அதிர்ச்சிக்குப் பிந்தைய அழுத்தக் குறைபாடு (PTSD)

Post-traumatic stress disorder (PTSD)

Below is a Tamil translation of our information resource on post-traumatic stress disorder (PTSD). You can also view our other Tamil translations.

இந்தத் தகவல்கள் அதிர்ச்சிக்குப் பிந்தைய அழுத்தக் குறைபாடு (PTSD) கொண்ட அல்லது அதைக் கொண்டுள்ள ஒருவரை அறிந்த மக்களுக்கானவை.

PTSD என்றால் என்ன?

அதிர்ச்சிக்குப் பிந்தைய அழுத்தக் குறைபாடு (PTSD) என்பது, அதிர்ச்சி தரும் நிகழ்வு ஒன்றைச் சந்திக்கிற ஒருவருக்கு ஏற்படக்கூடிய ஒரு மன நல நிலை ஆகும்.

அதிர்ச்சி தரும் நிகழ்வு ஒன்றைச் சந்திக்கும் மக்களில் பலர் எதிர்மறை உணர்வுகள், எண்ணங்கள் மற்றும் நினைவுகளை எதிர்கொள்வார்கள். ஆனால், பெரும்பாலான மக்கள் காலப்போக்கில் இதிலிருந்து வெளியில் வந்துவிடுவார்கள். இந்த எதிர்மறை எதிர்வினைகள் அவ்வாறு விலகாதபோது, ஒருவருடைய அன்றாட வாழ்க்கையில் குறுக்கிடும்போது, அவர்களுக்கு PTSD பிரச்சனை இருக்கலாம்.

PTSD எதனால் உண்டாகிறது?

PTSD யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம். ஒருவர் பின்வரும் நிகழ்ச்சிகளை எதிர்கொண்டால் அல்லது அவை நிகழலாம் என்கிற அச்சத்தை எதிர்கொண்டால் இது உண்டாகிறது:

 • மரணம்
 • தீவிரக் காயம்
 • பாலியல் வன்முறை

அவர்கள் பின்வரும் வழிகளில் ஏதேனும் ஒன்றின்மூலம் இதை எதிர்கொள்ளலாம்:

 • நேரடியாக: அது அவர்களுக்கு நடக்கிறது
 • பார்த்தல்: இன்னொருவருக்கு அது நடப்பதை அவர்கள் பார்க்கிறார்கள்
 • தெரிந்துகொள்ளுதல்: தங்களுக்கு நெருக்கமான ஒருவருக்கு அது நடந்ததை அவர்கள் தெரிந்துகொள்கிறார்கள்
 • திரும்பத் திரும்பச் சந்தித்தல்: அவர்கள் அதிர்ச்சி தரும் நிகழ்வுகளைத் திரும்பத் திரும்ப எதிர்கொள்கிறார்கள் அல்லது அதிர்ச்சி தரும் நிகழ்வுகள் மற்ற மக்களைத் திரும்பத் திரும்பப் பாதிப்பதைப் பார்க்கிறார்கள். தங்களுடைய பணி காரணமாக, எலக்ட்ரானிக் ஊடகத்தில், தொலைக்காட்சியில், திரைப்படங்களில் அல்லது புகைப்படங்களில் அதிர்ச்சி தரும் நிகழ்ச்சிகளை எதிர்கொள்கிற சிலர் மன நலச் சிரமங்களைச் சந்திக்கலாம் என்றும் நாம் அறிந்துள்ளோம்.

அதிர்ச்சி தரும் நிகழ்வுகளுக்கான சில எடுத்துக்காட்டுகள்:

 • வன்முறையான மரணம் ஒன்றைப் பார்த்தல்
 • தீவிர விபத்துகள். எடுத்துக்காட்டாக, கார்கள் ஒன்றோடொன்று மோதுதல்
 • உடல் சார்ந்த அல்லது பாலியல் தாக்குதல்
 • தீவிர நலப் பிரச்சனைகள் அல்லது தீவிரப் பராமரிப்பில் இருத்தல்
 • சிக்கலான குழந்தைப் பிறப்பு அனுபவங்கள்
 • உயிருக்கு ஆபத்தான ஒரு நோய் தனக்கு இருப்பதை அறிதல்
 • போர் மற்றும் முரண்
 • தீவிரவாதத் தாக்குதல்கள்
 • இயற்கையான அல்லது மனிதர்களால் உண்டாக்கப்பட்ட பேரழிவுகள். எடுத்துக்காட்டாக, சுனாமி அல்லது தீ

இங்கு பேசப்படாத பல நிகழ்வுகள் PTSDஐ உண்டாக்கலாம் என்பதை நினைவில் கொள்வது முக்கியம். உங்கள் அனுபவம் இங்கு பேசப்படவில்லை என்றால், அதை வைத்து நீங்கள் உதவி, ஆதரவை நாடவேண்டியதில்லை என்று நினைத்துவிடவேண்டாம்.

அதிர்ச்சி தரும் நிகழ்வுகள் ஏன் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன?

அதிர்ச்சி தரும் நிகழ்வுகள் அதிர்ச்சியளிக்கக் காரணம், நம்மால் அவற்றைப் புரிந்துகொள்ள இயலுவதில்லை. உலகம் எப்படி இருக்கவேண்டும் என்பதுபற்றிய நம்முடைய புரிந்துகொள்ளலுடன் அவை பொருந்துவதில்லை.

பல நேரங்களில், அதிர்ச்சி தரும் நிகழ்வுகள் ‘ஒழுங்கற்று' நடப்பதாக, அல்லது, ஒரு தெளிவான காரணம் இல்லாமல் நடப்பதாகத் தோன்றுகிறது. உலகம் எப்படி இருக்கவேண்டும் என்பதுபற்றிய நம்முடைய பார்வைகளுடன் அவை பொருந்துவதில்லை. அதனால், அவற்றின் பின்னால் உள்ள பொருளைப் புரிந்துகொள்வது நமக்குச் சிரமமாக இருக்கலாம்.

அத்துடன், நமக்கும் நாம் அக்கறை காண்பிக்கும் மக்களுக்கும் எந்த நேரத்திலும் கெட்ட விஷயங்கள் நடக்கலாம் என்பதை அதிர்ச்சி தரும் அனுபவங்கள் நமக்குக் காண்பிக்கின்றன. இதனால், நாம் பாதுகாப்பற்று உணரலாம், அச்சுறுத்தப்படலாம், அது அச்சத்தை உண்டாக்குவது புரிந்துகொள்ளக்கூடியதுதான். சில நேரங்களில், அதிர்ச்சி தரும் நிகழ்வுகளால், நாம் யார் என்று நம்மை நாமே கேள்வி கேட்டுக்கொள்கிற நிலை உண்டாகலாம். இது துன்பத்தையும் தரலாம்.

ஒருவருக்கு PTSD வந்துவிட்டால் என்ன ஆகும்?

பல மக்கள் தங்கள் வாழ்க்கையில் அதிர்ச்சி தரும் நிகழ்வுகளை எதிர்கொள்கிறார்கள். இங்கிலாந்தில், வயதுவந்த மக்களில் மூன்றில் ஒரு பங்குப் பேர் குறைந்தது ஓர் அதிர்ச்சி தரும் நிகழ்வையாவது எதிர்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், அதிர்ச்சி தரும் நிகழ்வு ஒன்றை எதிர்கொள்கிற எல்லாருக்கும் PTSD வருவதில்லை.

பலர், அதிர்ச்சி தரும் அனுபவத்துக்குப்பின் கவலை, வருத்தம், பதற்றம், குற்றவுணர்ச்சி மற்றும் சினத்தைச் சந்திக்கலாம். அதனால் அவர்களுக்கு PTSD வந்துவிட்டது என்று பொருளாகாது. பல நேரங்களில், PTSD கொண்டோருக்குப் பின்வரும் அறிகுறிகளில் பலவும் இருக்கின்றன. இவை உடனடியாகத் தொடங்கலாம். அல்லது, சில வாரங்கள் அல்லது சில மாதங்கள் கழித்துத் தொடங்கலாம்.

PTSD உடன் இந்த அறிகுறிகள் சேர்ந்துகொண்டு, உங்களுடைய அன்றாடச் செயல்பாடுகளில் குறுக்கிடுகின்றன மற்றும்/அல்லது உங்களுக்கு மிகுந்த துன்ப உணர்வை உண்டாக்குகின்றன. நீங்கள் அதிர்ச்சி தரும் நிகழ்வு ஒன்றை எதிர்கொண்டபிறகு, இந்த அறிகுறிகளில் எவையேனும் உங்களுக்கு வந்தால், உங்களுக்கு PTSD வந்துவிடும் என்று எண்ணவேண்டியதில்லை.

