ணமாட்டார்கள்.
நான் எப்படி உதவி பெறலாம்?
நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதைப் பற்றி நீங்கள் நம்பும் ஒருவரிடம் பேசுவதன் மூலம் தொடங்கலாம். பல நேரங்களில், நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதைப் பகிர்ந்துகொள்வது, அதாகவே உங்கள் மன நலனில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
உங்களுக்குக் கூடுதல் உதவி தேவைப்பட்டால், உங்கள் உடல் நோய் தொடர்பாக உங்களுக்கு உதவிக்கொண்டிருக்கிற உங்கள் பொதுமருத்துவர் அல்லது மருத்துவக் குழுவிடம் பேசுங்கள். உங்களுக்கு எவ்விதமான ஆதரவு இருக்கிறது என்று அவர்கள் உங்களுக்கு அறிவுறுத்துவார்கள், மற்றும் அதை அணுகுவதற்கு உங்களுக்கு உதவுவார்கள்.
உடல் நோய்களுடன் வாழும் மக்களுக்கு உதவுகிற பல தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள் உள்ளன. இந்த ஆதாரத்தின் முடிவில் நீங்கள் அவற்றைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ளலாம்.
நீங்கள் ஏற்கெனவே ஒரு மன நலக் குழுவின் பராமரிப்பின் கீழ் உள்ளீர்கள் என்றால், உங்களுக்கு ஏற்பட்ட உடல் நோயைப்பற்றி நீங்கள் அவர்களிடம் சொல்லவேண்டும். அவர்கள் உங்களுக்கு ஆதரவு அளிப்பதற்கு, இதைத் தெரிந்து கொள்வது அவர்களுக்கு உதவியாக இருக்கும்.
எனக்கு எவ்விதமான சிகிச்சை கிடைக்கும்?
உங்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை பின்வருவன பொருத்து அமையும்:
- நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள்
- அவை உங்கள் வாழ்க்கையில் கொண்டுவரும் பாதிப்பு
- உங்களுடைய தனிப்பட்ட சூழல்கள்.
நீங்கள் கையாளும் சிக்கலைப் பொறுத்து, உங்களுக்கு பின்வருவன வழங்கப்படலாம்:
- உளவியல் சிகிச்சை (பேச்சுச் சிகிச்சைகள் என்றும் அறியப்படுவது)
- மருந்து வழங்கல், மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகள் போன்றவை
அறிவாற்றல் பழகுமுறைச் சிகிச்சை(CBT) வலியோடு வாழ்பவர்களுக்கு உதவுவதாகத் தெரியவந்துள்ளது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள எங்கள் தகவல் ஆதாரங்களைப் படிப்பதன் மூலம் பின்வரும் நிலைகளுக்கான சிகிச்சைகள் பற்றி நீங்கள் மேலும் அறியலாம்:
இங்கு நீங்கள் பல்வேறு மன நல நிலைகளைப்பற்றியும் அவற்றுக்கான சிகிச்சைகளைப்பற்றியும் படிக்கலாம்.
இந்தச் சிகிச்சைகள் எப்படி உதவும்?
பேச்சுச் சிகிச்சை
நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை நெருங்கிய உறவினர்கள், நண்பர்களிடம்கூட வெளிப்படுத்துவது சிரமமாக இருக்கலாம். சில நேரங்களில், உங்களுக்கு நன்றாகத் தெரிந்தவர்களை நீங்கள் கவலைப்படுத்த விரும்பமாட்டீர்கள். அதனால், உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வது இன்னும் கடினமாக இருக்கலாம்.
இதனால், இதுபற்றி ஒரு தொழில் வல்லுனரிடம் பேசுவது எளிதாக இருக்கும். உணர்வுகள், எண்ணங்கள், எதார்த்தச் சிக்கல்களை இன்னும் நன்றாகச் சமாளிப்பதற்கான வழிகளைக் கண்டறிவதற்கு இவர்கள் உங்களுக்கு உதவமுடியும்.
