அதிர்ச்சி தரும் நிகழ்வு ஒன்றுக்குப்பின் அதிலிருந்து மீண்டு வருதல்

Coping after a traumatic event

Below is a Tamil translation of our information resource on coping after a traumatic event. You can also view our other Tamil translations.

அதிர்ச்சி தரும் நிகழ்வு ஒன்றை எதிர்கொண்டுள்ள, அல்லது, அவ்வாறு எதிர்கொண்டுள்ள ஒருவரை அறிந்த யார் வேண்டுமானாலும் இந்தத் தகவலைப் பயன்படுத்தலாம்.

அதிர்ச்சி தரும் நிகழ்வு என்றால் என்ன?

பல மக்கள் தங்களுடைய வாழ்க்கை முழுவதும் அதிர்ச்சி தரும் நிகழ்வுகளை எதிர்கொள்கிறார்கள். இங்கிலாந்தில் உள்ள வயதுவந்த மக்களில் சுமார் மூன்றில் ஒருவர் தங்கள் வாழ்க்கையில் குறைந்தது ஓர் அதிர்ச்சி தரும் நிகழ்வையாவது எதிர்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

அதிர்ச்சி தரும் நிகழ்வுகளுக்குச் சில எடுத்துக்காட்டுகள்:

 • யாரேனும் ஒருவர் இறப்பதைப் பார்ப்பது அல்லது நீங்கள் இறக்கப்போவதாக எண்ணுவது
 • பெரிதாகக் காயப்படுதல் அல்லது
 • பாலியல் வன்முறையை எதிர்கொள்ளுதல்.

மக்கள் அதிர்ச்சி தரும் நிகழ்வுகளைப் பின்வரும் வழிகளில் ஏதேனும் ஒன்றின்மூலம் எதிர்கொள்ளக்கூடும்:

 • நேரடியாக – அது அவர்களுக்கு நடக்கிறது
 • பார்த்தல் – இன்னொருவருக்கு அது நடப்பதை அவர்கள் பார்க்கிறார்கள்
 • தெரிந்துகொள்ளுதல் – தங்களுக்கு மிகவும் நெருக்கமான ஒருவருக்கு அது நடந்ததை அவர்கள் கேள்விப்படுகிறார்கள்
 • திரும்பத் திரும்பக் காணுதல் – அவர்கள் அதிர்ச்சி தரும் நிகழ்வுகளைத் திரும்பத் திரும்ப எதிர்கொண்டுள்ளார்கள், அல்லது, மற்றவர்களைப் பாதிக்கிற அதிர்ச்சி தரும் நிகழ்வுகளைத் திரும்பத் திரும்பப் பார்க்கிறார்கள். அதிர்ச்சி தரும் நிகழ்வுகளை மின் ஊடகங்கள், தொலைக்காட்சி, திரைப்படங்கள் அல்லது பணியிடங்களில் காணும் படங்களின் வழியாகக் காண்கிற சிலர் மன நலச் சிரமங்களை எதிர்கொள்ளக்கூடும் என்பதும் நமக்குத் தெரியும்.

வழக்கமான அதிர்ச்சி தரும் நிகழ்வுகள் சில:

 • வன்முறையான மரணம் ஒன்றைப் பார்த்தல்
 • தீவிர விபத்துகள், எ.கா: கார்கள் ஒன்றோடொன்று மோதுதல்
 • உடல் சார்ந்த அல்லது பாலியல் சார்ந்த தாக்குதல்
 • தீவிர நலப் பிரச்சனைகள் அல்லது தீவிரப் பராமரிப்பில் இருத்தல்
 • சிக்கலான குழந்தைப் பிறப்பு அனுபவங்கள்
 • உயிருக்கு ஆபத்தான ஒரு நோய் அவருக்கு இருப்பதாகக் கண்டறியப்படுதல்
 • போர் மற்றும் முரண்
 • தீவிரவாதத் தாக்குதல்கள்
 • இயற்கையான அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகள். எகா: ஆழிப் பேரலைகள் அல்லது பெருந்தீ

இங்கு பேசப்படாத பலப்பல நிகழ்வுகளும் அதிர்ச்சி உணர்வை உண்டாக்கலாம் என்பதை நினைவில் கொள்வது முக்கியம். உங்களுடைய அனுபவம் இங்கு பேசப்படாவிட்டால் நீங்கள் உதவி மற்றும் ஆதரவை நாடக்கூடாது என்று பொருள் ஆகாது.

சிலருடைய வேலை காரணமாக அவர்கள் பணியிடத்தில் அதிர்ச்சி தரும் நிகழ்வுகளை எதிர்கொள்ளும் வாய்ப்பு மிகுதியாக இருக்கலாம். இந்த வகைப் பணிகளுக்குச் சில எடுத்துக்காட்டுகள்:

 • நெருக்கடிச் சேவைப் பணியாளர்கள் (எகா: காவல்துறை அலுவலர்கள், தீயணைப்பு வீரர்கள் அல்லது துணை மருத்துவப் பணியாளர்கள்)
 • சமூகப் பணியாளர்கள்
 • தீவிரப் பராமரிப்புப் பணியாளர்கள்
 • ராணுவ வீரர்கள் மற்றும் போர் இடங்களில் பணியாற்றும் பிற மக்கள்

அதிர்ச்சி தரும் ஒரு நிகழ்வுக்குப்பின் நான் எப்படி உணர்வேன்?