அறிகுறிகளை மீண்டும் அனுபவித்தல்

 • நினைவுகள்: அந்த நிகழ்வைப்பற்றிய தேவையில்லாத நினைவுகள் திரும்பத் திரும்ப வருதல். இவற்றை ஊடுருவும் எண்ணங்கள் என்பார்கள். இவை மிகுந்த திகைப்பையும் துன்பத்தையும் உண்டாக்கக்கூடியவை.
 • கனவுகள்: அந்த நிகழ்வைப்பற்றிய துன்பம் தரும் கனவுகள் அல்லது கெட்ட கனாக்கள் வருதல்.
 • விலகல் தன்மை எதிர்வினைகள்: அதிர்ச்சி தரும் அந்த நிகழ்வு மீண்டும் நடப்பதுபோல் உணர்தல் அல்லது அவ்வாறு நடந்துகொள்ளுதல் (பழைய நினைவில் மூழ்குதல் என்றும் சொல்வார்கள்). சில தீவிரச் சூழல்களில், உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாமல்கூட இருக்கலாம்.
 • உடல் மற்றும் உளவியல் துன்பம்: அந்த நிகழ்ச்சியை ஏதோ ஒருவிதத்தில் நினைவுபடுத்தும் பொருட்களைப் பார்க்கும்போது மிகுந்த துன்பம் மற்றும் உடல் சார்ந்த பரபரப்பை (எடுத்துக்காட்டு: விரைவாக மூச்சு விடுதல், நாடித்துடிப்பு விரைவாதல்) உணர்தல்.

தவிர்த்தல் அறிகுறிகள்

 • விலகல் தன்மை அம்னீசியா: அதிர்ச்சி தரும் நிகழ்வின் சில பகுதிகளை நினைவுக்குக் கொண்டுவர இயலாமலிருத்தல்.
 • விலகியிருத்தல்: முன்பு நீங்கள் நெருக்கமாக உணர்ந்த மக்களிடமிருந்து இப்போது விலகியிருப்பதுபோல் அல்லது நெருக்கமின்றி உணர்தல்.
 • பேசுதல் மற்றும் சிந்தித்தலைத் தவிர்த்தல்: அதிர்ச்சி தரும் நிகழ்வை(நிகழ்வுகளை)ப்பற்றிப் பேச அல்லது சிந்திக்க விரும்பாமலிருத்தல்.
 • தொடர்புகளைத் தவிர்த்தல்: அதிர்ச்சி தரும் நிகழ்வுடன் தொடர்புடைய நினைவுகள், எண்ணங்கள், உணர்வுகள், பொருட்கள் மக்கள் மற்றும் இடங்களைத் தவிர்த்தல். எடுத்துக்காட்டாக, அந்த நிகழ்வைப்பற்றிய தொலைக்காட்சி அல்லது பிற ஊடகக் குறிப்புகளைத் தவிர்த்தல். குறிப்பாக, அது உங்களுக்குத் துன்பத்தைக் கொண்டுவந்தால்.

மனநிலை அறிகுறிகள்

 • எதிர்மறை நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகள்: உங்களைப்பற்றி, பிறரைப்பற்றி அல்லது உலகத்தைப்பற்றி எதிர்மறையாகச் சிந்தித்தல்.
 • குற்றம் சாட்டுதல்: அதிர்ச்சி தரும் நிகழ்வு நடப்பதற்கு அல்லது அதன் விளைவுகளுக்கு உங்கள்மீது அல்லது பிற மக்கள்மீது குற்றம் சாட்டுதல்.
 • எதிர்மறை உணர்வுகள்: தொடர்ந்து அச்சம், அதிர்ச்சி, சினம், குற்றவுணர்ச்சி அல்லது நாணத்தை உணர்தல்.
 • செயல்பாடுகளில் ஆர்வம் இழத்தல்: முன்பு நீங்கள் விரும்பிச் செய்த அல்லது தொடர்ந்து செய்த செயல்பாடுகளில் பங்கேற்காமல் அல்லது அவற்றில் ஆர்வம் செலுத்தாமல் இருத்தல்.
 • நேர் உணர்வுகளை உணர இயலாது இருத்தல்: மகிழ்ச்சி, மன நிறைவு அல்லது அன்பு செலுத்தும் உணர்வுகளை உணர இயலாது இருத்தல்.

எச்சரிக்கை மற்றும் எதிர்வினை அறிகுறிகள்

 • அதீத எச்சரிக்கை: உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை மிகவும் கூடுதலாக அறிந்திருத்தல், இதமாக இருக்க இயலாமலிருத்தல்.
 • எளிதில் திடுக்கிடுதல்: அதிர்ச்சி தரும் நிகழ்வை உங்களுக்கு நினைவுபடுத்தும் ஒலிகள் அல்லது அசைவுகளுக்கு மிகையாக எதிர்வினையாற்றுதல்.
 • கவனம் செலுத்துவதில் சிரமம்: நீங்கள் இதற்குமுன் கவனம் செலுத்த இயன்ற செயல்களில் இப்போது கவனம் செலுத்தச் சிரமப்படுதல்.
 • தூங்குவதில் சிரமங்கள்: தூங்குவதற்கும் தூக்கம் கலையாமல் இருப்பதற்கும் சிரமப்படுதல். நீங்கள் தூங்கும்போது, உங்கள் தூக்கம் மோசமாக இருத்தல், உங்களுக்கு கெட்ட கனாக்கள் வருதல்.
 • எரிச்சல்: அவ்வப்போது மக்களை அல்லது பொருட்களைப் பேச்சால் அல்லது செயலால் தாக்குதல். அதிர்ச்சி தரும் நிகழ்வை உங்களுக்கு நினைவுபடுத்துகிற ஒன்றைச் சந்திப்பதால் இந்தத் தாக்குதல்கள் உண்டாகலாம்.
 • பொறுப்பற்ற தன்மை: ஆபத்தான அல்லது தன்னைத் தானே அழித்துக்கொள்கிற செயல்களைச் செய்தல்.

PTSD ஏன் வருகிறது?

PTSD எதனால் வருகிறது என்பதற்குப் பல விளக்கங்கள் இருக்கின்றன.

உளவியல் சார்ந்தவை

PTSDன் உளவியல் அறிகுறிகள் ஆழமான வருத்தத்தையும் துன்பத்தையும் உண்டாக்குகிறவை. ஆனால், அதிர்ச்சி தரும் ஒரு நிகழ்வுக்குப்பின் நம்மைப் பாதுகாப்பதற்கு நம் மனங்கள் எப்படி இயங்கக்கூடும் என்பதுபற்றிச் சிந்தித்தால், இந்த அறிகுறிகளை நாம் புரிந்துகொள்ளலாம்.

 • நினைவு: அதிர்ச்சி தரும் நிகழ்வு ஒன்றை எதிர்கொண்டபிறகு, நம்மால் அதை நினைவுக்குக் கொண்டுவர இயலாமல் இருக்கலாம், அல்லது, நாம் அதை நினைவுக்குக் கொண்டுவர விரும்பாமல் இருக்கலாம். என்ன நடந்தது என்பதை நினைத்துப் பார்ப்பது துன்பத்தைத் தந்தாலும், அந்த நிகழ்வைப் புரிந்துகொள்வதற்கு அது நமக்கு உதவலாம். இது நம்முடைய மன நலத்துக்கு உதவியாக இருக்கலாம்.
 • ஊடுருவும் எண்ணங்கள் அல்லது பழைய நினைவுகள்: நடந்தவற்றைத் திரும்ப மனத்துக்குள் ஓட்டிப்பார்த்தல் என்று இவற்றைக் கருதலாம். என்ன நடந்தது என்பதைப்பற்றிச் சிந்திப்பதற்கு இவை நம்மைத் தூண்டலாம், அதன்மூலம், ஒருவேளை அது மீண்டும் நடந்தால் நாம் அதற்கு இன்னும் தயாராக இருக்கச் செய்யலாம். அதே நேரம், நமக்கு PTSD இருந்தால், இந்த எண்ணங்கள் நமக்குத் துன்ப உணர்வுகளைத்தான் கொடுக்கின்றன.
 • தவிர்த்தல் மற்றும் உணர்விழத்தல்: அதிர்ச்சி தரும் நிகழ்வு ஒன்றை நினைவுக்குக் கொண்டுவருவது நம்மைக் களைத்துப்போகச்செய்யலாம், துன்பம் தரலாம். தவிர்த்தலும் உணர்விழத்தலும் என்ன நடந்தது என்பதைப்பற்றிச் சிந்திப்பதை நிறுத்துவதற்கு உங்களுக்கு உதவலாம். அதே நேரம், நீங்கள் உங்கள் அனுபவங்களைப் புரிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பையும் இவை தடுத்துவிடுகின்றன.
 • அதீத எச்சரிக்கை: நாம் ‘மிகுந்த எச்சரிக்கையோடு' இருந்தால், ஒருவேளை இன்னொரு நெருக்கடி ஏற்பட்டால் அதற்கு விரைவாக எதிர்வினையாற்றுவதற்கு நாம் தயாராக இருக்கிறோம் என்று நாம் உணரலாம். ஒரு விபத்து அல்லது நெருக்கடிக்குப்பின் தேவைப்படுகிற வேலைக்கான ஆற்றலையும் இது நமக்குத் தரலாம். அதே நேரம், அது களைப்பையும் உண்டாக்கலாம், நாம் விரும்பிச் செய்த செயல்களைச் செய்வதிலிருந்து நம்மைத் தடுத்துவிடலாம்.