பேச்சுச் சிகிச்சையைத் தொடங்கியவுடனேயே நீங்கள் முன்பைவிட நன்றாக உணரக்கூடும். ஏனெனில், உங்கள் கவலைகளைப் பற்றிப் பேச இயலுவதே உங்களுக்கு உதவலாம். அல்லது, பேச்சுச் சிகிச்சைகள் உங்களை இன்னும் நன்றாக உணரச் செய்வதற்கு இன்னும் அதிக நேரமெடுக்கலாம்.
மருந்து வழங்கல்
உங்களுக்கு எந்த வகை மருந்து கொடுக்கப்படுகிறது, நீங்கள் வேறு எவ்விதமான ஆதரவைப் பெறுகிறீர்கள் என்பதைப் பொறுத்து இது அமைகிறது.
பொதுவாக, உங்கள் வாழ்க்கையில் மற்ற நேர்மறையான மாற்றங்களைச் செய்யத் தொடங்குவதற்குப் போதுமான அளவுக்கு உங்களை நன்றாக உணரச்செய்வதற்கு மருந்து வழங்கல் பயன்படுத்தப் படுகிறது.. எந்த வகை மருந்து வழங்கலும் வேலை செய்வதற்குச் சிறிது காலம் ஆகும்., மற்றும் உங்கள் மருத்துவருடைய பரிந்துரைப்படி நீங்கள் அவற்றை எடுத்துக் கொள்ளவேண்டும்.
உங்களுக்குத் தூங்குவதில், பசி எடுப்பதில் , அல்லது, உடல் வலியினால் தடுமாற்றம் இருந்தால் மருந்து வழங்கல் உதவலாம். மருந்து வழங்கல் உங்களுக்கு எப்படி உதவலாம் என்பதுபற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.
நான் ஏற்கெனவே ஓர் உடல் நோய்க்கு மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போது, மன நல நிலைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்ளலாமா?
உங்களுக்கு ஓர் உடல் நோய் இருந்தால், நீங்கள் ஏற்கெனவே மருந்துகளை எடுத்துக் கொண்டிருக்கக்கூடும். நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கிற மருந்துகளில் எவற்றையேனும் சேர்த்து எடுத்துக்கொள்ளக்கூடாதா என்று உங்கள் மருந்துவர் உங்களுக்குச் சொல்வார். நீங்கள் கவனிக்கவேண்டிய பக்க விளைவுகள் எவையேனும் உண்டா என்றும் அவர் உங்களுக்குச் சொல்வார்கள்.
அனைத்து மருந்துகளுக்கும் சில பக்க விளைவுகள் இருக்கும். ஆனால், பொதுவாக இவை மிதமானவையாக இருக்கும், நீங்கள் சில நாட்களுக்கு மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது அவற்றின் தாக்கம் குறைந்துவிடும். உங்களுக்கு உடல் அல்லது உணர்வு சார்ந்த மாற்றம் ஏதேனும் ஏற்பட்டால், நீங்கள் அதை உங்கள் மருத்துவருடன் பகிர்ந்து கொள்ளவேண்டும்.
எனக்கு நானே உதவிக்கொள்வது எப்படி?
தொழில்முறை வல்லுனர்களிடம் உதவி கேட்பதுடன், உங்களுக்கு நீங்களே உதவிக்கொள்ளவும் பல விஷயங்கள் இருக்கின்றன:
பிறருடன் பேசுங்கள்
உங்கள் அச்சங்கள்,மற்றும் கவலைகளை உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். கடந்தகாலத்தில் உங்களுக்கு ஆதரவாக இருந்திருக்கக்கூடிய, மற்றும் நீங்கள் பேசுவதைக் கவனித்துக் கேட்கக்கூடிய ஒருவரிடம் பேசுங்கள்.
உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்
உங்கள் மருத்துவர் அல்லது பொதுமருத்துவரிடம் (GP) உங்கள் நோயைப்பற்றிய கேள்விகளைக் கேட்பதற்கு அஞ்சவேண்டாம். நோய் அல்லது அதன் சிகிச்சையைப் பற்றிய சில அம்சங்கள் உங்களுக்கு உறுதியாகத் தெரியாவிட்டால், அவற்றை அவர்கள் விளக்க உதவுவார்கள்.
ஆதரவைப் பெறுங்கள்
வெவ்வேறு தொண்டு நிறுவனங்களும் அமைப்புகளும் உங்களுக்கு நம்பகமான தகவல்கள், மற்றும் ஆதரவை வழங்குகின்றன. உங்களுக்கு இருக்கிற அதே உடல் நோயுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மற்றவர்களுடன் கூட நீங்கள் பேசலாம்,மற்றும் சக நபர் ஆதரவை அணுகலாம்.
நிதி ஆதரவுக்கு விண்ணப்பம் செய்யுங்கள்
உங்களுக்கு ஓர் உடல் அல்லது மன நல நிலை இருந்தால், நீங்கள் பின்வருபவற்றிற்கு உரிமை பெறலாம் ஆதாயங்கள் மற்றும் பிற நிதி ஆதரவு.
நன்கு சாப்பிடுங்கள்
சரிவிகித உணவை உண்ண முயலுங்கள். எடை குறைவது அல்லது ஆரோக்கியமற்ற உணவைச் சாப்பிடுவது போன்றவை உங்கள் உடல் மற்றும் மன நலனுக்கு கெடுதலாகலாம். உங்களுக்கு ஓர் உண்ணல் குறைபாடு இருந்தால், நீங்கள் எதைச் சரிவிகித மற்றும் நலமான உணவு என்று நினைக்கிறீர்கள் என்பது மாறுபடலாம்.
தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்யுங்கள்
முடிந்தால், தவறாமல் உடலுக்கான சில உடற்பயிற்சிகளை செய்ய முயற்சிக்கவும். இவை நடப்பது, அல்லது பத்து நிமிடங்கள் சிறு யோகாசனங்களைச் செய்வது போல மிக எளிமையானவையாக இருக்கலாம்.
சமநிலையைப் பராமரியுங்கள்
நிறைய வேலை செய்வது, ஓய்வெடுப்பது ஆகியவற்றுக்கிடையில் ஒரு சமநிலையைக் கண்டறிய முயலுங்கள்.
உங்களுக்கே நல்ல விஷயங்களைச் செய்துகொள்ளுங்கள் (சுய-பராமரிப்பு)
உங்களுடைய நாளில் இதமான, மகிழ்ச்சியளிக்கும் செயல்பாடுகளைச் சேருங்கள். அது, ஒரு நண்பருடன் தொலைபேசியில் பேசுவது, அல்லது, தோட்டத்தில் இருந்தபடி ஒரு புத்தகத்தைப் படிப்பது போன்ற எவையாகவும் இருக்கலாம்.
நிறையக் குடிப்பதைத் தவிர்க்கவும்
நிறைய மதுவைக் குடிக்காமலிருக்க முயலுங்கள். ஏனெனில், நாளடைவில் அது உங்கள் மன நலனை எதிர்மறையாகப் பாதிக்கலாம்.
பொழுதுபோக்கு மருந்துகளை தவிர்க்கவும்
பொழுதுபோக்கு மருந்துகள் உங்கள் மன நலனை எதிர்மறையாகப் பாதிக்கலாம். குறிப்பாக, நீங்கள் மற்ற மருந்துகளை எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால் அவை ஆபத்தாகவும் ஆகிவிடலாம். நீங்கள் வெவ்வேறு மருந்துகளைப்பற்றிய தகவல்கள், உதவிக் குறிப்புகளை எங்கள் இணையத்தளத்தில் காணலாம்.
