மனச்சிதைவு நோய்

Schizophrenia

மறுப்பு


தயவுசெய்து எங்கள் மறுத்து, இந்த தளத்தில் கிடைக்கும் அனைத்து மொழிபெயர்ப்புகளுக்கும் பொருந்தும்.

மனச்சிதைவு நோய் பற்றிய குறிப்பு இது :

மனச்சிதைவு நோய் பற்றிய சில முக்கிய தகவல்கள்

  1. இந்நோய் மூளையில் உள்ள சில ரசாயன குறைபாடுகள் மற்றும் வேறுபாடுகளினால் வருகிறது.
  2. மரபு வழியாக இந்நோய் வரலாம்.
  3. கஞ்சா மற்றும் பிற போதை பொருள்கள் உபயோகிப்பவர்களுக்கு இந்நோய் அதிகமாக வரும்.
  4. ஆண், பெண் இருபாலரையும் இது சமமாகவே தாக்கும்.
  5. இது தொற்று நோய் அல்ல.
  6. மக்கள் தொகையில் நூறில் ஒருவர் மனச்சிதைவு நோயினால் பாதிக்கபடுவர்.

 

மனச்சிதைவு நோய்க்கான அறிகுறிகள் என்ன ?

  1. நடத்தையில் மாறுதல்
  2. தனக்குள்ளே பேசிக்கொள்ளுதல் அல்லது சிரித்தல்
  3. மற்றவர்களுடன் பேசி பழகுவது குறைந்து தனிமையை நாடுதல்
  4. தெளிவில்லாத சிந்தனை, குழப்பமான பேச்சு
  5. குளிப்பது, உடை மாற்றுவது, சாப்பிடுவது போன்ற தினசரி இயல்பாக செய்யும் செயல்கள் கூட பாதிப்பு.
  6. படிக்கும் மாணவர்களோ அல்லது வேலைக்கு செல்பவர்களோ அதனை தொடர முடியாத நிலை.
  7. தனியாக இருக்கும் பொழுது காதில் குரல் கேட்பது
  8. தேவையற்ற சந்தேக உணர்ச்சி (தன்னை பற்றி எல்லோரும் பேசுகிறார்கள், தன்னை கொல்ல சதி நடக்கிறது, தனக்கு யாரோ சூனியம் வைத்து விட்டார்கள், தன்னை யாரோ எப்பொழுதும் தொடர்கிறார்கள் என்பது போன்ற சந்தேகங்கள்)
  9. மேற்கூறிய சந்தேக உணர்வினால் உந்தப்பட்டு, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சண்டை கொள்ளுதல்.
  10. இதே காரணங்களினால் வீட்டை விட்டு வெளியேறி எங்கேனும் சென்று விடல்.

மேற்கூறிய யாவும் மனச்சிதைவு நோய்க்கான அறிகுறிகள்.

மனச்சிதைவு நோய் உள்ளவர்களுக்கு   உருவாகும் மேற்கூறிய அறிகுறிகள்,அவர்களை பொருத்தமட்டில் உண்மையே, அவை கற்பனை அல்ல.

 

ஒருவருக்கு மனச்சிதைவு நோய் உள்ளது என்று சந்தேகப்பட்டால், மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும்?

அவரை உடனே உங்கள் குடும்ப டாக்டரிடம், அழைத்து செல்லுங்கள். அவர் முதலில் பரிசோதித்து விட்டு, மன நல மருத்துவரை பார்க்க பரிந்துரைப்பார்.

மனச்சிதைவு நோய் உள்ளவர்கள், மன நல மருத்துவரை சந்திக்க மறுக்க கூடும்.

இதற்க்கு காரணம், அவர்கள் தங்களுக்கு எந்த நோயும் இல்லை என்று நம்புவது தான்.

 

மனச்சிதைவு நோயை குணமாக்க முடியுமா ?

மனச்சிதைவு நோயை நிச்சயமாக குணமாக்க முடியும்.

அதற்குரிய, மருந்துகளை தொடர்ந்து தவறாமல் உட்கொண்டால், காதில் குரல் கேட்பது,

தனக்குள் பேசிகொள்வது, சந்தேக உணர்ச்சி, தெளிவில்லாத சிந்தனை போன்றவை

மறைந்து மற்றவர் போல் ஆகலாம்.

இந்த மருந்துகளை , நிறைய நாட்கள் தொடர வேண்டும்.

மருந்துகளை நடுவில் நிறுத்தினால் மனச்சிதைவு நோய்க்கு உரிய அறிகுறிகள் மீண்டும் தோன்றலாம்.