உடல் சார்ந்தவை

PTSDன்போது நடைபெறும் சில உடல் சார்ந்த அறிகுறிகள், அதிர்ச்சி தரும் நிகழ்வை நம் உடல்கள் தவறாகச் செயல்முறைப்படுத்த முயல்வதால் உண்டாகின்றன.

 • அட்ரீனலின்: நாம் அழுத்தத்தின்கீழ் இருக்கும்போது நம்முடைய உடல்கள் உருவாக்கும் ஹார்மோன் இது. மிகுந்த ஆற்றல் தேவைப்படும் செயல்களுக்கு நம் உடல்களைத் தயார் செய்ய இது உதவுகிறது. எடுத்துக்காட்டாக, ஓடுதல் அல்லது ஒருவருடன் சண்டையிடுதல். அழுத்தல் நீங்கும்போது, அட்ரீனலின் அளவு இயல்புக்குத் திரும்பவேண்டும். PTSD வருகிறவர்களுக்கு, அழுத்தம் தரும் நிகழ்வின் தெளிவான நினைவுகள் அட்ரீனலின் அளவைத் தொடர்ந்து மிகுதியாக வைத்திருக்கக்கூடும். அட்ரீனலின் அளவு மிகுதியாக உள்ளபோது, நீங்கள் அழுத்தமாக, எரிச்சலாக உணரலாம், உங்களால் இதமாக இருக்கவோ நன்கு தூங்கவோ இயலாமலிருக்கலாம்.
 • ஹிப்போகாம்பஸ்: மூளையில் நினைவுகளைச் செயல்முறைப்படுத்துகிற பகுதி இது. அட்ரீனலின் போன்ற அழுத்த ஹார்மோன்களின் அளவு மிகுதியாக இருக்கும்போது, இது முறையாகச் செயல்படாதபடி தடுக்கப்படும். இதனால், அதிர்ச்சி தரும் நிகழ்வின் நினைவுகள் செயல்முறைப்படுத்தப்படுவதில்லை. இதனால், அதிர்ச்சி தரும் நிகழ்வு ஏற்கெனவே நடந்து முடிந்துவிட்டது என்று எண்ணாமல், அந்த ஆபத்து இன்னும் இருக்கிறது என்பதுபோல் நீங்கள் அந்த நிகழ்வை நினைவுக்குக் கொண்டுவரக்கூடும். 

சில குறிப்பிட்ட வேலைகளில் உள்ளவர்களுக்கு PTSD வரும் வாய்ப்புகள் கூடுதலாக இருக்குமா?

அதிர்ச்சு தரும் நிகழ்வை எதிர்கொண்ட யாருக்கு வேண்டுமானாலும் PTSD வரலாம். எனினும், சிலருடைய வேலை காரணமாக, அவர்கள் அதிர்ச்சி தரும் நிகழ்வுகளை எதிர்கொள்ளும் வாய்ப்பு கூடுதலாக இருக்கிறது. இதன் பொருள், மற்ற வேலைகளில் உள்ளவர்களைவிட இவர்களுக்கு PTSD வரும் வாய்ப்பு கூடுதலாக இருக்கலாம். இந்த வகைப் பணிகளுக்குச் சில எடுத்துக்காட்டுகள்:

 • நெருக்கடிச் சேவைப் பணியாளர்கள் (எகா: காவல்துறை, தீயணைப்புத் துறை அல்லது மருத்துவ உதவி வண்டிப் பணியாளர்கள்)
 • சமூகப் பணியாளர்கள்
 • தீவிரப் பராமரிப்புப் பணியாளர்கள்
 • ராணுவ வீரர்கள் மற்றும் போர்ப் பகுதிகளில் பணியாற்றும் பிற மக்கள்

PTSD எப்போது தொடங்குகிறது?

PTSDன் அறிகுறிகள் அதிர்ச்சி தரும் நிகழ்வு ஒன்றுக்குப்பின் உடனடியாகத் தொடங்கலாம், அல்லது, அதன்பிறகு சில வாரங்கள் அல்லது மாதங்கள் கழித்தும் தொடங்கலாம். பொதுவாக, அறிகுறிகள் நிகழ்வு நடைபெற்று 6 மாதங்களுக்குள் தொடங்குகின்றன. சில நேரங்களில், அறிகுறிகள் 6 மாதங்களுக்குப்பிறகு தொடங்குகின்றன. ஆனால், இது ஒப்பீட்டளவில் அரிதுதான். துரதிருஷ்டவசமாக, அறிகுறிகள் தொடங்கும்போது மக்கள் உதவி கேட்கமாட்டார்கள்.

அதிர்ச்சி தரும் நிகழ்வுக்குப்பின் வருகிற முதல் மாதத்தில் PTSDஐக் கண்டறிய இயலாது. உங்களுக்கு அதிர்ச்சி தரும் நிகழ்வு தொடர்பான அறிகுறிகள் உடனடியாக ஏற்பட்டால், இவை தீவிரமாக அமைந்து உங்களைச் செயல்பட இயலாதபடி தடுத்தால், உங்களுக்கு ‘கடுமையான அழுத்தக் குறைபாடு' இருக்கலாம்.

அதிர்ச்சி தரும் ஒரு நிகழ்வுக்குப்பிறகு எல்லாருக்கும் PTSD ஏன் வருவதில்லை?

அதிர்ச்சி தரும் ஒரு நிகழ்வைச் சந்திக்கிற பெரும்பாலான மக்களுக்கு முதல் ஒரு மாத அளவுக்கு அதிர்ச்சி தொடர்பான சில அறிகுறிகள் வரும். இந்த அறிகுறிகளில் பலவும் இயல்பானவைதான், உண்மையான அல்லது எண்ணப்படுகின்ற ஆபத்தை எதிர்கொள்கிற ஒருவருக்கு வரக்கூடிய இயல்பான எதிர்வினைகள்தான். உங்களுக்கு எதுவும் காயம் ஏற்பட்டுவிடாமல் தடுப்பதற்கு உங்கள் மூளை எடுக்கிற நடவடிக்கை என்று நீங்கள் இதைக் கருதலாம்.

எனினும், பெரும்பாலான மக்கள் நடந்தவற்றைச் சில வாரங்களுக்குப்பிறகு, அல்லது, சில நேரங்களில் அதையும் தாண்டித்தான் செயல்முறைப்படுத்துவார்கள், அவர்களுடைய அழுத்த அறிகுறிகள் மறையத் தொடங்கும்.

சில குறிப்பிட்ட குழுக்களைச் சேர்ந்த மக்களுக்கு PTSD வருகிற ஆபத்து கூடுதலாக உள்ளது என ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இந்தச் சூழ்நிலைகளில் உள்ளவர்களுக்கு PTSD வரும் வாபத்து குறைகிறது:

 • சமூக ஆதரவு கிடைக்கிறவர்கள் மற்றும்
 • அதிர்ச்சி தரும் நிகழ்வுக்குப்பின், ‘குறைந்த அழுத்தம் கொண்ட ஒரு சூழலில்' அதிலிருந்து மீள்கிறவர்கள்.

எந்த நிகழ்வுகள் PTSDஐ உருவாக்கும் வாய்ப்புகள் அதிகம்?

அதிர்ச்சி தரும் எந்த நிகழ்வும் PTSDஐ உருவாக்கலாம். எனினும், அந்த அனுபவம் எந்த அளவு தொந்தரவு செய்கிறதோ, அந்த அளவுக்கு உங்களுக்கு PTSD வரும் வாய்ப்பு கூடும். எடுத்துக்காட்டாக, இவ்வகை நிகழ்வுக்குப்பின் உங்களுக்கு PTSD வரும் வாய்ப்புகள் அதிகம்:

 • திடீரென்றும் எதிர்பாராமலும் நிகழ்கிறது
 • நெடுநாள் தொடர்கிறது
 • நீங்கள் சிக்கியிருக்கும்போது, தப்ப இயலாதபோது நிகழ்கிறது
 • மனிதர்களால் நிகழ்கிறது
 • பல மரணங்களை உருவாக்குகிறது
 • சிதைத்தலை உருவாக்குகிறது
 • குழந்தைகளைப் பாதிக்கிறது.