தனக்குத் தானே மருந்து வழங்கிக்கொள்ளுதல்
சிலர் தங்களுடைய உடல் அல்லது மன நலச் சிக்கல்களைக் கையாள்வதற்கென மது அல்லது போதை மருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள். இது சில நேரங்களில் ‘தனக்குத் தானே மருந்து வழங்கிக்கொள்ளுதல்' என்று அழைக்கப்படுகிறது. தொடக்கத்தில் இது உங்களுக்கு உதவுவதுபோல் தெரியலாம். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல, இது உங்களை இன்னும் மோசமாக உணரவைக்கும். நீங்கள் கடினமான உணர்வுகளைச் சமாளிப்பதற்குப் போதை மருந்துகள் அல்லது மதுவைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.
போதுமான அளவு தூங்குங்கள்
ஒரு நல்ல தூக்க முறையை கடைபிடிக்க முயற்சி செய்யுங்கள். இதற்கான உதவிக் குறிப்புகளுக்கு, நன்கு தூங்குவது பற்றிய எங்கள் தகவல்களைப் படியுங்கள்.
உங்கள் மருந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள்
உங்கள் மருத்துவரிடம் பேசாமல் உங்கள் மருந்துகளை எடுத்துக்கொள்வதை நிறுத்தவேண்டாம், அவற்றை எவ்வளவு அல்லது எப்போது எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதை மாற்றவேண்டாம், அல்லது, மற்ற தீர்வுகளை முயலவேண்டாம். உங்கள் மருந்துகள் விரும்பப்படாத பக்க விளைவுகளை உண்டாக்கினால், அதை உங்கள் மருத்துவரிடம் சொல்லுங்கள்.
உங்கள் உடல்நலப் பரிசோதனைகளுக்குச் செல்லுங்கள்
உங்களுக்குச் சில குறிப்பிட்ட உடல் அல்லது மன நல நிலைகள் உள்ளன என்றால், அல்லது, நீங்கள் சில குறிப்பிட்ட மருந்துகளை எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால், உங்கள் பொதுப் மருத்துவர் (GP) அல்லது சிறப்பு வல்லுனருடனான வழக்கமான நலப் பரிசோதனைகளில் கலந்துகொள்ளும்படி நீங்கள் அழைக்கப்படுவீர்கள். நீங்கள் கண்டிப்பாக இந்த நிகழ்வுகளுக்குச் செல்லவேண்டும், உங்களுக்கு ஏதாவது புதிய உடல் அல்லது மன நல அறிகுறிகள் வந்துள்ளன என்றால், அதை உங்கள் பொதுமருத்துவர் (GP) அல்லது சிறப்பு வல்லுனரிடம் தெரிவிக்கவேண்டும். உங்களுக்கு இருக்கக்கூடிய சிக்கல்கள் மோசமாவதற்குள் உங்களுக்குச் சிகிச்சை வழங்குவோர் அவற்றைக் கண்டுபிடிப்பதற்கு இது உதவும்.
நான் இன்னொருவருக்கு எப்படி உதவலாம்?
பல நேரங்களில், ஒருவர் மோசமான மன நலனை எதிர்கொள்கிறார் என்றால், அதை முதலில் கவனிக்கிறவர்கள் அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களாகத் தான் இருப்பார்கள். உங்களுக்குத் தெரிந்த ஒருவரிடம் இதை நீங்கள் பார்த்திருந்தால்:
- உதவியை நாடும்படி அவர்களை மெல்ல ஊக்குவியுங்கள்
- உதவியை நாடினால், அவர்களுடைய நிலை மேம்படக்கூடும் என்று விளக்குங்கள்
- உதவியை நாடுவது வலுவின்மையின் அடையாளம் இல்லை என்று விளக்குங்கள்.