பொதுவாக, மக்கள் அதிர்ச்சி தரும் ஒரு நிகழ்வுக்குப்பின்னர் பின்வரும் விஷயங்களில் சிலவற்றை உணர்வார்கள்:

 • நினைவுகள், கனவுகள் மற்றும் திரும்பிப்பார்த்தல்கள் – அந்த நிகழ்வைப்பற்றிய துன்பம் தரும் நினைவுகள், கனவுகள் அல்லது கெட்ட கனவுகள் உங்களுக்கு வரலாம். அந்த நிகழ்ச்சி மறுபடி நடப்பதுபோலவும் நீங்கள் அதை நினைத்துப்பார்க்கலாம் (இது திரும்பிப் பார்த்தல் என்று அழைக்கப்படுகிறது).
 • அந்த நிகழ்ச்சியைப்பற்றி யாராவது நினைவுபடுத்தினால் வருந்துதல் – குறிப்பாக, அந்த நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு அருகில் அல்லது அந்த நிகழ்ச்சியை உங்களுக்கு நினைவுபடுத்துகிற ஒரு சூழலில் நீங்கள் இருக்கும்போது, உங்களுடைய வருத்தம் மிகுதியாக இருக்கலாம்.
 • உணர்வுகள் மற்றும் சூழல்களைத் தவிர்த்தல் – நீங்கள் அந்த நிகழ்ச்சியுடன் தொடர்புடைய நினைவுகள், எண்ணங்கள், உணர்வுகள், பொருட்கள், மக்கள் மற்றும் இடங்களைத் தவிர்க்கக்கூடும்.
 • நினைவிழப்பு – அந்த நிகழ்வின் சில பகுதிகள் உங்கள் நினைவுக்கு வராமல் இருக்கலாம்.
 • கடினமான உணர்வுகள் – இவற்றில் சில:
  • உங்களைப்பற்றி, பிறரைப்பற்றி அல்லது உலகத்தைப்பற்றி எதிர்மறையாக உணர்தல்
  • நடந்ததற்கு உங்களை அல்லது பிறரைக் குற்றம் சொல்லுதல்
  • அச்சம், திகில், சினம், குற்றவுணர்ச்சி அல்லது நாணம் போன்ற எதிர்மறை உணர்வுகள்
  • மகிழ்ச்சி, மன நிறைவு அல்லது பிறர்மீது அன்பு போன்றவற்றை உணர இயலாமல் இருத்தல்
 • நீங்கள் நடந்துகொள்ளும் முறையில் மாற்றங்கள் – இவற்றில் சில:
  • நீங்கள் முன்பு மகிழ்ச்சியாகச் செய்தவற்றைச் செய்யாமலிருத்தல் அல்லது அவற்றில் ஆர்வம் காண்பிக்காமல் இருத்தல்
  • மற்ற மக்களிடமிருந்து விலகி இருப்பதுபோல் உணர்தல்
  • கவனக்குறைவான அல்லது தன்னை அழிக்கக்கூடிய வகையில் நடத்தல்
  • மக்கள்மீது அல்லது பொருட்களின்மீது சினம் மற்றும் ஆவேசத்துடன் இருத்தல்
  • மிக மிகக் கவனமாக, அல்லது ‘எச்சரிக்கையுடன்' இருத்தல்

இவை, அதிர்ச்சிக்குப் பிந்தைய அழுத்தக் குறைபாடு (PTSD) கொண்டவர்களுக்கு வரக்கூடிய சில அறிகுறிகளாகும். எனினும், அதிர்ச்சி தரும் நிகழ்வு ஒன்றை எதிர்கொண்ட அனைவருக்கும் PTSD வரும் என்று பொருள் இல்லை. உண்மையில், அதிர்ச்சி தரும் நிகழ்வை எதிர்கொள்ளும் மக்களில் பலர் அந்த எதிர்மறைத் தாக்கங்கள் காலப்போக்கில் காணாமல்போய்விடுவதாகச் சொல்கிறார்கள்.

இந்த உணர்வுகள் எப்போது விலகும்?

அதிர்ச்சி தரும் ஒரு நிகழ்விலிருந்து வெளிவருவதற்குச் சில நாட்கள், வாரங்கள் அல்லது மாதங்கள்கூட ஆகலாம்.

அந்தச் சூழ்நிலையில் இருக்கும் ஒருவர் ஒரு மாதத்துக்குப்பிறகும் சிறிது துன்பத்தை உணர்கிறார், ஆனால் அந்த உணர்வுகள் மெல்ல மேம்படுகின்றன என்றால், அவர்கள் அநேகமாகக் குணமாகிவிடுவார்கள், அவர்களுக்குச் சிகிச்சை தேவைப்படாது.