உங்களுக்குள் அழுத்தமும் உறுதியில்லாத்தன்மையும் தொடர்ந்தால், உங்களுடைய PTSD அறிகுறிகள் மேம்படுவது மேலும் சிரமமாகும்.

அதிர்ச்சி தரும் ஓர் அனுபவத்தை நான் கடந்துவந்துவிட்டேன் என்று நான் எப்படித் தெரிந்துகொள்வது?

இவை உங்களுக்கு நடந்தால் நீங்கள் அதிர்ச்சி தரும் நிகழ்வைக் கடந்துவந்துவிட்டீர்கள் என்று எண்ணலாம்:

 • மிகவும் அழுத்தத்தை உணராமல் அதைப்பற்றி எண்ணிப் பார்ப்பது
 • எப்போதும் அச்சுறுத்தலின்கீழ் உள்ளதாக எண்ணாமலிருப்பது
 • பொருந்தாத நேரங்களில் அதைப்பற்றிச் சிந்திக்காமல் இருப்பது.

PTSD எப்போதும் கண்டறியப்படுவதில்லை. அது ஏன்?

ஒருவருக்கு PTSD உள்ளது கண்டறியப்படாமல் போவதற்குப் பல காரணங்கள் உள்ளன.

களங்கவுணர்வு மற்றும் தவறாகப் புரிந்துகொள்ளுதல்

பல நேரங்களில், PTSD உள்ள மக்கள் தாங்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதைப்பற்றிப் பேசுவதைத் தவிர்ப்பார்கள். ஏனெனில், அவர்கள் அதிர்ச்சி தரும் நிகழ்வைப்பற்றிச் சிந்திக்க விரும்புவதில்லை.

சில மக்கள், தாங்கள் உணரும் அறிகுறிகள் (எடுத்துக்காட்டாக, தவிர்த்தல் மற்றும் உணர்விழத்தல்) அந்த நிலைமையைச் சமாளிக்கத் தங்களுக்கு உதவுவதாக உணர்கிறார்கள். அவை PTSDயால் உண்டாக்கப்படுகின்றவை என்று அவர்களுக்குப் புரிவதில்லை.

ஒருவர் மிகவும் நலமிழந்து இருக்கும்போது, அதிர்ச்சி தரும் நிகழ்வுக்கு முன்னால் தான் எப்படி உணர்ந்தோமோ அந்த நிலைக்குத் தன்னால் திரும்ப இயலும் என்பதை அவரால் நம்ப இயலுவதில்லை. அதனால், அவர்கள் உதவி கேட்பதைத் தவிர்த்துவிடலாம்.

அத்துடன், ராணுவப் படைகளில் உள்ள மக்களுக்குமட்டும்தான் PTSD வரக்கூடும் என்று ஒரு தவறான பொது எண்ணம் உள்ளது. உண்மையில், PTSD யாருக்கும் வரலாம்; PTSD அனுபவங்கள் ஒவ்வொன்றும் கவனிக்கவேண்டியவைதான்.

தவறான நோய் கண்டறிதல்

PTSD உள்ள சில மக்களுக்குப் பதற்றம் அல்லது மனச்சோர்வு உள்ளதாகத் தவறாகக் கண்டறியப்படலாம். சில மக்களுக்கு மற்ற உளவியல் அல்லது உடல் சார்ந்த நலச் சிக்கல்கள் இருக்கலாம். அதனால், அவர்களுடைய PTSDஐ யாரும் கவனிக்காமல் விட்டுவிடலாம்.

‘மருத்துவ அடிப்படையில் விளக்க இயலாத உடல் சார்ந்த அறிகுறிகளும்' அவர்களுக்கு இருக்கலாம். எடுத்துக்காட்டாக:

 • வயிறு, குடல் சார்ந்த சிக்கல்கள்
 • வலி அறிகுறிகள்
 • தலைவலி

இந்த அறிகுறிகளால், அவர்களுடைய PTSD வேறுவிதமாக அடையாளம் காணப்படலாம்.

மற்ற சவால்கள்

PTSD உள்ள சில மக்களுக்கு வேறு சவால்களும் இருக்கலாம். எடுத்துக்காட்டாக, உறவுச் சிக்கல்கள் அல்லது மது அல்லது போதைப் பொருட்களைச் சார்ந்திருத்தல். இவை அவர்களுடைய PTSDயால் உண்டாக்கப்படலாம், ஆனால், இவை PTSDஐவிட நன்றாக வெளிப்பார்வைக்குத் தெரியலாம்.

குழந்தைகளுக்கு PTSD வருமா?

PTSD எந்த வயதிலும் வரலாம். PTSDன் அறிகுறிகள் பெரியவர்களில் தெரிவதுபோல, சிறுவர்களிடமும் தெரியலாம். எடுத்துக்காட்டாக:

 • அச்சுறுத்தும் கனவுகள்: குழந்தைகளைப் பொறுத்தவரை, இந்தக் கனவுகள் உண்மையான அந்த அதிர்ச்சி தரும் நிகழ்வைப் பிரதிபலிக்கலாம், பிரதிபலிக்காமலும் இருக்கலாம்.
 • திரும்பத் திரும்ப நடித்துப்பார்த்தல்: சில குழந்தைகள் விளையாடும்போது அந்த அதிர்ச்சி தரும் நிகழ்வை நடித்துப்பார்ப்பார்கள். எடுத்துக்காட்டாக, பெரிய சாலைப் போக்குவரத்து விபத்து ஒன்றை எதிர்கொண்ட ஒரு குழந்தை, பொம்மைக் கார்களைக் கொண்டு அந்த விபத்தை மீண்டும் நடித்துக் காண்பிக்கலாம். 
 • உடல் சார்ந்த அறிகுறிகள்: இவர்கள் வயிற்று வலி மற்றும் தலைவலி வருவதாகப் புகார் சொல்லலாம்.
 • தங்கள் வாழ்க்கை விரைவில் முடிந்துவிடும் என்கிற அச்சம்: தாங்கள் நெடுநாள் வாழ்வோம், பெரியவர்களாக வளர்வோம் என்று நம்ப இயலாமல் அவர்கள் துன்பப்படலாம்.

PTSDக்கான சிகிச்சைகள் என்னென்ன?

PTSDக்குப் பல சிகிச்சைகள் உள்ளன. அவற்றில் சில: அதிர்ச்சியின்மீது கவனம் செலுத்தும் அறிவாற்றல் நடவடிக்கைச் சிகிச்சை (TF-CBT), கண் நகர்வு உணர்திறன் நீக்கல் & மறுசெயல்முறைப்படுத்தல் (EMDR) மற்றும் மருந்துகள்.

உளவியல் சிகிச்சை

PTSDக்கான உளவியல் சிகிச்சைகள் அதிர்ச்சி தரும் அனுபவத்தில் கவனம் செலுத்துகின்றன, உங்களுடைய முந்தைய வாழ்க்கையில் கவனம் செலுத்துவதில்லை. பின்வரும் விஷயங்களில் இவை உங்களுக்கு உதவும்:

 • ஏற்றுக்கொள்ளுதல்: நடந்துவிட்டதை உங்களால் மாற்ற இயலாது என்றாலும், அந்த நிகழ்வைப்பற்றி, உலகைப்பற்றி, உங்கள் வாழ்க்கையைப்பற்றி நீங்கள் வேறுவிதமாகச் சிந்திக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்ளக் கற்றல்.
 • நிகழ்வை நினைவுபடுத்தல்: அச்சம் மற்றும் துன்பத்தில் மூழ்காமல், நடந்தது என்ன என்பதை நினைவுகூர்தல். என்ன நடந்தது என்பதை ஊடுருவும் எண்ணங்கள் அல்லது பழைய நினைவுகளின் வழியாக அன்றி, நீங்கள் விரும்பும்போது சிந்திக்க உங்களால் இயலும்.
 • உங்கள் அனுபவங்களை விவரித்தல்: என்ன நடந்தது என்பதைப்பற்றிப் பேசி, அதன்மூலம் உங்கள் மனம் நினைவுகளை வேறு இடத்தில் சேமிக்கும்படி செய்தல், மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தத் தொடங்குதல்.
 • இன்னும் பாதுகாப்பாக உணர்தல்: உங்கள் உணர்வுகள் உங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ளன என்று உணர்வதற்கு உங்களுக்கு உதவுதல். நீங்கள் இன்னும் பாதுகாப்பாக உணர்வதற்கு இது உங்களுக்கு உதவலாம். இதன்மூலம், நீங்கள் நினைவுகளைக் கூடுதலாகத் தவிர்க்கவேண்டியிருக்காது.