அவர்களுக்கு மேலும் உதவுவதற்கு நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள்:
- அவர்களோடு நேரம் செலவிடுங்கள் – மோசமான மன நலனை எதிர்கொள்ளும் ஒருவருடன் நேரம் செலவிடுவது உதவியாக இருக்கும். தாங்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதைப்பற்றிப் பேசும்படியும், தாங்கள் வழக்கமாகச் செய்கிற வேலைகளைத் தொடர்ந்து செய்யும்படியும் அவர்களை மெல்ல ஊக்குவியுங்கள்.
- அவர்களுக்கு உறுதியளிங்கள் – நேரம் செல்லச் செல்ல, ஆதரவு கிடைக்கக் கிடைக்க அவர்களுடைய மன நலம் மேம்படும் என்று அவர்களுக்கு உறுதியளியுங்கள். அவர்கள் அதை நம்புவது கடினமாக இருக்கலாம்.
- ஒரு நலமான வாழ்க்கைமுறையை ஊக்குவியுங்கள் – அவர்களுக்கு நிறைய அழுத்தம் கொடுக்காமல், நன்கு சாப்பிடும்படியும், நன்கு தூங்கும்படியும், நிறையக் குடிப்பதைத் தவிர்க்கும்படியும், தங்கள் மருந்துகளை எடுத்துக்கொள்ளும்படியும் அவர்களை ஊக்குவிக்க முயலுங்கள். அவர்கள் இதைச் செய்வதற்கு நீங்கள் அவர்களுக்கு உதவலாம், . அவர்களுடன் சேர்ந்து சமைக்கலாம், அல்லது, மதுவுடன் தொடர்பில்லாத வேறொரு செயலைச் செய்யலாம்.
- ஒரு நல்ல கேட்பவராக இருங்கள் - அவர்களின் நிலை அல்லது சிகிச்சை குறித்து அவர்களுக்கு ஏதேனும் கவலைகள் அல்லது கேள்விகளைப் பற்றி பேச நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்த இது உதவும்.
- எச்சரிக்கை அறிகுறிகளைக் கவனியுங்கள் – அதை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம், அவர்கள் பின்வருவனவற்றைப் பற்றி தங்கள் மருத்துவருடன் பேசவேண்டும் என்று அவர்களை ஊக்குவியுங்கள்:
- நிலை மோசமாகிக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது
- வாழ விரும்பாமலிருப்பதுபற்றிப் பேசத் தொடங்கியுள்ளார்கள்
- தங்களைக் காயப்படுத்திக் கொள்கிறார்கள் அல்லது தாங்கள் இதை செய்யக்கூடும் என்று சொல்கிறார்கள்.
நான் ஒருவரை பராமரிக்கிறேன். எனக்கு என்ன ஆதரவு கிடைக்கும்?
உடல் நோய், மன நோய் ஆகிய இரண்டையும் கொண்டவர்களைக் பராமரிப்பது பெரிய சவாலாக இருக்கலாம். நீங்கள் உங்களைக் கவனித்துக்கொள்ளவும், உங்கள் நலன், நலத்தில் கவனம் செலுத்தவும் மறந்துவிடக்கூடும்.
நீங்கள் ஒருவரைக் பராமரிக்கிறீர்கள் என்றால், பராமரிப்பவர்களுக்கான மதிப்பீடு ஒன்றை நீங்கள் பெற்றுக்கொண்டு, உங்களுக்கும் நீங்கள் பராமரிக்கிற நபருக்கும் எவ்விதமான உதவி கிடைக்கிறது என்று பார்க்கலாம். பராமரிப்பாளராக உங்கள் பங்கை எளிதாக்க இது உதவும். மதிப்பீடு ஒன்றை பெறுவது பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, NHS இணையத்தளத்தைப் பாருங்கள்.
Carers Trust website-ல் பராமரிப்பவர்களுக்கு கிடைக்கும் உதவி மற்றும் ஆதரவைப்பற்றிய கூடுதல் தகவல்கள் கிடைக்கும்.