ஆனால், அவர்களுக்குக் குறிப்பிடக்கூடிய துன்பம் இருந்தால், அது ஒரு மாதத்துக்குப்பிறகும் சிறிதும் மேம்படாவிட்டால், அல்லது, மூன்று மாதங்களுக்குப்பிறகும் இருந்தால், அவர்களுக்கு PTSD வந்திருக்கலாம். 

அதிர்ச்சி தரும் நிகழ்வு ஒன்றை நான் எதிர்கொண்டால், நான் என்ன செய்யவேண்டும்?

அதிர்ச்சி தரும் நிகழ்வு ஒன்றை எதிர்கொண்டபிறகு நீங்கள் முயன்றுபார்க்கக்கூடிய சில விஷயங்கள், இதோ:

உங்களுக்கு நேரம் கொடுங்கள்

அதிர்ச்சி தரும் நிகழ்விலிருந்து வெளிவருவதற்கு நேரம் தேவை. நடந்ததை ஏற்றுக்கொள்ள அல்லது அதை ஒப்புக்கொண்டு வாழ்க்கையைத் தொடர உங்களுக்கு நெடுநேரம் ஆகலாம். ஒருவேளை, யாராவது இறந்திருந்தால் உங்களுக்கு முக்கியமான எதையாவது நீங்கள் இழந்திருந்தால், நீங்கள் அந்தத் துயரத்தையும் எதிர்கொள்ளவேண்டியிருக்கும். உடனடியாக அதிலிருந்து வெளிவந்துவிடவேண்டும் என்று உங்களுக்கு நீங்களே அழுத்தம் கொடுத்துக்கொள்ளாமலிருக்க முயலுங்கள்.

அந்த நிகழ்ச்சியைப்பற்றிப் பேசுங்கள்

அதிர்ச்சி தரும் ஒரு நிகழ்வுக்குப்பிறகு, உங்களுக்கு அந்த நிகழ்வை நினைவுபடுத்தும் விஷயங்களை நீங்கள் தவிர்க்க விரும்பலாம், என்ன நடந்தது என்பதைப்பற்றிப் பேசுவதைத் தவிர்க்கலாம். ஆனால், அந்த நிகழ்ச்சியைப்பற்றியும் உங்கள் உணர்வுகளைப்பற்றியும் பேசுவது நீங்கள் கூடுதல் மீள்திறனைப் பெறுவதற்கு உங்களுக்கு உதவலாம் என்று ஆராய்ச்சி சொல்கிறது. நினைவுகள் மற்றும் உணர்வுகளைத் தவிர்ப்பது, மக்களுக்கு இன்னும் மோசமான உணர்வுகளைத்தான் கொண்டுவருகிறது என்று தெரியவந்துள்ளது.

உங்களைப் போன்ற சூழலை எதிர்கொண்டுள்ள மற்றவர்களுடன் பேசுங்கள்

நீங்கள் எதிர்கொண்டதைப்போன்ற அதிர்ச்சி தரும் நிகழ்வை எதிர்கொண்ட அல்லது அதேபோன்ற அனுபவங்களைச் சந்தித்த மற்ற மக்களுடன் பேசுவது உங்களுக்கு உதவலாம். ஆனால், மக்கள் ஒரே நிகழ்வை வெவ்வேறுவிதமாக எதிர்கொள்ளலாம், அதிலிருந்து மீளலாம். அதனால், உங்களுடைய மீளலை இன்னொருவருடைய மீளலுடன் ஒப்பிடாமல் இருக்க முயலுங்கள். இதுபோன்ற நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கு உங்களால் உதவ இயலும் என்று உங்களுக்குத் தோன்றினால், அதுவும் உதவியாக இருக்கலாம்.

உதவியை நாடுங்கள்

நீங்கள் நம்புகின்ற நண்பர்கள், உறவினர்கள் அல்லது மற்ற மக்களுடைய ஆதரவை நாடுங்கள். நீங்கள் அந்த அதிர்ச்சி தரும் நிகழ்விலிருந்து இன்னும் நன்றாக வெளிவருவதற்கு அது உங்களுக்கு உதவலாம். இதன்மூலம் உங்களுக்கு உணர்வு ஆதரவு கிடைப்பதுடன், அவர்கள் வழக்கமான வேலைகளில் உங்களுக்கு உதவலாம், அல்லது, ‘வழக்கமான' விஷயங்களைச் செய்யும்போது உங்களுடன் நேரம் செலவிடலாம்.