எந்த ஓர் உளவியல் சிகிச்சையும் முறையான பயிற்சி மற்றும் அங்கீகாரம் பெற்ற ஒருவரால்தான் தரப்படவேண்டும். இந்த அமர்வுகள் பொதுவாக வாரந்தோறும், அதே சிகிச்சையாளருடன் நடைபெறுகின்றன. பல நேரங்களில் இவை குறைந்தது 8 முதல் 12 வாரங்களுக்குத் தொடர்கின்றன.

பொதுவாக இந்த அமர்வுகள் சுமார் ஒரு மணி நேரத்துக்குச் செல்கின்றன. சில நேரங்களில் இவை 90 நிமிடங்கள்வரை நீடிக்கலாம்.

PTSDக்கான சில சிகிச்சைகள்:

அதிர்ச்சியின்மீது கவனம் செலுத்தும் அறிவாற்றல் நடவடிக்கைச் சிகிச்சை (TF-CBT)

இது ஒரு பேச்சுச் சிகிச்சையாகும். உங்களுடைய சிந்தனை வழிகளை மாற்றுவதற்கு இது உங்களுக்கு உதவும். நேரம் ஆக ஆக, நீங்கள் இன்னும் நன்றாக உணர்வதற்கும், வேறுவிதமாக நடப்பதற்கும் இது உங்களுக்கு உதவும். இது பொதுவாக ஒருவருக்கு ஒருவர் என்ற முறையில் வழங்கப்படுகிறது. எனினும், TF-CBTஐக் குழுக்களுக்கும் வழங்கலாம் என்பதற்குச் சில சான்றுகள் உள்ளன.

EMDR (கண் நகர்வு உணர்திறன் நீக்கல் & மறுசெயல்முறைப்படுத்தல்)

இந்த உத்தி, கண்ணின் அசைவுகளைப் பயன்படுத்தி, அதிர்ச்சி தரும் நிகழ்வுகளைச் செயல்முறைப்படுத்துவதில் மூளைக்கு உதவுகிறது.

அதிர்ச்சி தரும் அந்த நிகழ்வை நினைவுக்குக் கொண்டுவரும்படி உங்களிடம் கேட்கப்படும், அது உங்களை எப்படிச் சிந்திக்கவும் உணரவும் செய்கிறது என்றும் கேட்கப்படும். நீங்கள் இதைச் செய்யும்போது, உங்களுடைய கண்களை அசைக்கும்படி உங்களிடம் கேட்டுக்கொள்ளப்படும், அல்லது, கையைத் தட்டுவது போன்ற ‘இருதரப்புத் தூண்டுதல்' ஒன்றை நீங்கள் பெறுவீர்கள். இது, அதிர்ச்சி தரும் நினைவைப்பற்றி நீங்கள் உணரும் உணர்வுகளின் தீவிரத்தைக் குறைப்பதும், அதன்மூலம் அதிர்ச்சியைத் தீர்க்க உதவுவதும் தெரியவந்துள்ளது.

EMDRஐப் பயிற்சி பெற்ற வல்லுநர் ஒருவர்தான் வழங்கவேண்டும். EMDR பொதுவாக 8 முதல் 12 அமர்வுகளாக வழங்கப்படுகிறது. ஒவ்வோர் அமர்வும் 60லிருந்து 90 நிமிடங்களுக்கு நீடிக்கும்.

EMDR அல்லது TF-CBTக்கு நன்கு எதிர்வினையாற்றாத மக்களுடைய குறிப்பிட்ட அறிகுறிகளை (எடுத்துக்காட்டாக, மோசமான தூக்கம்) இலக்குவைத்துச் சரிசெய்வதற்கு வேறு பேச்சுச் சிகிச்சை வடிவங்கள் உதவலாம்.

மருந்துகள்

நீங்கள் உங்களுடைய PTSDஐக் குணப்படுத்த மற்ற சிகிச்சைகளை முயன்றுபார்த்துவிட்டீர்கள், ஆனால், அவை உங்களுக்கு வேலை செய்யவில்லை என்றால், உங்கள் மருத்துவர் உங்களுக்கு மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட செரொடோனின் மீண்டும் எடுத்தல் தடுப்பான்கள் (SSRIகள்) என்பவை, PTSD அறிகுறிகளைக் குறைக்க உதவக்கூடிய, மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகளாகும். உங்களுக்கு மனச்சோர்வும் உள்ளது என்றால், மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகள் இதைச் சரி செய்ய உதவலாம்.

SSRIகள் உங்களுக்கு வேலை செய்யாவிட்டால், உங்களுக்கு வேறு மருந்துகள் வழங்கப்படலாம். ஆனால், பொதுவாக இது மன நல வல்லுநர் ஒருவருடைய அறிவுறுத்தலின்படிதான் அமையும்.

எந்தச் சிகிச்சை மிக நன்றாக வேலை செய்கிறது?

TF-CBT மற்றும் EMDR ஆகியவை மிகச் சிறந்த முதல் நிலைச் சிகிச்சைகள் என்பதற்குச் சான்று உள்ளது. பேச்சுச் சிகிச்சைகளை விரும்பாதவர்கள் அல்லது அவற்றை எளிதில் அணுக இயலாதவர்களுக்கு மருந்துகள் உதவியாக இருக்கலாம்.

நான் எந்தச் சிகிச்சையை முதலில் பெறவேண்டும்?

இயன்றபோதெல்லாம், மருந்துகளுக்குமுன்னால், அதிர்ச்சியின்மீது கவனம் செலுத்தும் உளவியல் சிகிச்சைகள் (TF-CBT அல்லது EMDR) வழங்கப்படவேண்டும். இது நலன் மற்றும் பராமரிப்புச் சிறப்புக்கான தேசியக் கல்விக் கழகத்தின் (NICE) வழிகாட்டுதலாகும்.

நான் எனக்கு உதவிக்கொள்வது எப்படி?

உங்களுக்கு PTSD இருந்தால், உங்களுடைய குணமாதலை ஆதரிப்பதற்கு நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள் உள்ளன. இந்த விஷயங்களில் உங்கள் சிகிச்சையாளர் உங்களுக்கு உதவுவார், நீங்கள் இவற்றைச் சரியான நேரத்தில் செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துவார்:

 • உங்கள் ஒழுங்கைத் தொடர்தல்: இயன்றால், உங்களுடைய வழக்கமான ஒழுங்குக்குத் திரும்ப அல்லது அதைத் தொடர முயலுங்கள். உங்கள் வாழ்க்கையை இயன்றவரை இயல்பாக வைத்திருக்கும்போது, உங்களுக்கு நிலைத்தன்மை உணர்வு வரலாம்
 • நீங்கள் நம்புகின்ற ஒருவரிடம் பேசுதல்: நடந்ததைப்பற்றி யாராவது ஒருவரிடம் பேசவேண்டும் என்று நீங்கள் உணர்வது சரியாக இருக்காது. அதற்குப்பதிலாக, நீங்கள் நம்புகின்ற ஒருவரிடம் பேசினால், உங்கள் உணர்வுகளைப் பாதுகாப்பான ஓர் இடத்தில் செயல்முறைப்படுத்த அது உதவலாம். இப்போது நீங்கள் உணர்கின்ற அதே உணர்வுகளை முன்பு அனுபவித்த, அல்லது, நீங்கள் எதிர்கொண்ட நிகழ்வைப் போன்ற ஒரு நிகழ்வை எதிர்கொண்ட ஒருவரிடம் பேசுவதும் உதவியாக இருக்கலாம். ஆனால், அவ்வாறு பேசுவது கூடுதல் துன்பத்தைக் கொடுத்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
 • மனத்தை இதமாக்கும் பயிற்சிகளை முயலுதல்: நீங்களே வழிநடத்திக்கொள்ளக்கூடிய தியானம் மற்றும் பிற பயிற்சிகளைப் பயன்படுத்தி மனத்தை இதமாக்க முயலுங்கள். PTSD இருக்கிறவர்கள் மனத்தை இதமாக்குவது சவாலாக இருக்கலாம். அதனால், உங்களுக்கு வேலை செய்யக்கூடிய பயிற்சிகள் அல்லது செயல்பாடுகளைப்பற்றி உங்கள் சிகிச்சையாளரிடம் பேசுங்கள்.
 • பணிக்கு அல்லது பள்ளிக்குத் திரும்புதல்: உங்களால் இயலும் என்று தோன்றினால், பணி, பள்ளி அல்லது கல்லூரிக்குத் திரும்புங்கள். அது உங்களுக்கு உதவலாம். ஏனெனில், இது உங்களுக்கு ஓர் ஒழுங்கு உணர்வைக் கொடுக்கலாம். அதே நேரம், உங்களுக்குக் கூடுதல் அதிர்ச்சி அல்லது தீவிர அழுத்தத்தை உண்டாக்கக்கூடிய சூழல்களுக்குச் செல்லாமல் தவிர்ப்பதற்கு நீங்கள் முயலவேண்டும். பொதுவாக, உங்களுக்குச் சிகிச்சை கிடைக்கும்வரை, ஆதரவான, அழுத்தம் குறைவான ஒரு சூழலில் பணியாற்றுவது மிகச் சிறந்தது.
 • ஒழுங்காகச் சாப்பிடுதல் மற்றும் உடற்பயிற்சி செய்தல்: உங்களுக்குப் பசி எடுக்காவிட்டாலும் நீங்கள் வழக்கமாகச் சாப்பிடுகிற நேரத்தில் சாப்பிட முயலுங்கள். உங்களால் இயலும் என்று தோன்றினால், வழக்கமாக உடற்பயிற்சியும் செய்ய முயலுங்கள். இதன்மூலம், நீங்கள் தூங்கவேண்டிய நேரம் வரும்போது நீங்கள் இன்னும் களைப்பாக உணர்வீர்கள். அது உங்கள் தூக்கத்தை மேம்படுத்தும்.
 • பிறருடன் நேரம் செலவிடுதல்: நீங்கள் அக்கறை காட்டுகின்ற மக்களுடன் நேரம் செலவிடுதல் உங்களுக்கு ஓர் ஆதரவு உணர்வை வழங்கலாம்.
 • குணமாவோம் என்று நம்புதல்: நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குணமாகிவிடுவீர்கள் என்கிற எண்ணத்தில் கவனம் செலுத்துவது நீங்கள் குணமாவதற்கு உதவும். நினைவிருக்கட்டும், விரைவாகக் குணமாகவேண்டும் என்று உங்களை நீங்களே அழுத்தத்தில் தள்ளிக்கொள்ளவேண்டாம்.
 • அதிர்ச்சி தரும் நிகழ்வு நடந்த இடத்துக்குத் திரும்பச் செல்லுதல்: உங்களால் இது இயலும் என்று தோன்றுகிறபோது, அதிர்ச்சி தரும் நிகழ்வு நடந்த இடத்துக்குத் திரும்பச் சென்று பார்க்க நீங்கள் விரும்பலாம். நீங்கள் இதைச் செய்யத் திட்டமிடுகிறீர்கள் என்றால், உங்கள் சிகிச்சையாளர் அல்லது மருத்துவரிடம் இதைப்பற்றிப் பேசுங்கள். இந்தப் படிநிலையைச் செய்வதற்கு அவர்கள் உங்களை ஆதரிப்பார்கள்.