எங்களிடம் மன நல நிலை கொண்ட ஒருவரைப் பராமரித்தல் என்பதைப் பற்றிய ஒரு வளம் இருக்கிறது. அதில் பின்வரும் தகவல்கள் உள்ளன:
- பராமரிப்பாளராக இருப்பது என்றால் என்ன அர்த்தம்
- நோயாளிகள், மற்றும் பராமரிப்பாளர்களின் உரிமைகள்
- ஒருவருக்காக எப்படி வாதிடுவது
- உங்களைக் கவனித்துக்கொள்ளுதல்
- பராமரிப்பாளர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள்
- உடல்நல மற்றும் சமூகப் பராமரிப்புத் தொழில் வல்லுனர்கள் பராமரிப்பாளர்கள் மற்றும் நோயாளிகளைச் செயல்திறனுடன் ஆதரிப்பது எப்படி.
கண்டறியப்படாத நோய் அல்லது வலியுடன் வாழ்தல்
சிலர் நோய் கண்டறியப்படாமலே நோய் அல்லது வலியுடன் வாழ்கிறார்கள். ஒருவருக்கு இருக்கிற அறிகுறிகளுக்கு மருத்துவர்களால் எந்த உடல் சார்ந்த காரணத்தையும் கண்டறிய இயலாத நிலையாகிய இது, ‘மருத்துவ அடிப்படையில் விளக்கப்படாத அறிகுறிகள்’ என்றும் அழைக்கப்படுகிறது.
நோய் அல்லது வலியுடன் வாழ்கிற வழக்கமான சவால்களுடன், உங்கள் சிக்கல்கள் எதனால் உண்டாகின்றன என்று தெரியாதது வேறு காரணங்களால் கடினமாக இருக்கலாம்:
- சிக்கல்களை உருவாக்குவது எது என்று தெரியாவிட்டால் அச்சமும் அழுத்தமும் உண்டாகலாம். அது உங்களை இன்னும் மோசமாக உணரச் செய்யலாம்.
- சிகிச்சைகள் பெறுவது உங்களுக்கு கடினமாக இருக்கலாம்.
- நோய் கண்டறியப்பட்டால், நீங்கள் அனுபவிப்பதற்கு உங்களால் ஒரு பெயரைச் சூட்ட இயலும், அதைப் பிறருக்கு விளக்கவும் இயலும். இது இல்லாமல், சிலர் நம்பப்படுவதை அல்லது சரிபார்க்கப்படுவதை உணர போராடுகிறார்கள்.
- வேலை செய்யாத சிகிச்சைகளை நீங்கள் முயற்சித்திருக்கலாம். இது வருத்தத்தை உண்டாக்கலாம், அல்லது, வேறு உடல் நலச் சிக்கல்களை உண்டாக்கலாம்.
இவை அனைத்தும் உங்கள் மன நலத்துக்குக் கெடுதலாக அமையலாம், குறிப்பாக, உங்கள் சிக்கல்கள் நெடுங்காலத்துக்குக் கண்டறியப்படாமல் இருந்தால்.
நீங்களோ உங்களுக்குத் தெரிந்த ஒருவரோ மருத்துவ அடிப்படையில் விளக்கப்படாத அறிகுறிகளை எதிர்கொள்கிறீர்கள் என்றால், உங்களுக்கு இன்னமும் சில உதவிகள் இருக்கிறது. இவற்றில் சில:
- மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகள்போன்ற மருந்து வழங்கல்
- அறிவாற்றல் பழகுமுறைச் சிகிச்சை (CBT) போன்ற உளவியல் சிகிச்சைகள்
- வலி மருந்தகங்கள்
- சக நபர் ஆதரவுக் குழுக்கள், இங்கு நீங்கள் உங்களைப் போன்ற அனுபவங்களைக் கொண்ட மற்ற நபர்களைச் சந்திக்கலாம்.