நிறைய நேரம் தனியாக இருக்கவேண்டாம்

அதிர்ச்சி தரும் நிகழ்வைச் சந்தித்த ஒருவர், அதன்பிறகு மற்ற மக்களுடன் நிறைய நேரம் செலவிடுகிறார் என்றால், அவருடைய மன நலம் மிகவும் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் குறைகின்றன. ஆனால், இதை எல்லாராலும் எளிதில் செய்ய இயலாது. ஆனால், அதற்கு முயலலாம். எடுத்துக்காட்டாக, அதிர்ச்சி தரும் நிகழ்வைச் சந்தித்த ஒருவர் தனியாக வாழ்கிறார் என்றால், அவர் தன் உறவினர்களுடன் அல்லது நெருங்கிய நண்பர் ஒருவருடன் சில நாட்கள் வசிக்கலாம். இதற்கு வாய்ப்பில்லை என்றால், உங்களுக்கு நெருக்கமான மக்களுடன் நிறைய நேரம் செலவிட முயலுங்கள், அல்லது, அவர்களுடன் தொலைபேசியில் அல்லது காணொளி அழைப்புகளின் வழியாகத் தொடர்பில் இருக்க முயலுங்கள்.

உங்கள் ஒழுங்கைத் தொடருங்கள்

அதிர்ச்சி தரும் நிகழ்வுக்குமுன் நீங்கள் பின்பற்றிவந்த அதே ஒழுங்கை இயன்றவரை தொடர்ந்து பின்பற்றுங்கள். அது கடினமாகத் தோன்றினாலும் சரி, தொடர்ந்து பின்பற்றுங்கள். இதுபோன்ற ஒரு நிகழ்வுக்குப்பிறகு உங்களுடைய உண்ணுதல் மற்றும் உடற்பயிற்சிப் பழக்கங்கள் மாறலாம், தூக்கம் வருவது கடினமாகலாம். ஒழுங்காகச் சாப்பிட முயலுங்கள், ஒழுங்காக உடற்பயிற்சி செய்ய முயலுங்கள், போதுமான அளவு தூங்க முயலுங்கள். மேலும் தகவல்களுக்கு, நன்கு தூங்குவதுபற்றிய எங்களுடைய பக்கத்தைப் பாருங்கள்.

தொழில் வல்லுநருடைய உதவியைப் பெறுவதுபற்றிச் சிந்தியுங்கள்

தடுமாறும் நிலையில் இருக்கிற சிலர் தங்களுடைய GPயிடம் இதைப்பற்றிப் பேசினால், அவர்களுக்கு வேண்டிய உதவி கிடைக்கலாம். அதிர்ச்சி தரும் நிகழ்வுக்குப்பிறகு முதல் மாதத்தில் மன நலத் தொழில் வல்லுநர் உதவியை நாடுவது பெரிய நன்மையைத் தராது. சில நேரங்களில் உங்கள் அறிகுறிகள் மிகத் தீவிரமாக இருப்பதால் உங்கள் GP இதைப் பரிந்துரைக்கக்கூடும். அந்த நேரங்களில்மட்டும் நீங்கள் இதைக் கருத்தில் கொள்ளலாம்.

நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதைக் கவனியுங்கள்

அதிர்ச்சி தரும் நிகழ்வு ஒன்றைத் தொடர்ந்து முதல் சில மாதங்களுக்கு, நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை நீங்கள் கூர்ந்து கவனிக்கலாம், நேரம் செல்லச்செல்ல அந்த உணர்வுகள் எப்படி மாறுகின்றன என்பதையும் குறித்துவைக்கலாம். நீங்கள் மேம்படுகிறீர்கள் என்று உங்களுக்குத் தோன்றாவிட்டால், அல்லது, நீங்கள் முன்பைவிட மோசமாக உணரத் தொடங்கினால், நீங்கள் உங்கள் GPயுடன் பேசவேண்டும்.

உங்கள் நிறுவனத்தின் ஆதரவை நாடுங்கள்

உங்களுடைய பணியின் ஒரு பகுதியாக நீங்கள் அதிர்ச்சி தரும் நிகழ்வு ஒன்றை எதிர்கொள்கிறீர்கள் என்றால், உங்கள் பணியிடம் உங்களுக்கு உதவுவதற்கான ஆதரவு அமைப்புகளை கொண்டிருக்கலாம். நீங்கள் பணிக்கு வெளியில் அதிர்ச்சி தரும் நிகழ்வு ஒன்றை எதிர்கொள்கிறீர்கள் என்றால், இதைப்பற்றி நீங்கள் உங்களுடைய நிறுவனத்திடம் சொல்லலாம். அவர்கள் உங்களை ஆதரிப்பதற்கு இது உதவும். எடுத்துக்காட்டாக, என்ன நடந்தது என்பதை நீங்கள் அவர்களிடம் எடுத்துச்சொல்லலாம். அதன்மூலம், உங்கள் உணர்வுகளை அவர்களுக்குத் தெரியப்படுத்தலாம். நீங்கள் எப்படி வேலை செய்கிறீர்கள் என்பதில் மாற்றங்களைச் செய்யும்படி நீங்கள் அவர்களைக் கேட்கலாம். எடுத்துக்காட்டாக, உங்களுக்கு இன்னும் அதிர்ச்சி அல்லது தீவிர அழுத்தம் வராதபடி பார்த்துக்கொள்வது, அல்லது உங்கள் பணி நேரங்களைச் சரிசெய்வது. இந்தத் தகவல் தொகுப்பின் வேறொரு பகுதியில், நிறுவனங்களைப்பற்றிய பிரிவு ஒன்று உள்ளது. அதையும் பாருங்கள்.