நீங்கள் குணமாகும்போது, பின்வரும் விஷயங்களைச் செய்வதுபற்றி எச்சரிக்கையாக அல்லது கவனமாக இருங்கள். அதே நேரம், ‘சரியான விஷயத்தை’ச் செய்வது மிகவும் சவாலானதாக இருக்கலாம். அதனால், ஒருவேளை, இந்த விஷயங்களில் எவற்றையாவது நீங்கள் செய்தால், குற்றவுணர்ச்சி கொள்ளாதீர்கள்:

 • தன்னையே விமர்சித்துக்கொள்ளுதல்: PTSD அறிகுறிகள் வலுவின்மையின் அடையாளம் இல்லை. அது, அச்சுறுத்தும் அனுபவங்களுக்கான இயல்பான ஓர் எதிர்வினை.
 • உங்கள் உணர்வுகளை உங்களுக்குள் வைத்துக்கொள்ளுதல்: உங்களுக்கு PTSD இருந்தால், உங்கள் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளைப் பிறரிடம் பகிர்ந்துகொள்வதுபற்றிக் குற்றவுணர்ச்சி கொள்ளாதீர்கள். நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதைப்பற்றிப் பேசுவது நீங்கள் குணமாவதற்கு உதவலாம்.
 • எல்லாம் உடனடியாகச் சரியாகவேண்டும் என்று எதிர்பார்த்தல்: PTSDக்கான சிகிச்சை நேரம் எடுக்கக்கூடியது. விரைவில் எல்லாம் சரியாகிவிடும் என்று எதிர்பார்க்காமலிருக்க முயலுங்கள்.
 • பிற மக்களிடமிருந்து விலகியிருத்தல்: தனிமையில் நிறைய நேரம் செலவிடுவது தனிமை உணர்வை மிகுதியாக்கலாம், உங்களை இன்னும் மோசமாக உணரச்செய்யலாம்.
 • குடித்தல் மற்றும் புகை பிடித்தல்: இப்போது நீங்கள் இதமாக உணர்வதற்கு மது உதவலாம். ஆனால், நாளாக ஆக, அது உங்களை இன்னும் மோசமாக உணரச்செய்யக்கூடும். காஃபி மற்றும் நிகோடின் ஆகியவை தூண்டிகளாகச் செயல்படலாம். PTSDயுடன் தொடர்புடைய அறிகுறிகள் உங்களுக்கு இருக்கின்றன என்றால், இவை உங்களை இன்னும் மோசமாக உணரச்செய்யலாம்.
 • மிகவும் களைத்துப்போதல்: PTSD தூக்கத்தில் சிக்கல்களைக் கொண்டுவரலாம். ஆனால், இயன்றவரை உங்களுடைய வழக்கமான தூங்கும் பழக்கத்தைப் பின்பற்ற முயலுங்கள், இரவு நெடுநேரம் விழித்திருக்கவேண்டாம். ஏனெனில், அவ்வாறு நெடுநேரம் விழித்திருப்பது உங்களை இன்னும் மோசமாக உணரச்செய்யலாம். இதுபற்றி மேலும் அறிய, நன்கு தூங்குவதுபற்றிய எங்களுடைய பக்கத்தைப் பாருங்கள்.

நிறைவாக, நீங்கள் வண்டி ஓட்டும்போது கவனமாக இருக்கவேண்டும். ஒருவேளை, நீங்கள் வண்டி ஓட்டுவது பாதுகாப்பாக இருக்காது என்று நீங்கள் உணர்ந்தால், அதை DVLAவுக்குத் தெரியப்படுத்துங்கள். அதிர்ச்சியைச் சந்திக்கிற மக்கள் அதன்பிறகு ஒரு விபத்தை எதிர்கொள்ளும் ஆபத்து அதிகமாக இருக்கலாம்.

சிக்கலான PTSD என்றால் என்ன?

சில மக்களுக்கு, சிக்கலான, அதிர்ச்சிக்குப் பிந்தைய அழுத்தக் குறைபாடு (சிக்கலான PTSD) வருகிறது. மிகவும் அச்சுறுத்தக்கூடிய அல்லது திடுக்கிடச்செய்யக்கூடிய ஒரு நிகழ்வை அல்லது பல நிகழ்வுகளை எதிர்கொள்வதன்மூலம் இது உண்டாகிறது. இந்த நிகழ்வுகள் சிறுவயதில் அல்லது வளர்ந்தபிறகு நிகழலாம்.

பல நேரங்களில், இந்த நிகழ்வுகளிலிருந்து தப்பிப்பது அல்லது இவற்றைத் தவிர்ப்பது கடினமாக இருந்திருக்கும் அல்லது அதற்கு வாய்ப்பு இருந்திருக்காது. எடுத்துக்காட்டாக:

 • துன்புறுத்தப்படுதல்
 • அடிமையாக்கப்படுதல்
 • இனப் படுகொலைப் பரப்புரைகள்
 • போர்ப் பகுதியில் வாழ்தல்
 • நீடித்த இல்ல வன்முறை
 • சிறுவயதில் திரும்பத் திரும்பப் பாலியல் அடிப்படையில் அல்லது உடல் சார்ந்து தவறாகப் பயன்படுத்தப்படுதல். 

சிக்கலான PTSD கொண்டோருக்கு PTSD அறிகுறிகளுடன் இந்த அறிகுறிகளும் இருக்கலாம்:

 • தங்களைப்பற்றிய மிகவும் எதிர்மறையான நம்பிக்கைகளைக் கொண்டிருத்தல். எடுத்துக்காட்டாக, ‘நலிந்துபோனதுபோல், தோற்றுப்போனதுபோல் அல்லது மதிப்பில்லாததுபோல்’ உணர்தல்
 • தங்கள் உணர்வுகளை மற்றும் உணர்வு சார்ந்த எதிர்வினைகளைக் கட்டுப்படுத்துவதில் மிகுந்த சிரமம் இருத்தல்
 • மற்ற மக்களுடன் உறவுகளைத் தக்கவைத்துக்கொள்வதற்கு மற்றும் நெருக்கமாக உணர்வதற்கு மிகவும் சிரமப்படுதல்

நான் சிக்கலான PTSDயிலிருந்து எப்படி மீள்வது?