மருத்துவ அடிப்படையில் விளக்கப்படாத அறிகுறிகளுக்கான சிகிச்சை மற்றும் ஆதரவைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள, கல்லூரி இணையத்தளத்துக்கு வாருங்கள்.
கூடுதல் உதவி
உதவக்கூடிய நிறுவனங்கள்
உடல் நோய்களுடன் வாழ்கிற மக்களுக்கு ஆதரவு வழங்குகிற பல்வேறு தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள் உள்ளன. இவை அனைத்தையும் எங்களால் இங்கு பட்டியலிட இயலாது எனினும், UK-ல் மிகப் பொதுவான நோய்களை எதிர்கொள்ளும் மக்களை ஆதரிக்கிற தொண்டு நிறுவனங்களைப் பற்றிய தகவல்களை நாங்கள் இங்கு சேர்த்துள்ளோம்.
மேலும் தொண்டு நிறுவனங்களைக் கண்டறிய, the Charity Commission register -ஐ பயன்படுத்துங்கள்.
உதவிக்கான இணைப்பு: 0300 222 5800
WhatsApp
Asthma + Lung UK என்பது நுரையீரல் சிக்கல்களுடன் வாழும் மக்களுக்கான உதவி இணைப்பு, நல அறிவுறுத்தல் மற்றும் ஆதரவுக் குழுக்களை வழங்குகிறது.
Bowel Cancer UK என்பது குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தகவல்கள், ஆதரவை வழங்குகிறது. நோய் கண்டறிதலுக்கு உதவி, நல அறிவுறுத்தல், ஆதரவு நிகழ்வுகள், இணைய சமூகங்கள் மற்றும் சிற்றேடுகள், தகவல் தாள்கள் ஆகியவை இங்கு வழங்கப்படுகின்றன.
உதவிக்கான இணைப்பு: 0808 800 6000
மின்னஞ்சல்: hello@breastcancernow.org அல்லது, அவர்களுடைய ask a nurse form-ஐ பயன்படுத்துங்கள்
Breast Cancer Now என்பது மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு, தகவல்களை வழங்குகிறது. இதில் ஒரு சிறப்புச் செவிலியர் உதவி இணைப்பு, புற்றுநோயைப்பற்றிய நேரலை நிகழ்ச்சிகள், தகவல்கள், ஓர் ஆதரவுச் செயலி மற்றும் ஓர் இணைய மன்றம் ஆகியவை இடம்பெறுகின்றன.
உதவிக்கான இணைப்பு: 0345 123 2399
மின்னஞ்சல்: helpline@diabetes.org.uk
Diabetes UK என்பது, நீரிழிவுடன் வாழ்வதுபற்றிய அனைத்து அம்சங்கள் தொடர்பாகவும் சிறப்பு வல்லுனர் தகவல்கள், அறிவுரைகளை வழங்குகிறது.
உதவிக்கான இணைப்பு: 0300 330 3311
மின்னஞ்சல்: hearthelpline@bhf.org.uk
The British Heart Foundation என்பது, இதயம் மற்றும் இரத்தஓட்ட நிலைகள், பரிசோதனைகள் மற்றும் , சிகிச்சைகளைப்பற்றிய தகவல்களை வழங்குகிறது.
உதவிக்கான இணைப்பு: 01420 541 424
மின்னஞ்சல்: info@kidneycareuk.org
Kidney Care UK என்பது, சிறுநீரக நோயாளி ஆதரவுத் தொண்டு நிறுவனமாகும். இது நோயாளிகள் உதவித்தொகை, விடுமுறை மானியங்கள், ஆலோசனை மற்றும் வக்காலத்து சேவைகள், மற்றும் இன்னும் பலவற்றை வழங்குகிறது.
உதவிக்கான இணைப்பு: 0800 652 7330
மின்னஞ்சல்: helpline@britishlivertrust.org.uk
The British Liver Trust என்பது, கல்லீரல் நோய் அல்லது புற்றுநோயுடன் வாழ்வதுபற்றிய, செவிலியரால் வழிநடத்தப்படுகிற உதவி இணைப்பு, ஆதரவுக் குழுக்கள், எதார்த்த ஆதரவை வழங்குகிறது.