உங்களைக் கவனித்துக்கொள்ளுங்கள்

அதிர்ச்சி தரும் நிகழ்வு ஒன்றை எதிர்கொள்கிறவர்கள் அதன்பிறகு விபத்துகளை எதிர்கொள்ளும் வாய்ப்பு மிகுதியாகிறது. வீட்டிலும் வண்டி ஓட்டும்போதும் கூடுதல் கவனத்துடன் இருங்கள். அதிர்ச்சி தரும் நிகழ்வை மறப்பதற்கு அல்லது சமாளிப்பதற்கு மது அல்லது சட்டத்துக்கு எதிரான போதை மருந்துகளைப் பயன்படுத்தாமலிருக்க முயலுங்கள். அவை அப்போதைக்கு உங்களை நன்றாக உணரச்செய்யலாம், ஆனால், தொலைநோக்கில் பார்க்கும்போது அவை உங்களுக்கு நன்மை தராது.

அந்த நிகழ்ச்சியைப்பற்றிய ஊடகச் செய்திகளை நிறையப் படிக்கவேண்டாம், பார்க்கவேண்டாம்

அதிர்ச்சி தரும் நிகழ்வு ஒன்றை எதிர்கொண்டபிறகு, அதைப்பற்றிச் சமூக ஊடகங்களில் அல்லது செய்திகளில் நிறையப் பார்க்கவேண்டும் அல்லது படிக்கவேண்டும் என்கிற துடிப்பு உண்டாகலாம். குறிப்பாக, தீவிரவாதத் தாக்குதல் அல்லது இயற்கைப் பேரழிவுகள் போன்ற பெரிய நிகழ்ச்சிகளின்போது இது மிகவும் உண்மையாகும். எனினும், அந்த நிகழ்வைப்பற்றிய ஊடகச் செய்திகளை நிறையப் பார்ப்பது, கேட்பது அல்லது படிப்பதைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக, அது உங்களுக்குத் துன்பத்தை உண்டாக்கினால் கண்டிப்பாக அவற்றைத் தவிர்க்கவேண்டும். 

நான் எப்போது தொழில் வல்லுநர் உதவியைப் பெறவேண்டும்?

அதிர்ச்சி தரும் அனுபவங்களை ஒவ்வொருவரும் வெவ்வேறுவிதமாகக் கையாள்கிறார்கள். பலர் அதிர்ச்சி தரும் நிகழ்வுக்குப்பின் தங்களுடைய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பணியிடத்தின் ஆதரவுடன் மீண்டுவிடுகிறார்கள்.

அதிர்ச்சி தரும் நிகழ்வு ஒன்றிலிருந்து நீங்கள் மீண்டபிறகும், நீங்கள் அதை மறக்காமலிருக்கலாம். அதைப்பற்றி உங்களுக்கு எதிர்மறை உணர்வுகள் உண்டாகலாம், அல்லது, அவ்வப்போது அதைப்பற்றிச் சிந்திக்கும்போது வருத்தமாக உணரலாம். எனினும், இந்த உணர்வுகள் திகைப்பூட்டுபவையாக இருக்கக்கூடாது, அல்லது, வாழ்க்கையை அனுபவிப்பதிலிருந்து உங்களைத் தடுத்து நிறுத்தக்கூடாது.

இந்தச் சூழ்நிலைகளில் நீங்கள் உங்களுடைய GPயிடம் உதவி கோரவேண்டும்:

 • உங்கள் அறிகுறிகள் மிக மோசமாக உள்ளன, மேலும்
 • அவை மேம்படுவதாகத் தெரியவில்லை

ஒரு மாதத்துக்குப்பிறகும் உங்கள் அறிகுறிகள் மிக மோசமாக இருந்தால், மற்றும், உங்கள் வாழ்க்கையில் குறிப்பிடக்கூடிய தாக்கத்தைக் கொண்டிருந்தால், நீங்கள் உங்கள் GPயிடம் பேசவேண்டும்.

உங்களுடைய அறிகுறிகள் அவ்வளவு மோசமாக இல்லை. ஆனால், அவை மூன்று மாதங்களுக்குமேல் தொடர்கின்றன என்றால், நீங்கள் உங்கள் GPயிடம் பேசவேண்டும்.

ஒருவேளை எனக்கு PTSD வந்தால்?

அதிர்ச்சி தரும் நிகழ்வு ஒன்றை எதிர்கொள்ளும் மக்களில் சிலருக்கு PTSD வருகிறது. இவர்களுடைய எண்ணிக்கை குறைவுதான், ஆனால் அது கவனிக்கவேண்டிய எண்ணிக்கை. ஏனெனில், இது ஒரு தீவிரமான மன நல நிலை.