சிக்கலான PTSD கொண்ட மக்களிடம் பொதுவாகக் காணப்படுகிற ஒரு தன்மை, மற்ற மக்களிடமும் பொதுவாக உலகத்திடமும் நம்பிக்கை இல்லாமல் இருத்தல். அவர்கள் சிகிச்சை அளிப்பவருடன் பாதுகாப்பான உறவை உண்டாக்கிக்கொள்வதற்கு நேரம் வேண்டும். அதனால், பல நேரங்களில் அவர்களுடைய சிகிச்சை நீண்ட நாள் தொடர்கிறது. சிக்கலான PTSD கொண்ட ஒருவர் சிகிச்சையளிப்பவருடன் செய்யும் பணி பொதுவாக மூன்று நிலைகளில் நடக்கும்:

நிலையாக்கல்

நிலையாக்கல் நிலையில், நீங்கள் உங்களுக்குச் சிகிச்சையளிப்பவரை நம்பக் கற்றுக்கொள்வீர்கள், உங்களுடைய துன்ப மற்றும் விலகியிருத்தல் உணர்வுகளைப் புரிந்துகொள்வீர்கள், அவற்றைக் கட்டுப்படுத்துவீர்கள்.

நிலையாக்கலின் ஒரு பகுதியாக, நீங்கள் ‘நிலைத்தன்மை கொள்ளல்' உத்திகளைக் கற்கக்கூடும். வழக்கமான, உடல் சார்ந்த உணர்வுகளில் கவனம் செலுத்துவதற்கு இவை உங்களுக்கு உதவலாம், நீங்கள் நிகழ்காலத்தில் வாழ்கிறீர்கள், இறந்தகாலத்தில் இல்லை என்பதை உங்களுக்கு நினைவுபடுத்தும்.

நிலையாக்கல் என்பது உங்களுடைய அச்ச மற்றும் பதற்ற உணர்வுகளை அவற்றை உண்டாக்கும் நினைவுகள் மற்றும் உணர்ச்சிகளிலிருந்து ‘துண்டிக்க' உங்களுக்கு உதவலாம். இந்த நினைவுகள் உண்டாக்கும் அச்சத்தைக் குறைக்க இது உதவலாம்.

நிலையாக்கலின் இலக்கு, காலப்போக்கில் பதற்றம் அல்லது பழைய நினைவுகள் இல்லாமல் நீங்கள் உங்களுடைய வாழ்க்கையை வாழ உதவுவது.

சில நேரங்களில், நிலையாக்கல்மட்டுமே சிலருக்குப் போதுமாக இருக்கலாம்.

அதிர்ச்சியில் கவனம் செலுத்தும் சிகிச்சைகள்

அதிர்ச்சியில் கவனம் செலுத்தும் EMDR அல்லது TF-CBT உள்ளிட்ட சிகிச்சை ஒன்று, உங்களுடைய அதிர்ச்சி தரும் அனுபவத்தைச் செயல்முறைப்படுத்த உங்களுக்கு உதவலாம். உளவியல் இயக்கவியல் உளவியல் சிகிச்சை உள்ளிட்ட மற்ற உளவியல் சிகிச்சைகளும் இதில் உதவலாம். சிக்கலான PTSD உள்ளோருக்குச் சிகிச்சையளிக்கும்போது கூடுதல் அக்கறை தேவை. ஏனெனில், இந்தச் சிகிச்சைகளை முறையாகப் பயன்படுத்தாவிட்டால், இவை சூழ்நிலையை இன்னும் மோசமாக்கிவிடக்கூடும்.

மறு ஒருங்கிணைப்பு அல்லது மறு இணைப்பு

முன்பு நீங்கள் இருந்த ஆபத்தான சூழலில் இப்போது நீங்கள் இல்லை என்பதால், உண்மை உலகத்துக்கு மீண்டும் பழகிக்கொள்வதற்கு மறு ஒருங்கிணைப்பு, அதாவது வழக்கமான வாழ்க்கை வழியில் மீண்டும் ஒருங்கிணைத்தல் உதவலாம். உரிமைகள் மற்றும் தேர்ந்தெடுப்புகளைக் கொண்ட ஒரு மனிதராக நீங்கள் உங்களைக் காணத் தொடங்குவதற்கு இது உங்களுக்கு உதவலாம்.

மறு ஒருங்கிணைப்பின்மூலம் உங்களுக்கு இவற்றுக்கான உதவிகள் கிடைக்கலாம்:

 • உங்களுடனும் பிறருடனும் இரக்கத்துடன் தொடர்புகொள்ள
 • உங்கள்மீதும் பிறர்மீதும் மீண்டும் நம்பிக்கை வைக்க
 • உங்கள் நலன் மற்றும் நலத்தை முன்னிறுத்தக்கூடிய நட்புகள், நெருங்கிய உறவுகள் மற்றும் செயல்பாடுகளில் மீண்டும் ஈடுபட

மருந்துகள்

PTSDஐப் போல, இங்கும் மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகள் அல்லது மற்ற மருந்துகளும் உளவியல் சிகிச்சையும் பயன்படலாம். உளவியல் சிகிச்சை உங்களுக்கு வேலை செய்யவில்லை என்றால், அல்லது, உங்களால் அதை எடுத்துக்கொள்ள இயலவில்லை என்றாலும் மருந்துகள் பயன்படுத்தப்படலாம். மன நல வல்லுநர் ஒருவர் உங்களுடைய மருந்துகளை ஆராய்வது உதவியாக இருக்கலாம்.

தனக்குத் தானே உதவிக்கொள்ளுதல்

உங்களுக்குச் சிக்கலான PTSD உள்ளது என்றால், உங்களுடைய அதிர்ச்சிக்குப் பிந்தைய அனுபவங்களுடன் தொடர்பில்லாத இயல்பான விஷயங்களைச் செய்ய முயல்வது உதவியாக இருக்கலாம். இதற்குச் சில எடுத்துக்காட்டுகள்:

 • புதிய நண்பர்களைப் பெறுதல்
 • புதிய வேலையில் சேர்தல்
 • தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்தல்
 • மனத்தை இதமாக்கும் உத்திகளைக் கற்றுக்கொள்ளுதல்
 • பொழுதுபோக்கு ஒன்றை வளர்த்துக்கொள்ளுதல்
 • செல்ல விலங்குகளை வளர்த்தல்.

உங்களைச் சுற்றியுள்ள உலகின்மீது மெதுவாக நம்பிக்கை வைக்க இந்தச் செயல்பாடுகள் உங்களுக்கு உதவலாம். ஆனால், இதற்கு நேரம் ஆகலாம். அதனால், இந்தச் செயல்பாடுகள் உங்களுக்குக் கடினமாக இருந்தால் அல்லது அவற்றை உங்களை நேரடியாகச் செய்ய இயலவில்லை என்றால், அதை எண்ணி நாணப்படவேண்டியதில்லை.

ஒருவருக்கு PTSD உள்ளது என்பதை நான் எப்படித் தெரிந்துகொள்வது?

உங்களுக்குத் தெரிந்த ஒருவர் அதிர்ச்சி தரும் நிகழ்வு ஒன்றை எதிர்கொண்டுள்ளார் என்றால், நீங்கள் சில குறிப்பிட்ட அறிகுறிகள் அவரிடம் உள்ளனவ என்று பார்க்கலாம். ஒருவேளை, இந்த அறிகுறிகளில் எவையேனும் அவரிடம் இருந்தால், அவர் நிலைமையைச் சமாளிக்க இயலாமல் தடுமாறுகிறார் என்பதை அது காண்பிக்கக்கூடும்:

 • நடவடிக்கையில் மாற்றங்கள்: வேலையில் மோசமான செயல்திறன், தாமதமாக வருதல், உடல் நலம் சரியில்லை என்று விடுமுறை எடுத்தல், சிறு விபத்துகள்
 • உணர்வில் மாற்றங்கள்: சினம், எரிச்சல், மனச்சோர்வு, ஆர்வம் இன்மை, கவனம் இன்மை
 • எண்ணங்களில் மாற்றங்கள்: அச்சுறுத்தல்கள் அல்லது அச்சங்களில் மூழ்குதல், எதிர்காலம் பற்றிய எதிர்மறைப் பார்வைகள்
 • எதிர்பாராத உடல் சார்ந்த அறிகுறிகள்: எடுத்துக்காட்டாக, மூச்சுத் திணறல், திடுக்கிடுதல் அல்லது வயிற்று வலி

ஒருவரிடம் PTSD அறிகுறிகள் தென்படுவதாக நீங்கள் நினைத்தால், அவர் தன்னுடைய GPயிடம் பேசவேண்டும் என்று நீங்கள் அவரை ஊக்குவிக்கலாம். இதைச் செய்யும் அளவுக்கு நீங்கள் அவருக்கு நெருங்கியவர் இல்லை என்று நீங்கள் நினைத்தால், அவருக்கு நெருக்கமான ஒருவரிடம் நீங்கள் பேசலாம், இதைப்பற்றி அவரிடம் பேசும்படி தூண்டலாம்.