உதவிக்கான இணைப்பு: 0300 123 0789
மின்னஞ்சல்: help@painconcern.org.uk
Pain Concern என்பது, வலியோடு வாழ்கிற மக்களை ஆதரிக்கிறது, ஓர் உதவி இணைப்பு, மன்றம் மற்றும் சுய மேலாண்மைக் கருவிகளை வழங்குகிறது.
உதவிக்கான இணைப்பு: 0808 800 0303.
Parkinson’s UK என்பது, பார்க்கின்சன்'ஸ் நோய் கொண்டவர்களையும் அவர்களை பராமரிப்பவர்களையும் ஆதரிக்கிறது.
உதவிக்கான இணைப்பு: 0800 074 8383
Prostrate Cancer UK என்பது, ப்ரொஸ்ட்ரேட் புற்றுநோயுடன் வாழும் மக்களுக்கு ஆதரவு, தகவல்களை அளிக்கிறது. இதில் ஒரு சிறப்புச் செவிலியர் உதவி இணைப்பு, பதிப்புகள், இணைய ஆதரவு மற்றும் ஒருவருக்கொருவர் ஆதரவு ஆகியவை இடம்பெறுகின்றன.
உதவிக்கான இணைப்பு: 0303 3033 100
மின்னஞ்சல்: helpline@stroke.org.uk
Stroke Association என்பது, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஓர் உதவி இணைப்பு, ஆதரவுக் குழுக்கள், ஓர் இணையச் சமூகத்தை வழங்குகிறது.
Shout
உரை: 85258
Shout என்பது, UKல் வசிக்கிற, அழுத்தம், மனச்சோர்வு, தற்கொலை எண்ணம் அல்லது மலைத்துப்போகிற எண்ணம் கொண்ட நபர்களுக்கான இலவசமான, ரகசியமான, உரை வழியிலான ஆதரவுச் சேவையாகும்.
மேலும் படிக்க
- The Happiness Trap, Dr Russ Harris
- Body keeps the score; Brain, Mind and Body in the healing of Trauma, Bessel Van Der Kolk
- Maybe you should talk to someone: The workbook: A toolkit for editing your story and changing your life, Lori Gottlieb
மற்ற வளங்கள்
- Mood zone: unhelpful thinking, audio podcast from Dr Chris Williams as part of NHS Choices.
- Staying Safe – உணர்வு அடிப்படையில் தடுமாறுகிறவர்கள், தற்கொலை உணர்வு கொண்ட மக்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்துடன் இந்த இணையத்தளம் இயங்கி வருகிறது. இதில் காணொளிகளும், ஒரு ‘பாதுகாப்புத் திட்ட'த் தாளும் உள்ளன.
- Emotional distress in South Asian men with long term conditions - YouTube – இந்த வீடியோ நல நிலைகளைக் கொண்ட தெற்கு ஆசிய ஆண்களை நோக்கமாகக் கொண்டது, இவர்களுக்கு எவ்விதமான உதவி கிடைக்கிறது என்று விளக்குகிறது.
தகவல் உதவி
இந்தத் தகவல் உளவியலாளர்களுக்கான அரசக் கல்லூரியின் பொது ஊடாடல் ஆசிரியர் வாரியத்தால் (PEEB) உருவாக்கப்பட்டது. இதை எழுதும்போது கிடைத்துள்ள மிகச் சிறந்த சான்றுகளை இது பிரதிபலிக்கிறது.
வல்லுனர் எழுத்தாளர்: டாக்டர் சன்ஜுக்தா தாஸ்
எல்லா பார்வைஆவணங்களும் ள் கேட்டுப் பெறலாம்.
This translation was produced by CLEAR Global (Jan 2025)