PTSD கொண்ட மக்களுக்குத் தொடக்கத்தில் இன்னும் தீவிரமான சிரமங்கள் இருக்கலாம், அவர்களுடைய துன்பம் தரும் எண்ணங்களும் உணர்வுகளும் தானாகக் காணாமல்போய்விடாமல் இருக்கலாம். அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை முன்புபோல் வாழ்வதற்கு இவை இடைஞ்சலாக அமையலாம்.

PTSDன் அறிகுறிகள், அதற்கான காரணங்கள் மற்றும் சிகிச்சைகளைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள, எங்களுடைய PTSD தகவல் தொகுப்பைப் பாருங்கள்.

எவ்வகையான தொழில் வல்லுநர் உதவி கிடைக்கிறது?

நீங்கள் அதிர்ச்சி தரும் நிகழ்வு ஒன்றை எதிர்கொண்டுள்ளீர்கள், அதுபற்றிய சிரமங்களைத் தொடர்ந்து எதிர்கொள்கிறீர்கள் என்றால், உங்கள் GP அதிர்ச்சிகளைச் சமாளிப்பதற்கு மக்களுக்கு உதவுவதில் சிறப்பு வல்லமை கொண்ட தொழில் வல்லுநர் ஒருவரிடம் உங்களை அனுப்பலாம்.

PTSDக்குச் சிகிச்சை அளிக்க உதவுகிற வெவ்வேறு சிகிச்சைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, உளவியல் சிகிச்சை, அதிர்ச்சியில் கவனம் செலுத்துகிற அறிவாற்றல் நடவடிக்கைச் சிகிச்சை (TF-CBT) மற்றும் கண் நகர்வு உணர்திறன் நீக்கல் மற்றும் மறு செயலாக்கல் (EMDR). மற்ற சிகிச்சைகள் உங்களுக்கு வேலை செய்யாவிட்டால், உங்களுக்கு ஆன்ட்டி-டிப்ரசன்ட்ஸ் வழங்கப்படலாம்.

இந்தச் சிகிச்சைகளைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள எங்களுடைய PTSD தகவல் தொகுப்பைப் பாருங்கள்.

நிலைமையைச் சமாளிக்க எனக்கு உதவுவதற்கென என்னுடைய மருத்துவர் எனக்கு மருந்துகளைப் பரிந்துரைக்கலாமா?

சில நேரங்களில், அதிர்ச்சியைத் தொடர்ந்து வரும் சூழ்நிலைகளைச் சரி செய்ய மருந்துகள் உதவலாம். ஆனால், நீங்கள் தொடர்ந்து உங்கள் மருத்துவரைச் சந்திப்பதும், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதைச் சரிபார்ப்பதும் முக்கியமாகும்.

தூங்குவதற்கான மருந்துகள்

அதிர்ச்சி தரும் நிகழ்வு ஒன்றைத் தொடர்ந்து உங்களுக்குத் தூக்கம் வருவதில் சிரமங்கள் இருந்தால், உங்கள் மருத்துவர் உங்களுக்குத் தூக்க மருந்துகளைப் பரிந்துரைக்கலாம். இவை உங்களுக்குக் குறுகிய காலகட்டத்துக்குதான் வழங்கப்படும், இவை நிரந்தரத் தீர்வுகள் இல்லை.

அதிர்ச்சி தரும் நிகழ்வு ஒன்றுக்குப்பின் உங்களுக்கு PTSD அல்லது மனச்சோர்வு போன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், ஆன்ட்டி-டிப்ரசனட்கள் போன்ற பிற மருந்துகள் உங்களுக்கு வழங்கப்படலாம். PTSDக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் சிகிச்சைகளைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள, எங்களுடைய PTSD தகவல் தொகுப்பைப் பாருங்கள்.

அதிர்ச்சி தரும் நிகழ்ச்சி ஒன்றை எதிர்கொண்டுள்ள ஒருவரை நான் எப்படி ஆதரிக்கலாம்?

அதிர்ச்சி தரும் நிகழ்ச்சிகளை எதிர்கொண்டுள்ள ஒருவருக்கு ஆதரவு வழங்கவேண்டுமென்றால், பின்வரும் விஷயங்கள் அதற்கு உதவலாம்:

 • அவர்களுக்கென இருங்கள் - அவர்களுடன் நேரம் செலவிட முன்வாருங்கள். ஒருவேளை, அவர்கள் உங்களைப் பார்க்க விரும்பாவிட்டால், ஒருவேளை அவர்கள் தங்கள் மனத்தை மாற்றிக்கொண்டால் நீங்கள் அவர்களுக்கென இருப்பீர்கள் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துவது உதவியாக இருக்கலாம். நீங்கள் அவர்களைத் தொந்தரவு செய்வதைத் தவிர்க்கவேண்டும். எனினும், உங்கள் ஆதரவை ஏற்றுக்கொள்ளும்படி அவர்களைச் சற்று தூண்டுவது உதவியாக இருக்கலாம்.
 • காது கொடுங்கள் – ஒருவேளை, அவர்கள் பகிர்ந்துகொள்ள விரும்பாவிட்டால், அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டாம். அவர்கள் பேச விரும்பினால், காது கொடுக்க முயலுங்கள், அவர்கள் பேச்சில் குறுக்கிடவேண்டாம், உங்கள் சொந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவேண்டாம்.
 • பொதுவான கேள்விகளைக் கேளுங்கள் – நீங்கள் கேள்வி கேட்கும்போது, அவற்றைப் பொதுவாக அமையுங்கள், தீர்ப்பு சொல்வதுபோல் அமைக்கவேண்டாம். எடுத்துக்காட்டாக, ‘நீங்க வேற யார்கிட்டயாவது இதைப்பத்திப் பேசியிருக்கீங்களா?’ என்றோ, ‘இன்னும் கொஞ்சம் கூடுதல் உதவியைப் பெறுவதற்கு நான் உங்களுக்கு உதவலாமா?’ என்றோ கேட்கலாம்.
 • இயல்பான உதவிகளை வழங்குங்கள் - அவர்கள் தங்களைக் கவனித்துக்கொள்வது மற்றும் அன்றாட ஒழுங்கைப் பராமரிப்பது ஆகியவற்றில் கூடுதல் தடுமாற்றங்களைச் சந்திக்கலாம். தூய்மைப்படுத்துதல் அல்லது உணவு சமைத்தல் போன்ற சிறு உதவிகளைச் செய்ய முன்வாருங்கள்.

நீங்கள் இவற்றைத் தவிர்க்க முயலவேண்டும்:

 • அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும் என்று அவர்களிடம் சொல்வது – நீங்கள் அதுபோன்ற ஒன்றை ஏற்கெனவே எதிர்கொண்டிருந்தாலும், மக்கள் சூழ்நிலைகளை மிகவும் வேறுபட்டவகையில் எதிர்கொள்கிறார்கள். அதனால், ஒப்பிடுவது பெரிய உதவியாக இருக்காது.
 • அவர்கள் உயிரோடு இருப்பதே அதிர்ஷ்டம் என்று அவர்களிடம் சொல்வது – பல நேரங்களில், அதிர்ச்சி தரும் நிகழ்வுகளை எதிர்கொண்டுள்ளவர்கள் தங்களை அதிர்ஷ்டசாலிகளாக உணரமாட்டார்கள். பல நேரங்களில், மற்றவர்கள் இறந்தபின் தான் உயிருடன் இருப்பதை எண்ணி அவர்கள் குற்றவுணர்ச்சியை உணரலாம்.
 • அவர்களுடைய அனுபவத்தைக் குறைத்துப் பேசுவது – அவர்கள் இன்னும் நன்றாக உணரவேண்டும் என்று நீங்கள் விரும்பினாலும், இது இன்னும் மோசமாக இருந்திருக்கலாம் என்று சொல்வதைத் தவிர்த்துவிடுங்கள். இப்படிச் சொல்வதன்மூலம், மக்கள் தங்களுடைய அனுபவங்கள் நியாயப்படுத்தப்படவில்லை என்பதுபோல் உணரலாம்.
 • உதவாத அறிவுறுத்தல்களைச் சொல்வது – அவர்களுக்கு அறிவுறுத்துவதைத் தவிர்த்துவிடுங்கள். அந்த அறிவுறுத்தல்கள் முன்பு உங்களுக்கு உதவியிருந்தாலும் பரவாயில்லை, அவற்றைச் சொல்லவேண்டாம். மக்கள் ஒருவருக்கொருவர் மிகவும் வேறுபட்டவர்கள். பல நேரங்களில், நீங்கள் அறிவுறுத்தும் விஷயத்தை அவர்கள் முயன்றுபார்த்திருக்கலாம்.

இதுபோன்ற சூழ்நிலைகளில் உள்ளோருக்கு நிறுவனங்கள் உதவுவது எப்படி?

சில நேரங்களில், பணியில் உள்ளவர்கள் அதிர்ச்சி தரும் நிகழ்வுகளை எதிர்கொள்கிறார்கள். முன்பே சொன்னதுபோல, சில வேலைகளில் உள்ள மக்களுக்கு அதிர்ச்சி தரும் நிகழ்வுகளை எதிர்கொள்ளும் வாய்ப்பு கூடுதலாக உள்ளது. சிலர் வேலைக்கு வெளியில் அதிர்ச்சி தரும் நிகழ்வுகளை எதிர்கொள்வார்கள். ஆனால், அதிலிருந்து அவர்கள் மீளும்போது, ஆதரவான பணிச் சூழல் அவர்களுக்கு உதவியாக இருக்கும்.