அவர் இந்தப் பக்கத்தைப் போன்ற, PTSDபற்றிய தகவல்களைப் படிப்பதும் அவருக்கு உதவியாக இருக்கலாம். இதன்மூலம், தான் எதிர்கொள்ளும் சிரமங்களை அவர் அடையாளம் காணலாம்.

அதிர்ச்சி தரும் நிகழ்ச்சி ஒன்றை எதிர்கொண்டுள்ள ஒருவரை நான் எப்படி ஆதரிக்கலாம்?

அதிர்ச்சி தரும் நிகழ்ச்சிகளை எதிர்கொண்டுள்ள ஒருவருக்கு ஆதரவு வழங்கவேண்டுமென்றால், பின்வரும் விஷயங்கள் அதற்கு உதவலாம்:

 • பேசுங்கள்: நேரம் செலவழித்து அவருடன் பேசுங்கள், தன் அனுபவங்களைப்பற்றி அவரைப் பேசவிடுங்கள்.
 • கவனியுங்கள்: அவர்கள் பேசும்போது, அந்த ஓட்டத்தில் குறுக்கிடாதீர்கள், உங்கள் சொந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளாதீர்கள், அவர்களை முழுக்கப் பேசவிடுங்கள்.
 • பொதுவான கேள்விகளைக் கேளுங்கள்: நீங்கள் கேள்வி கேட்கும்போது, அவற்றைப் பொதுவாக அமையுங்கள், தீர்ப்பு சொல்வதுபோல் அமைக்கவேண்டாம். எடுத்துக்காட்டாக, ‘நீங்க வேற யார்கிட்டயாவது இதைப்பத்திப் பேசியிருக்கீங்களா?’ என்றோ, ‘இன்னும் கொஞ்சம் கூடுதல் உதவியைப் பெறுவதற்கு நான் உங்களுக்கு உதவலாமா?’ என்றோ கேட்கலாம்.

நீங்கள் இவற்றைத் தவிர்க்க முயலவேண்டும்:

 • அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும் என்று அவர்களிடம் சொல்வது: நீங்கள் அதுபோன்ற ஒன்றை ஏற்கெனவே எதிர்கொண்டிருந்தாலும், மக்கள் சூழ்நிலைகளை மிகவும் வேறுபட்டவகையில் எதிர்கொள்கிறார்கள். அதனால், ஒப்பிடுவது பெரிய உதவியாக இருக்காது.
 • அவர்கள் உயிரோடு இருப்பதே அதிர்ஷ்டம் என்று அவர்களிடம் சொல்வது: பல நேரங்களில், அதிர்ச்சி தரும் நிகழ்வுகளை எதிர்கொண்டுள்ளவர்கள் தங்களை அதிர்ஷ்டசாலிகளாக உணரமாட்டார்கள். பல நேரங்களில், மற்றவர்கள் இறந்தபின் தான் உயிருடன் இருப்பதை எண்ணி அவர்கள் குற்றவுணர்ச்சியை உணரலாம்.
 • அவர்களுடைய அனுபவத்தைக் குறைத்துப் பேசுவது: அவர்கள் இன்னும் நன்றாக உணரவேண்டும் என்று நீங்கள் விரும்பினாலும், இது இன்னும் மோசமாக இருந்திருக்கலாம் என்று சொல்வதைத் தவிர்த்துவிடுங்கள். இப்படிச் சொல்வதன்மூலம், மக்கள் தங்களுடைய உணர்வுகள் நியாயப்படுத்தப்படவில்லை என்பதுபோல் உணரலாம்.
 • உதவாத அறிவுறுத்தல்களைச் சொல்வது: அவர்களுக்கு அறிவுறுத்துவதைத் தவிர்த்துவிடுங்கள். அந்த அறிவுறுத்தல்கள் முன்பு உங்களுக்கு உதவியிருந்தாலும் பரவாயில்லை, அவற்றைச் சொல்லவேண்டாம். மக்கள் ஒருவருக்கொருவர் மிகவும் வேறுபட்டவர்கள். பல நேரங்களில், நீங்கள் அறிவுறுத்தும் விஷயத்தை அவர்கள் முயன்றுபார்த்திருக்கலாம்.

கூடுதல் உதவி

PTSDபற்றிய தகவல்கள்

UK உளவியல் அதிர்ச்சி அமைப்பு: அதிர்ச்சிக்குப் பிந்தைய அழுத்த எதிர்வினைகளைப்பற்றிப் பொதுமக்களுக்கும் நலத் தொழில் வல்லுநர்களுக்கும் பயன்படக்கூடிய தகவல்களை வழங்கும் கட்டுரைகளை நீங்கள் இங்கு காணலாம்.

PTSD: ஓர் அறிமுகம், NHS: NHS வழங்கும் இந்தத் தகவல் PTSDபற்றிப் பேசுகிறது

சிக்கலான PTSD: ஓர் அறிமுகம், NHS: NHS வழங்கும் இந்தத் தகவல் சிக்கலான PTSDபற்றிப் பேசுகிறது

PTSD, Mind: மைண்ட் என்ற இந்தத் தொண்டு நிறுவனம் PTSD மற்றும் சிக்கலான PTSDபற்றிய தகவல்களைக் கொண்டுள்ளது

நண்பர்களும் உறவினர்களும் எப்படி உதவலாம்? மைண்ட்: ஒருவருக்கு PTSD உள்ளது என்று உங்களுக்குத் தெரிந்தால், நீங்கள் அவருக்கு எப்படி உதவலாம் என்பதற்கான யோசனைகளை இந்தத் தகவல் பக்கம் வழங்குகிறது

பயனுள்ள தொடர்பு நபர்கள், மைண்ட்: இந்தப் பக்கத்தில், PTSD கொண்ட மக்களுக்கு ஆதரவு வழங்கும் மற்ற தொண்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் இணைப்புகள் உள்ளன

PTSD கொண்ட மக்களை ஆதரிக்கும் தொண்டு நிறுவனங்கள்

PTSD அல்லது அதிர்ச்சி தரும் நிகழ்வுகளை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு ஆதரவு அளிக்கும் தொண்டு நிறுவனங்கள் சில:

PTSD UK: PTSDபற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதற்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ள UK தொண்டு நிறுவனம் இது

காம்பாட் ஸ்ட்ரெஸ் (அழுத்தத்தை எதிர்த்துப் போராடுங்கள்): முன்னாள் போர் வீரர்களின் மன நலனுக்கான UK தொண்டு நிறுவனம்.

குருஸ் இழத்தல் ஆதரவு: இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்தில் இழப்பைச் சந்தித்துள்ள மக்களுக்கு ஆதரவு வழங்கும் தொண்டு நிறுவனம் இது

குருஸ் இழத்தல் ஆதரவு, ஸ்காட்லாந்து: ஸ்காட்லாந்தில் இழப்பைச் சந்தித்துள்ள மக்களுடைய நலனை முன்னிறுத்தும் தொண்டு நிறுவனம் இது

பாலியல் வன்முறை நெருக்கடி: UK முழுவதும் உள்ள மக்களுக்கு ஆதரவு அளிக்கிற, பாலியல் வன்முறை நெருக்கடியின்போதும் உதவுகிற மூன்று தொண்டு நிறுவனங்கள் இவை:

பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவு: UK முழுவதும், குற்றச்செயல் மற்றும் அதிர்ச்சி நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளிக்கிற, பாதிக்கப்பட்டோர் ஆதரவுத் தொண்டு நிறுவனங்கள் மூன்று:

தகவல் உதவி

இந்தத் தகவல் உளவியலாளர்களுக்கான அரசக் கல்லூரியின் பொது ஊடாடல் ஆசிரியர் வாரியத்தால் (PEEB) உருவாக்கப்பட்டது. இதை எழுதும்போது கிடைத்துள்ள மிகச் சிறந்த சான்றுகளை இது பிரதிபலிக்கிறது. 

இந்தத் தகவல் பக்கத்தைப்பற்றிய தங்கள் கருத்துகளை அன்புடன் வழங்கிய PTSD UKக்குச் சிறப்பு நன்றி.

வல்லுநர் ஆசிரியர்: பேராசிரியர் நீல் கிரீன்பெர்க் 

இந்தத் தகவல் பக்கத்தின் முழுப் பார்வைக் குறிப்புகள் கோரிக்கையின்பேரில் கிடைக்கும்.

பதிப்பிக்கப்பட்டது: நவம்பர் 2021

ஆய்வு செய்யவேண்டிய நாள்: நவம்பர் 2024

© Royal College of Psychiatrists

This translation was produced by CLEAR Global (Feb 2024)

Read more to receive further information regarding a career in psychiatry