முக்கியமாக இந்த மருந்துகளை, நோய் உருவானவுடன் தாமதப்படுத்தாமல் உடனே தொடர்ந்து உட்கொண்டால், குணமாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

 

இந்த மருந்துகளினால் ஏதேனும் பின்விளைவுகள் உண்டாகுமா?

பொதுவாக இந்த மருந்துகளினால் பெரிய பின் விளைவுகள் இல்லை என்றாலும் கீழ் குறிப்பிட்ட விளைவுகள் சிலருக்கு வரலாம்:

  1. அதிகமான தூக்கம் மற்றும் பகற்பொழுதில் மந்தமான நிலை.
  2. வாயில் எச்சில் ஒழுகுதல்
  3. அதிகமான பசி, அதனால் நிறைய சாப்பிட்டு உடல் எடை கூடுதல்.
  4. உடலில் உள்ள தசைகள் குறிப்பாக, தாடையில் உள்ள தசைகள் விறைப்பாக இருத்தல், அதனால் பேசுவதற்கு மற்றும் நடப்பதற்கு சிரமம்.
  5. கால்களில் உள்ள தசைகளில் குடைச்சல் .

மேற்கூறிய பின்விளைவுகள் எல்லோருக்கும் எல்லா சமயங்களிலும் வராது.

மேலும் இந்த பின் விளைவுகளை போக்குவதற்குரிய மருந்துகள் உள்ளன. அவைகளை மனச்சிதைவு மருந்துகளுடன் தொடர்ந்து உட்கொள்ளலாம்.

மேற்கூறிய பின்விளைவுகள் ஒவ்வொரு மருந்தின் தன்மையை பொருத்து வேறுபடும்.

 

மருந்து உட்கொள்வதை தவிர வேறு என்ன செய்ய வேண்டும்?

எளிதான  மனப்பயிற்சிகள்,  மனம் மற்றும் சிந்தனைகளை ஒருமுகப்படுத்த  உதவும்.

சிறிய அளவிலான தொழில் ரீதியான் பயிற்சிகள் எடுத்து கொள்ளலாம்.

இவை தன்னம்பிக்கை மற்றும் சுய மதிப்பு அதிகரிக்க உதவும்.

டே கேர் சென்டர் (Day Care Centre ) என்னும் பயிற்சி கூடங்கள் சென்றால், மேற்கூறிய பயிற்சிகளை ஒரே இடத்தில பெற்று பயன் அடையலாம்.

 

மனச்சோர்வு நோய் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா அல்லது திருமணம் சாரா உறவுகளில் ஈடுபடலாமா?

மனச்சிதைவு நோயின் தீவிரம்,  நோய் உள்ளது என்பதும்  அதற்கு தொடர்ந்து மருந்துகள் உட்கொள்ள வேண்டும் என்பதை புரிந்து கொள்ளும் நிலை,  மருந்துகளின் வீரியம் மற்றும் பின்விளைவுகள்,  குடும்பத்தினரின் ஆதரவு,   இவை  இந்நோய் தாக்கியவர் எந்த அளவிற்கு குணமாகி மற்றவர் போல் செயல்படுவார் என்பதை நிர்ணயிக்கும் கூறுபாடுகள்.

இதனால், இந்த நோயின் தன்மை ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.

ஆதலால், இந்த கேள்விக்கு, பொதுவான ஒரு பதிலை கூற இயலாது.

மேலும் இந்த நோய் மரபு வழியாக அடுத்த தலைமுறையை பாதிக்கலாம் என்பதால், உங்கள் மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, திருமணம் அலல்து திருமணம் சாரா உறவு பற்றி முடிவு எடுக்கவும்.

 

மனச்சிதைவு நோயுள்ளவர்கள் வன்முறையில் அதிகமாக ஈடுபடுவர், காரணமில்லாமல் பிறரை அடித்து விடுவார்கள் என்பது உண்மையா?

இது முற்றிலும் தவறான ஒரு கருத்து.

மனச்சிதைவு நோய் உள்ளவர்களில் வெகு சிலரே வன்முறையில் ஈடுபடுவர்.

அத்தகையோரும், காதில் கேட்கும் குரல் ஆணை இடுவதாலும், ஆதாரமற்ற சந்தேக உணர்ச்சி போன்ற மனச்சிதைவு நோயின் அறிகுறியினால் இத்தகைய வன்முறையில் ஈடுபடுவார்கள்.

மேற்கூறிய தகவல்கள், மனச்சிதைவு நோயை பற்றி உங்களுக்கு ஒரு அறிமுகத்தையும் தெளிவையும் கொடுத்திருக்கும் என்று நம்புகிறோம்

Read more to receive further information regarding a career in psychiatry