உங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவர் அல்லது பலர் அதிர்ச்சி தரும் நிகழ்வு ஒன்றை எதிர்கொள்கிறார்கள் என்றால், அவர்களை ஆதரிப்பதற்கு நீங்கள் சில விஷயங்களைச் செய்யலாம்:

 • என்ன நடந்தது என்பதைப்பற்றிப் பேசுதல் – ஒருவேளை, அந்த அதிர்ச்சி தரும் நிகழ்வு வேலையின்போது நடந்திருந்தால், அந்த நிகழ்வைப்பற்றி வெளிப்படையாகப் பேசுவது உதவியாக இருக்கலாம். உங்களிடம் வேலை செய்கிறவர்கள் ஏதாவது தடுமாற்றத்தைச் சந்தித்தால், அதற்கு எங்கு உதவி பெறலாம் என்பதை அவர்களுக்குச் சொல்வதும் உதவியாக இருக்கலாம்.
 • நலம் விசாரித்தல் – உங்களிடம் வேலை செய்கிற அனைவரும் எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டு அவர்களிடம் அதுபற்றிப் பேசுங்கள். அவர்களுக்குத் தேவையான ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கிறதா என்பதைக் கண்டறியவும், அவர்களிடம் எந்த ஒரு மாற்றங்களையும் கவனிக்கவும் இது உங்களுக்கு உதவலாம். ஒருவர் நன்றாக இல்லை என்று உங்களுக்கு ஐயம் ஏற்பட்டால், ‘நான் நல்லா இருக்கேன்' என்பதுபோன்ற பதில்களைச் சட்டென்று நம்பிவிடவேண்டாம். தொடர்ந்து பேசுங்கள்.
 • ஆதரவான சூழலை உருவாக்குதல் – குழுக்களில் நேர்விதமான உறவுகளை ஊக்குவிப்பதன்மூலம் பணியிடத்தில் நேர்விதமான சூழலை ஆதரிக்கலாம். பணியாளர்கள் இதுபற்றிய பயிலகங்களில் கலந்துகொள்ளவேண்டும், அல்லது, தங்களுக்குக் கிடைக்கிற ஆதரவு அமைப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும் நீங்கள் அவர்களை ஊக்குவிக்கலாம்.
 • நியாயமான மாற்றங்களைச் செய்தல் – உங்கள் பணியாளர் அல்லது பணியாளர்களிடம் பேசி, அவர்களை இன்னும் வசதியாக உணரச்செய்வதற்குப் பணியிடத்தில் என்னென்ன நியாயமான மாற்றங்களைச் செய்யலாம் என்று கண்டறியுங்கள். எடுத்துக்காட்டாக, நெகிழ்வான வேலை நேரங்கள் அல்லது பணிச் சூழலில் சிறிய மாற்றங்கள் ஆகியவை. ஒருவருக்கு எது உதவியாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும் என்று நீங்களே நினைத்துக்கொள்ளாமல், அவருக்கு என்ன தேவை என்று அவரையே கேளுங்கள்.

இந்தச் செயல்கள் அனைத்தும் பணியாளர் நலனில் நேர்விதமான தாக்கத்தைக் கொண்டிருக்கலாம்.

கூடுதல் உதவி

பயனுள்ள இணைய இணைப்புகள்

அதிர்ச்சி தரும் நிகழ்வை எதிர்கொள்கிறவர்களை ஆதரிக்கும் தொண்டு நிறுவனங்கள்

பாலியல் வன்முறை நெருக்கடி – UK முழுவதும் உள்ள மக்களுக்கு ஆதரவு அளிக்கிற, பாலியல் வன்முறை நெருக்கடியின்போதும் உதவுகிற மூன்று தொண்டு நிறுவனங்கள் இவை:

பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவு – UK முழுவதும், குற்றச்செயல் மற்றும் அதிர்ச்சி நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளிக்கிற, பாதிக்கப்பட்டோர் ஆதரவுத் தொண்டு நிறுவனங்கள் மூன்று:

தகவல் உதவி

இந்தத் தகவல் உளவியலாளர்களுக்கான அரசக் கல்லூரியின் பொது ஊடாடல் ஆசிரியர் வாரியத்தால் (PEEB) உருவாக்கப்பட்டது. இதை எழுதும்போது கிடைத்துள்ள மிகச் சிறந்த சான்றூகளை இது பிரதிபலிக்கிறது.

இந்தத் தகவல் பக்கத்தைப்பற்றிய தங்கள் கருத்துகளை அன்புடன் வழங்கிய PTSD UKக்குச் சிறப்பு நன்றி.

வல்லுநர் ஆசிரியர்: பேராசிரியர் நீல் கிரீன்பெர்க்

இந்தத் தகவல் பக்கத்தின் முழுப் பார்வைக் குறிப்புகள் கோரிக்கையின்பேரில் கிடைக்கும்.

பதிப்பிக்கப்பட்டது: நவம்பர் 2021

ஆய்வு செய்யவேண்டிய நாள்: நவம்பர் 2024

© Royal College of Psychiatrists

This translation was produced by CLEAR Global (Oct 2023)

Read more to receive further information regarding a career in psychiatry